வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கான முக்கிய உதவித் தொலைபேசி இணைப்புகள்

கோவிட்-19 நேரத்தில் மனநலம்

சென்னைப் பெருநகர மாநகராட்சியானது லயோலா கல்லூரியுடன் இணைந்து உதவிக்கான ஒரு தொலைபேசி இணைப்பை உருவாக்கியுள்ளது.

Translated by Vadivu Mahendran

தனிமைப்படுத்தலின் போது சமுதாயத்தில் அதிகரித்து வரும் மனநல பாதிப்புகளைக் குறிக்கும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் ஆடையின்றி வெளியே ஓடி ஒரு 80 வயதான மூதாட்டியைக் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்த ஒரு கொடுமையான சம்பவம் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.  குடும்ப வன்முறை குறித்த பல நிகழ்வுகள் சமீபத்தில் தலைப்புச் செய்திகளாகியுள்ளன. ஆனால், வெளிவராத செய்திகள் எவையென்றால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த 21 நாள் ஊரடைப்புக் காலகட்டத்தில் குடிமக்களிடையே ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை, பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் உருவான, கடுமை குறைந்த மனநல பாதிப்புகள் ஆகும்.

சென்னையில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் பேசும்போது இதுபோன்ற பல்வேறு சம்பவங்களைப் பற்றி நீங்கள் அறியலாம். “ஒரு மென்பொருள் பொறியாளர் பேச்சிழந்து அமைதியானதோடு பல நாட்களாக அவரது குடும்பத்தினருடன் அறவே தொடர்பு கொள்வதில்லை.  மற்றொரு வித்தியாசமான சம்பவத்தில், ஒரு இளைஞன் அதிகாலை 2 மணியளவில் பக்கத்து வீட்டுக் கதவை தட்டி, அவரைத் தன்னோடு பேசும்படி கேட்டுக் கொண்டான். வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளின் கூடுதல் சுமை காரணமாக பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர், ”என்று ஃபோம்ராவின் (FOMRRA) தலைவர் ஹர்ஷா கோடா கூறினார்.

விரோதம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றால் அதிகரிக்கும் துயரங்கள்

வெளிநாட்டிலிருந்தோ அல்லது தொற்றுநோய் சூழ்ந்திருந்த பகுதியின் மையத்திலிருந்தோ திரும்பி வந்து வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டவர்களிடையே இப்பிரச்சினையின் அளவு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் 60,000 பேர் தற்போது வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உளவியலாளர்களின் கூற்றுப்படி,அவர்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.

அத்தகைய மக்களை சென்றடையும் நோக்கில், சென்னைப் பெருநகர மாநகராட்சியானது லயோலா கல்லூரியுடன் இணைந்து உதவிக்கான ஒரு தொலைபேசி இணைப்பை உருவாக்கியுள்ளது. இரண்டு வார காலமாக இயங்கி வரும் இவ்விணைப்பானது இரண்டு பணிமாற்றுகளில் (ஷிஃப்ட்), ஒரு நாளுக்கு 13 மணிநேரம் பணியாற்றும் 80 சமூக தன்னார்வலர்களால் இயக்கப்படுகிறது.

வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்ட நபர்களை ஒதுக்குவது அல்லது அவர்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவது என்பது பெருமளவு தெளிவாகப் புலப்படக்கூடிய மற்றொரு பிரச்சனையாக உள்ளது. “நான் வெளியில் வந்தால் என்னை அடிக்கப்போவதாக என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வாய்மொழியாக மிரட்டினார். எனது குடியிருப்போர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் கூட செய்தித்தாள் போடும் பையனை எங்கள் வீட்டிற்கு போடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இது நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும்  பனிப்பாறை போன்ற கடினமான சூழ்நிலையின் ஒரு சிறு முனை மட்டுமே“, என்று டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து வீட்டுத்தனிமைப்படுத்துதலில் உள்ள குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார்.

சமையல் வாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வீட்டிற்குச் செல்ல மறுக்கிறார்கள். அந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களும் மிகக் கடினமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள், அவர்களில் சிலர் உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கூட வாங்குவதற்கு சிரமத்தைக் காண்கிறார்கள். அவர்களது இந்தத் துயரம் நியாயமற்றது“, என்கிறார், சென்னைப் பெருநகர மாநகராட்சியின் தொலைத்தொடர்பு மையத்தினை ஒருங்கிணைக்கும் டாக்டர் கிளாட்ஸ்டன் சேவியர்.

இந்த சமூக உளவியல்சார் உதவி மையத்தின் முக்கிய நோக்கமானது வைரஸ் தொற்றியிருக்கும் நோயாளிகளுடன் இணைந்திருக்கும் சமூகக் களங்கத்தினை அகற்றுவதாகும். ஒவ்வொரு நாளும், இம் மையம் வீட்டுக்கண்காணிப்பில் இருக்கும் குடிமக்களில் கிட்டத்தட்ட 5000 பேரை தொலைபேசியில் அழைத்து, மனச்சோர்வுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்கள் மேல் கூடுதல் கவனம் செலுத்துகிறது. “நாங்கள் நோயாளிகள் மற்றும் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் அண்டை வீட்டாருடன் தொடர்பு கொண்டு சமூக ஆதரவு குறித்து அவர்களைப் பயிற்றுவிக்கிறோம்“, என்று கிளாட்ஸ்டன் சேவியர் மேலும் கூறுகிறார்.

இத்தகைய ஆதரவை வழங்குவதும், உணர்வுகளின் நல்வாழ்வுக்கான சூழலை உருவாக்குவதும்தான் முதன்மை நோக்கமாக இருக்கும் அதேவேளையில், சில சந்தர்ப்பங்களில் அவர்கள்,  வீட்டுக் கண்காணிப்பில் இருக்கும் சிலருக்கான தேவைகளை அவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் அந்த மண்டல அலுவலகங்களுடன் ஒருங்கிணைத்து அதற்கான தளவாட உதவி உட்பட கிடைக்கச் செய்கிறார்கள்.

அந்தத் தன்னார்வலர்கள் உடல் உபாதைகளுடன் தொடர்பான தகவல்களை ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள மருத்துவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் வந்து சிகிச்சையளிக்கிறார்கள்.

செவிமடுக்க ஒரு காதுதான் தற்போதைய தேவை

இந்த ஊரடைப்பானது எல்லாக் குடிமக்களிடையேயும், அவர்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களோ இல்லையோ மனச்சோர்வுக்கான அடையாளங்களுக்குக் காரணமாயுள்ளது. “அடைப்புக்காலத்தின் முதல் வாரம் நன்றாவே இருந்தது. ஆனால், கண்காணிப்பின்றி, பேசுவதற்கு ஒருவருமின்றி வீட்டிலிருந்து பணிபுரிய முயற்சிக்கையில், நான் தொலைந்து போனதாக உணர்கிறேன். என்னுடைய வேலைத்திறன் குறைந்துள்ளது, அதனால் நான் பாதுகாப்பற்ற உணர்வை உணர்கிறேன்,“ என்கிறார் ரமணி நாயர் என்கிற உள்ளடக்க எழுத்தாளர்.

சம்பளக் குறைப்பு பற்றிய வதந்திகள் மற்றும் அடைப்புக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் ரமணியின் துயரத்தை அதிகப்படுத்தியதால், அவர் தற்போது நிகழ்நிலை (ஆன்லைன்) யில் ஒரு சிகிச்சையாளரைப் பார்க்கிறார்.

மனச்சிதைவு ஆராய்ச்சிக்கான அறக்கட்டளையின் (SCARF) இயக்குநரான டாக்டர். ஆர். பத்மாவதி அவர்களின் கூற்றுப்படி, இன்னொரு சம்பவத்தில் கடந்த மூன்று வருடங்களாகத் தனியாக வசித்து வரும் ஒரு 65 வயதான பெண்மணி மீண்டும் மீண்டும் கொரோனா தொற்று தொடர்பான செய்திகளைப் பார்த்ததில் பீதியடைய ஆரம்பித்துள்ளார். அவரது மகன், நோய்த்தொற்று உள்ளோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றில் இருப்பதால் அவர் மிகவும் கவலையடைந்திருந்தார்.  அவரது பதட்ட நிலை கணிசமான அளவு அதிகரித்திருந்தது.

அந்நிறுவனத்தில் (SCARF) உள்ள உளவியலாளர்கள் ஆதரவு தேவைப்படும் அத்தகைய மக்களுக்கு ஒரு உதவி தொலைபேசி இணைப்பின் மூலம் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். தொடர்ச்சியான தொலைபேசி அமர்வுகள் அந்த மூத்த குடிமக்களை அவர்களது மனச்சோர்விலிருந்து வெளிவர உதவியுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமூக உளவியல்சார் ஆதரவுக்கான உதவி தொலைபேசி இணைப்புகள்

GCC – 044 46122300

SCARF – +91 7305928515.

Snehi – +91 9582208181

மளிகை, மருந்துகள் மற்றும் சமைத்த உணவுக்கான தொடர்புகள்

Bhoomika Trust – 044 46314726

Paul Pradeep – +91 9841166554

Moses Robinson – +91 9600143138

பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் பற்றிய விவரங்களுக்கு 

இங்கே  கிளிக் செய்க.

சக குடிமக்கள் என்ன செய்யலாம்?

  • வீட்டுக்கண்காணிப்பு என்பது பாதுகாப்பிற்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். “வெளிநாடுகளிலிருந்து திரும்பியுள்ள குடிமக்கள் மீதான விரோத மனப்பான்மையை அகற்றுவதற்கு ஊடகங்கள் வழியாக சமூகம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் தனிமையிலும் மனச்சோர்வுடனும் இருக்கிறார்கள். இன்று அவர்கள். நாளை நீங்களாகவும் இருக்கலாம். இந்த நோய்த்தொற்றானது ஒத்துழைப்பு மற்றும் சூழ்நிலையேற்பு ஆகியவற்றைக் கொண்டு இந்நோய்த்தொற்றுடனான போரை வெல்ல முடியும் என்கிறார், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் உள்ள சமூக பணித் துறையின் இணைப் பேராசியரான டாக்டர் சில்வியா டெய்ஸி.
  • தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியமானது. உங்களுக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக் கண்காணிப்பில் அல்லது தனிமையில் இருந்தாலோ அவர்களை உபயோகமான காரியங்களில் ஈடுபடுத்துங்கள்.
  • உதவி தேவைப்படுவர்களுக்கு தனிநபர்கள் பலவழிகளில் உதவலாம். நீங்கள் கடைக்குச் செல்லும்போது அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிவந்து கொடுக்கலாம். மொட்டை மாடியில் நடப்பது மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பது கூட நல்ல மன அழுத்த நிவாரணிகளாகும்’ எனக் கூறும் SCARF நிறுவனத்தின் டாக்டர் பத்மாவதி, ’கைப்பேசியை ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்காவது அணைத்து வைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்‘, என்கிறார்.

[Read the original in English here.]

About Laasya Shekhar 279 Articles
Laasya Shekhar is Senior Reporter at Citizen Matters Chennai. She tweets at @plaasya.