முதல் தகவல் அறிக்கை: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

காவல்துறையில் புகார் அளிக்க ஒரு வழிகாட்டி

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
Pic: Anna Nagar K4 Police Station

Translated by Sandhya Raju

சென்னையில் செயல்படும் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனத்திடம் ₹4500 செலுத்தியுள்ளார் வெட்டுவாங்கனியை சேர்ந்த அஷோக் ராஜ். பணம் செலுத்திய பிறகும், ஆள் வராததால் தொடர்ந்து நிறுவனத்தைஅழைத்தும் பலனில்லாததால், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார்.

இதே போல் பல ஏமாற்று வேலையில் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்ததை அறிந்த அஷோக், தன்னைப் போல் ஏமாற்றப்பட்ட பிறரை தொடர்பு கொண்டார். அனைவரும் ஒன்றிணைந்து, அந்நிறுவனத்தின் மேல் மோசடி / மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், ஜே8 நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது ஒரு “கடுமையான குற்றம்” என்று கருத முடியாது என்பதால் புகாரை பதிவு செய்ய அதிகாரிகள் முதலில் தயங்கினர். இதனை தொடர்ந்து அடையாறு துணை காவல் ஆணையரிடம் அஷோக் புகார் அளித்தார்.

Justdial.com நிறுவனத்தில் பதிவு செய்திருந்த குற்றம் புரிந்த அந்நிறுவனத்தை துணை காவல் ஆணையரின் வழிக்காட்டுதலின் படி, கைது செய்தனர் நீலாங்கரை காவல் துறையினர். பின்னர் புகார் பதிவு செய்யப்பட்டு, 12 பெருநகர காவல் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சைபர் குழுவால் விசாரணை தொடரப்பட்டது.

பெரும்பாலும் காவல் நிலையத்தை அணுகவோ, கேள்வி கேட்கவோ தயங்கும் நாம், புகாரை பதிவு செய்வது குறித்தும், புகாரை காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

குற்றம் என அறியப்பட்டதும், அதன் தீவிரத்தன்மைக்கு அப்பாற்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபருக்கும் உரிமை உள்ளது.

எப்படி செய்வது என உங்களுக்குள் கேள்வி எழலாம்? இது குறித்து அடிப்படை கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன?

பொதுவாக, இந்திய குற்றவியல் நடைமுறைப்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்கள், வெளிவர முடியாத குற்றங்கள் என குற்றங்கள் வகைப்படுத்தப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை என்பது காவல் துறை குற்றத்தை பதிவு செய்யும் ஆவணம் ஆகும். கிரிமினல் வழக்கை முதல் தகவல் அறிக்கை இல்லாமல் விசாரிக்க முடியாது என்பதால், நீதி பெற இது முக்கிய செயல்முறை ஆகும்.

கொலை, பாலியல் குற்றம், வரதட்சணை சம்பந்தமான குற்றங்கள், ஆட்கடத்தல், திருட்டு போன்ற குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களில் அடங்கும். இது போன்ற குற்றங்கள் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், பிடிவாரன்ட் இல்லாமலேயே காவல் துறையால் குற்றம் புரிந்தவரை கைது செய்து, நீதிபதி உத்தரவு இல்லாமலேயே விசாரிக்க முடியும்.

ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்தின் கீழ் கைது செய்ய வாரன்ட் வேண்டும், மேலும் விசாரணை மேற்கொள்ள நீதித்துறை உத்தரவு வேண்டும். தாக்குதல், மோசடி, ஏமாற்று குற்றங்கள் போன்றவை இதில் அடங்கும். பிற குற்றங்களின் தீவிரத்தன்மை சற்றே குறைந்தது.

யார் புகார் அளிக்கலாம், எவ்வாறு அளிக்கலாம்?

குற்றத்தால் பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றம் பற்றி அறிந்தவரோ புகார் அளிக்கலாம். இது ஆன்லைன் மூலமோ அல்லது நேரிலோ அளிக்கலாம்.

  • குற்றத்தை பற்றி அறிந்த அல்லது நேரில் கண்ட காவல் அதிகாரி, முதல் தகவல் அறிக்கையை தானாகவே பதிவு செய்யலாம்.
  • குற்றத்தை நேரில் கண்ட யார் வேண்டுமானாலும் புகாரை பதிவு செய்யலாம்.
  • காவல் அதிகாரி ரோந்து பணியில் எட்டுபட்டிருக்கும் பொழுது புகார் அழைப்பு பெற்றால், புகாரை குறித்துக் கொண்டு, காவல் நிலையம் அடைந்தவுடன் புகாரை பதிவு செய்யலாம்.
புகார் படிவத்தின் மாதிரி
  • ஆன்லைனில் புகாரை பதிவு செய்ய  https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC  என்ற இணையதளத்தை உபயோகிக்கவும்.
  • ‘ஆன்லைனில் புகார் பதிவு’ என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • குற்றத்தை பற்றி விரிவாக பதிவு செய்யவும். புகாரை பதிவு செய்த பின், அதன் நிலையை அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். புகாரை பதிவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து விசாரணை தொடங்கி,தொடர்பு கொள்ளப்படும்.  

குற்றம் செய்ய முயற்சிப்பது, அதிகமான வட்டி வசூலிப்பது, சதித் திட்டம் தீட்டுவது, கள்ள நோட்டு அச்சிடுவது மற்றும் இணைய வழி குற்றம் போன்ற குற்றங்களை குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

மாதிரி புகார்

நேரில் சென்று புகார் அளிக்க, குற்றம் நடைபெற்ற இடத்தின் அதிகார வரம்பிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். வாய்வழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ புகாரை அளிக்கலாம்.

சென்னையிலுள்ள காவல் நிலயங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்களை, இங்கு அறியலாம்.

முதல் தகவல் அறிக்கையில் என்ன தகவல்கள் பதிவு செய்யப்படும் ?

குற்றவாளியின் பெயர், முகவரி (தகவல் இருந்தால்), என்ன குற்றம், குற்றத்தின் தன்மை, தேதி, நேரம், இடம், எந்த அதிகார வரம்பிற்குட்பட்டது மற்றும் சட்டத்தின் எந்த பிரிவு மீறப்பட்டது போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படும்.

பதிவு செய்த பின் என்ன நடக்கும்? காவல் அதிகாரியின் கடமைகள் என்ன?

சென்னை காவல் துறையின் கையேட்டின் படி, சிஆர்பிசி பிரிவு 154 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பின்வரும் வரிசையில் விசாரணையை செயல்படுத்த வேண்டும்.

  1. முதல் தகவல் அறிக்கை பதிவு
  2. சாட்சிகளை விசாரித்தல்
  3. குற்றம் நடைபெற்ற இடத்தை பார்வையிடுதல்
  4. ஆதாரங்களை சேகரித்தல்
  5. தளத் திட்டம் தயாரித்தல்
  6. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தல்
  7. ஒப்புதல் வாக்குமூலங்களை பதிவு செய்தல்
  8. காவல்துறை / நீதித்துறை காவலில் வைத்தல்
  9. தேடுதல்
  10. கைப்பற்றுதல்
  11. வழக்கு குறிப்புகள் தயாரித்தல் போன்றவை
  12. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தல்

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள், அதை மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிஆர்பிசியின் பிரிவு 161 (3) இன் படி, பாதிக்கப்பட்டவர், சாட்சி மற்றும் குற்றவாளி என பல தரப்பினரின் அறிக்கைகளை, காவல்துறை அதிகாரி பதிவு செய்ய வேண்டும். மேலும் விசாரணையின் அடிப்படையில் வழக்கை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து தொடங்கி 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். சட்ட அமலாக்க முகவர் தயாரித்த அறிக்கை குற்றச்சாட்டை நிரூபிக்க இறுதி அறிக்கை ஆகும்.

குற்றப் பத்திரிக்கையில் கீழ்கண்ட தகவல்கள் பதிவு செய்யபடும்:

  • குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியின் விவரங்கள்
  • குற்ற தகவல்கள்
  • குற்றப் பிரிவு மற்றும் பரிந்துரை

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தவுடன், சட்டப்படி விசாரணை நடவடிக்கைகள் தொடங்கும். இதனுடன், விசாரணை மேற்கொள்ளும் ஏஜன்சி, வழக்கில் தொடர்புடைய அனைவரின் அறிக்கைகள், தடயவியல் அறிக்கை, நிபுணர் கருத்து மற்றும் பிற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

தவறுதலாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதை விலக்கிக் கொள்ள காவல் துறைக்கு அனுமதி உள்ளது. முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் முதல் தகவல் அறிக்கையை விலக்கிக் கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தால், அதற்கு எதிராக மாஜிஸ்திரேட்டிடம் எதிர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து வழக்கை மீண்டும் எடுத்துக் கொள்ள புகார்தாரர் மனு அளிக்கலாம்.

புகார் அளித்தவரின் உரிமைகள் என்ன?

  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் அதன் நகலை பெற புகார் அளித்தவருக்கு முழு உரிமை உண்டு.
  • முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படாத வாக்குமூலத்தை அளித்தால், அதை வாதத்திற்காக கருத முடியாது.
  • ஒரே குற்றச்சாட்டிற்காக ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கையை பதிவு செய்ய முடியாது.

பொய்யான தகவலுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் என்ன ஆகும்?

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பிப்பாக கருதப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் அவதூறு வழக்கு அல்லது சிரமத்தை ஏற்படுத்தியதற்காக அதற்கான தொகையை கோர முடியும்.

முதல் தகவல் அறிக்கையை தாமதமாக அளித்தால் என்ன ஆகும்?

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கால வரம்பு இல்லை, ஆனால் தாமதிக்காமல் புகார் அளிக்க வேண்டும். தாமதத்திற்கு சரியான காரணம் இல்லையென்றால், பின் சிந்தனை அல்லது சந்தேகத்திற்குரியதாக கருதப்படலாம். கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், சாட்சியங்கள் அழியாமல் இருப்பதோடு விசாரணை அதிகாரி சிரமமின்றி தொடர உதவுகிறது. புகார் அளிப்பது தாமதிக்கப்பட்டால், உண்மைகள் அழிய வாய்ப்புள்ளது.

நடைமுறையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது கடினமானதா?

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 427 இன் படி, நிதி இழப்பு ரூ.50 – க்கு மேல் இருப்பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உரிமை உண்டு. ஆனால், சிறிய தொகைக்காக புகார் அளிக்க வரும் நபர்களை காவல் துறை கண்டு கொள்வதில்லை.

“பேருந்தில் பயணிக்கும் போது, என் பர்சை தொலைத்து விட்டேன்; அதில் ₹4000 ரொக்கமும், சில ஆவணங்களும் இருந்தது. காவல் துறையை அணுகிய போது, புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டனர்,” என்கிறார் எழும்பூரில் வசிக்கும் ஆர் அஜித்.

“பண மோசடி மட்டுமின்றி, தீவிரமான குற்றங்களுக்கு புகார் பெறுவதில் கூட பல நேரங்களில் காவல் துறை ஊக்கப்படுத்துவதில்லை. புகார் பதிவு செய்யப்பட்டதும், உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு வாரந்தோறும் நடைபெறும் குற்றம் சம்பந்தமான கூட்டத்தில் எவ்வளவு வழக்குகள் தீர்க்கப்பட்டன என்றும் பகிரப்பட வேண்டும். குற்ற எண்ணிக்கையை குறைப்பதை விட குற்ற தகவல் பதிவு எண்ணிக்கை குறைகிறது. குற்றங்கள் இல்லா நகரம் என காட்டவே இந்த போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி பிரேம்குமார்.

புகார் பதிவு செய்யும் முன் காவல் துறை வழக்கமாக நடத்தும் முதல் கட்ட விசாரணை சி.ஆர்.பி.சி விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் மேலும் அவர் தெரிவித்தார் .

புகார் பதிவு செய்ய காவல் துறை மறுத்தால் அல்லது தாமதித்தால் என்ன செய்ய வேண்டும்?

  • உயர் அதிகாரிடம் தெரியப்படுத்துங்கள் மற்றும் தொடர்ந்து இதைக் குறித்து விசாரிக்கவும். “தங்கள் உரிமை என்ன என்றும் அதிகாரியிடம் தொடர்ந்து இது குறித்து பேசி வருவதும், குற்ற விசாரணையை முடிக்க ஆர்வம் காட்டுவர்,” என்கிறார் பாலாஜி.
  • புகார் பதிவு செய்யப்படாததை குறித்து சிஆர்பிசியின் பிரிவு 156 (3) கீழ் நீதிமன்றத்தில் தனி புகார் அளிக்கலாம். புகாரை பதிவு செய்ய அதிகார நீதிமன்றம் அல்லது சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிடலாம். பிரிவு 190 ன் கீழ் அதிகாரம் பெற்ற எந்தவொரு மாஜிஸ்திரேட் அத்தகைய விசாரணைக்கு உத்தரவிடலாம்.
  • புகார் பதிவு செய்ய மறுக்கப்பட்டால், புகார் அளிப்பவர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம்.
  • உங்கள் பகுதியின் அதிகார வரம்பில் வரும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை தெரிந்து கொள்ளுங்கள். சென்னையில், இந்த நீதிமன்றங்கள் எழும்பூர், அல்லிகுளம், ஜார்ஜ் டவுன், சைதாபேட்டை, கெல்லீஸ், சென்ட்ரல் இரயில்வே கோர்ட், எழும்பூர் இரயில்வே கோர்ட் ஆகிய இடங்களில் உள்ளன.
  • ஒவ்வொரு நாளும் காலையில் நீதிமன்றத்தில் நடக்கும் மனு அழைப்பின் போது, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரும் மனுவை ஒரு வழக்கறிஞர் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது தனிநபரால் நேரடியாகவும் செய்ய முடியும், மேலும் அங்கிருந்து வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்லலாம்.

(சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எஸ் வினோத் குமார் மற்றும் பாலாஜி பிரேம் குமார் வழங்கிய தகவல் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது)

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.