கோவிட்-19 மருத்துவக் காப்பீடு: அறிந்து கொள்ள வேண்டியவை

கோவிட்-19 நேரத்தில் காப்பீடு

மாதிரி படம்: Gerd Altmann from Pixabay

Translated by Sandhya Raju

கொரோனா தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செலவை உங்களின் மருத்துவ காப்பீடு உள்ளடக்கியுள்ளதா? தனியார் மருத்தவமனைகளின் கட்டணம் குறித்து கவலைப்பட வேண்டுமா? 100% கட்டண செலவையும் உங்கள் காப்பீடு நிறுவனம் திரும்ப அளிக்குமா? கோவிட்-19 மருத்தவக் காப்பீடு குறித்த நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

கோவிட் சிகிச்சைக்கு புதிதாக மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டுமா?

அவசியமில்லை. எல் ஐ சி, ஓரியன்டல் இன்சுரன்ஸ், நியூ இந்தியா அஷுரன்ஸ், ஆதித்யா பிர்லா, எச் டி எஃப் சி எர்கோ போன்ற பெரும்பாலான காப்பீடு நிறுவனங்கள் தற்போதைய காப்பீட்டிலேயே, கூடுதல் பிரிமீயம் கட்டணமின்றி, கோவிட் தொற்று சிகிச்சையை சேர்த்துள்ளது.

கோவிட் காரணமாக ஏற்படும் மரணத்திற்கும் இழப்பீட்டு தொகையை எல் ஐ சி உள்ளடக்கியுள்ளது மற்றும் இவை மரணத்திற்கான பிற காரணங்களுடன் இணையாக பரிசீலிக்கப்படுகின்றன.

ஐசிஐசிஐ லம்பார்ட் கோவிட்-19 காப்பீடு அம்சங்கள்

– கோவிட்-19 தொற்றின் முதல் அறிகுறி சிகிச்சையையும் காப்பீடு உள்ளடக்கியுள்ளது.
– சுகாதார உதவி மற்றும் மெய்நிகர் மருத்துவ ஆலோசனை போன்ற கூடுதல் சேவைகளும் உள்ளடக்கியது.
– ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தொலைபசி ஆலோசனை ஆகியவற்றை கூடுதல் கட்டணம் செலுத்தி காப்பீட்டில் இணைக்கலாம்.
– மருத்துவமனையில் சேர்க்கை இல்லையென்றாலும், காப்பீட்டு தொகையின் படி முழு தொகையையும் பாலிசிதாரருக்கு நிறுவனம் அளிக்கும் வசதி. ஆனால் OPD அல்லது மருத்துவமனை பில்களுக்கு பணம் திரும்பப் பெற இயலாது.
– 75 வயது வரை காப்பீடு பெறலாம்.
– 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு பின் கோவிட் தொற்று உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கோவிட்-19 தொற்று பரவும் முன் அறிகுறி தென்பட்டவர்கள் அல்லது 14 நாட்களுக்கு காத்திருக்கும் காலத்தில் இருந்தவர்கள் மற்றும் காப்பீடு தொடங்கிய முதல் 14 நாட்களில் இழப்பீடு பெற்றவர்கள் ஆகியவர்களுக்கு இது பொருந்தாது.
ஸ்டார் கொரோனா வைரஸ் காப்பீடு அம்சங்கள்

– காப்பீடு தொகை பொருத்து காப்பீடு அமையும்.
– 74 வயது** வரை உள்ளவர்கள் நாவல் கொரோனா வைரஸ் காப்பீடு பெறலாம்.
– கோவிட்-19 தொற்று தவிர பிற நோய்களுக்கு, நிறுவனம் காப்பீடு அளிக்காது, காப்பீடு தொடங்கும் முன் தொற்று அறிகுறி இருந்தாலோ அல்லது காத்திருப்பு காலத்தில் தொற்று ஏற்பட்டாலோ காப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது.
– தனி நபர்கள் இரண்டு காப்பீடு தொகையை தேர்ந்தெடுக்கும் வசதி – ₹21000 மற்றும் ₹42000, இதற்கான பிரீமியம் தொகை ₹299 மற்றும் ₹598 ஆகும் (வரி நீங்கலாக)
– கூடுதல் விவரங்களுக்கு: 1800 425 2255 / 1800 1024477 அல்லது support@starhealth.in.

(** ஸ்டார் ஹெல்த் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ் பிரகாஷ் அளித்த தகவலின் படி)

கோவிட் சிகிச்சையின் 100% செலவை உங்கள் காப்பீடு ஈடுசெய்யுமா?

இல்லை. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) வழிகாட்டுதல்களின்படி, ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் உங்கள் பாலிசி ஒப்பந்தம் படி, சிகிச்சையின் போது ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ செலவுகள் (தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சிகிச்சை உட்பட) குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.

மேலும், ஐஆர்டிஏஐ படி சிகிச்சை தொகை காப்பீட்டு தொகையை விட கூடுதலாக இருந்தால், மீதமுள்ள கூடுதல் கட்டணத்தை பாலிசிதாரரே ஏற்க வேண்டும்.

கோவிட் சிகிச்சையின் எந்த பகுதி காப்பீட்டிற்கு உட்பட்டது?

தனி நபர் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தின் அடிப்படையில், மருத்தவமனை சேர்க்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கட்டணங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை தனிமைப்படுத்தல் (ஒரு மருத்துவரால் சான்றளிக்கப்பட்டவை) ஆகியவற்றை பெரும்பாலான காப்பீடு திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் மேற்கொள்ளப்படும் தொற்று கண்டறிதல் பரிசோதனை, மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தொற்று அறிகுறி அல்லாத கோவிட் உறுதி செயப்பட்ட நபர்கள் ஆகியவர்கள் மருத்துவமனை அனுமதியில்லையெனில், தற்போதுள்ள காப்பீடு திட்டத்தில் பயன் பெற இயலாது.

கர்ப்பிணி பெண்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதியில்லையெனில், டெலிவரி முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செலவுகளை காப்பீட்டில் பெற இயலாது.

ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஐசிஐசிஐ லம்பார்ட் அளிக்கும் சிறப்பு கோவிட்-19 காப்பீட்டின் கீழ், மருத்துவமனை சேர்க்கை இல்லையென்றாலும், முழு கப்பீட்டு தொகையையும் (ரொக்கமாக) பெற முடியும்.

சார்ந்து உள்ளவருக்கு (டிபெண்டென்ட்) தொற்று ஏற்பட்டால், தற்போதைய காப்பீட்டில் அவரும் பயன் பெற இயலுமா? இதில் வரம்புகள் ஏதேனும் உள்ளதா?

ஆம். காப்பீட்டில் அவர் பெயரும் இணைக்கப்பட்டிருந்தால், அவருக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை செலவுகளையும் திரும்பப் பெற இயலும். காப்பீட்டில் உள்ள வரம்புகள் இதற்கும் பொருந்தும்: மருத்துவமனை சேர்க்கை அல்லாமல், தொற்று இல்லை என சிகிச்சை முடிவில் அறியப்பட்டால், பரிசோதனை செலவுகளை திரும்பப்பெற இயலாது.

இப்போது மருத்துவ காப்பீடு எடுக்க இயலுமா? காத்திருப்பு காலம் உள்ளதா?

ஆம். இப்பொழுதும் மருத்துவக் காப்பீடு பெறலாம். ஆனால், காத்திருப்பு காலமான 15 முதல் 30 நாட்களில், உங்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால், காப்பீட்டு தொகை பெற இயலாது. இது காப்பீட்டு நிறுவனம் பொருத்து மாறுபடும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கோவிட்-19 சேர்க்கப்பட்டுள்ளதா?

ஆம். ஆயுஷ்மான் பாரத் கீழ், மத்திய அரசு ஐந்து திட்டங்களை வகுத்துள்ளது. கோவிட் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை இதில் சேர்க்கப்பட்டுள்ளது: கடுமையான காய்ச்சல், அறியப்படாத பைரெக்ஸியா, நிமோனியா, கடுமையான நிமோனியா, எந்தவொரு காரணத்தினாலோ ஏற்பட்ட சுவாசக் கோளாறு (நிமோனியா, ஆஸ்துமா, சிஓபிடி, ஏஆர்டிஎஸ், விஷம், தலையில் காயம் போன்றவை) மற்றும் வகை 1 அல்லது 2 சுவாசக் கோளாறு.

இதைத் தவிர, நோயாளியின் உடல்நலத்தை பொருத்து, மருத்துவமனை பிற பாக்கேஜ்களையும் சேர்க்கக்கூடும் என பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகியவற்றிற்கான கூடுதல் கட்டணங்களை மாநில அரசு வரையுறுக்கும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் யார் யார் பயன் பெறலாம்?
ஆயுஷ்மான் பாரத் வலைத்தள தகவலின் படி, இருப்பிடம் – நகர்புறம் அல்லது கிராமப்புறம், பொருத்து பயனாளிகள் வகைப்படுத்தப்படுவர்.
நகர்ப்புற பயனாளிகள்:
► பாதுகாப்புக் காவலர், பழைய பொருட்கள் சேகரிப்பவர்கள், எலக்ட்ரீசியன், மெக்கானிக், வீட்டு வேலை பார்ப்பவர்கள், தோட்டக்காரர்கள், தூய்மை பணியாளர்கள், தையல்காரர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள்
► காலணி தைப்பவர்கள், சாலையோர வணிகர்கள், வீதி வீதியாக சென்று விற்பவர்கள்
► மேஸ்திரிகள், பிளம்பர்கள், போர்ட்டர்கள், ஓவியர்கள், வெல்டர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் மற்றும் இதே போன்ற பிற போக்குவரத்துத் தொழிலாளர்கள்
► சிறு அலுவலகத்தில் பணிபுரியும் பியூன், உதவியாளர்கள், சிறிய கடை நடத்துபவர்கள், டெலிவரி ஆட்கள் மற்றும் உணவகத்தில் பணி புரியும் வைட்டர்கள்
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
1. https://mera.pmjay.gov.in/search/login வலைத்தளத்திற்கு செல்லுங்கள்
2. உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்
3. பிரத்யேக எண்ணை (captcha code) பதிவு செய்யவும்
4. ‘OTP ஐ உருவாக்கு’ என்பதை கிளிக் செய்யவும்
5. நீங்கள் வசிக்கும் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெயர், HDD எண், மொபைல் அல்லது ரேஷன் அட்டை எண் என ஏதோவது ஒன்றை பதிவிட்டு தேடவும்.

ஆயுஷ்மான் பாரத் உதவி எண் 14555 அல்லது 1800 111 565 ஆகியவற்றை அழைத்து தகுதி உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு திட்டம் உள்ளதா?

ஆம். கோவிட் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

– கோவிட் பணியின் போது விபத்து அல்லது கோவிட் மூலமாகவோ உயிரழப்பு நேர்ந்தால், விபத்து காப்பீடு.

– கோவிட் தொற்று ஏற்பட்டவர்களை பராமரிக்கும் அல்லது அவர்களுடன் நேரடியாக செயல்பட வேண்டிய சமூக சுகாதார ஊழியர்கள் உட்பட பொது சுகாதார வழங்குநர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவர்.

– மத்திய/மாநில அரசு மருத்துவமனைகள்/ அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், AIIMS, INIs அல்லது மத்திய அரசுத்துறை கீழ் செயல்படும் மருத்துவனைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள்,தன்னார்வலர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்த / தினசரி கூலி தொழிலாளர்கள், தற்காலிக / அவுட்சோர்ஸ் ஊழியர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் கீழ் வருவர்.

– பாலிசி காலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு இருக்கும்.

– தனி நபராக இதில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

– இந்த பாலிசியின் முழு பிரீயம் தொகையையும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்கும். இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடாக ₹50 லட்சம் வழங்கப்படும். பிற பாலிசி இருப்பினும் இந்த தொகை வழங்கப்படும்.  

நிறுவனங்களுக்கான குழுவாக எடுக்கப்படும் காப்பீடு உள்ளதா?

தற்போதுள்ள காப்பீடு கோவிட் நோயையும் உள்ளடக்கியது. புதிதாக குழு காப்பீட்டிற்கு, காப்பீடு நிறுவனத்தை அணுக வேண்டும்.

முறைசாரா தொழிலாளர்களுக்காக, காம்பசிட் காப்பீட்டு தரகர் எடெல்விஸ்-கல்லாகர், முறைசாரா துறை மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் குழு காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது.

அந்நிறுவனத்தின் செய்தி அறிக்கை படி, உணவு டெலிவரியில் உள்ளவர்கள், முறைசாரா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்காள், சுகாதார வழங்குநர்கள், மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் பலர், இந்த காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ₹50,000 முதல் ₹50 லட்சம் வரை மருத்துவமனை சேர்க்கையுடனான சிகிச்சைக்கு தனிப்பயனாக்கப்பட்ட பாலிசியை எடெல்வைஸ் வழங்குகிறது. இத்திட்டத்தை பற்றி மேலும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

[Read the article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.