கோவிட் 19: “சமூக பரவலால் மனநோய் அதிகரிக்கக்கூடும்”

கோவிட்-19 நேரத்தில் மன நலம்

Stock image. Courtesy: Pixabay

Translated by Sandhya Raju

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்ற நோய்க்கு அறிமுகம் தேவையில்லை.

வைரஸ் தொற்று பரவல் பற்றியும் மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அனைவரும் அறிந்ததே. இந்த கட்டுரை எழுதும் இந்த சமயத்தில் கிட்டத்திட்ட ஆயிரம் பேருக்கு தொற்று பரவி 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மேலும் தொற்று விரைவாக பரவாமல் இருக்க அரசாங்கமும் ஒவ்வொரு தனி நபரும் போதிய பாதுகப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சமூக விலகல், ஜனதா கர்ஃபியூ, ஊரடங்கு ஆகியவற்றிற்கு நடுவே, மனநலம் குறித்து விவாதிக்கப்படவில்லை, இது போன்ற அசாதாரண சூழலில் பொது சுகாதாரத்தில் ஒரு முக்கிய சவாலாக இது உள்ளது. இச்சமயத்தில் ஆரோக்கியமான மனநிலையை பேணுவதும், குறிப்பாக மனநல பாதிக்கக்கூடியவர்களுக்கு உதவுவதும் முக்கியம்.

கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று  மனநலம் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என பெங்களூருவை சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் ரிச்மண்ட் பெல்லோஷிப் சொசைட்டியின் பெங்களூரு கிளையின் ஹானரரி ஆலோசகர் Dr  எஸ் கல்யாணசுந்தரம் அவர்களிடம் உரையோடினோம். இந்த முதல் பகுதி நேர்காணலில் மனநல நோய் குறித்தும், அதன் தாக்கத்தை குறித்தும், இதை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை குறித்தும் பேசினார்.

டாக்டர், தற்போதைய சூழலில், ஒரு மனநல மருத்துவராக மன நலம் குறித்த உங்களின்  பார்வை?

Dr KS: மனநலம் பாதிப்புகுள்ளானோர் அன்றாடம் ஏற்படும் மன அழுத்த நிகழ்வுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்; அத்தகைய அழுத்தங்களை சமாளிக்கும் திறன் பொதுவாக போதுமானதாக இருக்காது.  இது போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க அவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும்.

மன அழுத்தத்தை சமாளிக்க கூடியவர்களுக்கு கூட உடல் மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்கள் பாதகத்தை விளைவிக்கக்கூடும்.

மனச் சோர்வு அல்லது அழுத்தத்திற்காக ஒருவர் சிகிச்சையில் உள்ள பொழுது, அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக டெங்கு அல்லது வேறு வகையான காய்ச்சலோ இருக்கும் பொழுது, இன்னும் மோசமான மன நிலையிலேயே அவர்கள் எங்களிடம் வருகின்றனர். எங்கள் கிளினிக்குகளில் இதை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம்.

எனவே, இது மற்றுமொரு வைரஸ் தானா?

Dr KS: ஒரு வகையில் பார்த்தால், இது மற்றொரு வைரஸ் காய்ச்சல் தான். ஆகவே, மற்ற வைரஸ் காய்ச்சல் போலத்தான் அறிகுறிகளை காட்டுகிறது. தற்போதைய சூழலில், ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் பிற வழிகளில் பரப்பப்படும் தகவலால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல தரப்பட்ட தகவல்கள் ஒரு வித பீதியை கிளப்புவதோடு, அதன் நம்பகத்தன்மையும் கேள்விகுள்ளாக்குகிறது. ஆதலால், மக்கள் வழக்கத்தை விட அதிக ஆர்வத்துடன் இந்த செய்திகளை பார்க்கின்றனர். 

இது போன்ற நிலையில், எந்த வித செய்தியையும் மக்கள் நம்பிவிடுகிறார்கள்.

எந்த விதத்தில் பார்த்தாலும் வைரஸ் காய்ச்சல் ஒரு  தூண்டுதல் தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் – மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு இது இன்னும் அதிக சவாலாகவே இருக்கும். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் மற்ற எந்த வைரஸ் தொற்றுநோயையும் போலவே  அதே தாக்கத்தை மனநோய்க்கும் ஏற்படுத்துகிறது என்று சொல்ல முடியுமா?

Dr KS: பல வைரஸ் காய்ச்சல்கள் சுயமாக கட்டுக்குள் வந்துவிடும். கோவிட்-19 தொற்று பொருத்த வரை, தொற்று ஏற்பட்டவர்கள் சில சமயம் இறக்க நேரிடுகிறது. சிலருக்கு, இந்த நோய் பரவும் தன்மையால் பீதியை கிளப்பியுள்ளது. சளி, இருமல் உள்ளவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பர் என மக்கள் ஐயம் கொள்கின்றனர்!

கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு இல்லையென்றாலும், இந்த பயம் மன உளைச்சலை சிலருக்கு ஏற்படுத்துகிறது.

தொற்று பற்றிய சரியான புரிதல் இல்லாமல், வீட்டிலிருக்கும் குழந்தைகளை கூட விளையாடவோ, அவர்கள் போக்கில் இருக்கவோ அனுமதிப்பதில்லை. இந்த நெருக்கடி மற்ற பல சிக்கல்களையும் சச்ரவையும் ஏற்படுத்துகிறது!

நெருக்கடியான இச்சமயத்தில் மனநல பாதிப்பு மீண்டும் தோன்றினால்  என்ன செய்ய வேண்டும்?

Dr KS: மன நலப்பாதிப்பில் நன்கு அறியப்பட்டதும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதும் ஓசிடி எனப்படும் அப்செச்சிவ் கம்பல்சிவ் டிஸார்டர்.  தவிர்க்க முடியாத மீண்டும் மீண்டும் யோசனைகள் வந்துகொண்டே இருப்பதும், துவைப்பது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடும் நிலையும் இருக்கும். தற்போதைய சூழலில் அடிக்கடி குறிப்பிட்ட நேரத்திற்கு கை கழுவ வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது பாதிப்பு விளிம்பில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் அதிகமாவதை காண முடியும்.

இது ஒரு உதாரணம் தான். கவலை மற்றொரு வகை.

இச்சமயத்தில் சிகிச்சை முறைகளை அதிகரிக்க வேண்டும். காரணிகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கான உளவியல் ஆதரவு  சிகிச்சை நடவடிக்கைகள் அல்லது சிகிச்சை முறைகளை அளிக்க வேண்டும். அறிகுறிகள் வழக்கமான செயல்பாடுகளை பாதிக்கிறது என தெரிந்தால், மருந்துகளின் அளவை அதிகமாக்குவது உதவும்.

ஆனால், இதையெல்லாம் விட, அறிகுறிகள் தென்பட தொடங்கியதும் ஆலோசகரை அணுகுவது, முதன்மையானதும்  மிக முக்கியமானதும் ஆகும்.

ஆதரவு சிகிச்சை முறை என்றால் என்ன?

Dr KS: உணர்ச்சி மற்றும் உளவியல் ஆதரவின் விளைவாக ஒரு நோயாளியின் உடலியல் நல்வாழ்வு அல்லது உளவியல் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்த, வலுப்படுத்த அல்லது பராமரிக்க வடிவமைக்கப்படுவதே ஆதரவு சிகிச்சை முறையாகும். இதில் பாதிக்கபட்டவர் தனது கவலை, பயம் பற்றி தேர்ந்த ஆலோசகரிடம் பகிர்ந்து அதற்கான உதவியை நாடுவர்.

மனநல பிரச்சினைகள் தொடர்பான குறியீடுகள்

  • மனநல பாதிப்புக்குள்ளானோர் அன்றாட மன அழுத்த நிகழ்வுகளால் எளிதில் பாதிக்கப்படுவர். இத்தகைய அழுத்தங்களை சமாளிக்கும் திறன் பொதுவாக போதுமானதாக இருக்காது. பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொள்வதே முக்கியம்.
  • அறிகுறி மீண்டும் தென்படலாம். ஆதலால் விழிப்புடன் இருங்கள். மாற்றத்தை உணர்ந்தவுடன் வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவிக்கவும். 
  • மேலே சொன்னதை போல் அறிகுறி தென்பட்டால் உங்கள் மருத்துவர் / மனநல மருத்துவர் / சிகிச்சையாளரிடம் உடனடியாக முறையிடவும், அவர்கள் பரிந்துரைக்கும்  சிகிச்சையை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 
  • தேவைப்பட்டால் ஆதரவு சிகிச்சை முறையை மேற்கொள்ளவும்.
  • பரிந்துரைத்தபடி மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். 
  • உங்களுக்கென்று ஒரு வழக்கமான செயலை கடைபிடியுங்கள்.
  • உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 
  • போதிய உணவு உட்கொள்ளுங்கள், நன்றாக தூங்குங்கள்.
  • உங்களையும் உங்கள் சுற்றுபுறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள். 

அடுத்த சில தினங்களில், இன்னும் அதிகமானோருக்கு மனநல ஆலோசகர்களிடமிருந்து உதவி தேவைப்படும் என எண்ணுகிறீர்களா?

Dr KS: சமூக தொற்று ஏற்படும் நிலையில் இந்தியா உள்ளதால், அதிக பாதிப்பு ஏற்படும் சூழல் எழும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், மேலும் பல பேர் பாதிக்க வாய்புள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: கூட்டம் கூடாமல் தடுப்பது, சுற்றுப்புற சுகாதாரம், சமூக விலகல், அடிக்கடி கை கழுவும் முறை  போன்றவை.

இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பு போன்றவை பல வழிமுறைகளை வகுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றுவது மிக அவசியம். இல்லையென்றால், சமூக தொற்று ஏற்படுவதோடு, மனநல பாதிப்பும் அதிகரிக்க வாய்புள்ளது.

மனநல சவால்கள் இல்லாத நபர்களைப் பற்றி?

Dr KSமனநல சவால்கள் இல்லாதவர்கள் பலர் உள்ளனர். அழுத்தமான சூழலில் பயம், கவலை எழத்தான் செய்யும். அன்றாட வேலைகளில் சிலருக்கு மன அழுத்தம் இருந்தாலும், இது கவலை அளிக்கும் கட்டத்தை எட்டுவதில்லை. 

மொத்தத்தில், கவலை தொடர்பான அறிகுறிகள் மோசமடையக்கூடும். சிலர் தற்காலிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். குடும்பத்தின் ஆதரவுடன் இதை சரியாக கையாண்டால், வலைத்தளத்தில் தேவையற்ற தகவல்களை தேடி படிக்காமல் இருந்தால், இவர்கள் தானாகவே இதிலிருந்து வெளிவந்துவிடுவர். இதையும் மீறி உதவி தேவைப்படும் போது, தேர்ந்த மருத்துவ நிபுணர்களை மட்டுமே அணுகுவது சிறந்தது.

மூத்த குடிமக்கள் அல்லது மூன்று தலைமுறை உள்ள குடும்பத்தினர்  செய்ய வேண்டியவை?

Dr KS: வயது மூப்பு காரணமாக மூத்த குடிமக்களுக்கு ஆபத்து அதிகம். பயம், கவலையும் அவர்களுக்கு அதிகம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உடையவர்களுக்கு பாதிப்பு இன்னும் அதிகம். அவர்கள் அடிக்கடி தங்கள் பயம், கவலை ஆகியவற்றை பற்றி பசிக்கொண்டே இருப்பர்.  தொடர் கேள்விகள், ஒரு இடத்தில் உட்கார முடியாமல், சரியான உணவு, தூக்கமின்றி இருப்பது போன்ற செயல்களால் சில சமயம் தங்களின் பயத்தையும் கவலையும் வெளிகாட்டுவர்.

கவனிப்பாளர்களும் இந்த நேரத்தில் விரக்தியை சந்திக்கக்கூடும், இவர்கள் என்ன செய்ய வேண்டும்? 

Dr KS: முதலில், இது போன்ற நேரத்தில், அனைவரும் பதட்டமின்றி இருக்க வேண்டும் – அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இது அசாதாரண சூழல், இதை நாம் எதிர்கொள்ள வேண்டும் – ஒரு வாரம், ஒரு மாதம், அல்லது இந்த சவாலான நேரம் முடியும் வரை. ஆன்மீகத்தில் நம்பிக்கை உண்டென்றால், பிரார்த்தனை செய்யுங்கள். யோகா, தியானம் செய்பவரயின், அதை செய்யுங்கள். அழுத்தமான சூழலில் இருப்பதை உணர்ந்தால், வேறு செயல்களில் கவனத்தை திருப்புங்கள் – வாசிப்பது, ஓவியம் தீட்டுவது, இசை போன்றவற்றில் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் கவனத்தை திசை திருப்பி, உற்சாகமூட்டும் செயலில் ஈடுபடுங்கள்.

அவரவர் விருப்பதிற்கும் சூழலுக்கும் ஏற்ப தகுந்த செயலில் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாடு அரசு தொலைபேசி ஆலோசனை எண்: 044-26425585/9566317081

[Read the article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Deepa Vaishnavi V M 2 Articles
Deepa Vaishnavi is a freelance HR professional, soft skills trainer, citizen journalist, mental health advocate, and author of a book based on Indian mythology.