அறிவரசனின் விஞ்ஞான கனவு நிறைவேறுமா?

SCIENCE & TECHNOLOGY EDUCATION AT THE GRASSROOTS

Arivarasan with students. Pic: Parikshan Trust

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ‘பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்கு’ (http://tnstc.gov.in/periyar-science-tech.html) என் இரண்டே முக்கால் வயது மகளை அழைத்து சென்றேன். வாழ்க்கை பயணத்தில் சென்னை வந்து பல வருடம் ஆகியிருந்தாலும், பள்ளிப்பருவத்தில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தபோது ஒரு முறை மட்டுமே அங்கு சென்ற ஞாபகம். ‘பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவின் ஒரு பகுதியான  பிர்லா கோளறங்கத்தின் உள் அமர்ந்து கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டது மட்டும் இன்னும் பசுமையான நினைவாக உள்ளது.

நான் சென்றது ஒரு விடுமுறை தினமாதலால் பல பள்ளிகள், சில கல்லூரிகள் என மாணவ மாணவிகளின் பெருங்கூட்டம். பிர்லா கோளரங்கத்திற்கான நுழைவு சீட்டு கூட கிடைக்கவில்லை. அறிவியல் மையத்திற்கு மட்டுமே கிடைத்த நுழைவு சீட்டை எடுத்துக்கொண்டு நானும் என் மகளும் பயணித்தோம்.

     பெரியார் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள காட்சிக்கூடங்கள்:

பெரியார் காட்சி கூடம்

Periyar Gallery

போக்குவரத்து காட்சிக்கூடம்

Transport Gallery

எரிசக்தி காட்சிக்கூடம்

Energy Gallery

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடம்

Space Research Gallery

கணிதமேதை ராமானுஜம் கூடம்

Ramanujam Gallery

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி காட்சிக்கூடம்

Defence Research Gallery

அணுக்கரு ஆற்றல் காட்சிக்கூடம்

Atomic Power Gallery

பல்லுயிர் இதய காட்சிக்கூடம்

Heart Gallery

கடல்சார் அறிவியல் காட்சிக்கூடம்

Ocean Gallery

அறிவியல் பூங்கா

Science Park

பரிணாம வளர்ச்சி பூங்கா

Evolution Park

புதுமைகாண் மையத்தில் இருக்கும்  பயன்பாட்டுக்கருவிகள் சிறிது பழுதடைந்தும், பணி செய்யாதும் இருந்தன.,.

மாணவர்களோடு ஆசிரியர்களும், கூட்டாண்மை சமூக பொறுப்பை (Corporate Social Responsibility) செவ்வன செய்யும்  பெரிய நிறுவனங்களில் பணி செய்யும் சமூக அக்கறையாளர்களும் வந்திருந்தனர். இத்தனை காட்சி கூடங்கள் இருந்தும் அவை குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்தவோ, அவற்றிற்கான விளக்கத்தை அளிக்கவோ அங்கு யாரும் இல்லாதது எனக்கு கவலை அளித்தது.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி காட்சி கூடத்திலும், ராமானுஜம் கூடத்திலும் இருந்த தகவல் பலகைகள் கூட மற்ற கூடங்களில் இல்லை. இந்த அற்புதமான அறிவியலை சொல்லித் தர யாரும் இல்லாத காரணத்தால், அவை யாவும் பொம்மைகள் போல்தான் அந்த மாணவர்களுக்கு காட்சியளித்தன. வந்திருந்த ஆசிரியர்களும் அதற்கான சிரமம் ஏற்கவில்லை.

விளக்கம் இல்லாவிட்டாலும், இந்த மாணவர்கள் இதனை பார்க்க செய்கிறார்கள். இந்த காட்சிகள் சில கனவுகளை விதைக்கலாம். இதனை அணுக முடியாத மாணவர்கள்? அரசுப் பள்ளியில் 9வது வகுப்பிற்கு பிறகே இருக்கும – பாடத்திட்டத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனைகளை தாண்டி, ஒரு மாணவன் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டா? 6வது வகுப்பில் துவங்கும் அறிவியல் பாடம், புத்தகப் பாடத்தில் மட்டும்தான் இருக்க வேண்டுமா? 5வது படிக்கும் மாணவனுக்கு அறிவியல் ஆர்வம் இருக்கக்கூடாதா? என எண்ணற்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.

அறிவை புகட்டும் ‘அரசன்’

பரிக்ஷன் அறக்கட்டளையின் அறிவரசன் அவர்களை சந்திக்கும் முன் அந்த கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’ என்றுதான் நினைத்திருந்தேன். சுமார் 9 ஆண்டுகளாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே சென்று, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருக்கும் அறிவியலையும், அதனை தாண்டிய அறிவியலையும் அவர்கள் கண் முன்னே நிகழ்த்தி, அவர்கள் கண்ட அந்த அறிவியலை தனியாகவும், குழுவாகவும் செய்யவைக்கிறார் அறிவரசன்.

5வது முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை 5- 8 ஆம் வகுப்புகளை ஒரு குழுவாகவும், 9- 12 வகுப்புகளை ஒரு குழுவாகவும் வைத்து தாங்கள் படிக்கும் அறிவியல் கருத்துகளுக்கு தங்கள் அமைப்பின் ‘விஞ்ஞான வாகனம்’ மூலம் செயல்வடிவம் தருகிறார் திரு.அறிவரசன். அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு, தேடிவந்த மென்பொறியாளர் பணியை தூக்கி எறிந்துவிட்டு, பரிக்க்ஷனிடமும், நிறுவனரும் உணவு விஞ்ஞானியுமான திரு.பசுபதி அவர்களிடமும் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டார். அறிவியலையும், விஞ்ஞானத்தையும் அவ்வளவு எளிதில் அணுக முடியாத அரசு மற்றும் அரசு சார்ந்த, குறிப்பாக கிராமப்புற பள்ளி மாணவர்கள் இவர்களின் முதல் இலக்கு. தனியார் பள்ளிகள் வரவேற்றாலும் தயங்காது விரைகிறது இந்த விஞ்ஞான வாகனம். 2009ல் திருவள்ளூர் மாவட்டத்தில் 900 பள்ளகளில் துவங்கிய இந்த பயணம் காஞ்சிபுரம், சென்னை மாநகராட்சியில் 80 பள்ளிகள், வேலூர் வாணியம்பாடி, இராமாநாதபுரம், பெரம்பலூர் என பயணித்து தற்பொழுது கோவை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறது. இதுவரை மொத்தம் 3200 பள்ளிகளில், சுமார் பத்தரை லட்சம் மாணவர்களை சென்று அடைந்துள்ளது இந்த ‘விஞ்ஞான வாகனம்’.

எப்படி செயல்படுகிறது இந்த வாகனம்?

வேதியியல் பொருட்கள், கணிப்பொறி, ப்ரொஜக்டர், இயற்பியலுக்கு தொடர்புடைய கண்ணாடி பொருட்கள், அதனை விளக்க வேண்டிய ஆசிரியர்கள், திட்ட அலுவலர், ஓட்டுனர் என துவங்கிய இந்த பயணம் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தின் மையத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. பின் ஒவ்வொரு நாளும் 10 கிமீ சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, தன்னை அறிமுகப்படுத்தி இரவு இளைப்பாறுகிறது. வானகத்தில் இருப்பவர்கள் கிடைக்கும் இடத்தில் தங்கிகொள்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் அறிவியலை மிக சிக்கனமாக இவர்களால் கற்பிக்க முடிகிறது. துவக்கத்தில் அறிவியலை மட்டும் நடைமுறையில் சொல்லித்தந்த வாகனம், பின் அறிவியலை இன்னும் எளிமைப்படுத்தும் சில ‘கதை சொல்லிகளையும்’ தன்னுள் எடுத்துக்கொண்டுள்ளது. உதாரணத்திற்கு ‘பச்சையம்’ எனப்படும் Photosynthesisஐ ஒரு கதையின் மூலமும், ஒரு அறிவியல் சோதனையின் மூலமும் சொல்லிக்கொடுப்பார்கள். அறிவியல் சோதனையில் துவக்கி, அதன் அடிப்படை விளக்கி, கதைகள் சொல்லி, அதன் அறிவியல் தத்துவங்கள் (Science Laws) சொல்லப்படும்பொழுது, ஒரு மாணவன் அடையும் பரிபூரணம் என்றுமே அவன் மனதை விட்டு நீங்காது. அத்தோடு நில்லாது வாழ்க்கை முறையில் அவை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. உதாரணமாக ‘ஒற்றை இடப்பெயர்ச்சி வினை’ எனப்படும் Single Displacement Reactionதான், ‘Thermite Welding’ என்னும் பெயரில் ரயில் தண்டவாள பழுதிற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது புரியவைக்கப்படும். சினிமாவில் உபயோகப்படுத்தப்படும் ‘செயற்கை இரத்தம்’ என்பது Double Displacement Reactionதான் என்பதை இதே போன்ற கதைகள், அடிப்படைகள், தத்துவங்கள் மூலம் கற்பிக்கிறது. சில நூறு ‘அறிவியல் சோதனைகளில்’ துவங்கி இன்று 1200 ‘அறிவியல் சோதனைகளை’ தன்னுள் வைத்துள்ளது.

சமூக கண்ணோட்டம்

சமூகத்தை பாதிக்கும் சில விசயங்களையும் அறிவியல் சோதனைகள் மூலம் கற்றுக்கொடுக்கிறார்கள். குடிப்பது தீங்கு என்ற போதனை இல்லாமல், குடியால் உடலில் ஏற்படும் அறிவியல் மாற்றங்களை மீண்டும் சோதனைகள் மூலமே தெரிந்துகொள்ளலாம். விவசாயமும் இதில் விதி விலக்கல்ல. இரண்டரை மணி நேரம் நடக்கும் ஒரு அமர்வில் 2 மணி நேரம் அறிவியலுக்கும், அரை மணி நேரம் சமூகத்தை பாதிக்கும் விசயங்களில் அறிவியல் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஒரு மின்விசிறியோ, குழல்விளக்கோ (Tubelight) பழுதானால் அதனை பாதுகாப்பாக எப்படி சரி செய்வது என்பதில் தொட்டு தீயணைப்பு பாதுகாப்பு, CPR முதலுதவி வரை மாணவர்கள் வாழ்க்கை அறிவியலை கற்கிறார்கள்.

வருடத்தின் ஒரு முறை அல்லது இரண்டு முறை சொல்லித்தரப்படும் சோதனைகள் ஒரு மிகப் பெரிய கனவை விதைக்கும் என்றாலும், தொடர் கல்விக்கான வாய்ப்பு உண்டா என அறிவரசனை வினவினேன்.  “நிச்சயமாக. நாங்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அத்தனை அறிவியல் சோதனைகளையும், ஆசிரியர்களுக்கு என பிரத்யேகமாக சொல்லிக்கொடுக்கிறோம். நாங்கள் சென்ற பிறகும் அந்த அறிவியலை தொடர்ந்து தக்கவைக்க இது தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாது என்னுடைய கைபேசி எண்ணை எல்லா இடங்களிலும் பகிர்ந்துள்ளேன். இன்றும் என்னை தொடர்ந்து கேள்வி கேட்டும், தங்கள் பள்ளிகளில் நாங்கள் சொல்லித் தந்த அறிவியல்கொண்டு கண்காட்சிகள் நடத்தும் மாணவர்களும் உண்டு.”

Children enjoying a science demonstration . Pic: Parikshan Trust

‘சோதனை’ சவால்கள்

இந்த பயணத்தில் அவர் சந்தித்த சவால் ஏதேனும் உண்டா என்றவுடன் அவரின் பதில் நெகிழவைத்தது. “இந்த அறிவியல் சோதனைகளை வாய்பேச முடியாத, செவித்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். அதைவிட ஒரு முறை மும்பையின் விழிச்சவால் கொண்ட (Visually Challenged) ஆயிஷா, மாயிஷா என்ற 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகளுக்கு நாங்கள் கற்றுக்கொடுத்த அறிவியல் எங்களையும் கற்கவைத்தது.  முதல் நாள் மைதா மாவு கொண்டு இருதய வடிவம் காண்பிக்க, இருதயம் தொடுவதற்கு இப்படித்தான் இருக்குமா என அவர்கள் வினா எழுப்பினார்கள். அடுத்த தினம் அவர்களுக்கென்றே பிரத்யேகமாக ஆடு, மாடு இதயங்களை வரவழைத்து காண்பித்தோம். அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகுதான், மாற்றுத்திறனாளிக்கென தனியாக வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமும் ஏற்பட்டுள்ளது, மனநலம் குன்றிய மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம். ஒரு முறை மன நலம் குன்றிய மாணவர்களுக்கு நாம் ‘தீ’ குறித்து சொல்லிக்கொடுத்தது, ஒரு மாணவன் தங்கள் பள்ளியில் ஏற்பட்ட சிறு விபத்தையே தவிர்க்க உதவியுள்ளது. “

செலவுகள்? “ஆரம்பகாலத்தில் தனியாரின் மூலம் ஒரு பழைய வாகனம் தரப்பட்டது.  வேதியியல் பொருட்கள், இயற்பியலுக்கு தொடர்புடைய பொருட்கள் ஆகியவை வாங்க நன்கொடைகள் பெறப்பட்டது. அது பழுதான சமயம் இன்னொரு வாகனம் இன்னொரு தனியார் நிறுவனம் மூலம் கிடைத்தது. வாகனத்திற்கும், அதில் இருப்பவர்களுக்கான மாத செலவுகள் சுமார் 50,000 வரை வருகிறது. இதுவரை நன்கொடைகள் மூலமும், திரு.பசுபதி அவர்கள் தன் சொந்த பணத்தை செலவழித்தும் நடத்தி வருகிறோம். சில நேரங்கள் ‘அறிவியல் முகாம்’ நடத்தியும் சமாளிக்கிறோம். இராமாநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அரசாங்கம் மூலம் உதவி புரிந்தார்”.

அடுத்தது என்ன? “தமிழகத்தை தாண்டியும் பயணிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் 32 மாவட்டங்களிலும் ஒரு ‘விஞ்ஞான வாகனம்’ இருக்க வேண்டும் என கனவு உள்ளது. வாகனம் வேறு ஊர்களில் செயல்படும் சமயம், வரும் அழைப்புகளை தாமதப்படுத்தாது, நான் கையில் சுமக்கும் பிரத்யேக பைகளையும் தயார் செய்துவைத்துள்ளேன். அறிவியல் பொருட்களை அடைத்து வைத்து சில சோதனைகளை நான் சென்று செய்துகாட்டியும் வருகிறேன்.  ஒவ்வொரு வருடமும் புதிய புதிய மாணவர்கள். மாவட்டந்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளிகள். ஒரே வாகனம் கொண்டு சமாளிப்பது சிரமமாக உள்ளது. தனியார் பங்களிப்பு, அரசாங்கத்தின் பரிபூரண ஒத்துழைப்பு இருந்தால் இந்த அறிவியல் பல அற்புதங்களை நிகழ்த்தும் என்றார்”.

ஒரு பள்ளிக்கு சென்று நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டால், அரசியல்வாதியாக ஆக விரும்புகிறோம் என எப்படி ஒரு மாணவர்கள் கூட சொல்லமாட்டார்களோ, அது போல விஞ்ஞானி ஆக விரும்புகிறோம் எனவும் சொல்வதில்லை. ஆனாலும் இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. கடைசியாக அறிவியலில் நோபல் பரிசு வாங்கிய இந்தியர் யார் என கேட்டால் நம்மால் சொல்ல முடியவில்லை. விஞ்ஞானம் என்பது படித்து முடித்த பிறகு சென்று சேரும் பணி அல்ல. அது சிறு வயதில் விதைக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் கனவு. அந்த கனவை பல லட்சம் மனங்களில் விதைத்து கொண்டிருக்கும் பரிக்ஷனும், திரு.பசுபதி மற்றும் திரு. அறிவரசனும் போற்றப்பட வேண்டியவர்கள். மாணவர்களின் கனவும், இவர்கள் கனவுகள் மெய்ப்படும் நேரம் வெகு தொலைவில் இல்லை.

 

அறிவரசனை தொடர்பு கொள்ள – 8754409917

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Jagadheeswaran D 4 Articles
Jagadheeswaran D is a software engineer turned social worker, currently concentrating on solving issues in his municipal ward.

8 Comments

  1. சிறப்பான பணி அறிவரசன்… உங்கள் பணி தொடர்ந்து செம்மை தொடர வாழ்த்துகள். நல்ல பதிவு Jagadheeswaran sir.

  2. ஜெகதீஸ் அன்னா மிக அருமையான பதிவு நான் ஆசைபடட்தை அவர்கள் செய்கிறார்கள் என நினைக்கும் போது மகிழ்சியாக உள்ளது…
    இந்த பதிவை எழுதியமைக்கு நன்றி நான் மற்றவர்களுக்கும் பகிற்கிறேன்..????????????

Comments are closed.