சென்னையில் பூங்கா அல்லது பசுமையான இடத்தை எவ்வாறு தத்தெடுப்பது?

பூங்காக்கள் பராமரிப்பு

ஒரு மாதம் முன்பு அண்ணாநகர் டவர் பார்க் தத்தெடுக்கபட்டது படம்: விக்கிகாமன்ஸ்

Translated by Sandhya Raju

அண்ணாநகரில் வசிக்கும் ஈ செந்தில் அவர்களுக்கு தன் சிறு வயதில் டவர் பார்க் பற்றிய அனுபவம் இன்றும் பசுமையாய் இருக்கிறது. இன்றும் அண்ணாநகரில் வசிக்கும் இவர், பன்னிரெண்டு அடுக்கு கட்டிட டவர் பார்கில் ஏறி இந்த பகுதி முழுவதையும் காண்பது இளம் பருவத்தில் தொலைக்காட்சியை விட சிறந்த அனுபவம் என்கிறார். இவர் நோவா லைஃப் ஸ்பேஸ் பிரைவேட் லிமிடட் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.

குழந்தைகள் டென்னிகாய்ட் விளையாடுவதும், முதியவர்கள் நாட்டு நடப்பை அலசுவதும், நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிப்பதும், தம்பதிகள் சுவாரஸ்யமாக பொழுதை கழிப்பதும் என அண்ணாநகர் டவர் பார்க் எல்லோருக்குமான ஒரு புத்துணர்ச்சி இடமாக திகழ்கிறது.

ஆனால், செந்திலை போல் அவருடைய மகன் இங்கு செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சில வருடங்களுக்கு முன், இங்கே ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, டவர் மூடியே உள்ளது. பூங்காவில் உள்ள பசுமையான இடங்களும் காணாமல் போயுள்ளன, விளையாட்டு பகுதிகளும் பராமரிப்பின்றி உள்ளன. சென்னை மாநகராட்சி நிர்வகிக்கும் பல பூங்காக்களை போல், சென்னையின் இந்த முக்கிய பூங்காவும் மெல்ல தன் பொலிவை இழந்து வருகிறது.


Read more: No waiting for the government, friends of Kotturpuram Tree Park begin replanting


மாறும் சூழல்

ஆனால், தற்போது மாற்றத்திற்கான சூழல் தெரிகிறது. சமீபத்தில், சென்னை மாநகராட்சி ‘பசுமை’ எனும் நகர்ப்புற இயற்கை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பூங்கா தத்தெடுப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் பெரிய நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் பூங்கா அல்லது பசுமை இடங்களை தத்தெடுக்க முடியும்.

அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு புத்தணர்ச்சி தரும் வகையில் செந்தில் குமார், இதை தத்தெடுத்து உள்ளார். “பசுமை மூலம் இதற்கான நடை முறையை மாநகராட்சி மிகவும் எளிதாக்கியுள்ளது. ஆர்வம் தெரிவித்த ஒரு வாரத்திற்குள் இதற்கான செயல்கள் முடிவுற்றன.” என்று கூறும் செந்தில், ஒரு மாதம் முன்பு தான் இந்த பூங்காவை தத்தெடுத்துள்ளார். இப்போது பூங்காவில் புதர்கள் நடப்பட்டு வருகின்றன, மேலும் குழந்தைகள் விளையாடும் பகுதி, குழந்தைகளால் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஒரு காவலாளியும் நியமிக்கப்பட்டுள்ளார். டவர் பார்க்கை புணரமைக்க 18 ஊழியர்கள் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது.

“இளம் தலைமுறை இந்த பூங்காவின் அழகை அனுபவிக்க வேண்டும்,” எனக் கூறும் செந்தில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க தடுப்பு அமைத்தவுடன் மீண்டும் பார்வையாளர்களுக்கு டவர் திறக்கப்படும் என்கிறார்.

அண்ணாநகர் ரவுன்டானவில் உள்ள மத்திய பகுதி மற்றும் ரவுன்டான முதல் திருமங்கலம் வரையிலான 3 கி.மீ சாலை மீடியன் ஆகியவற்றையும் நோவா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் தத்தெடுத்துள்ளது. ரவுன்டானாவில் அமைந்திருக்கும் கடிகாரம் அடிக்கடி பழுதாகிய நிலையில், அதை சரி செய்து, நீரூற்றையும் சுத்தப்படுத்தியுள்ளது.

“பல வருடங்களாக எக்ஸ்பிரஸ் அவென்யூ. எதிரில் உள்ள மணிக்கூண்டு பகுதியை தத்தெடுக்க முயற்சி செய்து வருகிறோம். பசுமை திட்டம் அமலுக்கு வந்த பின் இது மிக விரைவாக முடிந்தது” என்கிறார் ராயப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரெஜி ஜோஸ். தற்போது, மணிக்கூண்டை செப்பனிடும் பணியில் இந்த சங்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

“படிபடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மணிக்கூண்டிற்கு வண்ண பூச்சு, பின்னர் சுற்றிலும் கார்டன் அமைப்பது தலையாய பணி,” என்கிறார் ரெஜு ஜோஸ்.

பசுமை இடங்கள்தத்தெடுப்புக்கு உள்ள இடங்கள்
( ஜனவரி 7 2020 நிலவரப்படி)
சென்னையில் மொத்த பூங்காக்கள்: 70297
சென்டர் மீடியன்கள்: 9920
போக்குவரத்து ரவுன்டானா: 9910
சாலையோர பூங்காக்கள்: 1634
தகவல் மூலம்: சென்னை மாநகராட்சி

டிசம்பர் 2020 அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தத்தெடுக்கும் நிறுவனங்களுக்கு வைப்புத்தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது முக்கிய அம்சமாகும். இதற்கு முன்னர், திரும்ப பெறக்கூடிய வைப்பு நிதியாக ₹50,000 மற்றும் பகுதிகேற்ப வழிகாட்டுதல் மதிப்பு படி சதுர அடிக்கு கட்டணம் இருந்தது. இது தற்போது நீக்கப்பட்டுள்ளதோடு, பூஜிய வைப்பு தொகை திட்டமாக பசுமை திட்டம் உள்ளது.

“ஊழியர்கள் மற்றும் பொருட்களுக்கென பராமரிப்பு செலவுகள் உள்ளது. ஆகையால், இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வைப்பு தொகையை தள்ளுபடி செய்துள்ளோம்,” என்கிறார் மாநகராட்சியின் பூங்கா மேலாண்மை துறையின் நிர்வாக பொறியாளர், வி புவனேஸ்வரன்.


Read more: From dumping ground to public park: Besant Nagar residents show how!


நிலையான திட்டமாக எடுத்து செல்லுதல்

சென்னையின் பசுமை திட்டங்களை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஒரு உரிமையாளர் உணர்வைத் தூண்டுகிறது. “பூங்காக்களைத் தத்தெடுப்பது சமூகத்தின் பங்களிப்பை உறுதிசெய்கிறது மற்றும் மாநகராட்சி மீதான நிதிச் சுமையைக் குறைக்கிறது ”என பணிகள் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி விளக்கினார்.

ரோட்டரி சங்கம் தத்தெடுத்துள்ள ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதி. படம்: ரெஜி ஜோஸ்

திறந்த வெளிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி இதை மூன்று விதமாக பராமரிக்கிறது: (நோடல் ஏஜென்சி) நேரடி பராமரிப்பு ; தத்தெடுப்புத் திட்டம், அல்லது டெண்டர்கள் மற்றும் பராமரிப்பிற்கான ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம். இதற்கு முன் பூங்கா தத்தெடுப்பு திட்டம் இருந்தாலும், அதை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

பசுமை திட்டத்தை முன்னெடுத்து செல்ல, தொழில்துறை அமைப்புகள், பெரிய நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் திட்டத்தின் கீழ் பசுமை இடங்களை தத்தெடுக்க அழைப்பு விடுத்து மாநகராட்சி கடிதம் எழுதியது. இந்த திட்டத்தில், நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகையை நிர்வகிக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். ஆதலால், போதிய ஊழியர்கள், நிதி ஆகியவை இல்லமால் தவிக்கும் மாநகராட்சி மற்றும், நிறுவனங்களுக்கு நல்லதொரு விளம்பரம் என இது இரு தரப்பினருக்கும் நன்மை பயப்பதாக உள்ளது.

இந்த திட்டத்தை தொய்வில்லாமல் முன்னெடுத்து செல்ல, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பராமரிப்பு நடவடிக்கைகளையும் தணிக்கை செய்ய நகரத்தின் பூங்காக்களை மதிப்பிடுவதற்கான மூன்றாம் தரப்பு தணிக்கை முறையை மாநகராட்சி அறிமுகப்படுத்தவுள்ளது. “இந்த குழுவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் இடம் பெறுவர்.இவர்கள் பல்வேறு அளவுகோள் மதிப்பீட்டின் படி பூங்காக்களை மதிப்பிடுவர். பூங்காக்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வண்ண குறியீட்டு முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். ‘ என மேகநாத் ரெட்டி மேலும் தெரிவித்தார்.


Read more: Shenoy Nagar residents fight to save Thiru Vi Ka Park


தத்தெடுக்கும் முறை

  • சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், குடிமக்கள் ஆகியவர்கள் பூங்கா அல்லது பசுமை இடங்களை தத்தெடுக்கலாம் .
  • விருப்ப விண்ணப்பத்தை gccpasumaichennai@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். விருப்ப நோக்கம் மற்றும் அழகுபடுத்த திட்டம் போன்ற தகவலை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
  • பூங்காக்கள் துறை ஆணையர் கோரிக்கையை பரிசீலிப்பார்.
  • நிறுவனத்தின் பின்புலம் போன்றவை சரிபார்க்கப்படும். நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவம் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
  • அனைத்து விதிமுறைகளும் சரி பார்க்கப்பட்டதும், இரு தரப்பினருக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தப்படும்.
  • விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், சுமார் 50 விதிமுறைகள் பகிரப்படுகிறது. உதாரணமாக, இந்த இடங்களில் உள்ள எந்தவொரு கருவியையும் உரிமை கோர முடியாது. தற்போதுள்ள கட்டமைப்புகளில் எந்த மாற்றங்களோ அல்லது புதிய கட்டமைப்புகளை நிறுவுவதோஆணையாளரின் அனுமதியின்றி செயல்படுத்தக்கூடாது.
  • பசுமை இடங்களை தத்தெடுக்கும் நிறுவனங்கள் அதனை முறையே பராமரிக்க வேண்டும். பராமரிப்பை ஏற்றுக்கொண்ட உடனேயே மாநகராட்சி ஊழியர்கள் இந்த இடங்களில் விடுவிக்கப்படுவார்கள். குப்பை மேலாண்மை, தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்தல், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், பாதுகாப்புப் பணியாளர்களை பணியமர்த்தல் போன்றவற்றை நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
  • பூங்கா பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. அதே நேரத்தில், எந்தவொரு நன்கொடைகளையும் ஏற்கக்கூடாது.
  • பூங்காக்கள் அல்லது எந்த பசுமையான இடங்களையும் ஒரு வருட காலத்திற்கு தத்தெடுத்து கொள்ளலாம். செயல்திறனை பொறுத்து, தத்தெடுப்புக்கான புதுப்பித்தல் நடைபெறும்.
  • பராமரிப்பு திருப்திகரமாக இல்லாவிட்டால், அல்லது ஏதேனும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், மாநகராட்சி ஆணையருக்கும் பிற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அதிகாரம் உண்டு. பராமரிக்கும் நிறுவனம் இழப்பீடு கோர முடியாது.

பசுமை: குறைந்து வரும் பசுமை போர்வைக்கான ஒரு தீர்வு

சென்னயில் வெகுவாக குறைந்து வரும் பசுமை போர்வைக்கான ஒரு சிறந்த தீர்வாக இந்த புது திட்டம் விளங்கும்.  The Better India. வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய வனக் கொள்கை படி 33% இருக்க வேண்டிய சென்னையில் வெறும் 2% பசுமையே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் பூங்காக்கள், போக்குவரத்து ரவுன்டானா, சாலையின் மத்திய மீடியன்கள் ஆகியவையே பசுமைக்கான குறிபிடத்தக்க இடங்களாகும். முறையான பராமரிப்பு மூலம் நகரத்தின் பசும்போர்வையை வெகுவாக அதிகரிக்கலாம்.

டிசம்பர் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரதா புயலால், சென்னையின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த இழப்பை ஈடுகட்ட, குறைந்தது, பத்து லட்சம் மரங்களாவது நட வேண்டும், என்கிறார் முன்னாள் முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் கேர் எர்த் அறக்கட்டளையின் ஆலோசகர் டாக்டர். பாலாஜி. “பூங்காக்கள் தத்தெடுப்பு ஒரு உன்னத திட்டமாகும். சென்னை வெப்ப சூழ்நிலைக்கேற்ற 90 நேடிவ் மரங்கள் மற்றும் 5 பிற வகை மரங்களும் நடப்பட வேண்டும். தொடர் முயற்சியால் சென்னை இழந்த பசுமையை மீன்டும் கொண்டு வரலாம்,” என்கிறார் டாக்டர். பாலாஜி.

Also read:

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.