அம்மா ரோந்து வாகனங்கள்: பெண்கள் உதவிமையத்திற்கு 15000 அழைப்புகள்-துணை ஆணையர் ஜெயலஷ்மி தகவல்

AMMA PATROL: MAKING CHENNAI SAFER FOR WOMEN AND CHILDREN

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
ஆயிரம் விளக்கு காவல் குடியிருப்பில் அம்மா ரோந்து வண்டி. படம்: லாஸ்யா சேகர்.

Translated by Sandhya Raju

தமிழகத்தில் தற்போது பெண்கள் மேம்பாட்டை குறிக்கும் நிறம் பிங்க் என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பல்வேறு பகுதியில் பிங்க் நிற காவல் ரோந்து வாகனங்களை பார்த்திருப்பீர்கள். கடந்த ஜூன் மாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களை தடுக்கும் முயற்சியாக தமிழக அரசால், அம்மா ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  பெண்கள் காவல் நிலையங்கள், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள், சிறார் போலீஸ் பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளையும் இந்த CWC (Crime against Women and Children) ஒருங்கிணைக்கிறது.

இந்த அம்மா ரோந்து வாகனங்களின் பணி என்ன?

இந்த வாகனங்களில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமரா மற்றும் ஜிபிஎஸ் வசதி பொருத்துப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலில் உள்ள பெண்கள் -1091 என்ற எண்ணையும், குழந்தைகள் 1098 என்ற எண்ணையும் அழைக்கலாம், இந்த தகவலை காவல் கட்டுப்பாட்டு மையம் அருகில் உள்ள அம்மா ரோந்து வாகனத்திற்கு உடனடியாக அனுப்பும்.

கல்வி நிறுவனங்களில் பரப்புரை மூலமாகவும், ரோந்து வாகனத்தில் உள்ள ஒலி பெருக்கி மூலமாகவும் உதவி எண்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. “ஒவ்வொரு நாளும் சவாலானது,” என்கிறார் துணை ஆணையர் ஜெயல்ஷ்மி. அம்மா ரோந்து வாகனம் மற்றும் அதனை சார்ந்த விஷயங்களை குறித்து சிடிசன் மேட்டர்ஸ் உடன் பிரத்யேகமாக உரையாடினார்.

துணை ஆணையர் ஜெயல்ஷ்மி

அடிப்படையிலிருந்து துவங்குவோம்.  எந்த குறிப்பிட்ட பகுதியில்  அம்மா ரோந்து வாகனங்களை காண முடியும்?

சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் அம்மா ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு மண்டலங்களில் 35 ரோந்து வாகனங்கள் உள்ளன. நான்கு  கூடுதல் துணை கண்காணிப்பாளர்காள், ஒரு துணை ஆணையர் ஆகியோர் இந்த 35 காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை கண்காணிப்பர்.

ஒவ்வொரு வாகனத்திலும் காவல் ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர் அல்லது தலைமை காவலர், காவலர் என ரெண்டு பேர் இருப்பர் –  பேருந்து நிலையங்கள், பள்ளி கல்லூரிகள், ஆலயங்கள் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடும்.

குடிமக்கள் இந்த சேவையை எவ்வாறு பெறலாம்?

ரோந்து வாகனத்திற்கும் உதவி எண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்து கொள்வது அவசியம். இக்கட்டான சூழலில் உள்ள பெண்கள் -1091 என்ற எண்ணையும், குழந்தைகள் 1098 என்ற எண்ணையும் அழைத்ததும், கட்டுப்பாட்டு அறை இந்த தகவலை அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு தெரியப்படுத்தும். சூழலை பொருத்து, அதற்கான நடவடிக்கை மாறுபடும். பெரும்பாலான புகார்கள் கவுன்சலிங் மூலமாகவே தீர்க்கப்பட்டு விடும். சில புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ரோந்தில் ஈடுபடும் காவலர்களின் முக்கிய பணியாகும்: உதவி எண்ணை பற்றி 90% சென்னை பள்ளிகாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவையும் வழங்கப்படுகிறது.

இந்த உதவியை பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு உள்ளதா?

நிச்சயமாக. ஒலிப்பெருக்கி மூலமாகவும், வாகனத்திலும் இந்த எண் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதனால் ஜூன் முதல் அக்டோபர் வரை 15000 அழைப்புகள் வந்துள்ளன. தெரு சண்டை, பொது மக்களுக்கு தொல்லை, பின்தொடர்தல், வீட்டில் வன்முறை ஆகியவற்றை குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதில் 1500-க்கும் குறைவானபுகார்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான உதவி எண்ணிற்கு 1100 அழைப்புகள் வந்துள்ளன.  அதிகரித்து வரும் அழைப்புகள் பிங்க் ரோந்து வாகனங்களின் வெற்றியையே காட்டுகிறது.

எங்கெல்லாம் கூட்ட நெரிசல் காணப்படுகிறதோ, அங்கு மக்களை ஒன்று கூட்டி , உதவி எண் மற்றும் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எங்கள் காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

அம்மா ரோந்து வாகனம் மூலம் தீர்கப்பட்ட குறிப்பிடத்தக்க புகார்கள் குறித்து?

ஒவ்வொரு நாளும் வெற்றி கதைகள் உண்டு. சமீபத்தில், சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து பத்து வயது சிறுமி உதவி எண்ணை அழைத்தார். அது பொய்யான புகார் என்பதை எளிதில் புரிந்து கொண்டோம்- உதவி எண் செயல்படுகிறதா என அந்த சிறுமி சோதனை செய்துள்ளாள். ஆனால், ரோந்து வாகன உதவி பற்றி விழிப்புணர்வு உள்ளதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இதை நாங்கள் வெற்றியாகவே கருதுகிறோம்.

மற்றொரு சம்பவத்தில், குழந்தை கொடுமைபடுத்தப்படுவதை குறித்து பக்கத்து வீட்டார் புகார் அளித்தார். பத்து வயது சிறுவன் ஒருவனை அவனது மாமா கொடுமைப்படுத்தியுள்ளார். சிறுவனின் அம்மா மௌனம் சாதிக்க, அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் இது குறித்து புகார் அளித்தார். விசாரணைக்கு பிறகு சிறுவனின் மாமாவை கைது செய்தோம். POCSO  சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பெண்கள் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் இந்த ரோந்து வாகனத்தை இயக்குவதாக கூறினீர்கள். இதனால் காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்படாதா?

இல்லை, மேற்கொள்ளப்படும் பணி ஒன்றே. காவல் நிலையத்தில் உட்காராமல் ரோந்தில் ஈடுபடுகின்றனர் அவ்வளவு தான். இன்றும் காவல் நிலையங்களுக்கு வருவதை மக்கள் விரும்புவதில்லை. ஆதலால், நாங்கள் அவர்களிடம் செல்வது மட்டுமின்றி குற்றங்களை குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.  அம்மா ரோந்து வாகனம் ஒரு நடமாடும் காவல் நிலையம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு நாளில் குறைந்தது ஐந்து பகுதிகளை இந்த ரோந்து வாகனம் சுற்றி வருகிறது. காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையிலும், மறுபடியும் மாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரையிலும் தினமும் ரோந்து பணியில் ஈடுபடும்.

பெண்கள் மீதான வன்முறையை களைய மக்களின் பங்களிப்பு என்னவென்று கருதுகிறீர்கள்?

விழிப்புணர்வு அடிப்படை அவசியம். அறியாமையே குற்றங்கள் நடக்க காரணம் என நினைக்கிறேன். சட்டத்தை குறித்தும், தேவை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்ற புரிதல் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் இருத்தல் வேண்டும்.

The original interview in English can be read here.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.