கோவிட் சிகிச்சை: பிளாஸ்மா தானம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கான வழிகாட்டி

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
கோவிட் தொற்று சிகிச்சைக்காக ஜூலை 22 அன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டது.
படம்: மாநில சுகாதாரத் துறை

Translated by Sandhya Raju

புது தில்லியை அடுத்து, ₹2.34 கோடி செலவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி ஜூலை மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. கோவிட் தடுப்பூசி இன்னும் சோதனை செயல்பாட்டில் உள்ள நிலையில் இந்நோய்க்கு நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இன்னும் இல்லை என்றாலும், பிளாஸ்மா சிகிச்சை நிகழ்வுகள் சில சாதகமான முடிவுகளை அளித்துள்ளது. இருப்பினும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கான்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? பிளாஸ்மா வங்கி செயல்பாடு என்ன? யார் பிளாஸ்மா கொடையாளி ஆகலாம்? சென்னையில் எங்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்கலாம்?

இது போன்ற பல்வேறு பொதுவான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த வழிகாட்டி தொகுக்கப்பட்டுள்ளது?

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? கோவிட் தொற்றை இது முற்றிலும் போக்குமா?

தொற்று ஏற்பட்டு குணமான நபரின் உடலிலிருந்து பிளாஸ்மா ( இரத்தத்தின் உள்ள வைக்கோல் நிற, திரவக் கூறு) எடுக்கப்பட்டு தொற்று உள்ள நபரின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படும். குணமான நோயாளியின் இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் கோவிட் தொற்று ஏற்பட்டவரின் உடலில் உள்ள வைரஸை சமன்நிலையாக்குகின்றன. ஆகவே, மிதமான தொற்று பாதிப்பு உடையவருக்கு இந்த சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. 14 நாட்களுக்கு ஒரு முறை பிளாஸ்மா தானம் அளிக்கலாம்.

நோயாளி குரூப்யார் பிளாஸ்மா தானம் அளிக்கலாம்
AA, AB
BB, AB
ABAB
OO, A, B, AB

பிளாஸ்மா சிகிச்சை சோதனை அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது, இதன் மூலம் பரிபூரண குணமடையலாம் என இன்னும் உறுதியாகவில்லை என் அப்போலோ மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர். ராம் கோபாலகிருஷ்னன் கூறுகிறார்.

பிளாஸ்மா சிகிச்சையை யார் பெறலாம்?

தீவிரம், மிதமான மற்றும் லேசான என கோவிட் தொற்றின் மூன்று பிரிவுகளில், தொற்று மிதமாக உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் செறிவு 90% (சராசரி மதிப்பு) க்கும் குறைவாக இருக்கும் என்பதால் வெளிப்புற ஆக்ஸிஜன் இவர்களுக்கு தேவைப்படும்.

லேசான பாதிப்பு உடையவர்கள் விரைவில் தேறிவிடுவர், தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள் நலம் பெறுவது கடினம், ஆகவே இச்சிகிச்சை மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ குழுவால் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், இச்சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால், நோயாளியிடமோ அல்லது அவரின் குடும்பத்தினரிடமோ உரிய அனுமதி கோரப்பட்ட பிறகே பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிளாஸ்மா வங்கி ஏன் தேவைப்படுகிறது?

இரத்த வங்கி போலவே பிளாஸ்மா வங்கியும் செயல்படும் – பிளாஸ்மா தானம் பெறப்பட்டு , தேவையானோருக்கு அளிக்கப்படுகிறது. கோவிட் தொற்று உள்ளவர்களை கருத்தில் கொண்டு, இந்த வங்கி சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா பரிசோதனை / சிகிச்சையில் சென்னையின் நிலை?

தற்பொழுது, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவமனைகள் சோதனை முயற்சிகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்சி மையம் அனுமதி வழங்கியுள்ளது.

“சென்னையில் 26 நோயாளிகளுக்கு பிளாஸ்மா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இது வரை பரிசோதனை ஊக்கமளிப்பதாக உள்ளது. இதில் 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவர்.

இதைத் தவிர, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 10 பேர் குணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டான்லி மருத்துவமனை, ஒமந்தூர் மல்டி- ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விரைவில் பிளாஸ்மா வங்கிகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

யார் பிளாஸ்மா தானம் செய்யலாம்? வழிமுறைகள் என்ன?

கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்கள், கீழ்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்

  • தொற்றிலிருந்து மீண்ட 18 முதல் 60 வயது வரையானோர் தானம் செய்யலாம். கர்ப்பிணி பெண்கள், பிற நோய் உள்ளவர்கள் கோவிட் சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் தருவதை தவிர்க்க வேண்டும்.
  • இரத்தத்தில் ஹீமோகுளோபின் 2.5 g/dL அளவிற்கு மேல் இருத்தல் வேண்டும். எடை குறைந்தது 55 கிலோ இருத்தல் வேண்டும்.
  • பிளாஸ்மா தானம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்திருக்க வேண்டும். தொற்று அறிகுறி இல்லாமால் கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தானம் செய்ய முடியாது.
  • கோவிட் சிகிச்சை மேற்கொள்ள தானம் தருபவரின் பிளாஸ்மாவில் ஆன்டிபாடிஸ் இருத்தல் வேண்டும். குணமடைந்த நோயாளிகளில் இது தானாகவே உருவாகும். தானம் அளிக்கும் முன் இதற்கான ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 14 நாட்களுக்கு பின் தானம் வழங்கலாம்.
  • டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 14 நாட்களிலிருந்து 28 நாட்களுக்குள் தானம் செய்பவர்கள், தொற்று இல்லை என்ற ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ரிப்போர்ட் இல்லையென்றால், தானம் செய்யும் முன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 28 நாட்களுக்கு மேல் தானம் செய்தால், இத்தகைய ரிப்போர்ட் தேவையில்லை. காத்திருப்பு நேரத்தில் அவர் நலமாக இருந்தால், ஆன்டிபாடிஸ்களால் தொற்று சமன் நிலைப்படுத்தப்பட்டது எனவாகும். ஆகையால் ரிப்போர்ட் அவசியமில்லை, தானம் மேற்கொள்ளும் முன் பரிசோதனை அவசியமில்லை” என்கிறார் மருத்துவர்.
உதவி எண்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். பிளாஸ்மா தானம் அளிக்க விரும்புவோர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் மருத்துவமனையை 044 2530 5000 மற்றும் 044 2836 4949 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.  

பிளாஸ்மா தானம் அளிப்பதற்கு முன் எடுக்கப்படும் பரிசோதனைகள் என்ன?

ஆன்டிபாடி பரிசோதனை மற்றும் கோவிட்-நெகடிவ் பரிசோதனை தவிர ஹீமோகிளோபின், எச்.ஐ.வி, ஹெபடிடிஸ்-பி, ஹெபடிடிஸ்-சி, சைபிலிஸ் மற்றும் மலேரியா பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பிளாஸ்மா தானம் செயல்முறை என்ன?

பிளாஸ்மா சேகரிக்கும் செயல்முறை பிளாஸ்மாபெரெசிஸ் எனப்படும். சுழற்சி முறையில் முழு இரத்தமும் எடுக்கப்படும். இதில் பிளாஸ்மா பிரிக்கப்பட்டு மீதமுள்ள சிவப்பு இரத்த அணுக்கள் (RBC) போன்ற கூறுகள் நன்கொடையாளரின் உடலுக்குத் திரும்ப செலுத்தப்படும். இந்த முழு செயல்முறையும் முப்பது நிமிடங்கள் ஆகும்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கட்டமைப்பில் ஒரே நேரத்தில் ஏழு பேருக்கு பிளாஸ்மா மீட்டெடுப்பு செய்ய முடியும்.

பிளாஸ்மா தானம் செய்வதால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

கோவிட் சிகிச்சைக்கு, தானம் தருபவரிடமிருந்து 500 மில்லி பிளாஸ்மா சேகரிக்கப்படுகிறது. தானம் அளித்தவரின் உடலில் 24 மணி முதல் 72 மணிக்குள் எலும்பு மஜ்ஜையில் புதிய பிளாஸ்மா உருவாகும். பிளாஸ்மா அளவு குறைவாக எடுக்கப்படுவதால், எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா பல்வேறு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக குய்லின்-பார் நோய்க்குறிக்கு சிகிச்சையளிக்க (ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கும் ஒரு அரிய வகை நோய்), அதிக அளவு பிளாஸ்மா தேவைப்படுகிறது. ஆரோக்கியமான நபரிடமிருந்து ஒரு லிட்டர் வரை சேகரிக்கப்படுகிறது. இதனால் தானம் அளித்தவருக்கு புரதச் சத்து குறைபாடு ஏற்படும். இது போன்ற சூழலில், ஹைப்போபுரோட்டினீமியாவை தடுக்க அவருக்கு சாதாரண பிளாஸ்மா உடனடியாக செலுத்தப்பட வேண்டும். இதனால் பக்க விளைவுகள் தடுக்கப்படும்.

பிளாஸ்மா எவ்வாறு சேகரிக்கப்படுகிறது? அது எவ்வளவு நேரம் நீடித்திருக்கும்?

தானம் பெறப்பட்ட பிளாஸ்மா ஒரு வருடம் வரை 40 டிகிரி செல்சியஸில் அபெரெசிஸ் இயந்திரத்தில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும் போது, ​​உறைந்த பிளாஸ்மா கரைக்கப்பட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. உறைந்த / சேமிக்கப்பட்ட பிளாஸ்மா நோய்களைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிளாஸ்மாவை மற்ற இரத்தக் கூறுகளிலிருந்து பிரிக்கும் மையவிலக்கு.
படம்: மாநில சுகாதாரத் துறை

எந்த வகை பிற நோய்களை பிளாஸ்மா குணப்படுத்தும்?

பல்வேறு வகை சிகிச்சைக்கு பிளாஸ்மா பயன்படுத்தப்படுகிறது. ஹைப்போபுரோட்டினீமியா நோய்களுக்கு சிகிச்சையளிக்க மற்றும் அறுவை சிகிச்சை போது அதிக இரத்த இழப்பு ஏற்பட்டால், பயன்படுத்தப்படுகிறது.

குணமானவரின் உடலில் எவ்வளவு காலம் ஆன்டிபாடிஸ் செயல்பாட்டுடன் இருக்கும்?

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த 45 நாட்களுக்கு பின், நோய்டாவில் உள்ள ஒரு மருத்துவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் பிளாஸ்மா சிகிச்சை நிரந்தர தீர்வாக அமைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி மேற்கொண்ட ஆய்வில், சிகிச்சைக்கு மூன்று மாதங்களுக்கு பின், ஆன்டிபாடிஸ் 69%-லிருந்து 17% வீழ்ச்சி அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடும் தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தவர்களின் உடலில் இந்த ஆன்டிபாடிகள் வலுவாகவும் நீடித்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர்; டாக்டர் கே செல்வராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் – மாற்று மருத்துவத் துறை, சென்னை மருத்துவல்க் கல்லூரி மற்றும் டாக்டர் ராம் கோபாலகிருஷ்னன், மூத்த ஆலோசகர் – தொற்று நோய் பிரிவு, அப்போலோ மருத்துவமனை ஆகியவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு தொகுக்கப்பட்டது)

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.