தண்ணீரின் தடமே இல்லாமல் ஏரிகள் வரண்ட நிலமானது ஏன்?

THREATENED LAKES IN PALLAVARAM MUNICIPALITY

Pallavaram Periya Eri
The northern side of Pallavaram Periya Eri. Pic: Renu Karthick Sugumar

Translated by Sandhya Raju

தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கும் ஏரிகள் சுரண்டப்பட்டதிற்கும் சம்மந்தம் இல்லாமல் இல்லை. நிலத்தடி நீரின் அளவை உயர்த்த உதவும் இந்த ஏரிகளை மக்களும் அதிகாரிகளும் முறையாக பராமரித்து இருந்தால், தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை உருவாகியிருக்காது என்பதே நிதர்சன உண்மை.

நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரிகளின் நிலை என்ன என்று பார்ப்போம். நட்டேரி, அன்னேரி, ஜதேரி என இங்கிருக்கும் பல ஏரிகள் குடியிருப்பு பகுதியாக மாறிய நிலையில், பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி போன்ற சில ஏரிகள் மட்டுமே இன்று இருக்கின்றன. இந்த ஏரிகளும் பரிதாபகரமான அழிவு நிலையில் தான் உள்ளன.

வணிக ரீதியாக முன்னேறி இருக்கும் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இரண்டு ஏரிகளும் சந்திக்கும் சவால்கள் ஒன்று தான்: குறைந்து போன நிலத்தடி நீர் மற்றும் கழிவு நீர் குப்பைகளால் மாசு. நெல், கம்பு ஆகிய தானியங்களை விவசாயம் செய்ய இந்த இரண்டு ஏரிகளையும் தான் மலை போல் நம்பி இருந்தனர். ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல, ஏரியின் பரப்பளவு குறைந்ததுடன் மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு மற்றும் மாசு ஆகியவற்றால் இந்த ஏரிகள் தற்போது அழிவின் விளம்பில் உள்ளன.  இன்றைய நிலையில், இந்த ஏரிகள் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில உள்ளன.

பல்லாவர ஏரியின் பரிதாப நிலை

பல்லாவரம் பகுதியில் உள்ள கிணறுகள் அனைத்தும் வரண்டு போய்விட்டன. கோடை காலத்தில் ஆழ்கிணறுகளில் தண்ணீர் சொட்டு சொட்டாக மட்டுமே வருகின்ற அவல நிலையில் தான் இந்த பகுதி உள்ளது. பத்து நாட்களுக்கு ஒரு தரம் மட்டுமே பாலாறு தண்ணீர் இந்த பகுதிக்கு அளிக்கப்படுகிறது என்பதால் இங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் லாரியை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த நிலையால் இங்கிருந்து பல பேர் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகவே இங்கு உள்ளது.  “போதிய கழிவு நீர் வசதி இல்லாததும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும் இங்கிருந்து பல பேர் தங்கள் வீட்டை மாற்றியுள்ளனர். வாடகை, முன்பணம் ஆகியவற்றை குறைத்தும் கூட அடுக்கி மாடி கட்டிடங்களில் உள்ள பல வீடுகள் காலியாகவே உள்ளது,” என்கிறார் இங்கு வசிக்கும் ஜெயசீலன்.

ஆனால் 1980களில் இருந்த நிலைமையே வேறு. பல்லாவரம் பகுதியில் பல ஏரிகள் இருந்தன. மழை நீர் சேகரிக்கும் தளமாகவும், விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமாகவும் இங்குள்ள ஏரிகள் விளங்கின. வரட்சி என்ற சொல்லே கேள்விபடாத அளவுக்கு தேவைக்கும் மிஞ்சிய அளவு தண்ணீர் இருந்துள்ளது.

“கடுமையான கோடை காலத்தின் போது கூட, பல்லாவரம் அருகில் வசித்த மக்கள் இங்குள்ள திறந்த கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் பிப்ரவரி மாதத்திலேயே இங்குள்ள அனைத்து கிணறுகளும் வரண்டு விட்டன” என்கிறார் பழைய காலத்தை அசை போடும் மார்கரட் வஸ்தலா.

குப்பை கூடமாக காட்சியளிக்கும் பல்லாவரம் ஏரி

நூற்றிபத்தொன்பது ஏக்கர் பரப்பளவில் இருந்த பல்லாவரம் ஏரி இன்று வெறும் ஐம்பது ஏக்கருக்கு சுருண்டு போயுள்ளது. “பல்லாவரத்திலிருந்து பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டது முதல் இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. இரண்டு ஏரிகளின் பரப்பளவும் குறைந்து விட்டது” என்கிறார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வி தாமோதரன். இவர் கடந்த அறுபது ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார்.

பழைய மகாபலிபுரம் சாலைக்கு செல்லும் நேரத்தை பல்லாவரம்-தொரைப்பாக்கம் சாலை வெகுவாக குறைத்திருக்கிறது. இதுவே இந்த பகுதியில் உள்ள ஏரிகளை கட்டிட நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக அமைந்தது. மேலும் இந்த ஏரியில் 1980ல்  இடுகாடு ஒன்று கட்டப்பட்டது, அத்துடன் ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு குடியிருப்பு பகுதியாகவும் ஏரியின் பகுதிகள் மாறின.

கீழ்கட்டளை ஏரி : நிராகரிப்பட்ட சோகக் கதை

தூர்வாரப்பட வேண்டிய கீழ்கட்டளை ஏரி

கீழ்கட்டளை மற்றும் பல்லாவரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள பல்லாவரம்-தொரைப்பாக்கம் சாலை தான் இந்த இரண்டு ஏரிகளின் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு. “இந்த சாலை மேலும் விரிவாக்கம் செய்யப்படுகின்ற நிலையில் இப்பொழுது இருக்கும் பரப்பளவும் வெகுவாக குறைந்து போகும். ஆனால், ஏரிகளின் இரண்டு பக்கங்களிலும் முப்பது அடி மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டால், தண்ணீரை சேமிக்க முடியும்,” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளூர்வாசி.

கீழ்கட்டளை ஏரியின் சுற்றுப்புரத்தில் உள்ள இடங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. “ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளது. மேலும் தண்ணீரை சேமிக்க போதிய வசதியும் இல்லாததால், ஏரியின் இருப்பளவு குறைவாகவே உள்ளது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வருடத்தில் ஏழு மாதங்கள் தண்ணீர் லாரியையே நம்பி உள்ளன,” என்கிறார் இங்கு வசிக்கும் நாராயணன்.

ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் நகராட்சி

பெரிய ஏரியில் கட்டப்பட்ட  வீடுகளுக்கு தண்ணீர், கழிவு நீர் வசதியை பல்லாவரம் நகராட்சி அளித்துள்ளது.

ஏரிகளின் கட்டுப்பாடு பொதுப்பணி துறையிடம் இருந்தாலும், மறுசீரமைப்பு வேலைகளுக்கு தடையில்லா சான்றிதழை  பல்லாவரம் நகராட்சி பொதுப்பணி துறையிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. “இரண்டு ஏரிகளையும் சீரமைக்கும் பணி நகராட்சியிடம் தான் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை,” என்கிறார் அத்துறையின் பொறியாளர் தியாகராஜன்.

2016 ஆம் ஆண்டு முழு சீரமைப்பு பணிகளையும் முடிக்க நகராட்சி உறுதி அளித்தது. பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை சீரமைக்க டிசம்பர் 2017ல் மாநில அரசு பதினைந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மேலும், பல்லாவரம் ஏரியில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற ஏழு கோடி ரூபாய் ஒதுக்கியது.

ஆனால், அடிப்படை தொடக்கமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை; கீழ்கட்டளை ஏரி இன்னும் தூர்வாரப்படவில்லை. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இரண்டு மாதம் முன்பு பதவியேற்றுக் கொண்ட செந்தில் முருகன், இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என நம்மிடம் உறுதி அளித்துள்ளார்.

Read the original story in English here.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.