இல்லத்தரசிகளுக்கான ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி

TN Assembly Elections 2021

இல்லத்தரசிகளின் வேலை பளு பல நூற்றாண்டுகளாக அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. படம் : ககன் கவுர்

தமிழ்நாட்டில் தற்போதைய தேர்தல் நிலவரத்தில் வாரி வழங்கப்பட்டு பேசுபொருளாகி இருக்கும் வாக்குறுதிகளில் பெரும் பரபரப்பை உருவாக்கிக் கொண்டிருப்பது இல்லத்தரசிகளின் பணியை அங்கீகரித்து அவர்களுக்கு ஊதியம் வழங்குதல் என்ற வாக்குறுதி தான்.

கருத்தியல் ரீதியாக இதை பார்த்தோமானால் இந்த விஷயம் இன்று பேசுபொருளானதே   மனித மனங்கள் அடைந்துவரும்   முதிர்ச்சியின் பயணத்தில் ஒரு முன்னேற்றம் எனலாம். ஏனெனில் இதற்கு முன்பு இல்லத்தரசிகள் அதிகாலை  முதல் பின்னிரவுவரை அனைவரின் நலனுக்காகவும் ஓயாத இயந்திரமாக இயங்கி என்னதான் தியாகங்களை செய்தாலும், துரதிஷ்டவசமாக அவை கணக்கில் எடுத்துக் கொள்ளாதும், அதன் முக்கியத்துவம் மதித்து உணராதததுமான ஒரு நிலையே நிலவி வந்தது. பதிலாக அது அவர்களின் படைப்பின் விதி என்ற ஒரு மனோபாவமும் கூட பலரது மனங்களில் குடிகொண்டிருந்தது எனலாம்.

ஒவ்வொரு இல்லத்தையும் நிலைநிறுத்தும் இவர்களது வேலையை அங்கீகரிப்பதற்காக அவ்வப்போது பெண்ணிய அமைப்புகளிலிருந்தும் சமூக அக்கறை கொண்ட அமைப்புகளிலிருந்தும்  குரல்கள்  எதிரொலித்துக் கொண்டு வந்த போதும் சமீப காலங்களில் தான் அவை சிறிது சிறிதாக வலுபெற்று இப்போது தேர்தல் வாக்குறுதியாக மாறும் அளவுக்கு பரிணமித்திருக்கிறது.

சற்று பின்னோக்கிப் பார்ப்போம்..

இந்த மாறுதலான பார்வை எப்படி படிப்படியாக உருபெற்றது என சற்று திரும்பி பார்த்தால் இதற்கு சுவாராசியமான பின்னணி ஒன்று இருப்பதை காணமுடிந்தது. பாராளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் 2012 ஆம் ஆண்டிலிருந்து விவாதப்பொருளாகவும் ஏன் புதுமையான தீர்ப்புகளாகவும் வெளிப்பட்ட இந்த விஷயமானது, நாடே இதுகுறித்த பரிமாணத்தை படிப்படியாகக் காண அதன் கண்களை திறந்து விட்டிருக்கின்றது என்பது மிகையல்ல. 

2012 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இதற்கான வரைவு சட்டம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. அதில் ”இல்லத்தை உருவாக்கும் ஒரு பெண்ணின் வேலைப்பளுவினை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனை கவனத்தில் கொண்டால் ஒரு இல்ல உருவாக்கத்தில் அது இன்றியமையாததாக இருக்கிறது. பலமணி நேரங்கள் அவர்கள் தங்கள் உழைப்பை தந்தும் அது அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. எனவே, இதனை அங்கீகரித்து கணவனின் சம்பாத்தியத்தில் ஒரு பங்கு இல்லத்தரசிகளுக்கு சென்று சேரவேண்டும்” என்பதாக முன்மொழியப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சமூகசெயல்பாட்டாளர்களும் பத்திரிகைகளும் இதனை  பெரிதும் வரவேற்றதோடு அதனை மேலும் நியாயமாக அணுகிட வேண்டி கணவனின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டால் அதிக சம்பளம் பெறும் கணவனைக் கொண்டுள்ள இல்லத்தரசிக்குக் கிடைக்கும் தொகையை விட அதே அளவு வேலைப்பளு கொண்டிருந்து குறைந்த சம்பளம் பெறும் கணவனுக்கு மனைவியானதால் குறைந்த தொகையை பெறவேண்டி இருப்பதில் நியாயமில்லை என சுட்டிக்காட்டுகிறார்கள்.


Read more: COVID-19: Women, children in low-income housing bore the worst brunt


பிறகு அந்த விஷயத்தை கட்சிகளும் மாநில அரசுகளும் பேச ஆரம்பிக்கின்றன. அரசே ஒரு தொகையை நிர்ணயித்து வழங்கினால் என்ன என கேள்வியெழுகிறது. அதன் அடிப்படையில் ஒரு மாநில அரசானது வறுமையிலுள்ள குடும்பங்களிலுள்ள பெண்களுக்கு ஒரு தொகையை நிர்ணயித்து வழங்கத் துவங்கின்றது. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது தமிழகத்திலும், கட்சிகள்  அவர்கள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இன்னொருபுறம் நீதிமன்றங்களிலும் சில வழக்குகளில் இந்த கருத்தியலை சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்பு வழங்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு செப்டம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 ல் வாசிக்கப்பட்ட இரண்டு தீர்ப்புகள் இதற்கு பெரிய அளவில் வலுசேர்ப்பவையாகின்றன. இதில் 2020ல் வந்த ஒரு தீர்ப்பு பரபரப்பான ஒன்றாக பார்க்கப்பட்டது. விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட  இல்லத்தரசி ஒருவருக்கு ரூபாய் 8 லட்சம் நிவாரணமாக வழங்கக்கோரி சேலத்திலுள்ள நீதிமன்றம் உத்தரவிட, இன்னும் தமக்கு நீதி சரியாக வழங்கப்படவில்லையென அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகிறது  வழக்கு. அப்போது அதனை பரிசீலித்து 14 லட்சமாக உயர்த்தியது மட்டுமல்லாது இந்த விஷயம் குறித்த சமூகத்தின் பார்வையை மாற்றியமைப்பதாக இருந்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் அடங்கிய அம்சங்கள்.

அதில், பணத்தேவைகளுக்கு பங்களிக்கும் ஒருவரின் பங்களிப்பை விட ஒரு குடும்பத்திற்கு இல்லத்தரசி வழங்கும் பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது. இது வீட்டு வேலைகளுக்காக சம்பளத்திற்கு பணியமர்த்துபவரால் நிச்சயமாக வழங்கவே முடியாத வகையில் அன்பும் அக்கறையும் கலந்தது. ஆகவே, அதற்கொரு உயரிய ஸ்தானத்தைத் தரவேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் ஒருபடி சென்று நல்ல ஆரோக்கியமான மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவதால் அவர்கள் இந்த நாட்டிற்கே நன்மை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டது. 

அதுபோன்றே ஜனவரி 2021 இல் உச்சநீதிமன்றம் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு இல்லத்தரசிக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் 11 லட்சம் வழங்க தீர்ப்பளித்திருந்ததை மாற்றி 33 லட்சமாக உயர்த்தி ஆணையிட்டு, மேலும் இந்த கருத்தியலை வலுவாக்கியது இன்னொரு மைல்கல்லாகும். இன்னும் அந்த அமர்வு கூறும்போது “இது இல்லத்தர்சிகளின் பணிக்கும் தியாகத்திற்குமான அங்கீகாரமும் மனப்பாங்கை மாற்றுவதற்கான சிந்தனையுமாகும். கூடவே, சர்வதேச சட்டங்களுக்கு நம் நாட்டின் கடப்பாடும்   சமூக சமத்துவம் மற்றும் அனைவரின் மதிப்பையும் உறுதிசெய்வதுமாகும்”  என்று முத்தாய்ப்பாக கூறியுள்ளது. 

வாக்குறுதிகளின் வடிவங்கள்

இப்போது நமது தமிழகத்தில் இது சம்மந்தமாக அறிவிக்கப்பட்டுள்ள வெவ்வேறு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை பார்ப்போம்.

தமிழகத்தில் புதிதாகத் தடம்பதித்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சி இல்லத்தரசிகளின் பணிகளை அங்கீகரித்து ஊதியம் ஒன்றை அவர்களுக்கு வழங்குவோம் என தனது வாக்குறுதியில் ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து இன்னொரு கட்சி அதற்கு 1000 ரூபாய் என தொகை நிர்ணயித்து தேர்தல் வாக்குறுதியாக்க மற்றொரு கட்சி 1500 ரூபாய் என தொகை உயர்த்தி தங்கள் வாக்குறுதியாக்க எப்படியோ இந்த விஷயம் இப்போது எல்லோரின் சிந்தனைக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, இதை ஆரம்பித்து வைத்த கட்சி, வெறுமென தொகையை நிர்ணயித்து வழங்குவது அவர்களை தாழ்வுக்குள்ளாக்குவது ஆகும். நாங்கள் அவர்களின் திறமைகளை வளர்க்க உதவி இன்னும் அதிக  தொகையை ஈட்டுமாறு செய்வோமென்று கூறியுள்ளது அதனை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுசெல்கிறது.

இல்லத்தரசிகளின் மனநிலை

இதுகுறித்து சில இல்லத்தரசிகளிடம் கேட்டபோது; நுங்கம்பாக்கத்தை சார்ந்த திருமதி. லீலா கூறுகிறார் “ இதைப்பற்றி பேசியதே பெரிய விஷயம். குடும்பத்தினர் இந்த வேலைகளை பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை. ஆண்களுக்கு ஓய்வுநேரம், ஓய்வுநாட்களும் உண்டு. ஆனால், நமக்கு தினமும் வேலைநாட்கள் தான். அதுவும் இரட்டிப்பான வேலை. இது அவ்வளவு விரைவில் சரியாகாது. ஒருவேளை ஓட்டுக்காகக் கூட இருக்கலாம். எல்லோருக்கும் ஒரேயளவான தொகையென்பதும் சரியானதாக தெரியவில்லை. அதை முறைப்படுத்தினால் நல்லது” என்றார்.


Read more: Why water scarcity never ceases to haunt the women of Chennai


அயனாவரத்தை சேர்ந்த திருமதி. லட்சுமி கூறும்போது “ இதெல்லாம் ஒரு கண்துடைப்பு. அப்படியே இருந்தாலும் அதை பெறுவதற்காக அலைவதிலேயே வேண்டாம் என விட்டுவிடுவோம். ஏற்கனவே விதவை பென்ஷன் வாங்குவதற்கே பெரும் சிரமம் ஆகிவிட்ட்து. ஆனாலும், இந்த உதவி கிடைத்தால் கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும். ஆனால், நடக்க வேண்டுமே” என்று நம்பிக்கையற்று பேசினார்.

முகப்பேரில் வசிக்கும் திருமதி. மீனாவின் கருத்து “ தொகை நிர்ணயித்து நம்மை அந்த வேலைக்குள்ளேயே முடக்கிவிடும் செயலாக இது இருக்கிறது. அதற்கு பதிலாக வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கலாம். ஆனால், வயதான காலத்தில் இதுபோல தொகை கிடைத்தால் மற்றவர்களின் கைகளை நம்பியிருக்காது, அதனை தனது பணமாக அவர்கள் பாவித்து சில அவசியமான செலவுகளை அவர்களே பார்த்து கொள்ள முடியும்.” என்று இருந்தது.

எப்படியோ சமூகத்தில் இந்த விஷயம் குறித்த ஒரு சிந்தனைத் தூண்டல் எழுந்துள்ளது ஒரு ஆறுதலான விஷயமே என்பது பெண்களிடையே பொதுவான ஒரு கருத்தாக  இருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாகவே நமக்கும் தோன்றுகின்றது.

Also read:

Pandemic epiphany: Why unpaid domestic work shouldn’t be the woman’s burden only

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Vadivu Mahendran 17 Articles
Vadivu Mahendran is a resident of Mogappair, Chennai. She has been largely involved in working with children and adolescents, and also translates program materials for their study. Occasionally, she enjoys writing Tamil poetry about human qualities and preservation of nature.

1 Comment

  1. Likewise,working ladies shall be entitled for 1 day special health care leave per month which is to be used every month and will lapse, if not utilised in that month.

Comments are closed.