கோலிவுட் ஜூனியர் ஆர்டிஸ்ட்களின் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கோவிட்-19

சினிமாத்துறையில் ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம்

கோலிவுட்டின் ஆதாரமாக உள்ள ஆயிரக்கணக்கான சிறு கலைஞர்கள் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லை. Credits: 5 Senses

Translated by Sandhya Raju

“ஏன் காய் இல்லை, அம்மா? என தன் மகள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என எண்ணிக்கொண்டே கடைகள் மூடியுள்ளன, விரைவில் நல்ல சப்பாடு போடுவதாக கூறுகிறார் கே ஷென்பகம். மாயா, நாயகி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் 38 வயதாகும் ஷென்பகம்.

ஒரு வரி வசனம் பேசி செல்லும் நபர் அல்லது ஒரு காட்சியில் பின்னணியில் கூட்டத்தில் நடந்து செல்லும் நபர்களை நினைவுள்ளதா? பல பெரிய பட்ஜட் படங்களில் இது போன்ற காட்சிகளில் ஒரு நாளுக்க 300 ரூபாய் சம்பளத்திற்கு ஷென்பகம் நடித்துள்ளார். ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் ஷென்பகம் இடிந்து போயுள்ளார்.

கடந்த சில வாரமாக வெறும் ரசம் சோறு மட்டுமே தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சூழலை எண்ணி வேதனையில் உள்ளார். “காய்கறி வாங்க முடியாத நிலையை நான் எப்படி அவர்களிடம் சொல்லுவேன்? பத்தாம் தேதி தன் மகன் பிறந்த நாளுக்கு கொஞ்சம் ஸ்வீட் செய்ய ஐம்பது ரூபாய் கூட தன்னிடம் இல்லை என சொல்லும் ஷென்பகம், ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகும் முன் ஒரு ஆசிரியராக இருந்தார்.

ஷென்பகம் போல் அல்லாமல், வறுமை நிலை பற்றி தன் பிள்ளைகளிடம் விளக்கியுள்ளார் 35 வயது கலைச்செல்வி. வருமானம் இல்லாததால், அவர் குடும்பத்தில் உள்ள ஐந்து பேர்களும் அம்மா உணவகம் மற்றும் சிலர் கொடையாக தருவதை நம்பியே உள்ளனர். “இரண்டு வேளை மட்டுமே உண்கிறோம். பல நாட்கள் மதிய உணவுக்கு அம்மா உணவகத்தை நம்பியே உள்ளோம். காலை உணவை தவற விடுவதற்காகவே, என் குழந்தைகளை சீக்கிரம் எழுப்புவதில்லை” என்கிறார் உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள கலைச்செல்வி.

அருகில் உள்ளவர்கள் அத்தியாவசிய பொருட்களை தந்து உதவுவதால் சில நாட்களை கடக்க முடிகிறது, இல்லையெனில் மிகவும் கஷ்டப்படுவதாக கூறுகிறார். “அருகில் உள்ள சில பணக்காரர்கள் அரிசி, பருப்பு ஆகியவற்றை தானமாக அளிப்பதால், சில நாட்களை ஓட்ட முடிகிறது”, என்கிறார் கலைச்செல்வி.

நிலவும் இடைவெளி

பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் வசதியானவர்கள் என்ற கூற்று நிலவுகிறது, ஆனால் நிதர்சனம் வேறாக உள்ளது. திரையில் தோன்றுவதில் இடைவெளி, தொடர் வருமானம் இல்லாதது ஆகியன தற்போதைய நிலையை பாதிப்பது மட்டுமின்றி வருங்கால வாய்ப்புகளையும் பாதிக்கிறது.

கலைச்செல்வி மற்றும் ஷென்பகம் சிறிய கலைஞர்கள் என்பதை தாண்டி பெஃப்சி, நடிகர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாத்துறையின் பல்வேறு துறையில் பணிபுரியும் 24 சங்க உறுப்பினர்கள் அடங்கியது பெஃப்சி . இதில் உறுப்பினர் ஆக அவர்களின் துறை சார்ந்த சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

உறுப்பினர்கள் அல்லாதவர்கள் என வகைப்படுத்தப்படும் இவர்கள், பயணம், உணவு போன்ற எந்தவிதமான சலுகையும் பெற முடியாது. இதுவே இந்த பெருந்தொற்று நிலையில், இவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பனை, நடனம், ஆடை வடிவமைப்பு, புகைப்படத் துறை என சினிமா துறையின் அங்கமான 24 துறைகளிலும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உள்ளனர். “இவர்களை பற்றிய விவரப்பட்டியல் இல்லையென்றாலும், எனக்கு தெரிந்தே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்,” என்கிறார் ரிச்சி குமார். இவர் ஜுனியர் ஆர்டிஸ்ட் மட்டுமின்றி இந்த கலைஞர்களை ஒருங்கிணைக்கும் முகவராகவும் உள்ளார்.

“எங்களுடையது வயிற்றுக்கும் வாயுக்குமான பொழைப்பே, படப்பிடிப்பு இடத்திற்கு சென்று வருவதேற்கே வருமானம் சரியாக உள்ளது. உறுப்பினர்கள் போல் எங்களுக்கு பயணச்செலவு தரப்படுவதில்லை,” என்கிறார் லைட்மானாக உள்ள குமாரவேலு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சில நேரங்களில் எங்கள் உடைக்கு நாங்களே செலவு செய்ய வேண்டும்.

உறுப்பினர் ஆக எது தடையாக உள்ளது? 

அதிகப்படியான கட்டணம். துறையை பொறுத்து இந்த கட்டணம் மாறுபட்டாலும், ஒரு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. “தயாரிப்பாளர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தாலோ அல்லது படத்தில் நல்ல பாத்திரத்தை பெற்றிருந்தாலோ, இந்த கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்கும் வாய்ப்பு உள்ளது.” என்கிறார் பவானி (22). இவர் ராட்சசி படத்தில் நடித்தவர். மாதம் 8000 வருமானத்தில் உறுப்பினராவதை பற்றி கனவு கூட காண முடியாது என்கிறார். இவர் பெஃப்சியில் உறுப்பினராக இருந்திருந்தால், தனது ஆறு மாத கைக்குழந்தையை கவனிக்க ஏதாவது பண உதவி பெற்றிருக்கலாம்.

இந்த கட்டணம் குறித்து பெஃப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில் “ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, கல்வி சலுகை போன்றவற்றால் உறுப்பினர்கள் பயன்பெறுகிறார்கள். உறுப்பினராவது மூலம் இவர்கள் பெரும் சலுகையை கணக்கிடுகையில், இந்த கட்டணம் இன்றியமையாதது.” என்கிறார்.சினிமாத்துறையில் இன்றியமையாதவர்களாக உள்ள இவர்கள், தங்கள் துறையிலும் சரி மக்களிடமும் சரி, அதிக கவனம் பெறுவதில்லை. ஒவ்வொரு நாளும் பெரிய கலைஞர்கள் எங்களுக்காக உதவி அளித்துள்ளார்கள் என வரும் செய்தியை கேட்கிறோம், ஆனால் இது வரை எங்களுக்கு உதவி வந்து சேரவில்லை. எங்களுக்கு உதவி கிட்டுமா என்பதும் சந்தேகமே, ஏனெனில் பெஃப்சியில் உள்ள சுமார் 25000 உறுப்பினர்கள் தான் முதலில் பயன் பெறுவர்,” என்கிறார் நடனக் கலைஞரான மரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

நிச்சயமற்ற எதிர்காலம்

புகழ் பெற்ற கலைஞர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளது உண்மை, ஆனால் முதல் நிலை ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு கூட முழுவதுமாக இந்த உதவி போதாது. “பத்து நாள் வேலை நிறுத்தத்தை கூட சமாளிக்க இயலாத நிலையில் உள்ள இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு உதவி கட்டாயம் தேவை. சினிமாத்துறையை விட்டு பலர் விலக இது ஒரு காரணமாகவும் அமையும்,” என்கிறார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. கோலிவுட்டை விட பாலிவுட் மற்றும் டோலிவுட் தான் அதிக அளவில் உதவி புரிந்துள்ளார்கள் என மேலும் அவர் தெரிவித்தார். பணக்கார நடிகர்களின் உதவி மட்டுமே இவர்களின் நிலையை சமாளிக்க உதவும், என்கிறார் ரிச்சி குமார். பல பெரிய நடிகர்களை உதவிக்கு இவர் அணுகிய போதிலும், இது வரை எந்த பதிலும் இல்லை என்கிறார்.

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர். பார்த்திபன் உடன் ரிச்சி குமார். படம்: ரிச்சி குமார

“பெஃப்சி, நடிகர் சங்கம் போன்ற அமைப்புகள் உறுப்பினர்கள் இல்லாதவர்களின் பட்டியலை தயாரித்து, உறுப்பினராவதன் பயன்களை எடுத்துரைக்க வேண்டும். குறைந்த பட்சம் இவர்களுக்கு காப்பீடு திட்டத்தையாவது அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமாத்துறையை உற்று கவனிப்பவருமான எம் பரத் குமார்.

இந்த நெருக்கடியான கட்டத்திலும், நிராகரிக்கப்படும் நேரத்திலும் கூட சினிமாத்துறையை பற்றி இவர்கள் எவரும் தவறாக பேசவில்லை. தங்களுக்கும் போதிய கவனம் அளிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. “இந்த துறையில் எங்கள் பங்களிப்பும் உள்ளதால், நெருக்கடி நேரத்தில் எங்களுக்கும் ஏன் உதவி கிட்டவில்லை?” என தன் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்கிறார் குமாரவேலு.

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.