ஆக்கிரமிப்பினால் காணாமல் போன வட சென்னையின் ஏழு நீர்நிலைகள்

Water bodies encroachment

Encroachments on one of the ponds at CTH Road. Pic: Laasya Shekhar

Translated by Krishna Kumar

“கிணத்த காணோம், கிணத்த காணோம்!” – கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலு காவல்துறையிடம் ஒரு திறந்த கிணற்றை காணவில்லை என்று பொய் புகார் கொடுத்து நம்மையெல்லாம் வயிறுகுலுங்க சிரிக்கவைத்த நகைச்சுவை காட்சியை யாரால் மறக்க முடியும். கிணறு ஒன்றை காணோம் எனும்பொழுது அவ்வளவு சிரித்தோம், ஆனால் நிஜத்தில் ஒரு நீர்நிலையே காணாமல் போகும் சாத்தியமுண்டா? அதிர்ச்சியூட்டும் விஷயம் தான், அனால் நடக்கிறது.

சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 7 குளங்கள் அப்படிதான் காணாமல் போயுள்ளன. பல வருடங்களாவே இந்த குளங்கள் பொது மக்களாலும்,  சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் போன்ற பல்வேறு அரசு துறைகளாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன.  ஒரு காலத்தில் [30 வருடங்களுக்கு முன்] குழந்தைகளும் பெரியோர்களும் அல்லி நிறைந்த இந்த குளங்களில் மீன்பிடித்து மகிழ்ந்தனர் ; பெண்கள் அங்கிருந்து தண்ணீர் எடுப்பது சகஜம். பண்டிகைகளுக்கு விளக்கேற்றி, கரையில் மக்கள் கூடிய காட்சிகள் பல. எண்ணற்ற பறவைகள் தினமும் வந்து சென்றன. முதியவர்கள் மாலை நேரங்களில் குளத்தை சுற்றி நடக்கும் காட்சிகள்    இங்குள்ள மக்களின் மனதில் இன்றும் சுகமான நினைவாக உள்ளது. ஆனால் தற்பொழுது இக்குளங்கள் வறண்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் மக்களின் நினைவில் மட்டுமே உள்ளன.

“வட சென்னையில்  நிலத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சராசரியாக சதுரடி ரூ 9000 என்ற நிலை உள்ளது. எல்லா கட்டுமான நிறுவனங்களுக்கும் இங்குள்ள நிலத்தின் மீது  ஒரு கண் இருந்துகொண்டேதான் இருக்கிறது. சென்னையில் மற்ற இடங்கள் போலவே இங்கும் ஆக்கிரமிப்புக்கள் இருப்பது இயற்க்கை தானே”, என்று CTH சாலை அருகில் துரைசாமி என்ற ஒரு பழைய முகப்பேர் வாசி  சலித்துக்கொண்டார்.

எந்த அளவிற்கு அழிவு?

வருவாய்துறை ஆவணங்களின் படி, காணாமல் போன மற்றும் தற்பொழுது காணாமல் போய்க்கொண்டிருக்கும் குளங்கள் பட்டியல்  பின்வருமாறு : 

1) பெயர் தெரியாத குளம். சர்வே எண் :28 சிறுபிள்ளை சுடுகாடு,பாடி அருகில் – திருமணமண்டபம் உட்பட பல நிறுவனங்கள் இந்த 0.47 ஏக்கர் குளத்தை ஆக்கிரமித்துள்ளன. 2015 இல் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆணைபிறப்பித்தது சென்னை உயர்நீதி மன்றம், ஆனால் இன்னும் இரண்டு ஆணைகளுக்கு பிறகும் எந்த மாற்றமும் இல்லை. “ஆக்கிரமிப்பாளர்கள்  சென்னை குடிநீர் வாரி இணைப்பை சுகமாக அனுபவித்து வருகிறார்கள். சம்பந்தபட்ட துறைகளுக்கு [சென்னை மாநகராட்சி , வருவாய் துறை மற்றும் இதர துறைகள் ] குளத்தை தூர்வார நீதிமன்றம் உத்தரவிட்டில்டுள்ளது. நீர்நிலைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்த வேலையும் தொடங்கியதாக தெரியவில்லை.” என்று புலம்பினார் இதற்காக 30 ஆண்டுகளாக போராடிவரும் மூத்த குடிமகரான நா  ஷண்முகம், பாடி.   

2) மேட்டுக்குளம், சர்வே எண் :306/2 — பாடியில்  உள்ள 2.72 ஏக்கர் குளத்தில் 1.5 ஏக்கர் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. ‘மாவட்ட ஆட்சியர் உரிமம் கொடுக்கவில்லை என்றால், அறிவிப்பு/நோட்டீஸ் ரத்து செய்யபடும்’ என்ற உட்கூறோடு  10 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இங்கு. ஆட்சியர் அனுமதி இல்லாமலேயே, அங்கீகாரம் இல்லாத 2-மாடி கட்டிடம் கடைசி நிலையை எட்டி உள்ளது; சென்னை மாநகராட்சி 7 மண்டல அதிகாரிகள் பொதுமக்கள் எதிர்த்த பிறகு அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

3)பெயர் தெரியாத குளம், மேட்டுகுளத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது,   சர்வே எண்:322 — இந்த 9 ஏக்கர் குளத்தை மாநகராட்சியே ஆக்கிரமித்து மீன் அங்காடி/சந்தை கட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடியால் திறந்து வைக்கப்பட்ட மீன் அங்காடி/சந்தை  தற்பொழுது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் வழியாக மூடப்பட்டுள்ளது.

Chennai Corporation constructed a fish market on a pond at Chennai Tiruvallur Highway Road. Pic: Laasya Shekhar

4)பெயர் தெரியாத குளம், சர்வே எண் 99/1 – முகப்பேரில் உள்ளது, இந்த 1.2 ஏக்கர் குளம் பாதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. சமீபமாக, மீதம் உள்ள சின்ன குளத்தை மண்கொட்டி நிரப்ப முயன்றதற்கு ஒரு கட்டுமான தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். என்றாலும், இந்த குளத்தை சுற்றி பல ஆக்கிரமிப்புக்கள் நடப்பதை பார்க்கலாம்.

5)பெயர் தெரியாத குளம், சர்வே எண்: 34 – இங்கு ஆக்கிரமிப்பாளர்களில் மிகவும் பிரபலமானது சரவணா ஸ்டோர்ஸ், பாடி தான். வாடிக்கையாளர்களின்  வாகனங்களளை நிறுத்த ஆக்கிரமிக்கப்பட்ட இடம் இந்த குளம் தான். இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் வருவாய் துறையே இவர்களுக்கு அனுமதியும்,  பட்டாவும் கொடுத்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மக்கள் சார்ந்து ஆணை பிறப்பித்தது. என்றாலும், சரவணா ஸ்டோர்ஸ் நில உபயோகதை மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் விண்ணப்பித்துள்ளது. 

6)பஜனை கோயில் தெரு குளம், சர்வே எண் 337– இந்த 1.5 ஏக்கர் குளத்தில் இன்னும் .5 ஏக்கர் தான் உள்ளது. சுற்றி வசிக்கும் மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக இதை ஆக்கிரமித்துள்ளார்கள்.

7)பெயர் தெரியாத குளம், சர்வே எண்: 227/2 — அம்பத்தூரில் உள்ள இந்த 2-ஏக்கர் குளத்தை பொதுமக்கள் மற்றும் மணியம்மை அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளார்கள்.

குடிமக்களின் எதிர்ப்பு

சென்னை திருவள்ளூர் சாலையில் உள்ள குளங்களை மீட்டெடுக்கும் தீவிர முனைப்போடு செயல்படும் நா  சண்முகம் போன்று விரல்விட்டு எண்ணும் அளவில்தான் நபர்கள் இதற்கு போராடுகிறார்கள், “இங்கு வந்து செல்லும் மக்கள் தான் அதிகம். அவர்களுக்கு இங்குள்ள சிக்கல்களில் நாட்டம் இல்லை. இந்த  சிக்கல்களை கையில் எடுப்பவர்களை லஞ்சம் மூலமாகவும், குண்டர்கள் மற்றும் காவல் துறையை வைத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டியுள்ளார்கள்”, என்றார் சண்முகம் .

ஆக்கிரமிப்பின் விளைவுகள் கண்கூட தெரிகிறது. CTH சாலையை சுற்றி உள்ள அம்பத்தூர் மற்றும்  கொரட்டூர் பகுதிகள் மிகவும் பதிப்பிற்குள்ளானவை. ஒரு சிறு மழை பெய்தால் போதும், சாலைகளில் தண்ணீர் தேங்கி பாதிக்க படுகிறது. “குளங்களுக்கு வெள்ளத்திற்கும் உள்ள சம்பந்தத்தை புரிந்துகொள்ள விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை”, என்கிறார் சண்முகம்.

“இருப்பினும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த தண்டனையோ, கட்டுப்பாடோ இல்லாமல் குளங்கள் நாசமடைந்து வருகின்றன. குளங்களை  இஷ்டம்போல ஆக்கிரமிக்க, பழைய துணை வட்டாச்சியர் தவறு செய்தவர்களிடமிருந்து 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கியுள்ளார்”, என்று குற்றம் சாட்டினார் சண்முகம். அந்த அதிகாரி பணியில் இன்னமும் தொடருகிறார்.

“இது மிகவும் முக்கியமான பிரச்சனை. எல்லாத் துறைகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. பிரச்னையை என்னவென்று  பார்க்கிறேன்”, என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் 

இந்த ஆக்கிரமிப்புகளை சற்று கூர்ந்து கவனிக்கையில், இக்குளங்கள் புணரமைக்கப்படும் என்ற நம்பிக்கை வரவில்லை என்றாலும், “இப்போதில்லை, என்றாலும் வருங்காலத்தில், வருங்கால சந்ததியனர்களுக்காக இவை மீட்டெடுக்கப்படும்”  என்று நம்பிக்கை தளராது திடமாக பேசுகிறார் சண்முகம்.

( The original article in English can be found here.)

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.