
Translated by Sandhya Raju
இரண்டே மாதத்தில், சென்னையில் கோவிட் தொற்று 24000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. பொருளாதார காரணங்களை கருத்தில் கொண்டு, சில பகுதிகளில் ஊரடங்கை அரசு தளர்த்தியது. பல பகுதிகளில் கடைகள், முடி திருத்த நிலையங்கள், உணவகங்கள் மீண்டும் தங்கள் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இன்னும் சில காலத்திற்கு தொற்றுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே நிதர்சன உண்மையாகியுள்ளது.
கோவிட் பிறகான வாழ்க்கை முறையில், முக கவசம், அடிக்கடி கை கழுவுதல், தனி மனித விலகல் ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழலில், தொடந்து நம்மை பாதுகாத்து கொள்ள கீழே உள்ள சில நடைமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம்:
கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் ஆலோசனை
மாநில சுகாதாரத் துறையின் திருத்தப்பட்ட விதிமுறைகள் படி, தொற்று அறிகுறி அல்லாத அல்லது ஆரம்பகட்ட அறிகுறி உள்ளவர்கள், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி இவர்களுக்கான வழிக்காட்டியை வெளியிட்டுள்ளது.
- தனியான காற்றோட்டமான அறையில் இருக்கவும், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு அறையை சுத்தப்படுத்தவும். .
- கோவிட்-19 தொற்று உறுதியான பிறகு 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இவர்களுடன் வசிக்கும் பிறரும் வெளியே வராமல் இருப்பது நல்லது.
- தனிமைப்படுத்தப்பட்ட அறை தவிர வீட்டினுள் மற்ற அறைகளுக்கு செல்லமால் இருத்தல் நலம்.
- வீட்டிலுள்ள முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பமாக உள்ளவர்கள், செல்லப் பிராணிகள் ஆகியவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
- உங்கள் உடைமைகளை தனியே வைத்திருங்கள்.
- அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்திருங்கள். ஒவ்வொரு ஆறு அல்லது எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை முக கவசத்தை மூடிய குப்பைத்தொட்டியில் (கீழே உள்ளபடி) அப்புறப்படுத்துங்கள். துணியால் ஆன முக கவசத்தை துவைத்து வெய்யிலில் உலர வைத்து உபயோகிக்கவும்.
- தனி குளியலறை/கழிவறை உபயோகிக்கவும், அடிக்கடி சுத்தம் செய்யவும்.
- குறைந்தது 20 நொடிகள் அடிக்கடி உங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுங்கள்.
- தும்மல் அல்லது இருமலின் போது வாயை துணியால் மூடிக் கொள்ளவும்.
- உங்கள் மூக்கு, வாய், கண்கள் ஆகியவற்றை கை கழுவாமல் தொடாதீர்கள்.
வீட்டு தனிமைப்படுத்தலை எப்போது நிறுத்தலாம்
தொற்று உறுதியான 17 நாட்களுக்கு பின்னர் (அல்லது பரிசோதனை செய்த தேதி) மற்றும் 10 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லையெனில் தனிமைப்படுத்துதலை நிறுத்தலாம். வீட்டு தனிமைப்படுத்துதல் முடிந்ததும் பரிசோதனை செய்ய அவசியமில்லை.
சென்னை பெரு நகராட்சியின் GCC Vidmed application மூலம் வீடியோ காலில் மருத்துவ ஆலோசனை பெறலாம். |
வீட்டிலுள்ள கோவிட்-19 தொற்று நோயாளியை கவனிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
- முக கவசம் அணியுங்கள்: நோயோளிக்கு சேவை செய்யும் போது கட்டாயம் முக கவசம் அணியுங்கள். முக கவசங்களை சாதாரண ப்ளீச் கரைசல் (5%) அல்லது சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் (1%) கொண்டு சுத்தப்படுத்திய பிறகு குழி தோண்டியோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்துங்கள்.
- குடும்ப உறுப்பினர் ஒருவர் மட்டும் நோயாளிக்கு உதவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
- கைகளை கழுவுங்கள்: சோப் கொண்டு அடிக்கடி கைகளை நன்கு கழுவுங்கள்.
- நோய்வாய்ப்பட்ட நபருக்கு பிரத்யேக உணவுத்தட்டு, கப், துண்டுகள் மற்றும் படுக்கை துணி ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.
- அவரின் அறையிலேயே உணவை வழங்குங்கள். கையுறை அணிந்து உபயோகித்த தட்டு, கப் ஆகியவற்றை சோப் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்துங்கள். பாத்திரங்களை மீண்டும் பயன்படுத்தலாம்.
- கையுறையை கழற்றியதும் கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
- நோய்வாய்ப்பட்டவர் அடிக்கடி தொடும் இடங்களை கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தப்படுத்துங்கள்.
- நோய்வாய்ப்பட்டவரின் உடைமைகளை கையாளும் பொழுது கையுறை அணியுங்கள்.
கைககளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்

முக கவசம் எவ்வாறு அணிய வேண்டும்


அலுவலகம் மற்றும் வெளியிலிருந்து வந்ததும் துணிகளை துவைத்து உலர்த்துவது எப்படி
- உடனே துவைக்கவும். வீடு திரும்பியதும் துணிகளை சோஃபா அல்லது கட்டிலில் போடாமல் உடனடியா துவைக்கவும்.
- சோப்பினால் நன்றாக துவைக்கவும். மடிப்புகள் மற்றும் மூலைகள் உள்ளேயும் மறக்காமல் துவைக்கவும்.
- 40 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் உள்ள மிதமான சுடு தண்ணீரில் துவைக்கவும்.
- துணிகளை வெய்யிலில் காய வைக்கவும்.
- துணி துவைத்ததும் உங்கள் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவவும்.
செல்லப் பிராணிகளை பேணுவது எப்படி
- நேரம் செலவிடுங்கள்: உங்களை சுற்றியே இருக்க அது பழகிவிட்டதால், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், படிப்படியாக விலகிக்கொள்ள பழக்கப்படுத்துங்கள்.
- நீண்ட தூரம் நடத்தல் வேண்டாம்: உங்கள் செல்லப் பிராணியுடன் சுற்றுபுறத்தில் குறைவான நேரம் நடை மேற்கொள்ளுங்கள். படிப்படியாக நேரத்தை அதிகரியுங்கள்.
- இயல்புநிலை திரும்பும் வரை செல்லப் பிராணிகளுக்கான விருந்து ஏற்பாடுளை தவிர்த்திடுங்கள்.
- ஒவ்வொரு முறை நடை பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
- கிருமி நாசினி உபயோகிக்கவும்: வீட்டிற்கு திரும்பியதும் கிருமி நாசினியை லீஷ் மற்றும் காலரில் தெளிக்கவும்.
- தடுப்பூசி: தடுப்பூசி போட கால்நடை மருத்துவரிடம் செல்லும் போது தனிமனித இடைவெளி கடைப்பிடியுங்கள்.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை எவ்வாறு கையாள்வது
- நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் மூலம் கோவிட்-19 தொற்று பரவலாம் என்பதற்கு இது வரை ஆதாரம் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. தொற்று உறுதியானவர்களின் சுவாச துளிகள் மேற்பரப்பில் இருக்க வாய்ப்புள்ளது.
- நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை கையாண்ட பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
- கைகளை கழுவாமல், உங்கள் கண்கள், மூக்கு, வாய் பகுதிகளை தொடுவதை தவிர்க்கவும்.
ஏடிஎம் பயன்படுத்துதல்
- முக கவசம் அணியவும், தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கவும்.
- ஏடிஎம் உள்ளே மற்ற பகுதிகளை தொடுவதை தவிர்க்கவும்.
- உங்களுக்கு உடல் நலம் சரியில்லையென்றால் ஏடிஎம் உபயோகிப்பதை தவிர்த்திடுங்கள்.
- உபயோகித்த காகித டவல் அல்லது முக கவசத்தை ஏடிஎம் உள்ளே எறியாதீர்கள்.
- ஏடிஎம் ஸ்க்ரீனை சாவி அல்லது கார்ட் உபயோகித்து தொடவும்.
- வீடு திரும்பியதும், கைகளை நன்றாக சோப் கொண்டு கழுவவும்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறு போன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக 044 2538 4520, 044 2538 4530, 044 2538 4540, 044 4612 2300 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். |
(மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் வழிகாட்டி மற்றும் சென்னை மாநகராட்சியின் விளக்க உரையிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள். )
[Read the original article in English here.]