
Translated by Sandhya Raju
ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் ஹிந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்ஸி, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பின், குடியுரிமை திருத்த சட்டம், 2019(CAA) படி இந்திய குடிமகனாக விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
1995 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் படி, இந்திய குடியுரிமை பெற குறைந்த பட்சம் பதினோரு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் (அல்லது மத்திய அரசாங்கத்த்தில் பணி புரிந்திருக்க வேண்டும்). இப்போழுது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்ததின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்த மேற்கூறிய ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த கால கட்டம் தற்போது ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி அரசு கூறுவது என்ன?
இந்த மூன்று நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக தப்பித்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த சட்டம் வெளிப்படைதன்மையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தினர் அதிகமாக வாழும் இந்த மூன்று நாடுகளில் இவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது மிக குறைவு என்பதால் இந்த சட்டத்தில் முஸ்லிம் மதத்தவர்கள் சேர்க்கப்படாததற்கு காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆனால் அஹமதியாஸ், பஹாய்ஸ் இன மக்களும் பாகிஸ்தான் நாட்டில் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களை வெளிப்படையாக விலக்கியுள்ளது பரவலான கண்டனத்தைத் தூண்டியுள்ளது. இந்த மூன்று நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக உள்ளதால், சிறுபான்மையினர் பாதிப்புக்கு உள்ளாகுவதால், முஸ்லிம்களை இந்த சட்ட திருத்தத்திலிருந்து விலக்கியது இஸ்லாமிய எதிர்ப்பு அல்ல என்கிறது அரசு.
குடியுரிமை திருத்த சட்டம் கீழ் எத்தனை பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது?
டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி என்ற அடிப்படையில் கணக்கிடும் போது, 31,313 பேர் பயன் பெறுவர் என 2016 ஆம் ஆண்டில் இந்த மசோதா தொடர்பான நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“எங்களின் பதிவேட்டின் படி, 31,313 சிறுபான்மை மக்கள் உள்ளனர் (ஹிந்து-25447, சீக்கியர்கள்5807, கிறிஸ்த்துவர்கள்-55, புத்த மதத்தினர் – 2 மற்றும் பார்சி – 2). அந்தந்த நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளானதன் அடிப்படையிலும் நீண்ட கால விசா வழங்கப்பட்ட அடிப்படையிலும் இந்திய குடியுரிமைக்கு இவர்கள் விண்ணப்பித்திருந்ததால், இவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும்.”
எனினும், சட்டவிரோதமாக இந்தியாவில் இது வரை வசித்து வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முன்வருவர் என்பதால், கோடிக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன் பெறுவர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் அடைக்கலம் தருமா?
இந்த மூன்று நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு பாதுகாப்பான புகலிடம் தருவதற்காக இந்த குடியுரிமை திருத்த சட்டம் இயற்ற காரணம் என்றாலும், இவர்களுக்கு மட்டுமே புகலிடமா என்பதை பற்றி இந்த சட்டத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிடப்பட்ட ஆறு மதங்களை சேர்ந்தவர்கள் காரணங்கள் குறித்து வெளிப்படையாக குறிப்பிடப்படாமல் குடியுரிமை பெறலாம் என சட்டம் கூறுகிறது.
இந்த சட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு கிளப்பியுள்ளது?
குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் இந்த சட்டத்தில் இணைத்துள்ளது இந்த எதிர்ப்பு வலுக்கு காரணமில்லை என்றாலும் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் முதல் படியாக இது பார்க்கபடுவதால் CAA -விற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ள மற்றொரு முயற்சியான குடிமக்கள் தேசிய பதிவு (NRC) இதனுடன் இணைத்து பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் இருந்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் CAA-விற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அசாம், மேகாலயா மாநிலங்களில் இன்டர்னட் சேவை முடக்கப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து இராணுவமும் காவல்துறையும் அதை கட்டுப்படுத்த முயன்றதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
அண்டை நாடுகளிலிருந்து வடகிழக்கு மாநிலத்திற்கு நீண்ட காலமாக அகதிகள் அதிக அளவில் குடிபெயர்வது தொடர்கதையாக உள்ளது. இதனால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டைமப்பு சீர்குலைவதாக உள்ளூர் மக்கள் நீண்ட காலமாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு நடைபெறும் CAA-விற்கு எதிரான போராட்டம், சட்ட விரோதமாக இடம்பெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து நடைபெறுவதாகும்.
குடிமக்கள் தேசிய பதிவு என்றால் என்ன? அசாமில் இந்த NRC கணக்கெடுப்பில் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க என்ன தேவைப்பட்டது?
அனைத்து இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து தேசிய பதிவில் இந்திய குடிமகனாக பதிவு செய்வதே குடிமக்கள் தேசிய பதிவின் நோக்கமாகும். போதிய ஆவணங்காள் இல்லாதவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பப்படுவர்.
அசாமில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, நாட்டின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டால், NRC-யில் பதிவு செய்யவும் இந்திய குடிமகன் என நிரூபிக்கவும் கீழ்கண்ட ஆவணங்கள் அவசியம்,
- வறையுறுக்கப்பட்ட தேதி வரை தேர்தல் பட்டியல்
- நிலம் அல்லது வாடகை/குத்தகை பதிவுகள்
- குடியுரிமை சான்றிதழ்
- நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்
- அகதிகள் பதிவு சான்றிதழ்
- அரசு வழங்கியுள்ள ஏதனுமொரு ஆவணம்
- அரசு வேலை / வேலைவாய்ப்பு சான்றிதழ்
- வங்கி / தபால் அலுவலக கணக்குகள்
- பிறப்பு சான்றிதழ்
- மாநில கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழக கல்வி சான்றிதழ்
- நீதிமன்ற பதிவுகள் / செயல்முறைகள்
- பாஸ்போர்ட்
- ஆயுள் காப்பீட்டு நிறுவன காப்பீடு
இந்த ஆவணங்கள் வரையுறுக்கப்பட்ட தேதிக்கு பின் தேதியிட்டு இருத்தல் கூடாது. வறையுறுக்கப்பட்ட தேதிக்கு முன்தேதியிட்ட ஆவணங்கள் இல்லையென்றால், தந்தை அல்லது தாத்தா பெயரில் உள்ள ஆவணங்கள் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால், அவர்களுடனான தங்கள் உறவை நிரூபிக்க, கீழ்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்பிக்க வேண்டும்.
- பிறப்பு சான்றிதழ்
- தேர்தல் பட்டியல் பதிவு
- ரேஷன் கார்ட்
- பல்கலைகழகம் / போர்ட் சான்றிதழ்
- வங்கி / காப்பீடு / தபால் துறை பதிவுகள்
- நில ஆவணம்
- திருமணமான பெண்களாக இருப்பின் கிராம பஞ்சாயத்து செயலாளர் சான்றிதழ்
- சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஆவணங்கள்
அசாமில் வறையுறுக்கப்பட்ட தேதி 1971 என்றாலும், நாட்டி பிற பகுதிகளுக்கு இது வேறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய ஆவணங்கள் எதுவும் இல்லாதவர்கள் இந்த நிபந்தனைகளால் பாதிக்கப்படுவர், ஏனெனில் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்கும் பொறுப்பு அவர்கள் மீது உள்ளது.
குடிமக்கள் தேசிய பதிவு முற்றிலும் வேறுபட்ட முயற்சி, இதற்கும் குடிமக்கள் சட்ட திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்கள், மத பாகுபாட்டின் அடிப்படையில் மக்கள் ஏன் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்,
1. இந்திய குடிமகனாக உள்ள முஸ்லீம் மக்களை இது விலக்கவில்லை
2. முஸ்லிம் பெரும்பான்மை உள்ள நாடுகளில் மத துன்புறுப்பதலுக்கு ஆளான சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது.
இந்த சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள், இதை தேசிய குடியுரிமை பதிவேட்டுடன் இணைத்து பார்த்தால் தான் அதன் உண்மைதன்மை வெளிப்படும் என்கின்றனர். அசாமில் எடுக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவில் நீக்கப்பட்ட பலர் பெங்காலி ஹிந்து என்கின்றனர். குடியுரிமை சட்டத்தில் சில நிபந்தனைகளை தளர்த்துவதன் மூலம் இந்த ஆறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை பெற மீண்டும் ஒரு வாய்ப்பை இந்த சட்டத் திருத்தம் அளிக்கிறது.
இந்த ஒரு விஷயம், இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பாதகமாக அமையும் என எதிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய குடியுரிமை பதிவு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் பொழுது, ஆவணங்கள் இல்லாத முஸ்லிம்காள் சட்ட விரோதமாக வசிப்பவர்கள் என அடையாளப்படுத்தபடுவர் என்றும், எவ்வளவு காலம் இங்கு வசித்திருந்தாலும், இந்திய குடிமகன் என நிரூபிக்கும் பொறுப்பை சுமக்க நேரிடும்.
இதே போல் அச்சம் தமிழகத்தில் நீண்ட காலமாக வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உள்ளது, மேலும் இவர்கள் இந்த சட்ட திருத்தத்தில் இடம் பெறவில்லை. இதே போல், மயன்மார் நாட்டில் உள்ல ரோஹிங்க்யாஸ் பிரிவை சேர்ந்த முஸ்லிம்களும் சட்ட திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை. ரோஹிங்க்யா மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என உள்துறை அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?
திருத்தப்பட்ட சட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவின் படி:
“வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறை, 1873 படி “இன்னர் லைன்”க்கு உட்பட்ட பகுதி மற்றும் அசாம், மேகாலயா, மிசோரம், திருபுரா மாநிலங்களிலுள்ள பழங்குடி பகுதிகளுக்கு இந்த பிரிவின் பகுதியில் உள்ள எந்த அம்சமும் பொருந்தாது.”
இந்த விதிவிலக்கை தவிர, இந்த சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர். ஆனால், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் யூனியன் பட்டியல் படி, மாநிலங்களுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
The original article in English can be read here.