எம்.பி.க்களுக்கு 1000 கோடி அவசியமா?

LOCAL AREA DEVELOPMENT BY LOK SABHA MPs

எம்.பி.க்களின் பொறுப்பில் தொகுதி வளர்ச்சி நிதி கொடுக்கப்படுது அவசியமா? Pic: Wikimedia Commons/ Deepak (CC BY:SA 2.0)

காட்சி 1: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில்


“ரோடு சரியில்ல ;குடிதண்ணீருக்கு வழியில்ல ;சாக்கடை அடைச்சிருக்கு ;போக்குவரத்து நெரிசல்;பள்ளிக்கூடம் சரியில்ல;மருத்துவமனை ஒழுங்கில்லை; குப்பைத்தொட்டி பிரச்னை, குப்பைமேடு பிரச்னை…”  

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்  இருக்கும் எல்லா வேட்பாளர்களை நோக்கியும் மக்கள் வீசும் பிரச்னைப் பட்டியல் இது.


காட்சி 2:கல்லூரியில் ஜனநாயக விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களை நோக்கிக் கேட்கிறேன் “நாடாளுமன்றத் தேர்தல் வருதே,இதுவரை உங்கள் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின்(எம்.பி) செயல்பாடு எப்படி இருந்தது,இனிவரப்போகும் எம்.பி என்னென்ன செய்ய வேண்டும்?”

“சார், கடுப்பா வருது. எம்.பி. எங்க ஏரியாப்பக்கமே வர்ல. வீட்ல இருந்து காலேஜ் போய்ட்டு வர்றதுக்கு பஸ் ரொம்பக் கம்மியா இருக்கு. கல்லூரி நேரத்திற்கு கூடுதல் பேருந்துகள் விடுங்கனு 4 வருஷமா கேட்கறோம். ஒன்னும் நடக்கல. இப்ப இருக்கற எம்.பி. வேஸ்ட். எங்க ஏரியாப் பிரச்னைய யார் தீர்த்துவைக்கப் போறாங்களோ அவங்களுக்குத்தான் இந்தமுறை ஓட்டுப்போடப் போகிறேன்” என்பது போன்ற பதில்கள் பல வந்தன.

இரண்டு காட்சிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?  தங்கள் பகுதி அடிப்படைப் பிரச்னைகளை தங்கள் பிரதிநிதியான எம்.பி தீர்த்துவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அது, நிறைவேற்றப்படவில்லை என்றால் அவர் “மோசமான எம்.பி” என்று முத்திரை குத்தப்படுகிறார். தேர்தலின்போது அவருக்குத் தக்க பாடம் புகட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

என்ன பிரச்னை?

பொதுமக்கள், மாணவர்களின் உணர்வுகளும், கேள்விகளும் நியாயமானதுதான்.ஆனால். யாரிடம் இந்தக் கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை!

கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பாருங்கள். மேற்குறிப்பிட்ட சாலை,சாக்கடை போன்ற அடிப்படைப் பிரச்னைகளை சரிசெய்து தரவேண்டியவர்கள் எம்.பி.க்களா? மாநகராட்சி போன்ற உள்ளாட்சி நிர்வாகமா?  உள்ளாட்சி நிர்வாகம்தான் என்பதை தெளிவாக உணர்வீர்கள்.

பிறகு ஏன் எம்.எல்.ஏ தேர்தல் வந்தாலும், எம்.பி. தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களிடம் நம்முடைய பகுதிப் பிரச்னைகள் குறித்து முறையிடுகிறோம்? நாம் தவறு செய்கிறோமா?  இல்லை, பொதுமக்களாகிய நாம் அவ்வாறான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு ஜனநாயகத்தை குறித்த சுருக்கமான புரிதல் நமக்கு அவசியமாகிறது. நமது நாட்டில் சட்டம் இயற்றும் சட்டமன்றம்/நாடாளுமன்றத்தின் பணியும்(legislative), சட்டத்தை செயல்படுத்தும் அரசு நிர்வாகத்தின் (executive) பணியும் முழுமையாகப் பிரிக்கப்படவில்லை (separation of powers) என்ற நிலை உள்ளது.

எம்.எல்.ஏ, எம்.பியின் பணி சட்டமன்றம்/நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது மற்றும் நிலைக்குழுக்களில்(Standing Committees) பங்கேற்பது போன்றவைதான் என்று இருக்கும்போது உள்ளூர் கட்டமைப்பு(Basic Infrastructure) சார்ந்த பிரச்னைகளுக்கு நாம் எம்.பியிடம் கோரிக்கை வைப்பது ஏன்?

காரணங்கள் இரண்டு. ஒன்று,  கட்டமைப்பு பிரச்னைகள் உள்ளிட்ட உள்ளூர் பிரச்னைகள் குறித்து முடிவெடுத்து, தீர்த்துவைக்கவேண்டிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,கிராம பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம், நிதியாதாரம் கொடுக்கப்படவில்லை.

இரண்டாவது,  சட்டம் இயற்றவேண்டிய பணியைச் செய்யவேண்டிய எம்.எல்.ஏ.வின் பொறுப்பில் ஆண்டுக்கு ரூ.2.5 கோடியும், எம்.பியின் பொறுப்பில் ஆண்டுக்கு ரூ.5 கோடியும் கொடுக்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டுதல், பள்ளிக் கட்டிடம் கட்டுதல், பாலம் கட்டுதல் போன்ற அடிப்படைப் பணிகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.. இப்படிக் கொடுக்கப்படும் நிதியை தொகுதி வளர்ச்சி நிதி என்கிறார்கள். ஆங்கிலத்தில் (MP LAD, MLA LAD-Local Area Development Scheme) என்கிறார்கள். அதாவது, ஆட்சிப்பொறுப்பில் 5 ஆண்டுகாலத்தில் ஒரு எம்.பி.ரூ.25 கோடி மதிப்புள்ள உள்ளூர் திட்டங்களுக்கு அனுமதியளிக்க முடியும். எம்.எல்.ஏ. ரூ12.5 கோடிக்கு திட்டப்பணிகளுக்கு அனுமதியளிக்கமுடியும்

MP-LAD, MLA-LAD அவசியமா?

காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சிப்பொறுப்பில் இருந்த 1991-1996 காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் MP-LAD .(திரு.நரசிம்மாராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது ) . நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் மக்களின் தேவைகளாகக்  கருதப்படும்  சாலைகள், பாலங்கள், சமூகக் கட்டிடங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது.1993 டிசம்பரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஒரு எம்.பி.க்கு ஆண்டிற்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. இது1998 – 99ல் இது ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இப்போது ரூ.5 கோடியாக உள்ளது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், 1992ம் ஆண்டில்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுப்பதற்கு 73வது, 74வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது(73rd and 74th Amendment of Indian Constitution). 1992ல் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுத்துவிட்டு ; 1993ல் MP-LAD என்ற புதிய திட்டத்தை உருவாக்கி, உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய பணியை எம்.பியும் செய்வார் என்பது போன்றதொரு குழப்பத்தையும் செய்தார்கள்.

இந்த நிதியானது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருக்கும். எம்.பி அல்லது எம்.எல்.ஏ, என்ன பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்வார். அதனை மாவட்ட ஆட்சியரும், அவரின் கீழுள்ள அதிகாரிகளும் செயல்படுத்துவார்கள்.

இந்த MP-LAD திட்டத்தின் அடிப்படையில்தான் உள்ளூர் கட்டமைப்புப் பணிகளுக்கு எம்.பி நிதி ஒதுக்கமுடிகிறது.  நிறைய கட்டிடங்கள் கட்டித்தந்த எம்.பி. சிறப்பாகச் செயல்பட்டவர் என்று பெயர் பெறுகிறார். அவரின் முக்கியப்பணியான நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதில் என்ன பங்களிப்பு செய்தார் என்பதை மக்கள் யாரும் கவனிப்பதில்லை.  

என்ன செய்யவேண்டும்?

MP-LAD,MLA-LAD போன்ற திட்டங்கள் ரத்துசெய்யப்படவேண்டும். ஏன்? சட்டமன்ற/நாடாளுமன்றத்திலுள்ள நிலைக்குழுக்களில் முக்கியமானதொரு குழு பொதுக்கணக்குக் குழு. இக்குழு, அரசின் திட்டச் செயலாக்கம் குறித்த தணிக்கை அறிக்கைகளை (AUDIT REPORT) ஆய்வு செய்ய வேண்டும்.

அரசின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா? என்பதை ஆய்வு செய்வதுதான் இதன் முக்கிய நோக்கம். தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் இங்கு ஆய்வுக்கு வரும். மத்திய அரசின் இரண்டு தணிக்கை அறிக்கைகள்    நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விரிவாய் விளக்கியுள்ளனபல்வேறு பிரிவுகளில் மறுப்புகள் (OBJECTION) தெரிவித்துள்ளன.

ஆனாலும், இந்த தணிக்கை அறிக்கைகளுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எடுக்கப்படமாட்டாது ஏன்? தங்கள் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட்ட திட்டம் குறித்த தணிக்கை அறிக்கையைத் தாங்களே ஆய்வு செய்வது என்ற  நடைமுறை இருக்கும்போது எப்படி இது நியாயமாய் நடக்கும்? எனவே, ஊழல் மலிந்துள்ள நமது நிர்வாகத்தில் இத்திட்டம் மேலும் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்

மேலும், MP-LAD ரத்து செய்யப்படும்போதுதான், ஒரு எம்.பியின் செயல்பாட்டை அளவிடுவதற்கு அவரது நாடாளுமன்ற,சட்டமன்ற செயல்பாடுகள் மட்டுமே அடிப்படை என்ற நிலையை நோக்கி ஒருபடி முன்னேற்றம் ஏற்படும்.

ஒரு எம்.பிக்கு ஆண்டிற்கு ரூ.5கோடி- 5 ஆண்டிற்கு ரூ.25 கோடி – தமிழகத்திலுள்ள 39 எம்.பிக்கு 975கோடி. கிட்டத்தட்ட ரூ.1000கோடி மதிப்பிலான இந்த நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுப்பதுதான் முறையாக இருக்கும்.  இது பல ஆண்டுகாலமாகப் பேசப்பட்டுவரும் ஒரு ஜனநாயக சீர்திருத்தம். ஆனால், செயல்பாட்டுக்கு வருவதில் ஏராளமான சிக்கல்கள்.

இதுபோன்ற மாபெரும் மாற்றங்கள் வருவதற்கு நாடாளுமன்றத்தில்தான் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும். ரூ.25கோடியை தனது விருப்பப்படி(சில விதிமுறைகளுக்கு உட்பட்டு) உள்ளூர் திட்டங்களுக்குச் செலவழிப்பதற்கும் அதில் கணிசமான தொகையை ஊழல் செய்து சம்பாதிப்பதற்கும் வழிவகுக்கும் இத்திட்டத்தை ரத்துசெய்ய சட்டதிருத்தம் கொண்டுவந்தால் எத்தனை எம்.பிக்கள் அதனை ஆதரிப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

நமது ஜனநாயக அமைப்பு மேலும் சீர்பட பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியமாகிறது. சட்டமன்ற-நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களுக்குத் தரப்படும் தொகுதி வளர்ச்சி நிதி திட்டம் ரத்து செய்யப்பட்டு, அந்நிதியானது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து தரப்படவேண்டும் என்பது அதில் ஒன்று.

2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதாவது, எம்.பி. வேட்பாளரிடம் உள்ளூரில் அடிப்படை வசதிகள் செய்துகொடுங்கள்  என்று கோரிக்கைவிடுக்கும் நிலை மாறுமா? இதைச் செய்துதரவேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெறுமா?

மாற்றங்கள் எதுவும் ஒருநாளில் நடந்துவிடுவதில்லை. மாற்றத்தை நோக்கிய கருத்தை விதையாக விதைப்பது நம் கடமை. அதைத் தொடர்ந்து செய்வோம். விதையானது வீரியமாக இருந்தால், கட்டாயம் அது முளைக்கும்!

– செந்தில் ஆறுமுகம்

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Senthil Arumugam 1 Article
The author has not yet added any personal or biographical info to her or his author profile.

1 Comment

 1. All the MPs and MLA should work 8 Hours per day.
  we want a tool to measure their working hours.

  his salary to be paid based upon their attendance.
  They should declare their movable and immovable asset details to be declared on monthly basis.

  I want to file a PIL case in SC.

  Please advise me.

Comments are closed.