உலக வங்கியின் சென்னை நகர கூட்டுத் திட்டம் அடைய விரும்புவது என்ன?

சென்னை நகர கூட்டுத்திட்டம்: நிலையான நகரத்திற்கான திட்டம்

Chennai buildings
உலகத் தரம் வாய்ந்த நகரமாக சென்னையை மாற்ற உலக வங்கியின் சென்னை நகர கூட்டுத்திட்டம் முனைகிறது. . மாதிரி படம்: JK/Wikimedia Commons (CC BY:SA 4.0)

Translated by Sandhya Raju

மிகுந்த கலந்துரையாடல்களுக்கு பின், செப்டம்பர் 30-ம் தேதியன்று உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு, 150 மில்லியன் டாலர் நிதியுதவியை தமிழக அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது. சென்னை நகரை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான தமிழக அரசின் தொலை நோக்கு திட்டத்திற்கு இந்த நிதி உதவும். “பசுமையான, வாழக்கூடிய, பிற நகரங்களுக்கு போட்டியாக, கால நிலை மாற்றம் மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ள” சென்னை நகர கூட்டுத்திட்டம் முனையும் என உலக வங்கியின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இது என்ன திட்டம்? உலக வங்கி ஏன் தமிழக அரசுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது?

தமிழக அரசுடன் இணைந்து உலக வங்கி செயல்படுவது இது முதல் முறை அல்ல. நகர்ப்புற வளர்ச்சி, சாலை வசதி மற்றும் போக்குவரத்து, பொது சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி என பல்வேறு நலத்திட்டங்களுக்காக உலக வங்கியுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டுள்ளது. நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் (WSP) கீழ் முறையான சுகாதார வசதிகளை உருவாக்க 2000-2005 கால கட்டத்தில், ஆலந்தூர் பேரூராட்சிக்கு (தற்போது சென்னை மாநகராட்சி கீழ் உள்ளது) உலக வங்கி நிதி அளித்துள்ளது

தற்போதைய திட்டம்

“சென்னை நகர கூட்டுத்திட்டம்: நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டம்” என்ற இந்த திட்டம் உலக வங்கியின் நாட்டின் கூட்டு திட்டத்தின் கீழ் வருகிறது, இதில் நாட்டின் வளர்ச்சியில் நகரங்களின் பங்கு மற்றும் செயல்திறனை அங்கீகரிக்கிறது. பாதசாரிகள் பிளாசா திட்டம், பார்கிங் மேலாண்மை என மற்ற நகரங்களை காட்டிலும் சென்னை அதிக அளவில் தேர்ந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இவற்றை செயல்படுத்திய விதம் உலக வங்கி அதிகாரிகளை ஈர்த்துள்ளது, என சென்னை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை, சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடட் தலைவர் ராஜ் செரூபல் நம்மிடம் பகிர்ந்தார்.


Read more: Smart city chief: If we love cities like Paris and Singapore, why not have pedestrian plazas in Chennai?


Pedestrian plaza
பாதசாரி பிளாசா. படம்: மகேஷ்.வி

“சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB), பெருநகர போக்குவரத்து கழகம் (MTC), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) போன்ற பல்வேறு நிர்வாக அமைப்புகள், இது போன்ற பல திட்டங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த திட்டத்திற்கு முக்கிய தேவை. இது முற்றிலும் புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே உள்ள நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்த உதவும். எனவே ஏற்கனவே அனுபவம் வாய்ந்த ஆளும் குழுக்கள் இல்லாவிட்டால், உங்களால் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியாது.” என மேலும் கூறினார்.


Read more: How can commute in Chennai reinvent itself in 2021?


குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளில் உள்ள ஓட்டைகளை இந்த கோவிட்-19 பெருந்தொற்று வெளிச்சத்திற்கு கொண்டுள்ளது என உலக வங்கியின் இந்திய இயக்குனர் ஜுனைத் அகமத் தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டம் எங்களின் கூட்டு முயற்சிக்கு ஒரு தொடக்கமாக திகழும். தமிழக அரசுடன் இணைந்து கால நிலை உட்பட்ட, நகர்ப்புற வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான நிலையை உருவாக்குவோம். இந்த கூட்டு முயற்சி தரும் அனுபவம் மற்ற நகரங்களில் இதை செயல்படுத்தவும்,இந்தியாவின் பிரம்மாண்ட நகர்ப்புற போக்குவரத்து நிரவகிப்பிற்கும் உதவும்.” என உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அகமத் கூறியுள்ளார்.

திட்டத்தின் நோக்கம்

செரூபலை பொறுத்த வரை, இந்த கூட்டு முயற்சி நிதி உதவியை தாண்டி, பல்வேறு பொது நிர்வாக அமைப்பினை உருவாக்கி அதன் செயலாக்கத்தை எளிதாக்குவதோடு, நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை எளிதாக திட்டமிட்டு செயலாக்க உதவும்.

உலக வங்கியின் அறிக்கையின் படி, இந்த திட்டத்தின் நோக்கம்:

  • நீர் இணைப்பு, வழங்கல் மற்றும் கழிவுநீர் சேவைகள்:

சென்னையில், அதுவும் வட சென்னையில் தரமான குடிநீர் வழங்கல் பெரும் சவாலாக உள்ளது. வட சென்னையில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வருமா, எப்போது வரும் என்பது பெரிய கேள்விக்குறி, அப்படியே வந்தாலும், மாசுபட்ட நீர் குழாயிலிருந்து வெளியேறிய பின்னரே நல்ல குடிநீர் பெற முடியும்.


Read more: Why residents in northern parts of Chennai throw away pots of water every week


சென்னை நகர கூட்டுத்திட்டம் மூலம், சென்னையின் முக்கிய பகுதிகளில் நீர் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குதல்; நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு செயல்திறன் அடிப்படையிலான ஆபரேட்டர் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துதல்; சென்னையின் புற பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்கு சேவைகளை விரிவுபடுத்துதல்; செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல் (நீர் வீணாவதை தடுத்தல் மூலம்); மற்றும் மேம்படுத்தப்பட்ட செலவு மீட்பு (மேம்பட்ட பயன கட்டணங்கள் மற்றும்/அல்லது இயக்கச் செலவுகளைக் குறைப்பதன் மூலம்).

ஈ.சி.ஆர் பகுதியில் டாங்கர் லாரி மூலம் தண்ணீர் பெறும் காட்சி. படம்: லாஸ்யா சேகர்
  • நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துதல்

பேருந்து, புற நகர் ரயில் போக்குவரத்து அல்லது மெட்ரோ ரயில் ஆகட்டும், பொது போக்குவரத்து பொறுத்த வரையில் பாதுகாப்பு மற்றும் எளிதான அணுகல் நீண்ட காலமாக சவாலாக இருந்துள்ளது. தினந்தோறும் பேருந்தில் செல்பவர்களுக்கு போதிய எண்ணிகையில் பேருந்து இல்லாதது முதல் இடற்பாடு.

கடந்த டிசம்பர் மாதம் சிடிசன் மேட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கை படி, சென்னையில் மொத்தம் 3600 பேருந்துகள் மட்டுமே உள்ளது, இது நிச்சயம் போதுமானது அல்ல. பெங்களூருவில் இதை விட இரண்டு மடங்கு பேருந்துகள் உள்ளன. திருட்டு, சமூக விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமை என புறநகர் ரயில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பல செய்திகள் வந்துள்ளன.

மக்களின் நலன் கருதி போடப்படும் போக்குவரத்து திட்டத்தில், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவதோடு, செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் பேருந்து சேவைகளின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதவும் இந்த உலக வங்கி திட்டத்தில் உள்ளது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (Chennai Unified Metropolitan Transport Authority) செயல்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

  • சுகாதார பராமரிப்பு அமைப்பை மேம்படுத்துதல்

புற்றுநோய் பரிசோதனை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலமும், பொது சுகாதார மையங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், தேசிய தர உத்தரவாத தரநிலைகளை அடைய உதவுவதன் மூலம் இது செயல்படுத்தப்படும். பொது மற்றும் தனியார் சுகாதார வசதிகள் மூலம் வழக்கமான அறிக்கைகள் மூலம் நோய் மற்றும் தொற்றுநோய்களின் சரியான கண்காணிப்பை மேம்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • திடக்கழிவு மேலாண்மை

நகர்புற மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கோவிட்-19 பெருந்தொற்று புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது – திடக்கழிவு. பரவலாக்கப்பட்ட கழிவு சேகரிப்பு மற்றும் பிரித்தல் மூலம், சென்னை மா நகராட்சிதன்னார்வலர்களுடனும், பொது மக்களுடனும் இணைந்து திடக்கழிவு மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளார்கள்.

ஆனால், பெருந்தொற்று காரணமாக நோய் கட்டுப்பாட்டில் முழு கவனத்தையும் மாநகராட்சி திருப்பியது. ஆதலால், நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் மூடப்பட்டன. குப்பைக் கிடங்குகளின் உயிரியல் திருத்தம் மற்றும் பிரித்தெடுத்து அளவிடுதல் நடவடிக்கைகளை தொடங்கும் நேரத்தில், இரண்டாம் அலை மீண்டும் தடையாக அமைந்தது.


Read more: How can we bring waste management back on track in Chennai post COVID?


மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மீட்பு ஆகியவற்றை செயல்படுத்தி சென்னையில் கழிவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டுத்திட்டம் செயல்படும். கழிவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, திடக்கழிவு மேலஆண்மை மூலம் பொருளாதார மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.

திட்ட செயல்பாட்டின் முதல் படி

இந்த திட்டத்தின் முதல் கட்டமானது, பல-துறை திட்டத்திற்கான முடிவுகளுக்கான (PforR) செயல்பாடாகும், இது 2021-26 வரையான ஐந்து ஆண்டுகளில் அடையப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. PforR என்ற கருத்தின் பின்னணியில், “வளர்ச்சி என்பது முடிவுகள் மற்றும் நிறுவன பலப்படுத்துதல் பற்றியது” என்ற எண்ணத்தில் இருந்து வருகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், நிலையான முடிவுகளை வழங்க பல்வேறு மேம்பாட்டு அதிகாரிகளை வலுப்படுத்தவும்இது உதவும்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE) இன் அறிக்கையின்படி, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், PforR செயல்பாட்டின் முதன்மை கவனம் நகர்ப்புற இயக்கம், பேருந்து சேவையை வலுப்படுத்துதல், நகராட்சி பாதசாரி உள்கட்டமைப்பு மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, திமுக அரசு பதவியேற்றதும், உலக வங்கியுடன் ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ள அவகாசம் வேண்டும் என கூறியது. பின்னர், ஆகஸ்ட் மாதம் நிதி அறிக்கை சமர்ப்பித்த போது, இந்த திட்டத்தை அரசு முன்னெடுத்து செல்லும் என்றும் இந்த திட்டம் 2021 முதல் 2030 வரை படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

[Read the original article in English here.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Korah Abraham 27 Articles
Korah Abraham is Reporter at Citizen Matters Chennai. He was earlier a reporter with The Newsminute and has reported on issues ranging from the Kerala floods in 2018 and 2019, politics, crime and society. Korah completed his graduation in Journalism, Psychology and English from Christ University, Bengaluru and a PG Diploma in New Media from the Asian College of Journalism.