உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒம்பட்ஸ்மேன் தேவை: கோரிக்கையை வலியுறுத்தும் தன்னார்வ கூட்டமைப்பு

TN LOCAL BODY ELECTIONS

தன்னாட்சி இயக்கம், வாய்ஸ் ஆப் பீப்பிள், சட்ட பஞ்சாயத்து இயக்கம், அறப்போர் இயக்கம், தோழன், இளைய தலைமுறை, எச் ஆர் ஆஃப் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து,  முக்கிய அம்சங்கள் அடங்கிய கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

Translated by Sandhya Raju

மூன்று ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகம் தயாராகி வரும் நிலையில்,  உள்ளாட்சி செயல்பாட்டில் அதிரடி மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன தன்னார்வ அமைப்புகள். இந்த மாற்றம் நகர்புறம் மற்றும் கிராமப்புறத்தில் தேவை என மேலும் அவை தெரிவிக்கின்றன. என்ன மாற்றங்கள் தேவை என்பதையும், தன்னாட்சி இயக்கம் தலைமையிலான கூட்டணி அமைப்புகள் பட்டியலிட்டுள்ளன. வாய்ஸ் ஆப் பீப்பிள், சட்ட பஞ்சாயத்து இயக்கம், அறப்போர் இயக்கம், தோழன், இளைய தலைமுறை, எச் ஆர் ஆஃப் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து,  முக்கிய அம்சங்கள் அடங்கிய கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சீர்திருத்தங்களின் அவசியம் மற்றும் பொதுமக்களின் ஆதரவின் அவசியம் குறித்தும், வாய்ஸ் ஆப் பீப்பிள் இயக்கத்தின் உறுப்பினர் சாரு கோவிந்தன் பேசினார். “இந்த கொள்கை அறிவிப்பை எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்பது நம் கையில் தான் உள்ளது. ஆட்சியாளர்கள் கவனத்திற்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் இதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள வைக்க வேண்டும். பல வருடங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நபர்கள் மட்டுமே குரல் எழுப்பும் நிலை மாறி, இது அனைவரின் குரலாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றார்.

அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்குதல், கிராம சபைகளை வலுவூட்டுதல், வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகளை அமைத்தல், ஒம்பஸ்ட்மேன் எனப்படும் முறைகேள் அலுவலர்களை நியமித்தல் ஆகியவை இந்த கொள்கை அறிவிப்பின் முக்கிய அம்சமாகும்.  இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள பல அம்சங்கள், கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மிகவும் வளர்சியடைந்த உள்ளாட்சி அமைப்பின் வெற்றி குறித்து மேற்கோள் காட்டியுள்ளது.

கேரளா மற்றும் பெங்களூருவிடமிருந்து தமிழகம் கற்க வேண்டிய பாடங்கள் குறித்து இந்த கூட்டமைப்பு பல கூட்டங்களை நடத்தியுள்ளது.

கொள்கை அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு:

1. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாத ஊதியம்

2. தேவையான நடைமுறைகளை பின்பற்றி கிராமசபைகளின் செயல்பாட்டை வலுப்படுத்துதல்

3. ஒதுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளித்தல்

4. L.C. ஜெயின் கமிட்டியின் பரிந்துரைகளின்படி உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துதல்

5. அரசியலமைப்பின் அட்டவணை 11 மற்றும் 12 -ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுவது

6. ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தனித்தனியாக சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் அமைத்தல்

7. பஞ்சாயத்து ராஜுக்கென தமிழகத்தில் தனி அமைச்சகம் உருவாக்குதல்

8. தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒம்புட்ஸ்மேன் முறையை நிறுவுதல்

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) விரிவாக்கம் மற்றும் பலப்படுத்துதல்

10.  கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் அதிக நிர்வாக ஊழியர்களை நியமித்தல்

11. PRIAsoft- இன் வழிகளில் ஒரு பிரத்யேக வலைத்தளம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நிதித் தகவல்களைப் பகிர்தல்

அறிக்கையின் முழு விவரத்தை இங்கு அறியலாம்.

டிசம்பர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,   நகராட்சி தேர்தலும் இதனை தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில், தன்னார்வ கூட்டமைப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள  இந்த   கொள்கை அறிவிப்பு , உள்ளூர் நிர்வாகத்தில் தேவைப்படும் மாற்றத்தின் அவசியம் மற்றும் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்தியுள்ளன.

(இந்த பதிவு, சாரு கோவிந்தன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டது)

(The original article in English can be found here.)

About Aruna Natarajan 157 Articles
Aruna is a staff reporter at Citizen Matters Chennai. Apart from writing, she enjoys watching football. She tweets at Aruna_n29.