விற்பனையாளரால் ஏமாற்றப்பட்டீர்களா? நுகர்வோர் புகார் எங்கு பதிவு செய்யலாம்?

GUIDE TO FILING CONSUMER COMPLAINTS IN CHENNAI

பிக்சாபே-யிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி படம்.

Translated by Sandhya Raju

கடந்த மாதம், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சரிதா குமார் ஆன்லைன் மூலம் டிசைனர் புடவை ஒன்றை வாங்கினார். அதற்கான விலையாக பத்தாயிரம் ரூபாயை ஆன்லைனில் செலுத்தி ஒரு மாத காலம் புடவைக்காக காத்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த புடவை மட்டும் வரவேயில்லை. சந்தேகம் ஏற்பட, அந்த கடையைப் பற்றி முகநூலில் மற்ற வாடிக்கையாளர்களின் அனுபவத்தை பற்றி படிக்கத்தொடங்கினார். அப்பொழுது தான் அந்த கடையின் முகவரியும், தொலைபேசியும் தவறானது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த தேடலை முன்னதாக சரிதா செய்திருந்தால், தன் பணத்தை காப்பாற்றியிருப்பார். கவனக்குறைவு அல்லது அறியாமை காரணமாக, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சரிதா சந்தித்தது போன்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்கின்றனர்.  இது முக்கியமான ஒரு கேள்வியை நம்மிடையே எழுப்புகிறது:

நுகர்வோரின் கடமைகள் என்ன?

  • நீண்ட நாட்களாக வணிகத்தில் இருக்கும் ஒரு கடையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பொருளை வாங்கும் முன்னர், தரம் மற்றும் விலை குறித்து முழுமையான தகவல்களை பெறுங்கள்.
  • வாங்கியதற்கான ரசீது, உத்தரவாத அட்டை, அறிவுறுத்தல் கையேடு மற்றும் பிற கையேடுகள் உள்ளதை  உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும், கேட்ஜெட்டுகள் அல்லது மின்னணு சாதனங்களின் விஷயத்தில், அறிவுறுத்தல் கையேட்டை கவனமாக படியுங்கள். சட்ட வழக்கு தாக்கல் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், கடையின் முத்திரையுடன் ரசீது அவசியமான ஆவணமாக தேவைப்படும்.
  • கேஜெட்டுகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களின் விஷயத்தில், உங்கள் நகரத்தில் விற்பனையாளறின்  சேவை மையம் இருப்பதை உறுதிசெய்க.
  • பொருளை வாங்கும் முன், திரும்ப / திரும்பப்பெறுதல் பற்றிய அனைத்து தகவல்களும் உங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்தவும்.

எப்படி புகார் அளிப்பது?

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 படி, ஒரு பொருளை வாங்கியஅல்லது சேவையை பெற்ற இரண்டு வருடத்திற்க்குள் மாநில நுகர்வோர் விவாத நிவாரண மையத்தில் புகார் அளிக்கலாம். சில நிறுவனங்கள் தங்களின் பொருட்களை திரும்பப் பெறும் அல்லது பணம் திருப்பி தருதல் குறித்து கொள்கைகள் தெளிவாக வரையுறுத்தி இருந்தாலும், நுகர்வோர் தொடர்பான வழக்குகளை கையாளும் மூத்த வழக்கறிஞர் கூறுகையில், “சட்டம் தான் மேலோங்கும், நிறுவனங்களின் கொள்கைகள் அவர்களுக்கு உட்பட்டது.”

சட்ட விதிகளின் படி நுகர்வோர் என்பவர் யார், எந்த மாதிரி நிவாரண பெறலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நடைமுறையை விவரிக்கும் எளிமையான வழிகாட்டி இதோ உங்களுக்காக:

– வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவையில் குறை இருப்பின்,சம்பந்தப்பட்ட (பொது / தனியார்) நிறுவனத்திடம் வேறு மாற்று பொருளையோ / சரிசெய்யும்படியோ / பணம் திரும்ப தரவோ எழுத்து மூலம் நுகர்வோர் அளிக்க வேண்டும்.

– மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கும் பொழுது, பதினைந்து நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு வணிகரிடம் கோர வேண்டும். பதில் வராத பட்சத்தில், இந்த மின்னஞ்சலை சேவை மையம் மற்றும் பின்னர் தயாரிப்பாளருக்கும் அனுப்ப வேண்டும்.

-அனுப்பப்பட்ட மின்னஞ்சலை தபால் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப வேண்டும். (வணிகர், சேவை மையம் மற்றும் தயாரிப்பாளர்). தபால் அனுப்பியதற்கான சான்றை பெற தவறக்கூடாது. இது மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அனுப்பிய தபால் பெறப்படாமல் திரும்ப உங்களிடம் வந்தால், இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூடிய முக்கிய ஆவணமாகும்.

– தமிழகத்தில் உள்ள சிவில் சப்ளைஸ் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு தொலைபேசி மூலம்  (044- 28592828) உதவி கோரலாம்.  வேலை நாட்களில் காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை கால் சென்டர் உதவியாளர்களிடம் உரையாடலாம். புகாரை பதிவு செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பவும் இவர்கள் உதவுவார்கள். அரசு துறையிடம் இருந்து எழுப்படும் கேள்விக்கு மதிப்பு அளிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

– இறுதியாக, மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தை அணுகவும். யார் புகார் அளிக்கலாம் மற்றும் அதற்கான கட்டணம் ஆகியவற்றை மாநில ஆணையத்தின் வலைப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். 

– எங்கே புகாரை அளிக்க வேண்டும் என்பதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். உதராணத்திற்கு, நீங்கள் சென்னைவாசியாக இல்லாமல் இருந்தாலும், நீங்கள் சென்னையில் பொருளை வாங்கி இருந்தால், சென்னை மாவட்ட நிவாரண ஆணையத்தில் தான் புகார் அளிக்க முடியும்.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய பாராளுமன்றம் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து தனது ஒப்புதலை (இரு அவையிலும்) அளித்தது.  இதன் படி எளிமையான நிவாரண நடைமுறை, வழக்குகளின் மத்தியஸ்தம் மற்றும் மின்-தாக்கல் ஆகியவை இடம் பெற்றன. இந்த சட்டத்தின் கீழ், நுகர்வோர் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள், தங்களின் அருகாமையில் உள்ள ஆணையத்தில்  புகார் அளிக்க முடியும். ஆனால், இந்த சட்டம் மத்திய அரசால் இன்னும் அமலுக்கு கொண்டு வரப்படவில்லை.

முக்கிய தகவல்

சென்னையில் உள்ள இரண்டு மாவட்ட நுகர்வோர் நிவாரண ஆணையத்தின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இதோ:

Chennai North 044 – 25340083 chennai.north@gmail.com Frazer Bridge Road, (Behind TNPSC), V.O.C. Nagar, Park Town – 600 003.
Chennai South 044 – 25340065 chennaisouth.dcdrf@gmail.com Frazer Bridge Road, (Behind TNPSC), V.O.C. Nagar, Park Town – 600 003.
  • ஆணையத்தை அணுக தயங்காதீர்கள். “பெரும்பாலான நுகர்வோர் நீதிமன்றம் செல்ல விரும்புவதில்லை; ஆதலால் நீதிமன்றம் என்பது ஆணையம் என அழைக்கப்படுகிறது, தலைமை நீதிபதி தலைவர் என அழைக்கப்படுகிறார்,” எங்கிறார், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர், டி சடகோபன்.
  • நுகர்வோர் பாதுகாப்பு குறித்து செயல்படும் நிறுவனங்களையும் அணுகலாம்.

இந்திய நுகர்வோர் சங்கம் – 044 244 94575

குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவிக் நடவடிக்கை குழு – 044 24660387

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் – 9444220440

சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்

நுகர்வோர் வழக்கில் நீங்களே வழக்கறிஞராக செயல்படலாம்.

வெறும் தாளைல், கீழ்கண்ட தகவலோடு உங்களின் புகாரை பதிவு செய்யலாம்:

– புகார் அளிப்பவர் மற்றும் பிரதிவாதியின் பெயர் மற்றும் முகவரி

– பொருள் வாங்கிய தேதி மற்றும் செலுத்திய பணம்

– பொருள் / சேவை குறித்த தகவல்

– புகாரின் தன்மை – சேதமான பொருள்,  நியாயமற்ற வர்த்தக நடைமுறை, நிர்யணித்த விலையை விட அதிகமாக வசூல்.

– ரசீது, புகார் அளித்த தகவல் போன்ற உங்களின் புகாரை நிருபிக்கும் ஆவணங்கள்

– கோரப்படும் நிவாரணம்

– புகார் அளிப்பவரின் கையெழுத்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்

வழக்கின் போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்/ஏஜன்சி மூலம் அல்லது நீங்களே உங்களின் வழக்கை விவாதித்துக் கொள்ளலாம் – வழக்கறிஞராக இருக்க அவசியமில்லை.  நீங்களே வழக்கை நடத்த முடிவு செய்தாலும்,  சட்ட நிபுணர் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஈடுபட்டுள்ள நிறுவனத்தை அணுகுவது நல்லது.

Read the story in English here.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.