தாமதிக்கப்பட்ட பால கட்டுமான பணி, தவறவிடப்பட்ட ரயில்கள்: சென்னையின் இந்த முக்கியப் பகுதிக்கு தீர்வு ஏற்படுமா?

TRAFFIC GRIDLOCKS OF CHENNAI

Traffic chaos at Chennai Central Railway station. Pic: Laasya Shekhar

Translated by Sandhya Raju

” கிண்டியிலிருந்து சென்ட்ரல் (12 கி.மீ. தூரம்) செல்ல ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே கிளம்பினேன், ஆனாலும் கொச்சின் செல்லும் ரயிலை தவறவிட்டேன். சென்ட்ரல் எதிரே உள்ள பாலத்தில் என் வண்டி இருபது நிமிடங்கள் மேலாக நெரிசலில் சிக்கியது. போர்டர் உதவி கொண்டு ரயிலை பிடிக்க வேகமாக ஓடினேன்.  வாகன நெரிசலால், இந்த சாலையை கடப்பதும் அவ்வளவு எளிதல்ல,” என்கிறார் வர்த்தக ஆலோசகராக பணி புரியும் கிருத்திகா நாயர். இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 50 நிமிடம் முன்னதாக கிளம்பியிருந்தாலே அவர் நேரத்திற்கு சென்றடைந்திருப்பார்.

கிருத்திகா போல் பலருக்கும், இந்த நெரிசல் இடர்பாடுகளையே தந்துள்ளது. பூந்தமல்லி சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையிலேயே உள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதி தான் சென்னையிலேயே மிகவும் போக்குவரத்து நெரிசலான பகுதி; அரை கி.மீ தூரம் (ரிப்பன் கட்டிடம் முதல் சென்ட்ரல்) செல்லவே குறைந்தது கால் மணி நேரம் ஆகும். சென்னையின் பிற மாவட்டங்களுக்கு இந்த சாலை இணைப்பாக உள்ளதால், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இப்பகுதி மேலும் நெரிசலாகிறது.

சென்னை சென்ட்ரல் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், எலிபேன்ட் கேட் பாலம் மூடப்பட்டதே முக்கிய காரணமாக உள்ளது.

மூடப்பட்ட இணைப்பு

எலிபேன்ட் கேட் பாலம் பேசின் ப்ரிட்ஜ் சந்திப்பை சென்னையின் தெற்கு பகுதிகளான புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளோடு இணைக்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல இரண்டு ஆண்டுகள் முன்னர் தடை விதிக்கப்பட்டது, நான்கு மாதங்கள் முன்னர் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எழுபது ஆண்டுகள் முன்னர் கட்டப்பட்ட இந்த பாலம் சிதிலமடைந்துள்ளதால், இதை இடித்து புதிதாக பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இந்த  புதிய திட்ட செயலாக்கத்தில் தெற்கு ரயில்வே, தமிழக மின்வாரியம் போன்ற பல அரசு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியுள்ளதால், தாமதாகும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சென்னை சென்ட்ரல் வழியாக மாற்றுப் பாதையில் செல்லும் நிலை உள்ளது.

Two wheeler users park their vehicles outside the Elephant gate bridge and walk the distance. Pic: Laasya Shekhar

“பேசின் பிரிட்ஜிலிருந்து வேப்பேரி செல்ல எலிபேன்ட் கேட் பாலம் வழியாக சென்றால் எனக்கு 10 நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும். ஆனால் இப்பொழுது, சென்னை சென்ட்ரல் வழியாக மூன்று கி.மீ அதிகம் பயணித்து 25 நிமிடத்திற்கும் மேலாக ஆகிறது,” என்கிறார் வட சென்னையில் வசிக்கும் சமூக பணியாளர் பி.எஸ். வைஷ்ணவி. பேசின் பிரிட்ஜிலிருந்து அண்ணாநகர், கீழ்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேப்பேரி வழியாக செல்ல வேண்டியுள்ளது.

திட்ட மதிப்பு: ₹30.32 கோடி

புதிய பாலத்தின் நீளம்: 3*48 மீட்டர்

அரசு துறைகள்: தமிழக ட்ரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் (TANTRANSCO) மற்றும் தெற்கு ரயில்வே

TANTRANSCO பணி: இப்பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை நீக்குதல். இதன் பின் இடிக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கும்.

ரயில்வே பணி:  பேசின் ப்ரிட்ஜ் முதல் சென்ட்ரல் மற்றும் மூர் மார்கட் வளாகம் வரை செல்லும் ரயில்களை திருப்பி விடுதல். இரண்டு கட்டமாக, 48 மணி நேரத்திற்கு இந்த ரயில் வழிதடத்தை மூட வேண்டும். இதன் பின்னர் பாலம் அமைக்கும் பணி தொடங்கும்.

(தகவல்: தெற்கு ரயில்வே)

எலிபேன்ட் கேட் பாலம் மூடப்பட்டதிலிருந்து, பேசின் ப்ரிட்ஜில் வசிக்கும் பல வணிகர்களும் வேலையாட்களும்  வண்ணாரப்பேட்டை மொத்த விற்பனை மார்க்கெட் செல்ல கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த பாலம் மூடப்பட்டிருந்தாலும், ரிக்க்ஷா ஓட்டுனர்களும் மிதிவண்டி ஓட்டுபவர்களும் குறுகிய பாதையில் கடந்து செல்ல முயல்வதை காண முடிகிறது. “தினந்தோறும் மொத்த விலை மார்க்கெட்டிலிருந்து பலசரக்கு சாமான்களை எடுத்து வருவேன். இந்த பாலம் இல்லாவிட்டால் மூன்று கி.மீ தூரம் சுற்றி வரவேண்டும்.” என்கிறார் ரிக்க்ஷா ஓட்டும் பெருமாள்.

The demolition of Elephant Gate Bridge is yet to begin. Pic: Laasya Shekhar

தாமதத்திற்கான காரணம்?

டிசம்பர் 2019 ஆண்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பின் படி, பாலம் இடிக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கியிருக்க வேண்டும்.  இந்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிக்கலான கட்டுமான பணியே தாமதத்திற்கு காரணம் எனக் கூறும் TANTRANSCO மூத்த அதிகாரி, “பாலம் மேல் செல்லும் கேபிள்களை எடுப்பதற்கு முன் உயர் மின் அழுத்த கேபிள்களை சரி செய்து, புதிய இணைப்புகளை வழங்க வேண்டும். நில கையகப்படுத்தலும் தாமதத்திற்கு காரணம். முதல் கட்ட வேலைகள் பிப்ரவரி மாத இடைக்காலத்திற்குள் முடிந்து விடும்.” என்றார்.

பாலம் இடிப்பு மற்றும் கட்டுமான பணி தொடக்கம் மார்ச் மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். “டெண்டர் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்து மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி, ஏ கே சின்ஹா. அரசு துறைகள் சொல்லும் கெடுவை காப்பாற்றுவார்களா இல்லை வழக்கம் போல் தாமதமே ஏற்படுமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

தேவை: ஒரு பாலம் மற்றும் ஒரு நடை மேம்பாலம்

இதற்கு முன்னர், பூந்தமல்லி சாலையை விரிவாக்கி இங்கிருந்த பேருந்து நிலையத்தை சென்னை சென்ட்ரல் வளாகம் உள்ளே, மாநகராட்சி மாற்றியமைத்தது. பார்க் ஸ்டேஷனிலிருது சென்ட்ரல் செல்ல பாதசாரிகளுக்கு சுரங்கப்பாதை உள்ளது.

ஆனால் தற்போது இந்த சாலையில் செல்லும்  வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக இந்த முயற்சிகள் போதுமானதாக இல்லை. “ரயில்வே நிலையம் தவிர நகரத்தின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையும் (ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை) இங்கு உள்ளது.  ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையை கடப்பதால், இந்த நெரிசலை தவிர்ப்பது அவசியம்,” என்கிறார் தோழன் அமைப்பின் நிறுவனர் எம். ராதாகிருஷ்ணன்.  சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு  இந்த அமைப்பு வழங்குகிறது. இந்த பிரச்சனை குறித்து கருத்து கேட்க காவல் துறை துணை ஆணையர், ஏ. அருணை தொலைபசி மற்றும் குறுந்தகவல் மூலம் நாங்கள் தொடர்பு கொள்ள செய்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, சாலை போக்குவரத்து காவல்துறையினருக்கு  தோழன் அமைப்பு பல முறை கடிதம் எழுதியுள்ளது.  இதில் குறிப்பிடப்பட்டுள்ளது:

  •  நடை மேம்பாலம் அமைத்தல்: தற்போதுள்ள பாதசாரி சுரங்கப்பாதையை பார்க் ஸ்டேஷன் பயணிகளே அதிகம் பயன்படுத்துகின்றனர்; பெரும்பாலான பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலான சாலையை கடக்க முயல்கின்றனர். இதை கட்டுப்படுத்த சாலை நடுவே உள்ள மீடியனை மூடி, நடை மேம்பாலம் உருவாக்குவதே தீர்வாக அமையும்.
  • ரிப்பன் கட்டிடம் முதல் அரசு மருத்துவமனை முதல் மேம்பாலம்: அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், இது நிரந்தர தீர்வாக அமையும்.

Read the original article in English here.

About Laasya Shekhar 285 Articles
Laasya was a Senior Reporter at Citizen Matters. Prior to this, she worked as a reporter with Deccan Chronicle. Laasya has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. A Masters in Journalism from Bharathiar University, she had been experimenting at Citizen Matters with diverse formats varying from photos, videos and infographics for an interactive content presentation. Laasya is most proud of her work on beach encroachment and lake pollution, which the NGT took suo moto cognizance of. Currently, Laasya is a principal correspondent at Newslaundry. She tweets at @plaasya.