விமான பயணம் திட்டம் உள்ளதா? பயணித்தவர்கள் பகிரும் அனுபவங்களை கேளுங்கள்

கோவிட் 19: சென்னைக்கு வர உள்நாட்டு விமானப் பயண குறிப்பு

சென்னைக்கு பயணிக்கும் திட்டம் உள்ளவர்கள் உள்ளூர் விமான பயணம் குறித்து அரசு வகுத்துள்ள வழிகாட்டியை பின்பற்ற வேண்டும். படம்: ஸ்டீவன் பைல்ஸ் (CC BY: SA 2.0)

Translated by Sandhya Raju

கோவிட்-19 தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் தங்கள் குடும்பத்தினரை பிரிந்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அனைத்து போக்குரவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், வேலை நிமித்தம் வெளியூர் சென்றவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை. அவசர காரணங்களுக்காக மட்டுமே பயணம் அனுமதிக்கப்பட்டது அல்லது சொந்த வாகனம் வைத்திருந்தவர்கள் பயணிக்க முடிந்தது.

ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. பல்லாயிரம் கி.மீ தூரம் உள்ள தங்கள் சொந்த ஊர் நோக்கி விருந்தினர் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கியதும், மாநிலங்களுக்கிடையே ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழலில், மே மாதம் 25-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.

மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை மற்றும் இயக்க முறை குறித்து விரிவான நடைமுறையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விமானப் பயணம் மேற்கொள்ளும் முன் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து, சமீபத்தில் சென்னைக்கும், சென்னையிலிருந்தும் பயணம் மேற்கொண்ட இருவரிடம் சிடிசன் மேட்டர்ஸ் உரையாடியது.

சென்னை நோக்கி பயணம்

கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை சந்திக்க மார்ச் மாதம் இறுதியில் பூனே சென்றார் ரிஷி சங்கரன். ஆண் குழந்தை பிறந்ததும், தன் வயதான தந்தையுடன் இருக்க மீண்டும் சென்னை திரும்ப திட்டமிருந்தார் ரிஷி. ஆனால், ஊரடங்கு அவரது திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. மஹாராஷ்டிராவில் தொற்று அதிகரிக்கவே, சாலைகளில் கூட நடக்க கடும் தடைகள் அமலில் இருந்த நிலையில், சென்னைக்கு பயணிக்க சாத்தியக்கூறு அறவே இல்லாமல் போனது.

“பயணிக்க முடியுமா என நீண்ட நாட்கள் காத்திருந்தேன். என் நிலைமையை விளக்கி முதலமைச்சர் அலுவலகத்திற்க்கும் எழுதினேன் ஆனால் எந்தவொரு பதிலும் வரவில்லை. உள்நாட்டு விமான சேவை தொடங்கிய தகவல் வந்ததும், சென்னைக்கு விமான டிக்கட் முன்பதிவு செய்ய முடிவு செய்தேன். நேரடி விமானம் ரத்தானதால், பெங்களூரு வழியாக சென்னை வர பதிவு செய்தேன்,” என்றார் ரிஷி.

ரிஷி தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்ததிலிருந்து சில பகுதிகள்:

ஆவணங்கள் & ஈ-பாஸ் – பூனேவில் எனக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என பரிசோதிக்கவில்லை, ஆனால் பொது உடல் சோதனை மேற்கொண்டேன். எனக்கு தொற்று அறிகுறி இல்லை என மருத்துவர் கொடுத்த சான்றிதழை உடன் வைத்திருந்தேன்.

விமான டிக்கெட் பெற்றதும், ஆன்லைன் மூலம் ஈ-பாஸ் பெற விண்ணப்பித்தேன். பூனேவிலிருந்து புறப்பட்ட போது என்னிடம் ஈ-பாஸ் கேட்கப்படவில்லை, ஆனால் பெங்களூரில் விமானம் ஏறும் முன் தமிழக ஈ-பாஸ் சரி பார்க்கப்பட்டது. ஈ-பாஸ் இல்லாத சில பயணிகள் பயணம் மேற்கொள்ள தடுக்கப்பட்டனர்.

ஆரோக்கிய சேது ஆப் – இந்த ஆப்பை தறவிறக்கம் செய்திருந்தேன், இரு விமான நிலையத்திலும் ஆப் உள்ளதா என சரி பார்த்தனர்.

விமானம் ஏறும் முன் – வெப் செக்-இன் அவசியம். பூனே விமான நிலையத்தில் வெப்ப சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். தாகம் தீர்க்க, விமானம் ஏறும் முன் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தனர். விமானம் ஏறியதும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கவில்லை. பெங்களூரு விமான நிலையத்தில் கடைகள் திறந்திருந்தன. விமானம் ஏறும் அறிவிப்பின் போது, இருக்கை எண்ணையும் அறிவித்து அதன் படி குழுவாக ஏற அனுமதிக்கப்பட்டது.

விமானத்தின் உள் – ஒவ்வொரு பயணிக்கும் முகத்தை மறைக்கும் கவசம், சானிடைசர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. பயணம் முழுவதும் அணிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. நடு இருக்கையிலும் பயணிகள் இருந்ததால் தனி மனித இடைவெளி பின்பற்றப்படவில்லை.

தரை இறங்கியதும் – விமானம் சென்னையில் தரை இறங்கியதும், அனைவரும் எழுந்தனர். தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. கன்வேயர் பெல்ட்டிலிருந்து பைகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு அருகில் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெப்ப பரிசோதனைக்கு பின், அறிகுறி இல்லையென்றால், வெளியே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் விவரம் மற்றும் ஈ-பாஸ் எண்ணை ஒரு காவல்துறை அதிகாரி குறித்துக் கொண்டார். 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டேன். என் கையில் முத்திரை குத்தப்பட்டது. 28-ஆம் தேதி நான் சென்னை வேந்தேன், 31-ஆம் தேதி சென்னை மாநகராட்சியிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

சென்னை வந்த பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படம்: ரிஷி சங்கரன்
முத்திரை ஒரு நாளிலேயே மறைய ஆரம்பித்தது. படம்: ரிஷி சங்கரன்

“சென்னை வந்ததில் மகிழ்ச்சி. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். அரசு செய்ய வேண்டியதை இயன்றவரை செய்கிறது, ஆனால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். எல்லா நிலைகளிலும் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. தொற்று அதிகமாக உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் சோதனை இருக்கும் என எதிர்பார்த்தேன். அப்படி இருந்திருந்தால் குழுவாக தனிமைபடுத்திக்கொள்ள நான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பதன் மூலம் என்னால் வீட்டிலிருந்தே பணியை தொடர முடிகிறது.”

குட்பை சென்னை

கோயம்பத்தூரை சேர்ந்த நித்தியானந்தன் கருப்புசாமி சென்னையில் வேலை பார்க்கிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தான் வசிக்கும் வேளாச்சேரி இல்லத்திலேயே சமாளித்துவிடலாம் என நினைத்த அவர் சில நாட்களுக்கு பிறகு, தனிமையை போக்க நண்பருடன் சேர்ந்து வசிக்க தொடங்கினார். குடும்பத்தினரை சந்திக்க சாலை வழி பயணம் மேற்கொள்ள மூன்று முறை ஈ-பாஸ் பெற விண்ணப்பித்தார், ஆனால் மூன்று முறையும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. வேறு வழியின்றி, விமான சேவை தொடங்கும் வரை காத்திருந்தார்.

“சமாளித்து விடலாம் என் நினைத்தேன் ஆனால், நாட்கள் செல்ல செல்ல தனிமையாக உணர ஆரம்பித்தேன். தொற்று குறித்தும் அழுத்தம் இருந்தது. வீட்டிலிருந்தே பணி செய்து கொண்டு வீட்டையும் நிர்வகிப்பது கடினமாக இருந்தது. விமான சேவை தொடங்கியதும், முதல் விமானத்தில் பதிவு செய்தேன்,” என்றார் நித்தியானந்தன்.

நித்தியானந்தன் அவரது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்தார்:

ஆவணங்கள் & ஈ-பாஸ் – தமிழக ஈசேவை மையத்தை டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு கோயம்பத்தூருக்கு விமான பயணம் மேற்கொள்ள பாஸ் தேவையா என விசாரித்தேன். அருகில் உள்ள பிற மாவட்டத்திற்கு செல்லாமல் கோயம்பத்தூர் மட்டும் செல்வதென்றால் ஈ-பாஸ் தேவையில்லை என தெரிவித்தனர். அடையாள அட்டையை என்னுடன் எடுத்து சென்றேன்.

விமான நிலைய பயணம் – என் நண்பர் என்னை சென்னை விமான நிலையத்தில் விட்டார். கோயம்பத்தூரில் என் சொந்த வாகனத்தை பயன்படுத்தினேன்.

ஆரோக்கிய சேது ஆப் – வழிமுறைகளை அறிந்து கொண்டு ஆப்பை தரவிறக்கம் செய்தேன், ஆனால் சென்னை மற்றும் கோயம்பத்தூர் என இரு இடங்களிலுமே ஆப் பற்றி கேட்கவில்லை.

விமானம் ஏறும் முன்– சென்னை விமான நிலைய நுழைவாயிலில் நான் செல்லுமிடம் குறித்து விசாரித்தனர். பின்னர் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய விமானம், முதல் விமானம் என்பதால் அவ்வளவு கூட்டம் இல்லை. வெப் செக்-இன் கட்டாயம் செய்திருக்க வேண்டும். ஒரு செக்-இன் பை மற்றும் ஒரு கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. செக்-இன் நடைமுறை எப்பொழுதும் போல் தான் உள்ளது.

விமான நிலையத்தில் உள்ள எந்த உணவு கவுண்டரும் திறந்திருக்கவில்லை, தானியங்கி இயந்திரமும் மூடப்பட்டிருந்தது. விமானத்திலும் எந்த உணவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

கண்ணாடி பேழை பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அடையாள அட்டை மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றை சோதனை செய்தார். மற்ற மாநிலத்திருந்து வருபவர்களிடம் மட்டும் ஈ-பாஸ் கேட்கப்பட்டது.

விமானத்தில் உள்– ஒவ்வொரு பயணிக்கும் முகத்தை மறைக்கும் கவசம், சானிடைசர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. விமானத்தில் சில இருக்கைகள் காலியாகவே இருந்தன.

சென்னையிலிருந்து கோவை செல்லும் விமானத்தில் காலி இருக்கைகள்.
படம்: நித்தியானந்தன் கே

தரை இறங்கியதும் – விமானம் தரை இறங்கியதும், இடைவெளி விட்டு வரிசையில் இறங்குவது கடைபிடிக்கப்படவில்லை. விமான நிலையம் அடைந்ததும், எங்களின் சேருமிடம் பொறுத்து வரிசையாக பிரிக்கப்பட்டோம். கோவை செல்பவர்கள் ஒரு வரிசையிலும், ஊட்டி, திருப்பூர் அல்லது ஈரோடு செல்பவர்கள் மற்றொரு வரிசையிலும் பிரிக்கப்பட்டனர். முகவரி, தொலைபேசி எண், கோவிட் தொற்று உள்ளதா என்ற தகவல் அடங்கிய படிவத்தை நிரப்பினோம். வெப்ப சோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை – இதற்கு பிறகு வீடு திரும்பும் எதிர்பார்ப்பில் இருந்தேன், ஆனால் கோவிட் ஸ்வாப் சோதனை செய்யப்பட்டது. அனைத்து பயணிகளுக்கும் பத்து பேர் கொண்ட குழு கோவிட் ஸ்வாப் சோதனை செய்தனர். இவர்கள் அனைவரும் முழு பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தனர். இதன் பிறகு கூடுதல் வழிமுறைகளுக்காக அனைவரையும் அருகில் உள்ள அறையில் காத்திருக்க செய்தனர்.

தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனை முடிவுகள் – எங்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்துலுக்கான முத்திரை கையில் குத்தப்பட்டது. காத்திருப்பு அறையில், பரிசோதனை முடிவு வரும் வரையில் நாங்கள் அனைவரும் கட்டண ஹோட்டல் அல்லது அரசின் இலவச இடத்தில் இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

மலிவானது முதல் விலை அதிகமானது வரை ஹோட்டல் பட்டியல் இருந்தது. என் ஹோட்டலை நான் தேர்ந்தெடுத்தேன். ரயில் நிலையம் அருகே உள்ளே ஹோட்டலுக்கு எங்களை அழைத்துச் செல்ல ஒரு பேருந்து காத்திருந்தது. அது வரை நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை. 12.30 மணிக்கு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம், அன்றைய நாளுக்கான கட்டணத்தை செலுத்திய பின்னர், அறையிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டது. எங்களுக்கு தேவையான உணவு ஆர்டரின் பேரில் வழங்கப்பட்டது.

கோவை விமான நிலயத்திலிருந்து வெளியேறுபவர்கள் அனைவருக்கும் முத்திரை குத்தப்பட்டது. படம்: நித்தியானந்தன் கே
பரிசோதனை முடிவுகள் வரும் வரை கட்டண ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டோம். படம்: நித்தியானந்தன் கே

இரவு 11 மணிகக்கு பரிசோதனை முடிவுகள் வந்தன. எனக்கும், என்னுடன் பயணித்த அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவுரையுடன் எங்களை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். ஹோட்டலிலிருந்து என் குடும்பத்தினர் என்னை அழைத்துச் சென்றனர்.

“கிட்டத்திட்ட 65 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இந்த நடைமுறை சற்று குழப்பமானதாக உள்ளது. விமானத்தில் செல்பவருக்கு மட்டும் பாஸ் தேவவையில்லை ஆனால் சாலை வழியாக செல்பவர்களுக்கு பாஸ் தேவை என்பது ஏன் என்று புரியவில்லை. சென்னையில் உள்ள பலர் வேலை நிமித்தமாக வந்தவர்கள், அவர்கள் வீடு திரும்ப விரும்புகிறார்கள்; அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.”

இயக்க நடைமுறைகளும் விலகல்களும்

உள்நாட்டு விமான சேவை தொடக்கம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட இயக்க நடைமுறையில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் சோதனை என்றும் அனைத்து பயணிகளுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்படவில்லை.

மே 25 விமான சேவை தொடக்கம் குறித்து வெளியிடப்பட்ட இயக்க நடைமுறை

பெங்களூருவிலிருந்து சென்னை சென்ற ரிஷி பயணம் செய்த போது இந்த இயக்க நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் நித்தியானந்தன் சென்ற கோவை விமான பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த இயக்க நடைமுறை கேள்விக்குறியது, ஏனெனில் தொற்று அறிகுறி அல்லாது கோவை சென்ற ஆறு பயணிகளுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி தென்படவில்லை.

பரிசோதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லையென்றாலும், கோவை மற்றும் மதுரையை ஒப்பிடுகையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடுகையில், ஒருவருக்கு கூட தொற்று இல்லை என்பதே முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது: ரிஷி அளித்த தகவலின் படி, இயக்க நடைமுறை படி தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கோவிட் ஸ்வாப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? தொற்று அதிகம் உள்ள மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு இந்த நடைமுறை படி பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.

இதற்கு நேர்மறையாக, கோவை விமான நிலையம் வந்த அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

உள் நாட்டு விமான நிலையத்தில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை

மே 31-ஆம் தேதி, தமிழக அரசு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட நடைமுறையின் படி தொற்று அதிகம் உள்ள மாநிலங்களான குஜராத், புது தில்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து ரயிலில் வருபவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றவர்கள் தொற்று அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது விமான பயணிகளுக்கும் பொருந்துமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும், அவ்வாறு செய்யப்பட்டால் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவில் தொற்று அதிகமாக வாய்ப்புகள் உண்டு.

செய்ய வேண்டியவை

 • விமான நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக விமான நிலையம் செல்லவும்
 • வெளி மாநிலத்திற்கு செல்வதென்றால் தேவையான ஈ-பாஸ் பெற்றுக் கொள்ளவும்
 • முகவரி, தொலைபேசி எண் என சரியான விவரங்களை அளிக்கவும்
 • தொற்று குறித்து வெளிப்படையாக உண்மையான நிலையை படிவத்தில் நிரப்பவும்
 • அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்திருக்கவும்
 • முன்னதாகவே வெப் செக்-இன் முறையை செய்யவும்

செய்யக் கூடாதவை

 • கோவிட்-19 தொற்று குறித்த அறிகுறியை மறைக்காதீர்கள்
 • கோவிட் தொற்று பகுதி என கண்டறியப்பட்ட பகுதிக்கு பயணித்திருந்தால், அத்தகவலை மறைக்காதீர்கள்
 • விமான நிலையத்திலோ அல்லது விமானத்திலிருந்து இறங்கும் போதோ தனி மனித இடைவெளியின்றி செல்லாதீர்கள்
 • தனிமைப்படுத்துதலுக்கான முத்திரையை அழிக்காதீர்கள்
 • 14 நாட்கள் வீட்டு தனிமையின் போது மற்றவர்களை சந்திப்பதோ அல்லது வெளியில் செல்வதையோ செய்யாதீர்கள்

[Read the original article in English here.]

About Aruna Natarajan 179 Articles
Aruna is an Associate Editor at Citizen Matters. She has a BA in Economics and a PG Diploma in Journalism. She has also worked in a think-tank on waste management policy and with a non-profit in sport for development. She writes on civic issues, governance, waste, commute and urban policy. She tweets at @aruna_n29.