கோவிட்-19: உணவகங்கள் முன் போல் இயங்குமா?

கொரோனா வைரஸ்: சிறு மற்றும் நடுத்தர உணவகங்கள் பாதிப்பு

கொரோனா தொற்று முன், உணவகங்களின் மக்கள் கூட்டம். ஆனால் ஊரடங்கு பிறகு மீண்டும் இதே நிலை இருக்குமா? படம்: அடையாறு ஆனந்த பவன், மறைமலை நகர், மூலம்: ஸ்னாப்மீஅப்/விக்கிமீடியா காமன்ஸ் (CC BY: SA 4.0)

Translated by Sandhya Raju

மிட்நைட் பிரியாணி என்ற தன் சிறிய உணவகத்தின் விரிவாக்கத்தால் மகிழ்ச்சியில் இருந்தார் எம் காதர் மொகிதீன். ஊரடங்கு உத்தரவுக்கு ஒரு வாரம் முன்பு தான் அரும்பாக்கத்தில் புதிய கிளையை திறந்திருந்தார். வியாபாரம் சூடு பிடிக்கும் என்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு அவரது அத்தனை கனவுகளையும் சிதைத்துள்ளது.

சென்னையில் முதன் முறையாக தனது உணவு வர்த்தகத்தை தொடங்கிய அவர், நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என கவலையில் உள்ளார். நிச்சயமற்ற தன்மை காரணமாக டெலிவரி முகவர்களுடன் கூட்டாளராக அவர் விரும்பவில்லை, ஆனாலும் தன்னிடம் வேலை பார்க்கும் எவரும் பசியால் வாடக்கூடாது என்பதால், காய் கனி வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

சமைக்கவும், பறிமாறவும் காதரிடம் நான்கு பேர் வேலை பார்க்கிறார்கள். உணவகம் மூடப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும் கஷ்டத்தில் உள்ளனர். மாத சம்பளம் அளிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்துள்ளார். “என்னுடைய பகுதியில் தினமும் காய்கறிகள் விற்கிறேன்,” எனக் கூறும் அவர். “அனைத்தும் விற்றால், ஒரு நாளைக்கு சுமார் 1500 ரூபாய் வருமானம் வரும், இதில் தள்ளு வண்டிக்கு 400 ரூபாய் வாடகை செலுத்துவேன், மீதமுள்ள தொகையில் என்னிடம் பணிபுரிபவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வேளை உணவு வாங்குவேன்.”

உணவகங்களை மூடவும், சமமைத்த உணவை வினியோகிக்க உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு கால அவகாசம் விதித்தும் அரசு வெளியிட்ட உத்தரவு அமலில் வந்தது முதல் காதர் சந்திக்கும் சூழலில் தான் சென்னையில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர உணவக உரிமையாளர்கள் உள்ளனர். சமீபத்தில், உணவு வினியோக கட்டுப்பாட்டை சென்னை மாநகராட்சி தளர்த்தியிருந்தாலும், வர்த்தகத்தை இது வெகுவாக பாதித்துள்ளது.

விற்பனையில் வீழ்ச்சி

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும் கூட பல உணவகங்கள் மூடியே உள்ளன. தனி மனித இடைவெளி, சுகாதாரம் ஆகியவற்றை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், வெளியில் இருந்து உணவு வாங்க பலர் தயங்குகின்றனர்.

எவ்வளவு வர்த்தகம் ஆகும் என தெரியாத சூழலில், முழுவதுமாக செயல்பாட்டை மூடி வைப்பதையே நாம் தொடர்பு கொண்ட பல உணவக உரிமையாளர்கள் விரும்புகின்றனர். அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், விற்பனை ஆகாவிட்டால் உணவு பொருள் வீணாவதுடன், சமையல் பொருட்களும் வீணாகும்.

ஆனால் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தங்களின் மனம் கவர்ந்த உணவகங்கள் திறக்க காத்திருக்கின்றனர். உதாரணமாக நங்கநல்லூரில் உள்ள கௌசல்யா பாட்டி இட்லி கடை. “வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஊரடங்கு முழுவதுமாக விலகும் வரை, எங்களால் உணவகத்தை திறக்க முடியாது,” என்கிறார் 99 வயது கௌசல்யா பாட்டி.

உணவு பார்சல் வினியோகம் செய்யலாம் என அரசு அறிவித்த உடன், கௌசல்யாவின் மகள் கமலா(72) ஆர்டர் மூலம் உணவு பார்சல் வழங்கத் தொடங்கினார். “டெலிவரி மூலம் கொஞ்சமாவது சம்பாதிக்கலாம் என நினைத்தோம், ஆனால் காவல்துறையினர் மிகவும் கடினமாக நடந்து கொண்டனர். உணவு பார்சல் தான் அளித்து வந்தோம், ஆனாலும் எங்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை,” என தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார் கமலா.

கமலா போன்று பலர், வேறு தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இல்லை. பத்து வருடங்களுக்கும் மேலாக உணவகத்தை நடத்தி வரும் இவர்கள், புதிய தொழில் தொடங்குவது என்றால் இது வரை அவர்கள் சம்பாதித்த அனுபவம், மற்றும் நற்பெயரை இழக்க நேரிடும்.

சென்னை ஹோட்டல் சங்கத் தலைவர், ராஜ்குமார், கூறுகையில் “இயல்பு நிலை மீண்டும் தொடங்க குறைந்தது நான்கு மாதங்களாவது ஆகும், அது வரை பெரும் பொருளாதார அழுத்தம் இருக்கும். பெரும்பாலான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுவிட்டதால், ஊரடங்கு முடிந்ததும் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பது சவாலாக இருக்கும். பழைய ஊழியர்கள் வேலைக்கு திரும்பவில்லை என்றால் புது வேலையாட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.”

ஊழியர்கள் சந்திக்கும் நிச்சயமற்ற எதிர்காலம்

பல சிறு மற்றும் நடுத்தர வர்த்தக உணவகங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சிரமப்படுகின்றனர். நெருக்கடியான காலத்தில், செலவை கட்டுப்படுத்த குறைந்த அளவு ஊழியர்களுடன் பல உணவகங்கள் இயங்குகின்றன.

“உணவகங்கள் செயல்பட்டாலும், உட்கார்ந்து சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், சர்வர்களுக்கு வேலை இல்லை. சமைப்பவர் மற்றும் சுத்தம் செய்பவர் ஆகியோரை வைத்து பார்சல் வழங்கும் பணியை உரிமையாளர்கள் சமாளிக்கின்றனர். நான் வேலையில் உள்ளேனா என்பதே தெரியவில்லை.” என்கிறார் சென்னை ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் 26 வயது இளவரசன்.

முதியவரான அவரின் அம்மவை தனியே விட்டு இந்த சூழலில், இளவரசன் மற்றொரு வேலை தேட விரும்பவில்லை. ஆனால், இயல்பு நிலை திரும்பியதும், அதே ஹோட்டலில் வேலை உள்ளதா என தெரியாத நிலையில், எந்த வேலையை செய்யவும் தயாராக உள்ளார். விழுப்புரத்தை சேர்ந்த இளவரசன், தன் வயதான அம்மாவுடன் சென்னையில் வசிக்கிறார். வயது மற்றும் தொற்று அபாயம் உள்ளதால் அவரும் வேலைக்கு செல்வதில்லை. “முழு சம்பளம் இது வரை இல்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், என்னுடைய முதலாளி என் கணக்கில் 5000 ரூபாய் போட்டார்,” என்கிறார் இளவரசன். இளவரசன் போன்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தவும் அன்றாட செலவுகளை சமாளிக்கவும் சிரமப்படுகின்றனர்.

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் வேலை பார்க்கும் பலரும் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், பலர் சொந்த ஊர் சென்று விட்டனர், சிலர் இங்கேயே முடங்க நேரிட்டது; எங்கும் செல்ல முடியாத வெகு சிலர் தற்போது சென்னை மாநகராட்சி முகாம்களில் உள்ளனர்.

கோவிட் தொற்று பிறகான காலத்திலும், இவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகவே உள்ளது. தொழில் நலிவடைந்து உள்ளதால், அனைத்து ஊழியர்களுக்கும் ஒன்று சம்பளம் குறைக்கப்படலாம் அல்லது அதே சம்பளம் கொடுக்கப்பட்டு,சில ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவர். நிலைமை எதுவாக இருந்தாலும், மாத சம்பளத்தை நம்பி வாழ்பவர்களுக்கு இது சவாலான நேரம் தான்.

நஷ்டம் மற்றும் வியாபாரத்தை மீண்டும் புதுப்பிப்பது குறித்து பெரும்பாலான முதலாளிகள் கவலை உள்ள நிலையில், பழைய பெருங்களத்தூரில் உள்ள ஜே கே கேடரிங், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீடு இல்லாதவர்கள் ஆகியவர்களுக்கு சமூக நிறுவனங்கள் மற்றும் பெருங்களத்தூர் பஞ்சாயத்து மூலம் உணவு வழங்குகிறது. இதன் உரிமையாளர், ஜே கார்த்திகேயன் தனது ஐந்து வேலையாட்களுக்கு எப்படியோ சமாளித்து சம்பளத்தை வழங்கியுள்ளார்.

வியாபாரம், லாபம் குறித்து சிந்திக்க இது நேரமல்ல. தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கள் நலத்தை நமக்காக பணயம் வைத்துள்ளனர், பெருங்களத்தூர் டவுன் பஞ்சாயத்து உணவு தயாரிக்க பொருட்களை வழங்க அவர்களுக்காக நான் சமைக்கிறேன்,” என்கிறார் கார்த்திகேயன்.

மீண்டும் தொடங்குவதில் உள்ள தடைகள்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது சிரமமே என நாம் தொடபர்பு கொண்ட பெரும்பாலான ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இடைவெளி கடைப்பிடிப்பது இன்னும் சில காலம் தொடரும். அரசிடம் இருந்து தெளிவான வழிகாட்டிகள் இல்லாதது கவலைக்கு ஒரு காரணமாக உள்ளது.

தென்னிந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தின் கவுரவ செயலாளர் டி நடராஜன் கூறுகையில் தனி மனித இடைவெளியை உணவகத்தில் கடைபிடிக்க முடியாது என்றார். “நான்கு பேர் உள்ள குடும்பம் உணவருந்த வரும் போது அவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் உட்கார கட்டாயப்படுத்த முடியாது. இந்நிலையில் டீக்கடை கூட செயல்பட முடியாது.” என மேலும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹோட்டல்கள் லாபம் ஈட்ட முடியாது. “மாநிலங்களுக்கிடையே மற்றும் உள்ளூர் போக்குவரத்தை தளர்த்தினால், மெதுவாக வர்த்தகம் சூடு பிடிக்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைமை சீராகி விடும் என எதிர்பார்ப்பில் கணக்கிட்டால், ஆன்டுதோறும் உள்ள வழக்கமான வர்த்தகத்தில் 60-65% வரை இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.”

தொற்று குறித்த பயம் வர்த்தகத்தை மேலும் பாதிக்கலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில், பெரும்பாலான உணவகங்கள் செயல்படவில்லை. இந்த பகுதிகளில் வர்த்தகம் மேற்கொள்வதை சவாலாகவே பல உரிமையாளர்கள் பார்க்கின்றனர். இப்பகுதிகளில் வெளியில் உணவு சாப்பிடுவது பாதுகாப்பானது என மக்களை உணர வைக்க நீண்ட காலம் எடுக்கும்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற டெலிவரி முகவர்களும் கடும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். “அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். இவற்றின் விலை ஏற்றத்தால் எங்களால் இதை வாங்க இயலாது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பிறகும் தனிமனித இடைவெளியை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும்,” என்கிறார் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஒரு முகவர்.

நடைமுறைகள் பல வகுக்கப்பட்டாலும், அதனை நிதர்சனத்தில் செயல்படுத்துவதை பற்றி ஆராய வேண்டும். ஹோட்டல் சங்க நிர்வாகிகள் உட்பட பல உரிமையாளர்கள் வர்த்தகத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை தொடங்கியதாக தெரியவில்லை. தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் தொடர்பில் உள்ளதாக சிலர் தெரிவித்தனர். சில காலம் உணவு பார்சல் மட்டும் செய்யப்போவதாக சில உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர், இன்னும் சிலர் தங்களின் உணவகத்தை மறு சீரமைத்து, புதிய உத்திகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் செயல்பாடு நடைமுறைகள் குறித்த முழு தெளிவு கிடைத்த பின்னரே, வர்த்தகங்கள் மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி திட்டமிட முடியும், என்பதே தற்போதுள்ள நிதர்சன உண்மை.

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.