கொரோனா பரவல் பூ வியாபாரிகள் வாழ்வில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது?

கோவிட்-19 பூ வியாபாரம் பாதிப்பு

மைலாப்பூரில் உள்ள பல பூ வியாபாரிகளின் கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. Pic: Richard Mortel/Flickr (CC BY:SA 2.0)

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் பூ வியாபாரத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் தான் என்பதை நாம் அறிய முடிந்தது. ஏனெனில், காய்கறி போன்றவைகள் கூட அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியா பயன்பாட்டுப் பொருட்களானதால்  குடியிருப்புகளுக்கு எடுத்து சென்று  விற்பனை செய்யவாவது முடிந்தது.

ஆனால், பூக்களின் பயன்பாடு இல்லாது போனதால் அதில் ஈடுபட்ட பல நிலைகளில் உள்ளவர்களுக்கும்  முற்றிலும் வருவாய் நின்று போனது. இந்த அளவு ஆனதற்கு காரணம் மலரையும் மாலைகளையும் பயன்படுத்தும் ஆலயங்களும் விழாமண்டபங்களும் மூடப்பட்டது மட்டுமின்றி மக்கள் வெளியில் செல்லாத்தால் வீடுகளில் கூட பூ வாங்க தேவையின்றி போனதும் தான். 

பூக்களின் தேவையை அதிகமாகக் கொண்டிருந்த ஆலயங்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளதாலும், விழா மண்டபங்கள் ஒரு சில விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையாலும் கூடவே மக்கள் நடமாட்டமும் இயல்பாகி வருவதாலும்   இவர்களின் வாழ்வு இயல்புக்கு திரும்புமா என காணலாம்.

சிறிது சிறிதாய் சிதைந்த பூ வணிகம்

ஊரடங்கு துவங்கியதும் பூ எடுப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடியது முதல் குறைந்த பட்ச ஆட்களைக் கொண்டு பறிக்கப்பட்ட பூக்களை சந்தைக்கு அனுப்புவதில் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் ஆகியவற்றால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வரும் பூக்களின் வரத்து நின்று போனது. அதனால் சந்தையில் குறைந்த வரத்து மற்றும் அதிக விலையில் பூக்களை கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ற முதல் பாதிப்பைத் தொடர்ந்து அடுக்கடுக்காக நிகழ்ந்தது தான் இவர்களை மொத்தமாக முடக்கியது.

ஆம். இதன் அடுத்த கட்டமாக கோயம்பேடு பூ மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக மாதவரத்தில் அறிவிக்கப்பட்டு அங்கு இயங்க சாத்தியம் குறைவானதால் மதுரவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கும் போதிய வசதியின்றி திறந்த வெளியிலும் சிறுசிறு கடைகளிலும் வைக்கப்பட்டு சீக்கிரமே மலர்கள் வாடிவிட அப்படியே வாங்கிச் சென்றாலும் ஊரடங்கு விதியாக குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என்றொரு தடை வர, அதிகமாக வியாபாரம் நடைபெறும் அந்த மாலைநேரமும் இல்லாது போக, கூடவே,கோவில்களும் மண்டபங்களும் மூடப்பட என அவர்களுக்கான அத்தனை வாய்ப்புகளும் பறிபோயின.

அப்படியே குறுகிய நேரம் திறந்து வைத்து குறைந்த அளவாவது வியாபாரம் செய்ய முனைந்தாலும், மார்க்கெட்டில் பூ வாங்க வேண்டுமானால் ஒருவர் விடியற்காலை மூன்று மணிக்கு புறப்பட்டு சென்று காலை ஏழு மணிக்குள் வாங்குவது பெரும் சவாலாக இருந்துள்ளது. சந்தையில் பூக்களின் வரத்து குறையக் குறைய விலை அதிகமாகிக் கொண்டே போனது அத்துடன் பேருந்து இயக்கம் நின்று போனதால் தனியார் வாகனங்களை அதிக வாடகை கொடுத்து அமர்த்த வேண்டிய அவலநிலையும் சேர்ந்து கொண்டது.

பொதுவாகவே இயல்பான காலத்தில் ஆடிமாதம் என்றால் திருவிழாக் காலமாகும். மலர்களுக்கும் மாலைகளுக்கும் ஏக கிராக்கியாக இருக்கும். வருடத்தில் இந்த காலத்தில் தான் இதனை சார்ந்திருப்போரின் வருமானமும் உயர்ந்திருக்கும். சாமி ஊர்வலம், மலர் அலங்காரம் என களைகட்டும் காலம் இது. அதுபோன்றே அதைத் தொடர்ந்து முகூர்த்த காலம் வரும். மண்டபங்களில் பிரமாண்டமான மலர் அலங்காரம் இடம்பெறும். ஆனால், இந்த ஆண்டு இவை அத்தனையும் மொத்தமாய் இல்லாமல் போனது. ஆகவே, மேலதிக வருவாய் பார்ப்பவர்கள் உட்பட அன்றாட வருவாய் தேடுவோரும் அல்லல்பட்டுத் தான் போயினர்

கைவிட்ட குடிசைத்தொழில் – பூ தொடுத்தலும் மாலை கட்டுதலும் 

பூ வணிகம் என்பது பலதரப்பட்டவர்களை உள்ளடக்கிய ஒன்றாகும். பூ உற்பத்தி செய்பவர்கள், மொத்த வியாபாரிகள், கடைகாரர்கள், நடமாடும் வியாபாரிகள் மற்றும் கடைகாரர்களுக்கு பூ கட்டித் தருபவர்கள் என்று பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக சொன்னால் பூந்தமல்லி என்ற ஒரு வட்டாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஏராளமானோர் இத்தொழில் சார்ந்து இருப்பதாக இருபது வருடங்களாக அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் செல்வம் என்பவரின் கூற்றிலிருந்து தெரிகிறது.

குமணன்சாவடியில் உள்ள கோவிலுக்கு முன்பாக இரண்டு மூன்று தெருக்கள் முழுதுமே பூ தொடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களே. அங்கு  எப்போதும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அமர்ந்து அவர்கள் பூ கட்டிக் கொண்டிருப்பதை காணமுடியும். அன்றாடம் பூ கட்டுவதில் கிடைக்கும் அந்த சிறிய வருமானத்தில்தான் அவர்களின் குடும்பத்தின் நகர்வு இருந்திருக்கிறது. ஒவ்வொரு பூக்கடைக்காரரும் கிட்டத்தட்ட நான்கு குடும்பங்களுக்கு இம்மாதிரி வேலை வாய்ப்பு அளித்திருப்பதை அறிய முடிந்தது.  அப்படிப்பட்ட இவர்களின் வாழ்வு வருவாயின்றி போனதால் பெரும் சவாலாகிப் போனது.

மிகவும் அடிப்படையான தேவைகளுக்கே இவர்கள் அல்லாடினர். கிடைத்த கூலிவேலைகளுக்கு சிலர் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அங்கும் வேலைகளுக்கான தடை இருந்த சூழலால் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே, கடன் வாங்கி குடும்பத்தை நகர்த்துவதைத் தவிர வேறு வழி ஒன்றும் அவர்களால் காண முடியவில்லை.

தளர்வினால் மலர்கிறதா இவர்கள் வாழ்வு ?

தற்போதைய ஊரடங்கு தளர்வில் கோவில்களைத் திறப்பதற்கும் மற்றும் பிற விழாக்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் இவர்களின் வாழ்வும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என எதிர்பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.

காரணம் தேடினால் அது இவ்வாறு இருக்கிறது.  அதிகபட்ச  ஆலயங்களில் யாரும் மலர்களோ மாலைகளோ கொண்டு வராதீர்கள் என்று அறிவுறுத்தப் படுகின்றனராம். ஆகவே மக்கள் கோவில்களுக்குக் கொண்டு செல்ல பூக்கள் மாலைகள் வாங்குவதில்லை. மண்டபங்களில் நடைபெறும் விழாக்களிலும் குறிப்பிட்ட  எண்ணிக்கையினரே கலந்து கொள்ளலாமென்ற விதியால் யாரும் மண்டபங்களை நாடுவதில்லை பதிலாக அவரவர் வீட்டின் மொட்டை மாடிகளையோ சிறிய அரங்குகளையோ பயன்படுத்துவதால் இவற்றின் தேவை குறைந்து விடுகிறது.

அதுபோல ஆவணி,புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களென்று திருவிழா மற்றும் திருமணம் நிரம்பியிருக்கும் மாதங்களென வந்தாலும் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டு திருவிழாக்களும் திருமணங்களும் அதிகமானோர் கலந்து கொள்ளும் நிலை வந்து வாழ்வின் இயல்பு திரும்பும் நிலை வரும் போதே மீள முடியும் என தெரிகிறது.

இப்போது, மிகவும் நலிந்து போயிருக்கும் இந்த பூ கட்டும் தொழிலில் முன்பெல்லாம் ஒருவர் ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் சம்பாதித்த நிலையில் தற்போது ரூபாய் ஐம்பது முதல் கூடுதலாக எனில் நூறு ரூபாய் அளவுக்கு சொற்பமான தொகையைத்தான் ஈட்ட முடிகின்றது. 

பூ, மாலை, மலரலங்காரம் என மொத்த சில்லறை வியாபாரம் சார்ந்த இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்கும் போது அதனை உற்பத்தி செய்பவர்கள் எந்த மாதிரியான அவலத்தை சந்தித்திருப்பார்கள் என்று பார்த்தால் அது மனதை கலங்கச் செய்யும் கதையாக இருக்கிறது.

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் மற்றும் கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலர் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

சமூகத்தில் உள்ள பலதரப்பட்டோர் பலவிதமான பாதிப்புகளையும் சவால்களையும் சந்தித்து வருவது குறித்து பல்வேறு அனுபவப் பகிர்வுகளை நாம் கேட்டிருப்போம். இந்த பெருந்தொற்று அனைவருக்கும் ஏதோ ஒன்றை அறிவிக்க வந்ததாகவே கருதப்படுகிறது.

எல்லோருமே இயல்பாகும் ஒர் காலத்தை எதிர்நோக்குவதே இப்போதைய எதிபார்ப்பாக இருக்கிறது. எனினும் அது புதிய இயல்பாக கண்டுணரப்பட்ட புரிந்துணர்வுள்ள மனிதர்களால் நிகழப் போவதே எனும் உண்மையும் உறைக்கிறது. புதிய இயல்பறிய பரஸ்பரம் உதவி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.  

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Vadivu Mahendran 17 Articles
Vadivu Mahendran is a resident of Mogappair, Chennai. She has been largely involved in working with children and adolescents, and also translates program materials for their study. Occasionally, she enjoys writing Tamil poetry about human qualities and preservation of nature.