கரோனா பீதி: தயார் நிலையில் உள்ளதா சென்னை?

Covid-19 outbreak

Students wash their hands to combat the spread of Coronavirus.

Translated by Sandhya Raju

தமிழகத்தில் இது வரை ஒருவருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது எனும் நிலையில், நாட்டில் மற்ற மாநிலங்களை விட கரோனா பீதி சென்னையில் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்காக நாம் அஜாக்கிரதையாக இருத்தல் கூடாது. தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகள் குறித்து அரசுத்துறையினர் சுற்றரிக்கையும், ஊடகத் தகவல்களையும் அளித்து வருகின்றனர். இம்மாத இறுதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்கும் விடுப்பு அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நோயை பொருத்த வரை, தற்போது இந்தியா இராண்டாம் கட்டத்தில் உள்ளதுபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு மட்டும் தொற்று ஏற்படும் நிலையை இது குறிக்கிறது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் படி, அடுத்த கட்டத்திற்கு இது செல்ல 30 நாட்கள் ஆகும், இதற்குள் இதை மேலும் பரவாமல் தடுக்க  இயலும். இதற்காக, அரசு, நிறுவனங்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். 

மக்கள் அதிகம் வந்து செல்லும் வங்கிகள், மால்கள், உணவு விடுதிகள், ஏடிஎம் மையங்கள், திரைப்பட அரங்குகள் ஆகிய உரிமையாளர்களிடம், மேற்பரப்புகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும்படி சென்னை பெருநகர மாநகராட்சி நடத்திய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து சென்னை சிட்டிசன்ஸ் மேட்டர்ஸ் மேற்கொண்ட கள ஆய்வில், வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு போதிய முயற்சிகளை எடுத்தாலும், உணவு விடுதி, வங்கி போன்றவை இன்னும்  போதிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

சென்னையின் பல இடங்களில் நாம் எடுத்த புகைப்படங்கள்:

இயல்பு நிலை: பொது இடங்களில் அதிக எண்ணிகையில் மக்களை காண முடிகிறது. சர்தார் பட்டேல் சாலையில் உள்ள ஒரு பேருந்து நிறுத்துமிடம். பொது இடங்களில் குறைந்தது 6 முதல் 10 அடி தூரம் இடைவெளி விட்டு மக்கள் இருக்க வேண்டும் என சுகாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மாஸ்க் அணிந்த படி குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். மாஸ்க் அணிவதன் மூலமாகவும், தொடர்ந்து ஆல்கஹால் அடிப்படையாக கொண்ட திரவத்தால் கைகளை கழுவுதல் மூலமாகவும் தொற்றை கட்டுப்படுத்தலாம்.
தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு பிரபல உணவு விடுதி அறிந்திருக்கவில்லை. “வழக்கம் போல் ஒவ்வொரு மாலையும் அனைத்து டேபிள்களையும் சுத்தம் செய்கிறோம். அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை,” என்கிறார் அதன் மேலாளர். மக்கள் பயன்படுத்தும் சோஃபா, இருக்கைகள் ஆகியவற்றை அடிக்கடி துடைப்பதில்லை, என ஒப்புக் கொள்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மாஸ்க் அணிந்துள்ளார்கள். படம்: அர்ஜுன் நாகு

செக்-இன் கவுன்டர்,சுங்க பகுதி,நாற்காலிகள்,தள்ளுவண்டிகள் உள்ளிட்ட பயணிகள் தொடு புள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து கிருமி நீக்கம் தெளிப்பானால் சுத்தம் செய்யப்படுகிறது. படம்: சென்னை விமான நிலையத்தின் டிவிட்டர் பதிவு.
தெற்கு ரயில்வே தொழிலாளர் ஒருவர் புறநகர் ரயிலில்  கிருமி தெளிப்பான் மேற்கொள்ளும் காட்சி. கோட்டூர்புரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலில், இரண்டு முறை பயணம் மேற்கொண்ட இந்த செய்தியாளர், இந்த தட ரயிலில்  இந்த செயல்முறையை காண இயலவில்லை.

தினமும் ஷெட்டில் ரயில்களில் கிருமி நாசினி தெளிப்பான் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக பார்க் டவுன் ரயில் நிலையத்தின் டிக்கட் கலக்டர் தெரிவித்தார். ஆனால் தொற்றை கட்டுப்படுத்த இது போதுமா?

சென்னை சென்ட்ரலில் உள்ள ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி திரவம் இல்லை. இது போன்ற மையங்களை மக்கள் உபயோகப்படுத்திய பின் நன்கு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் முன் முகம், மூக்கு, கண்களை தொடாதீர்கள்.

தொற்று குறித்த விழிப்புணர்வு: அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் மாணவிகள் தங்கள் கைகளை சுத்தம் செய்யும் காட்சி.


தங்களை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையாக சென்னை போக்குவரத்து காவலர்கள் மாஸ்க் அணிந்துள்ள காட்சி.
(குறிப்பிட்ட படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்தும் இந்த செய்தியாளர் பதிவு செய்தவை)

“சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறையின் அறிவுறுத்தலின் படி சென்னை போக்குவரத்து கழக்கத்தின் 3400 பேருந்துகளும் தினமும் காலையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. கரோனா தொற்று ஏற்படும் முன்னரே இதை  நாங்கள் கடைப்பிடிக்கிறோம்” என போக்குவரத்து கழகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஓட்டுனர்கள் மாஸ்க் அணிகிறார்களா என்ற கேள்விக்கு அது அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.

பயணிகளிடமிருந்து வந்த புகார்களை தொடர்ந்து சென்னை மெட்ரோ நிறுவனம், பயணிகள் இரும்பும் போது தங்கள் வாயை கைக்குட்டை அல்லது டிஷ்ஷு கொண்டு மூட வேண்டும் என ஒலிப்பெருக்கி அறிவிப்பு அளிக்கிறது. “அனைத்து ஊழியர்களும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். டாய்லட் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது,” என அந்நிறுவன செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஷன்முகம் தெரிவித்தார்.

For English version, click here

[Translated by Sandhya Raju]

 

About Laasya Shekhar 271 Articles
Laasya Shekhar is Senior Reporter at Citizen Matters Chennai. She tweets at @plaasya.