வெள்ள பாதிப்பு: தவிக்கும் மறுகுடியமர்வுவாசிகள்

2021 சென்னை வெள்ளம்: மறுகுடியிருப்புவாசிகளின் நிலைமை

perumbakkam resettlement colony
பாதுகாப்பான குடிநீர், போதுமான வடிகால் வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மறுவாழ்வு வரைவு கொள்கை கூறியுள்ள நிலையில், நிதர்சனம் வேறு மாதிரியாகவே உள்ளன. படம்: ஹரிபிரசாத் ராதாகிருஷ்னன்

Translated by Sandhya Raju

“நாங்கள் படும் கஷ்டத்தை நினைத்தாலே அழுகை வருகிறது,” என தன் நிலையை வெளிப்படுத்துகிறார் சென்னை பெரும்பாக்கம் காலனியில் வசிக்கும் மேரி. சமீபத்திய வெள்ளம் மிகுந்த கடினத்தை இவர்களுக்கு அளித்துள்ளது. “தண்ணீர், மின்சாரம், உணவு என எதுவுமே இல்லை. அரசு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை.”. இவரைப் போலவே, இந்த காலனி முழுவதும் இது போன்ற குரலே ஓங்கி ஒலிக்கின்றது.

மற்ற பகுதிகள் போல், தரைத்தள வீடுகளில் மட்டும் தண்ணீர் புகவில்லை. “தரக்குறைவான கட்டுமானத்தால், மாடி வீடுகளில் கூரைகள் ஒழுகின,” என அங்கு வசிக்கும் மகா கூறினார். எங்கிருந்து ஒழுகுகிறது என சில பேர் தேடும் வீடியோக்களை நம்மிடம் காண்பித்தனர்.

மழை மேகம் விலகியதும் இந்த குடியிருப்பின் நிலை மேலும் தெளிவாக தெரிந்தன. காலனி முழுவதும் உள்ள சுவர்களின் ஓதம், கழிவு நீர் கலந்த தண்ணீர் சொட்டு சொட்டாக இந்த சுவர்களில் உள்ள பைப் மூலம் சொட்டின. தரை முழுவதும் கழிவு நீர் சூழ்ந்து இருந்தது.


Read more: COVID-19: Women, children in low-income housing bore the worst brunt


மீள்குடியிருப்பின் சரித்திரம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) என தற்போது மறுபெயரிடப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், பல்வேறு மீள்குடியேற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 1,31,600 வீடுகளை கட்டியுள்ளது.

2015 வெள்ளத்தைத் தொடர்ந்து அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரையிலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலானவர்கள் இந்த குடியிருப்புகளின் வசிக்கின்றனர். நவம்பரில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, இங்குள்ள நிலை சிறிதும் மாறவில்லை என்பதை குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு நினைவூட்டலை அளித்துள்ளது.

பேரிடர்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அக்குடும்பங்கள் தங்களுடைய முந்தைய குடியிருப்புகளிலிருந்து அகற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர்கள் மீண்டும் வெள்ளப் பாதையில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னையில் மீள்குடியேறிய சுமார் 60,000 குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளான தண்ணீர், சுகாதாரம் ஆகியவை மேலும் ஆபத்தில் உள்ளன.

Sanitation and health are major concerns in Chennai resettlement colonies.
2015 இல் இருந்த அதே குறைவான சுகாதார நிலைமையில் மீள்குடியேற்ற பகுதிகள் உள்ளன.
படம்: ஹரிபிரசாத் ராதாகிருஷ்ணன்

தண்ணீர், சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளிலிருந்து உருவாகின்றன என தாழ்த்தப்பட்ட நகர்ப்புற சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையத்தின் (IRCDUC) நிறுவனர் வனேசா பீட்டர் கூறுகிறார்.

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஒவ்வொரு மீள்குடியேற்ற பகுதிகளுக்கும் வேறுபடுவதால், இந்த குடியேற்றங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறுபடுகின்றன. “கண்ணகி நகர் போன்ற சில பழைய மீள்குடியேற்ற காலனிகளில் உள்ளே குழாய் தண்ணீர் கூட இல்லை” என்று வனேசா கூறுகிறார். பெரும்பாக்கத்தில், குளியலறையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமையலறையில் குழாய்கள் வழங்கப்பட்டால், அதை குளியலறையில் பயன்படுத்தலாம், ஆனால் இங்கு தலைகீழாக உள்ளது. மேலும் இது அவர்களின் கண்ணியத்திற்கு எதிரானது என மக்கள் கருதுகின்றனர்.

நிதி வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்து வழங்கப்படும் வசதிகளும் மாறுபடுகின்றன. “உலக வங்கி, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம், KfW, போன்ற ஒவ்வொரு நிறுவனங்களும் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களில் வெவ்வேறு கூறுகளின் தொகுப்புகளுக்கு நிதியளிக்கின்றன. எனவே, ஒட்டுமொத்த வசதிகள், வாழ்வாதாரப் பயிற்சி மற்றும் வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் ஆகியவை மீள்குடியேற்றக் காலனிகளுக்கு இடையில் வேறுபடுகின்றன, மேலும் அதே காலனிகளுக்குள்ளும் வேறுபடுகின்றன” என்று IRCDUC இன் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நுண்டினி ஏடி கூறுகிறார்.

அடிப்படை சேவைகள் உரிமைகளாக கருதப்படுவதில்லை

பல கட்ட முறையீடுகளுக்கு பின்னரே பல மீள்குடியேற்றப் பகுதிகளில் சுகாதார வசதி, பள்ளிகள் என அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. “அதன் பிறகும், பொது சுகாதார மையங்களில் காம்பவுண்டர்களே மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்,” என்கிறார் நுண்டினி.

மீள்குடியிறுப்புகளுக்கு இடையே வேறுபாடுகள் மட்டுமின்றி, சில இடங்களில் குடியிருப்போர் சங்கங்களின் செயல்பாடும் நல்ல சுகாதாரம் மற்றும் சிறப்பான பராமரிப்புக்கு காரணமாக அமைகிறது. “பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகள் நன்றாக உள்ளன,” என்கிறார் அங்கு வசிக்கும் கௌசல்யா. கட்சி சார்புடைய சிலர் சங்கங்களின் பங்கு வகிக்கும் போது, அனைத்து குடியிருப்புவாசிகாளின் நலனையும் கருத்தில் கொள்வதில்லை எனவும் கூறுகின்றனர்.


Read more: 7600 families, one PDS centre: How resettled slum dwellers buy rations in Perumbakkam


சங்கங்களின் மூலம் பணம் வசூலிக்கப்பட்டு, பராமரிப்பு பணிக்காக கையூட்டாக கொடுக்க வேண்டியிருக்கிறது. “உதாரணமாக, மின்சாரம் துண்டிக்கப்படும் போது, லஞ்சமாக சில நூறு ரூபாய்களை கொடுத்தால் மட்டுமே, அடுத்த முறை பழுதடையும் போது, சரி செய்கிறார்கள்.” என்கிறார் மேரி.

அடிப்படை வசதிகள் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. இந்த சூழலில், அக்டோபர் மாதம் அரசு வெளியிட்ட மறுவாழ்வு வரைவு கொள்கை பலன் தருமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

வரைவு கொள்கையில் உள்ள இடைவெளிகள்

இது வரை மறுவாழ்வுக்கான கொள்கை இல்லாத நிலையில், அடிப்படை வசதிகளை தங்கள் உரிமையாக பெற முடியவில்லை. கொள்கையின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டவுடன், இந்த உரிமைகள் பழைய மீள்குடியேற்ற காலனிகளுக்கும் நீட்டிக்கப்படும், ”என கூறும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கின் சமூக தொழில்முனைவோர் துறையின் தலைவர் ஆண்டனி ஸ்டீபன், சிங்கார சென்னை 2.0யின் ஒரு பகுதியாக ஏராளமான குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் அரசு திட்டம் வகுத்துள்ளதாக கூறுகிறார்.

ஆனால், WASH தொடர்பாக பல இடைவெளிகளை இந்த வரைவுக் கொள்கை கொண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர், போதுமான வடிகால் வசதிகள் மற்றும் இரண்டு கிலோமீட்டருக்குள் துணை சுகாதார நிலையத்தை அணுகுவதற்கான ஏற்பாடுகளை கொள்கை ஆவணம் வழங்குகிறது. ஆனால், மீள்குடியேற்றக் காலனிகளின் அருகில் இந்த வசதிகள் உருவாக்கப்படும் என்பதற்கு இன்னும் உத்தரவாதம் இல்லை.

மேலும், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் TNUHDB ஆகியவற்றின் பொறுப்புகள் குறித்து தெளிவாக வரையுறுக்கப்படவில்லை. இது பிரச்சனைகாளை களைவதை மேலும் சிக்கலாக்கும். வாரியத்தின் படி, குடியிருப்பு சங்கங்கள் “பராமரிப்பு மற்றும் பொது பணிகளை மேற்கொள்வது சங்கங்களின் பொறுப்பாகும், ஆனால், இதற்கான கட்டணத்தை அரசு ஏஜன்சியே வசூலிக்கிறது, ஏற்கனவே செலவிடப்பட்ட தொகையை அடிப்படையாக கொண்டு இது வசூலிக்கப்படுகிறது.”


Read more: “Government should not use slum eviction to further ‘Singara Chennai’ agenda”


வரைவு கொள்கையின் பல அம்சங்களைப் பற்றி எங்களுக்கு பரிந்துரைகள் வந்துள்ளன, இவற்றை பரீசிலித்து இறுதி கொள்கை வெளியடப்படும் என TNUHDB இன் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மீள்குடியேற்ற காலனிகளின் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சமூக தணிக்கை தொடர்பாக வரைவு கொள்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த கொள்கையின்படி, நில உரிமையாளர் துறையைச் சேர்ந்த நோடல் அதிகாரி 15 நாட்களுக்குள்ளும், அவசர காலங்களில் ஏழு நாட்களுக்குள்ளும் மனுவின் மீதான தீர்வு அளிக்க வேண்டும்.

மறுவாழ்வு கொள்கை வெளியிடப்பட்ட இரண்டு வருடங்களுக்குள் சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, இந்த கொள்கை சரியாக அமல் படுத்தப்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும். “குறைகளை பரீசிலிக்க இதுவே முதல் படியாகும். சமூக ஈடுபாட்டுடன், இந்த குறைகளை அரசு களைய வேண்டும். தற்போதுள்ள குடியிருப்புகளிலும் இந்த கொள்கையை அமல்படுத்த வேண்டும்.” என கூறுகிறார் வனேசா. மழையோ, வெயிலோ, விளிம்பு நிலைகளில் வாழும் நகர்ப்புற ஏழைகளின் கண்ணியமான வாழ்க்கைக்கான அடிப்படை உரிமையைப் பறிக்கக் கூடாது.

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Hariprasad Radhakrishnan 3 Articles
Hariprasad Radhakrishnan is an independent journalist based in Chennai.