வீட்டிலிருந்தே பணி, பொருளாதார சிக்கல், களைப்பு: கோவிட்-19 தொற்றால் ஏற்படும் மன உளைச்சலை சமாளிப்பது எப்படி

கோவிட்-19 நேரத்தில் மனநலம்

எல்லொரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உள்ளதால், முன்பை விட அதிக குழப்பங்கள் முளைப்பதால், சிலருக்கு அது அழுத்தத்தை தருவதாக அமையலாம். Pic: Kay Jayne/ Pexels

Translated by Sandhya Raju

நாம் அனைவரும் நெருக்கடியான சூழலில் உள்ளோம், நம்மைச் சுற்றி அனைத்தும் இடப் பிழற்சி போன்ற நிலை உள்ளது. மனநல மருத்துவர் மற்றும் ரிச்மண்ட் பெல்லோஷிப் சொசைட்டியின் பெங்களூரு கிளையின் ஹானரரி ஆலோசகர் Dr  எஸ் கல்யாணசுந்தரம் அவர்களுடனான நம்முடைய முந்தைய உரையாடலில், மன நலம் சார்ந்த பிரச்சனைகள் வெகுவாக அதிகரித்துள்ளதை பார்த்தோம்.

Dr Kalyanasundaram S

கொரோனா தொற்றால், நாம் இந்த பிரச்சனையின் நிலையை தற்போது உணர முடிகிறதுகார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிவோர் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தபடியே செய்ய சிரமப்படுவது, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சமாளிப்பது, முதியோர்காளுக்கு தொற்றை பற்றியும் நிலைமையும் எடுத்துக் கூறுவதுஇதையெல்லாம் விட இந்த சவாலான நேரத்தில் தொடர்ந்து பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ சேவை புரிபவர்கள் ஆகியோரின் முடிவில்லா வேலை!

இத்தகைய சூழலை சமாளிப்பது எப்படி? Dr  எஸ் கல்யாணசுந்தரம் அவர்களிடம் உரையாடியதிலிருந்து:

“மிகவும் மன உளைச்சலில் உள்ளேன்.” என பலர் தற்போது கூற தொடங்கியுள்ளனர், ‘பங்குச்சந்தை வீழ்ச்சி’…’அடுத்து என்ன என்ற எண்ணத்துடன் வீட்டிலிருந்த படியே பணி’, ‘குழந்தைகள் வீட்டில் உள்ளனர், அவர்களுக்கும் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.’ என பல எண்ணங்கள். இத்தைகைய சூழலை எப்படி சமாளிப்பது?

Dr KS: இது போன்ற எண்ணங்கள் தோன்றுவது சாதாரணம் தான். இந்த அசாதரண சூழல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பார்ப்போம்.

பலருக்கு, வீடு தான் இப்போது வேலையிடம். வேலை மற்றும் வீட்டில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க பலருக்கும் சிரமமாக உள்ளது.

உதாரணமாக, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது, வீட்டில் உள்ளவர்களிடமிருந்து குறுக்கீடு / தொந்தரவு இல்லாமல் பணி செய்வது: குழந்தைகள் செய்வதறியாது அங்குமிங்கும் ஒடுவதும் சத்தம் போடுவதும் வழக்கமானது. மறுபுறம் தொலைக்காட்சி ஓடிகொண்டிருக்கும். இது போன்ற சமயத்தில் குழப்பங்கள் எழத்தான் செய்யும். 

பெண்கள் (அதுவும் வேலை பார்ப்போர்) பல வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கும் – அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தொந்தரவு இல்லாமல், வீட்டை பற்றிய சிந்தனை குறைவாகவும் இருக்கும். தற்சமயம் வீட்டிலிருந்தே பணி புரிவதால் (WFH) கூடுதல் அழுத்தத்தை பெண்களுக்கு அளிக்கும்.

குடும்பத்தினருடன் அதிகமாக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்படுமா?

Dr KS: பகல் நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஒன்றாக இல்லாத சூழலில், தற்போது அனைவரும் ஒரே இடத்தில் உள்ளனர். இதனால் முன்பை விட  மற்றவர்களின் தனிப்பட்ட நேரத்தில், விஷயத்தில் கூடுதலாக தலையீடு எழும்.

கூடியிருக்கும் நேரம் அதிகரித்துள்ளதால் இந்த சூழல் தானாக எழும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணமாக, வீட்டிலுள்ள ஆண் உணவு, தன் தேவைகள் கடந்து இது நாள் வரையில் வீட்டில் நடக்கும் நுணுக்கமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாமால் தற்போது குறை கண்டுபிடிக்கும் போது அது நெருக்கடியை உண்டாக்கலாம்.

இதே போல், முன்பைப்போல் முதியவர்கள் காலார நடக்க தற்போது காட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவர்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்வது தடைப்பட்டுள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் எண்ணங்களை முன்பு சுதந்திரமாக நட்பு வட்டாரங்களுடன் பார்க்கில், அல்லது நடை பயிற்சியின் போது பகிர்ந்து வந்தனர். தற்போதுள்ள சூழல் அவர்களின் சுதந்திரத்தை பறித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் கட்டாயமாக வீட்டினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் – இது அனைவருக்கும் புதிது, அதனால் இது சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம் உள்ளது.

“உங்களுக்கான இடமாக வீடு இருந்தது போக, தற்போது எல்லொரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உள்ளதால், முன்பை விட அதிக குழப்பங்கள் முளைப்பதால், சிலருக்கு அது அழுத்தத்தை தருவதாக அமையலாம்.”

கூடவே, இந்த நேரத்தில் தான் குடும்பத்தினர் மற்றவர்களை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்கின்றனர், அல்லது இது வரை கண்டு கொள்ளாமல் இருந்தவற்றை பார்க்கின்றனர். ‘விரும்பாதவைகள்’ மேலோங்கி தெரிந்தாலும், இந்த நேரத்தில் நல்ல குணங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் உள்ளது.

கொள்கை கருத்துகள் மாறுபட்டாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுக்க பழகிக் கொள்கின்றனர். அந்த விஷயத்தில் பார்த்தால், இந்த தொற்று குடும்பங்களுக்கிடையே பந்தத்தை மேலும் கூட்டுவதோடு, மற்றவர்களை புரிந்து கொள்வதிலும் முக்கிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று சூழலை பல்வே று வகையில் பார்க்கலாம். ஒரு விதத்தில்  இது கடவுள் / இயற்கை நமக்கு அன்பாக, ஆறுதலாக, பிறருக்கு உதவ நமக்கு அளித்த வாய்ப்பாக கருதலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் தருணத்தில், இந்த மாதிரி அழுத்தத்தை எவ்வாறு அணுகுவது?

Dr KS: வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, வேலை செய்வதற்கான தகுந்த இடத்தை தேர்ந்தெடுப்பதுடன், எந்த வித தடங்கலுமின்றி சில மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்பதை குடும்பத்தினருடன் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதே போல் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதை புரிந்து கொண்டு, 7-9 மணி நேரம் அலுவல வேலைப்போலவே வீட்டிலும் வேலை பார்க்க வேண்டியதி அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்கென்று தனியாக அறை அல்லது இட வசதி இல்லாத வீட்டில் இது மிகவும் முக்கியம்.

மற்றொரு முக்கியமான விஷயம், வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் இடைவேளை எடுத்து குழந்தைகளுடன் அல்லது முதியவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். இது அவர்கள் மீது அக்கறை உள்ளது என்பதை வலியுறுத்துவதுடன் வேலையின் போது தொந்தரவு செய்யாமல் இருக்கவும் உதவும்.

இரண்டு பேரும் வேலை பார்க்கையில், ஒருவர் வேலை செய்யும் போது மற்றவர் வீட்டை கவனிப்பது, குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது என நேரத்தை பகிர வேண்டும். வீட்டையும் குழந்தைகளையும் கவனிப்பது பெண்களின் பொறுப்பு மட்டுமின்றி, அனைவருக்குமான பொறுப்பு என உணர வேண்டும்.

உபயோகமாக ஏதாவது செய் என குழந்தைகளை விரட்டாமல், அவர்களுக்கு இதை செய் என வேலை கொடுக்க வேண்டும். வரைவது, வேலைப்பாடுகள் செய்வது, சமையலறையில் உதவுவது, வண்ணம் தீட்டுவது என எந்த வேலையாகவும் இருக்கலாம். இந்த நேரத்தில் குழந்தைகள் வீட்டை கொஞ்சம் அசுத்தம் செய்தால் முகம் சுளிக்காமல் இருக்க வேண்டும். வேலை முடிந்ததும் அவர்களே சுத்தம் செய்ய பழுக்குவதோடு, நீங்களும் சேர்ந்து இதை ஒரு ஜாலியான விஷயமாக மாற்றலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்ய சில குறிப்புகள்

 • வேலைக்கான இடத்தை தேர்ந்தெடுக்கவும்
 • வேலை நேரம் குறித்து குடும்பத்தினரிடம் தெளிவாக கூறுவதுடன் எப்பொழுது தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறவும்
 • ஒரு சிறிய இடைவேளை எடுத்து குழந்தைகளிடமும் முதியவர்களிடமும் நேரம் செலவிடுங்கள் (காபி இடைவேளை போன்ற சமயத்தில்)
 • உங்களின் பார்ட்னரும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது, வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள்
 • குறிப்பிட்ட, சவாலான பணிகளை குழந்தைகளுக்கு கொடுங்கள்
 • பொறுமையை கடைபிடியுங்கள்

மருத்துவ துறையில் உள்ளவர்கள்? அவர்களுக்கு விடுப்பு இல்லை, வீட்டிலிருந்தும் வேலை பார்க்க இயலாது…

Dr KS: நாங்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இத்துறையில் இருப்பவர்கள்) எதிர்கொள்ளும் நிலையே வேறு. எது நடந்தாலும் நாங்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கென்று  பொறுப்பு உள்ளது. மற்றவர்களுக்கு எங்கள் மூலம் தொற்று ஏற்படாமல் இருக்கவும், எங்களுக்கு தொற்று வராமல் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும்.

எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விடுத்து பெரிய சமூக நன்மைக்காக நாங்கள் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம்.

மருத்துவ ஊழியர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றனர்?

Dr KS: மருத்துவ பணி என்பதே அழுத்தம் நிறைந்த பணி தான்! நாங்களே சூழலுக்கு ஏற்றார் போல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது தான்.

தனிப்பட்ட பிரச்சனை இருந்தால் நிச்சயம் சக மருத்தவரிடமோ, மன நல ஆலோசகரிடமோ பகிர்ந்து கொள்ளலாம். சக மருத்துவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பர். இது மிக முக்கியம் என நினைக்கிறேன். அதோடு, “மருத்துவர்கள் முதலில் தங்களைத் தானே காத்துக் கொள்ளவேண்டும்” என்பதை பல மருத்துவர்கள் மறந்து விடுகின்றனர்.

தற்போதைய சூழலை எதிர்கொள்வது பற்றி தங்களின் ஆலோசனை?

Dr KS: அதிகமாக யோசிக்கக் கூடாது – பயப்படக்கூடாது. உதாரணமாக, அனைவரும் முக கவசத்துடன் செல்ல வேண்டிய அவசியமில்லை (தொற்று இருதால் மட்டுமே இது அவசியம்). வதந்திகளை பரப்பாதீர்கள், தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.

பிற நாடுகளை ஒப்பிடுகையில் (தகவல்களின் அடிப்படையில்), இந்தியா தன் எல்லையை காப்பதிலும், குடிமக்களை காப்பதிலும் நன்றாக செயல்படுகிறது. நம் மக்கள் தொகையை கணக்கிடுகையில், தொற்று மிகவும் குறைவாகவே கட்டுப்பாட்டில் உள்ளது.

சிலரின் அஜாக்கிரதையால் தொற்று மேலும் பரவியுள்ளது. இது சோதனைகள் நிறைந்த காலம்,  அவர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்க்காகவும் ஒவ்வொருவரும் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தனித்திருத்தலின் போதும், ஊரடங்கின் போதும் உங்கள் மன நலத்தை காத்துக்கொள்ளுங்கள்

 • நீங்கள் விரும்பும் மற்றும் ஆறுதல் அளிக்ககூடிய பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.
 • போதிய உறக்கம் மற்றும் சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.
 • உடல் உழைப்பில் சிறிது நேரமாவது ஈடுபடுங்கள்.
 • கோட்பாடுகளை வகுத்து அதை கடைபிடியுங்கள், இந்த நேரத்தை உங்களின் உடல் நலத்தை பேண பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 • உங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக வேலையாட்களுடன் மின்னஞ்சல், சமூக தளம், தொலைபேசி என தொடர்பில் இருங்கள்.
 •  சமூக ஊடகத்தில் வரும் தேவையற்ற செய்திகளை தவிருங்கள்.
 • வீட்டிலிருந்து வேலை செய்கையில் அதற்கென்று நேரமும், இடமும் ஒதுக்குங்கள். போதிய இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
 • இது தொற்று பரவாமல் இருக்க தற்காலிக ஏற்பாடு என நினைவில் கொள்ளுங்கள்.
 • உங்களின் சமூக விலகல் தொற்று பரவாமல் இருக்கு  உதவுகிறது என நினைவில் கொள்ளுங்கள்.

Source: https://www.beyondblue.org.au/the-facts/looking-after-your-mental-health-during-the-coronavirus-outbreak

இதையும் படிக்கவும்: கோவிட் 19: “சமூக பரவலால் மனநோய் அதிகரிக்கக்கூடும்”

[Read the article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Deepa Vaishnavi V M 2 Articles
Deepa Vaishnavi is a freelance HR professional, soft skills trainer, citizen journalist, mental health advocate, and author of a book based on Indian mythology.