நீங்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினரின் பொறுப்புகள் என்ன?

சட்டமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் குறித்து புரிந்து கொள்ளுதல்

தமிழக சட்டமன்றம். படம்: விக்கிமீடியா காமன்ஸ்

Translated by Sandhya Raju

இன்னும் சில நாட்களில் நம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுக்கவுள்ளோம்.

அண்டை மாநிலம் கர்நாடகாவில் உள்ளது போல் இரு சட்டமன்றம்- அதாவது ஒரு சட்டமன்றம் மற்றும் ஒரு சபை என்றில்லாமல், தமிழகம் கீழ் சபையை மட்டுமே கொண்டுள்ள ஒற்றை சட்டமன்றம் ஆகும்.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர், எம்.எல்.ஏ.க்கள் என அழைக்கப்படும் இவர்கள் சட்டமன்றத்தை உருவாக்குகிறார்கள். மக்களால் ஜனநாயக முறைப்படி இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சட்டங்களை உருவாக்குதல், மாநில அரசை பொறுப்புக்கூற வைத்தல் மற்றும் பொதுச் செலவுகளுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகிய பொறுப்புகள் எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளன. வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, சென்னையில் உள்ள 25 தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தனது தொகுதிக்கு சிறப்பான பிரதிநிதித்துவம் தரக்கூடிய சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முன், ஒரு எம்.எல்.ஏ வின் பொறுப்புகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். தன்னுடைய தொகுதிக்கும் அதன் மக்களுக்கும், ஒரு எம்.எல்.ஏ என்ன செய்ய முடியும்?

எம்.எல்.ஏ ஆக தேவையான தகுதி என்ன?

மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்:

 • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
 • 25 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
 • இலாபம் ஈட்டக்கூடிய பதவியில் இருக்கக் கூடாது.
 • இந்திய பாராளுமன்றம் வகுத்துள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
 • தெளிவற்ற மனநிலை இல்லாமல் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்படாமல் இருத்தல் வேண்டும்.

மாநிலத்தில் எந்தவொரு தொகுதி வாக்காளராக இருப்பினும் தமிழக சட்டமன்ற உறுப்பினராக ஆகலாம். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

தமிழக சட்டமன்றத்தில் 189 பொது மற்றும் 45 ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு (42 எஸ்சி தொகுதிகள் மற்றும் 3 எஸ்டி தொகுதிகள்) தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களும், இந்திய அரசியலமைப்பின் 333 வது பிரிவின் கீழ் ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலோ-இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.


Read more: What is your MLA supposed to do for you?


பாராளுமன்ற உறுப்பினர்,மாநகராட்சி கவுன்சிலர் ஆகியோருக்கும் எம்.எல்.ஏ-க்கும் வித்தியாசம் என்ன?

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் நகர அரசு ஆகியவற்றைக் கொண்ட மூன்று அடுக்கு ஆட்சி முறையை இந்தியா பின்பற்றுகிறது. மத்தியில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலத்தில் உள்ள சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் தங்களின் வாக்குகளை செலுத்தி, தேசிய சட்டங்களை உருவாக்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்காள் பங்கு வகிக்கின்றனர்.

மறுபுறம், ஒரு வார்டின் பிரதிநிதியாக, நகர மேயரை தேர்ந்தெடுப்பது, நகர வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி நகர சபையில் பங்கேற்பது என ஒரு கவுன்சிலர் தனது பணியை மேற்கொள்கிறார்.

அப்படியானால், ஒரு எம்.எல்.ஏ என்ன செய்வார்? மூன்று அடுக்கு அரசு அமைப்பு உள்ள பொழுது, ஒரு தொகுதியில் உள்ள சிறு பிரச்சனைகள் வார்ட் அளவில் தீர்க்கப்பட வேண்டும், ஆகையால் அது கவுன்சிலரின் பொறுப்பாகும். ஆனால், சாலை அமைப்பு, தெரு விளக்கு அல்லது சிறிய தொகுதி பிரச்சனைகளுக்கு வாக்காளர்கள் தொகுதி எம்.எல்.ஏ வை அணுகுவது சகஜமாக உள்ளது. நகராட்சிகளுக்கு அதிகாரமும் நிதியும் போதுமானதாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

ஒரு எம்.எல்.ஏ.வின் முதன்மை பொறுப்பு மாநில சட்டசபையில் சுமூகமான மற்றும் திறமையான செயல்பாட்டில் அமைகிறது. சட்டங்களை உருவாக்குவது, மாநில நிர்வாகியை பொறுப்புக்கூற வைப்பது மற்றும் பொது செலவினங்களை அனுமதிப்பது ஆகியன சட்டசபையின் மூன்று முக்கிய செயல்பாடுகளாகும்.

மக்களின் பிரதிநிதியாக, ஒரு எம்.எல்.ஏ-வின் பொறுப்புகள்:

 • மசோதாக்களை அறிமுகப்படுத்துதல், விவாதித்தல் மற்றும் திருத்துதல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ் பட்டியல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள படி சட்டங்களை உருவாக்குதல் மற்றும் வாக்களித்தல். அமைச்சராக இல்லாத ஒரு எம்.எல்.ஏ, தனியார் உறுப்பினர்களின் மசோதாவைப் பயன்படுத்தி சட்டமாக நிறைவேற்றலாம்.
 • பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்புதல்.
 • மாநில அரசு அல்லது நகராட்சி அறிவிக்கும் திட்டங்கள் அவரின் தொகுதிகளில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.உதாரணமாக, அவரின் தொகுதியில் குடிநீர் விநியோகம் இல்லையென்றால், இந்த பிரச்சனையை சட்டசபையில் எழுப்பி அதற்கு தீர்வு காணலாம்.
 • மக்கள் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என அறிந்து, ஏதேனும் முரண்பாடு இருப்பின் அவற்றை நிதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்வது.
 • மாநில அரசின் நலத் திட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
 • மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுத்தல்.

அமைச்சர்கள் குழுவில் ஒரு எம்.எல்.ஏ எவ்வாறு நியமிக்கப்படுவார்?

பொது தேர்தல் முடிந்த பின், கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஒன்று கூடி அவர்களின் சட்டமன்ற கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். பெருன்பான்மை பெற்ற கட்சி தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

அரசியலமைப்பின் பிரிவு 164 படி, முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார், பின்னர் முதல்வரின் பரிந்துரைப்படி பிற அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். அமைச்சக பொறுப்பை ஏற்பதற்கு முன், இவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

எம்.எல்.ஏ உள்ளூர் பகுதி மேம்பாட்டு (எல்ஏடி) நிதி என்றால் என்ன?

எம்.எல்.ஏ வின் தொகுதி மேம்பாட்டிற்காக மாநில அரசு ஒவ்வொரு உறுப்பினருக்கும் எம்.எல்.ஏ எல்ஏடி நிதியை வழங்கும். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாக அனுமதி அளிப்பார், மேலும் செயல்படுத்தும் நிறுவனத்தையும் அடையாளம் காண்பார்.

தொகுதிகளில் முக்கியமான உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் குறைக்க அத்தியாவசியப் பணிகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். 2019-ம் ஆண்டு முதல், தமிழகத்தில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2.5 கோடி என்ற அளவிலிருந்து 3 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து கீழ்கண்ட பணிகளை எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கலாம்:

 • சூரிய தெரு விளக்குகள் நிறுவுதல்
 • சரளை / டபிள்யூ.பி.எம் சாலைகளை பி.டி தரத்திற்கு மேம்படுத்துதல்
 • மோசமாக உள்ள பி.டி சாலைகளை புதுப்பித்தல் (தேவைப்பட்டால் குழிகளை நிரப்புவதன் மூலம் மட்டுமே பி.டி லேயரை இடுவது)
 • சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைத்தல்
 • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள், பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள், ஆதி திராவிதர் பள்ளிகள், கள்ளர் மீட்பு பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகளுக்கு கட்டிடங்கள் மற்றும் / அல்லது கூட்டு சுவர்கள் வழங்குதல்.
 • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அனாதை இல்லங்களுக்கான அரசு சிறப்பு பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
 • பாலங்கள் அமைத்தல்.
 • புதைகுழிகள் / தகன மைதானங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
 • தேவைப்பட்டால், மழைநீர் வடிகால்களுடன் கான்கிரீட் நடைபாதைகளை வழங்குதல்.
 • புதிய பொது பூங்காக்களை உருவாக்குதல்.
 • பொது கழிப்பறைகள் அமைத்தல்.
 • ஜெட்ரோடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிகல் இயக்கப்படும் கழிவுநீர் இயந்திரங்களை வாங்குதல்.
 • வக்ஃப் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட பொது வக்ஃப்களுக்கு சொந்தமான புதைகுழிகளில் கூட்டு சுவர் / வேலி அமைத்தல். வக்ஃப் வாரியத்திற்கு எந்த பொறியியல் பிரிவும் இல்லை என்பதால், இந்த பணி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படலாம்.

சட்டமன்றம் எங்கு நடைபெறும்? 

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற தொடர்கள் நடைபெறும். 2020-ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று காரணமாக, புனித ஜார்ஜ் கோட்டையை விட பெரிய இடமான கலைவாணர் அரங்கில் சட்டமன்றம் நடைபெற்றது.

அமைச்சர்கள் குழு பரிந்துரைப்படி, சட்டங்களை நிறைவேற்ற சட்டசபையை ஆளுநர் கூட்டுவார். இரண்டு தொடர்களுக்கு ஆறு மாத இடைவெளி இருக்கும். சட்டமன்ற தொடரை தாமதிக்கவும் சட்டசபையை கலைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

சட்டமன்ற உறுப்பினரின் வருகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

அரசியலமைப்புத் தேவை அல்லது விவரக்குறிப்பு எதுவும் இல்லை என்றாலும், நீதிபதி நாராயண ராவ் கமிட்டி (2000) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மாநில கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் 90 நாட்களுக்கு கூட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப் கருத்துப்படி, அனைத்து மாநில கூட்டங்களும் ஆண்டுக்கு 100 நாட்களாவது கூட்டப்பட வேண்டும் என்று சபாநாயகர்கள் பரிந்துரைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த ஆலோசனையை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 2017 ல் 37 நாட்கள், 2016 ல் 35 நாட்கள், 2015 ல் 28 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.


Read more: What is the duty of an MLA; What are the privileges?


சட்டசபை நடத்த தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?

தமிழக சட்டமன்றக் கூட்டத்திற்குத் குறைந்தபட்சம் 24 உறுப்பினர்கள் (மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு) (தலைமை வகிக்கும் நபர் உள்பட) தேவை. இந்த எண்ணிக்கை இல்லையென்றால், மணி அவ்வப்போது ஒலிக்கப்படும். இந்த ஒலி கேட்டதும், வெளியில் உள்ள உறுப்பினர்கள் உடனடியாக சட்டமன்றத்திற்குள் வரவேண்டும். 15 நிமிட இடைவெளிக்கு பிறகும், தேவையான எண்ணிக்கை இல்லையென்றால், கூட்டத்தொடர் அதே நாளில் வேறொரு நேரத்திற்கோ அல்லது அடுத்த நாளைக்கோ ஒத்திவைக்கப்படும்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் என்ன நடக்கும்?

சட்டமன்ற கூட்டத்தொடரில் நடக்கும் முக்கிய நடவடிக்கைகள்:

கேள்வி நேரம்

ஒவ்வொரு கூட்டத்தொடரின் முதல் ஒரு மணி நேரம் கேள்விகளுக்கும் அதற்கான பதில் அளிக்கவும் ஒதுக்கப்படும். சட்டசபை ஒன்றிணைந்து மாற்றினால் அன்றி இந்த நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும். கூட்டத்தொடர் தொடங்கும் முன், உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை சபாநாயகருக்கு அளிக்க வேண்டும்.

சட்டம், பொது பிரச்சனைகள், திட்டங்கள் அல்லது தங்கள் தொகுதி பிரச்சனை குறித்து அமைச்சரிடம் ஒரு எம்.எல்.ஏ கேள்வி எழுப்பலாம். கூட்டத்தொடர் முடியும் முன், இதற்கான பதிலை அமைச்ச்சர் அளிக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ எத்தனை கேள்விகள் வேண்டுமானால் எழுப்பலாம்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது கேள்வி கேட்க முடியாவிட்டால், கேள்விகளை எழுத்து மூலம் கேட்கலாம்.

கலைவனார் அரங்கத்தில் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் காட்சி.
படம்: தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை / முகநூல் பதிவ
விதி 110 ன் கீழ் அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகள்

கூட்டத்தொடர் நடக்கையில், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தமிழக சட்டப்பேரவை விதிகளின் 110 வது விதியின் கீழ் முதல்வர் சபையின் அறிக்கைகளை வெளியிடலாம். இந்த விதியின் படி, 110 சுய தீர்மானங்கள் விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்படும்.

ஆனால், இந்த விதியின் கீழ் எம்.எல்.ஏ கேள்வி எழுப்ப முடியாது என்பதால், இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.DT Next வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ அளித்த தகவலின் படி, இந்த விதியின் கீழ், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிதி விவரங்களை கேட்க முடியாது என்பதால் இது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற செயல்பாடுகள்

மாநில மற்றும் உடன் நிகழ் பட்டியல்களில் பட்டியலிடப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுதல்.

வர்த்தக செயல்பாடுகள்

மாநிலத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையை விவாதிப்பர். இது இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது:
(1) பொது கலந்துரையாடல் மற்றும்
(2) கோரிக்கைகளுக்கு வாக்களித்தல்.

எம்.எல்.ஏ.க்கள் பொது விவாதத்தில் பங்கேற்க வேண்டும், பட்ஜெட்டை முழுமையாக ஆராய்ந்து, சட்டசபை கூட்டத்தின்போது கோரிக்கைகளை விவாதிக்க வேண்டும்.

எம்.எல்.ஏ-வின் மாத சம்பளம் என்ன?

2018-ம் ஆண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ க்களின் மாத ஊதியத்தை 55,000 ரூபாயிலிருந்து 1.05 லட்சமாக உயர்த்தினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் செயல்படாத சட்டமன்ற சபை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ .20,000 ஆகவும், இழப்பீட்டு கொடுப்பனவு ரூ .10,000 ஆகவும், தொலைபேசி கொடுப்பனவு ரூ .5,000-த்திலிருந்து ரூ .7,500 ஆகவும் உயர்த்தப்பட்டது.

சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பாக குடிமக்கள் என்ன வகையான தரவுகளை காண இயலும் ?

பாராளுமன்றத்தைப் போலின்றி, மாநில சட்டமன்ற தகவல்கள் வெளிப்படைத்தன்மையற்றவை. சட்டமன்ற நடவடிக்கைகள் வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, விவாதங்கள் மீதான ஒட்டுக்கள், வருகை பதிவு மற்றும் விவாதங்கள் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. கூட்டத்தொடர்களும் நேரடியாக ஒளிபரப்பப்படுவதில்லை. அதே போல், தனக்கான எல்ஏடி நிதியை எம்.எல்.ஏ எவ்வாறு செலவழித்துள்ளார் என்ற பொது தகவலும் வழங்கப்படுதில்லை.

எம்.எல்.ஏ நடவடிக்கைகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது?

சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பீடு செய்ய அவர்களின் வருகை பதிவு, கேட்கப்பட்ட கேள்விகள் போன்ற தகவல்களை தமிழக சட்டமன்றம் தருவதில்லை. இந்த தகவல்கள் இல்லாத பட்சத்தில், கீழ்கண்ட அடிப்படையில் இவர்களை மதிப்பீடு செய்யலாம்:

 • சட்டம் இயற்றும் திறன்கள் / சட்டமன்ற செயல்திறன்: உங்கள் எம்.எல்.ஏ அறிமுகப்படுத்திய பில்களை ஊடக அறிக்கைகள் அல்லது பில்களுக்கான அவரது கருத்துகள் மூலம் கண்காணிக்கவும்.
 • தொகுதியில் இருத்தல் மற்றும் அணுகல்: உங்கள் குறைகளை கேட்க உங்கள் எம்.எல்.ஏ உங்கள் தொகுதிக்கு எத்தனை முறை வருகை தருகிறார்? அவரை எளிதில் அணுக முடியுமா?
 • தொகுதி பிரச்சினைகளை தீர்ப்பது: உங்கள் தொகுதியில் எவ்வளவு விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன?
 • நேர்மை / குற்றப் பதிவுகள் / புலனுணர்வு குறியீடு / சுயவிவரம்: உங்கள் எம்.எல்.ஏ.வின் குற்றப் பதிவுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மாநிலத்தின் திட்டங்களான – சுகாதாரம், கல்வி, சட்டம் ஒழுங்கு, வேலைகள் மற்றும் விவசாயம் வரை ஒரு பெரிய நோக்கத்தை ஒரு எம்.எல்.ஏ.வின் பணி உள்ளடக்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு, நீர்நிலைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அரப்போர் இயக்கம், எம்.எல்.ஏ-க்களின் பணி குறித்து தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கைகளை ஆராய்வதன் மூலம், தொகுதியில் இவர்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

(அரப்போர் இயக்கம் பிராஷ்ந்த் கௌதம், சீனிவாஸ் அலவள்ளி, தலைவர் – ஜனகிரகா குடிமக்கள் பங்கேற்பு (பெங்களூருவை தளமாகக் கொண்ட குழு), ரங்கா பிரசாத், சட்ட பஞ்சாயத்து இயக்கம் (எஸ்.பி.ஐ) இணைச் செயலாளர் ஆகியோர் அளித்த தகவல் மற்றும் தமிழக சட்டமன்றத்தின் நடைமுறை மற்றும் நடைமுறை ஆவணம். தகவலின் படி)

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.