சென்னையின் பல திடீர் நகர் மக்களின் வாழ்க்கை

விளிம்பு நிலை மக்களின் நிலை

cooum river and thideer nagar
கூவம் ஆற்றின் ஒரு கரையில் அடுக்கு மாடி குடியிருப்பு, மறுபுறத்தில் ஓட்டு வீடுகள் பரைசாற்றும் சமத்துவமின்மை. படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்.

Translated by Sandhya Raju

“தங்கள் வாழ்கை நிலை உயரவும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெறவும், தமிழகத்தின் பல இடங்களிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் மக்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் மக்கள், பெரும்பாலும் நதிக்கரை ஒரமாக தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றனர். திடீர் திடீரென இவர்கள் குடிசைகள் தீப்பற்றி எரிவதால், இந்த இடம் “திடீர் நகர்” என அழைக்கப் பெற்றது.” சைதாபேட்டை திடீர் நகரில் வசிக்கும் 60 வயது எஸ் கதிர்வேலன். 

ஆனால், ராஜா அண்ணாமலை புரத்தில் வசிக்கும் எல். விஜயா வேறொரு காரணத்தை முன் வைக்கிறார். “இங்குள்ள பெண்களின் அணிகலங்கள் திடீர் திடீரென காணாமல் போவதாலும், அடிக்கடி குடித்துவிட்டு இங்குள்ள மக்கள் தகராறில் ஈடுபடுவதாலும், இந்த பெயர் காரணம் இருக்கலாம் என கூறுகிறார்.”

பெயர் காரணம் எதுவாக இருப்பினும் அங்கு நடக்கும் திடீர் சம்பவங்கள் இவர்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதாக உள்ளது. திடீர் நகர் சென்னையில் பல பகுதிகளில் இருந்தாலும், அடிப்படை வசதிகள், வாழ்வு நிலை ஆகியவற்றில் அனைத்து நகர் மக்களின் வாழ்க்கையும் ஒன்று போல் தான் உள்ளது.

இங்கு வசிக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? சிங்கார சென்னையில் வாழும் கனவு மெய்பட்டுள்ளதா?


Read more: Life beyond the murals in Chennai’s Kannagi Nagar


மக்களின் போராட்ட வாழ்கை நிலை

chennai thideer nagar
புரசைவாக்கம் திடீர் நகரில் உள்ள 5 நபர் வசிக்கும் வீடு. படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்.  

சைதாப்பேட்டை திடீர் நகர் நடுவே உள்ள ஒற்றை பனை மரம் இங்கு வாழும் மக்களின் சாட்சியாக நிற்கிறது. தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த மரம் இருப்பதாக கதிர்வேலன் நம்மிடம் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் தன் மூதாதையார்கள் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்ததாக கூறுகிறார். கட்டிட வேலை, பழைய பொருட்களை சேகரித்தல், வீட்டு வேலை, காவலாளி என கிடைத்த வேலையை அவர்கள் பார்த்ததாக கூறினார். 

திடீர் நகரில் தான் பிறந்ததாக கூறும் இவர், சமீபத்தில் வரை தற்காலிக பான்ஸி கடை நடத்தில் வந்தார். 

“ நாங்கள் ஆக்கரிப்பு செய்துள்ளதாக கூறி, கடையை காலி செய்யுமாறு அரசாங்கம் கூறியது. என் மகன்களும் இதே தொழிலில் தான் ஈடுபட்டிருந்தனர். கடையை காலி செய்த பின், எந்த வருமானமும் இல்லை. சமீபத்தில் கண் சிகிச்சை மேற்கொண்டதால், வேலைக்கும் செல்ல முடியவில்லை. எந்த வேலை கிடைக்கிறதோ அதை என் மகன்கள் தற்போது செய்கின்றனர்” என்றார் கதிர்வேலன். 

ஆக்கிரமிப்பு அகற்றல் காரணமாக, சைதாபேட்டை திடீர் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போல் இவரும் தன் வீட்டையும் இழக்க நேரலாம். 

“15 மாதத்தில் மாற்று வீடுகள் தரப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. அக்டோபரில் காலி செய்ய வேண்டும் என கூறியுள்ள அரசு இது வரை நிதி உதவியோ மாற்று வீடோ அமைத்துத் தரவில்லை. பட்டா இல்லையென்றாலும், சொந்த குடிசை வீடாவது இங்கு இருந்தது. வாடகை வீடு தேடி போனால், முன்தொகையாக குறைந்தது 30,000 ஆகும். எங்களால் எப்படி அவ்வளவு பெரிய தொகையை சமாளிக்க முடியும்?” என கேட்கிறார், சைதாபேட்டை திடீர் நகரில் வசிக்கும் தாரா. 

2015 சென்னை பெரு வெள்ளத்தில் தன் அனைத்து உடைமைகளையும் தாராவின் குடும்பம் இழந்தது. “அந்த நஷ்டத்தையே இன்னும் கடந்து வரவில்லை. கொஞ்சம் மழை பெய்தாலும், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடும். சாக்கடை குழாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் தேங்கி வீட்டினுள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.” எனக் கூறும் தாரா, அரசு சொன்னதை போல் வீடு கொடுத்தால், இந்த பகுதியிலேயே அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறுகிறார். 

Women in Thideer Nagar peeling off garlics to make a living
பூண்டு உரித்தல் மூலம் வருமானம் ஈட்டும் திடீர் நகர் பெண்கள் படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்

மழை மட்டுமின்றி கோடை கால வெய்யிலும் இவர்களுக்கு சவாலாகவே உள்ளது.  கடும் வெய்யிலின் போது ஆஸ்பட்டாஸ் மேற்கூறையில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக, ராஜா அண்ணாமலைபுரம் திடீர் நகரில் வசிக்கும் செல்விக்கு முகத்தில் தீக்காயம் போல் ஏற்பட்டுள்ளது.  ஆனால் இதை விட பிற சவால்கள் அவருக்கு உள்ளன. 

2015 வெள்ளத்தில் என் ரேஷன் அட்டை தொலைந்து விட்டது இது வரை பெற முடியவில்லை. வாடகை வீட்டில் வசிப்பதால், அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை என்னால் தர இயலவில்லை,” என்கிறார் செல்வி. 

2014-ல் தன் கணவரை இழந்த செல்வி, குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளார். “கட்டிட வேலை பார்த்து வந்தேன். முன் போல் தற்போது அதிக வேலை கிடைப்பதில்லை. ரேஷன் அட்டை இல்லாததால், அரசு வழங்கும் இலவச அரிசியும் பெற முடியவில்லை.” என்கிறார் அவர்.  

அருகிலுள்ள குடியிருப்புகளில் வீட்டு வேலை பார்த்து வந்த அன்புக்கரசி, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின் பல வீடுகளில் வேலையாட்களை நிறுத்தி விட்டனர் என கூறினார். “அருகிலுள்ள உணவு கடை, ஒரு கிலோ பூண்டு உரித்தலுக்கு ₹30 தருகின்றனர். அதுவே என் சம்பாத்தியம்” என கூறும் அன்புக்கரசி அந்த நாளுக்கான தன் வேலையில் ஈடுபடுகிறார்.

Woman in Thideer Nagar cooking in wood fire stove
காஸ் சிலிண்டர் விலையால், விறகு அடுப்பில் சமைக்கும் திடீர் நகர் பெண்கள். படம்: ஷோபனா ராதாகிருஷ்னன். 

புரசைவாக்கம் திடீர் நகரில் வசிக்கும் பொன்னம்மாள்*, விறகு அடுப்பில் ஞாயிறு மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்தார். காஸ் சிலிண்டர் இல்லாமல் விறகு அடுப்பை உபயோகிப்பது பற்றி கேட்ட போது, சிலிண்டர் விக்கும் விலையில் கட்டுப்படியாகது என கூறினார். 

“ஐந்து பேருக்கு உணவு அளிக்க வேண்டும், காஸ் சிலிண்டர் கட்டுப்படியாகாது. அருகிலுள்ள மைதானத்திலிருந்து விறகுகள் கொண்டு வருவேன், ஒரு நாளைக்கு தேவையான உணவை காலையிலேயே சமைத்து விடுவேன்,” என்றார். இதே வழக்கம் தான் இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் காண முடிகிறது.


Read more: Eviction in Govindasamy Nagar highlights precarious life of Chennai’s poor


இளம் தலைமுறை சந்திக்கும் சவால்கள்

இங்குள்ள இளைய தலைமுறையினர் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியுள்ளனர். கோவிட் -19 பெருந்தொற்று முன், அருகிலுள்ள அரசு பள்ளியில் செல்வியின் 15 வயது மகன் படித்தான். ஆன்லைன் கல்வி மூலம் பாடம் கற்பித்தது பெருஞ் சவாலாக அமைந்தது. பள்ளி திறந்த பின் படிப்பில் சிறந்து விளங்க முடியவில்லை. ஆதலால், பள்ளியை விட்டு நின்று விட்டு தற்போது வீட்டில் இருக்கிறான். 

புரசைவாக்கம் திடீர் நகரில் வசிக்கும் 10 வயது மகன் கதிருக்கும் இதே நிலை தான். பள்ளி செல்ல விருப்பமில்லாததால் தற்போது புறா வளர்ப்பின் மூலம் பாணம் ஈட்டுகிறான். 

children in Thideer Nagar playing with doves
கோவிட்-19 பெருந்தொற்று பின், திடீர் நகர்களில் உள்ள பல குழந்தைகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர்.படம்: ஷோபனா ராதாகிருஷ்னன்

புரசைவாக்கம் திடீர் நகரில் வசிக்கும் 21 வயது பிரியாவுக்கு தற்போது ஐந்து வயது குழந்தை உள்ளது. “ படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது, ஆனால் 15 வயதிலேயே திருமணம் முடிந்து, ஒரே வருடத்தில் பிள்ளை பெற்றேன். இதனால், படிப்பை நிறுத்தி விட்டேன்” என்கிறார்.

இதே போல், 25 வயதே ஆகும் ரஞ்சனிக்கு* 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தன் படிப்பு கனவை இவரும் துறக்க நேரிட்டது. 

இங்குள்ள பலர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராகவோ அல்லது, பெங்களூருவில் ஓட்டுனராகவோ உள்ளனர். 

சிறு வயதிலேயே இங்குள்ள பல குழந்தைகள் போதை மருந்து போன்ற தீய பழங்களுக்கு ஆளாகின்றனர். இவர்கள் இதை விட வேண்டும் என்று நினைத்தால் கூட, இங்குள்ள காவல் துறையினர் இவர்கள் மீது பொய் வழக்குகளை போடுவதால், மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்படுகின்றனர்,” என்கிறார் ரஞ்சனி. 

ஆக்கிரமிப்பு அகற்றம்

A toilet in Thideer Nagar in Saidapet, Chennai
கழிப்பறை உட்பட எந்த அடிப்படை வசதியும் சென்னை திடீர் நகர்களில் இல்லை. படம்: ஷோபனா ராதாகிருஷ்னன். 

குடி நீர், கழிப்பறை, கழிவு நீர் குழாய்கள், சாலை விளக்குகள், சாலை வசதி, சுகாதாரம், பாதுகாப்பு என எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. குடிசை வீட்டிலிருந்து, ஆஸ்பெஸ்டாஸ் கூறை வீடாக தங்கள் இருப்பிடத்தை மாற்ற, இவர்களுக்கு  நான்கு தலைமுறை ஆகியுள்ளது. இருப்பினும், பல வசதிகள் இன்றும் திடீர் நகர்களில் இல்லை. 

இயற்கை அல்லது சக மனிதர்களால் உருவாகும் எந்த அழிவும் இவர்களைத் தான் முதலில் தாக்குகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அமைப்புகள் மீதான நம்பிக்கை இவர்களுக்கு முற்றிலும் போய் விட்டது. “யார் ஆட்சி அமைத்தாலும் எங்கள் நிலை மாறப்போவதில்லை. தின உணவுக்கு உழைத்து தான் ஆக வேண்டும். ஆகையால், இந்த தேர்தலில் நான் வாக்களிக்கவில்லை” என்கிறார் அன்புக்கரசி. 

இதையே தான் மூன்று நகர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் கூறினர். 

ஆக்கிரமிப்பு அகற்றல் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வரும் என இவர்கள் உணர்ந்திருக்கின்றனர். 

இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என கேட்டதற்கு “ இதே பகுதியில் மாற்று வீடுகள் அமைத்துத் தர போராட்டத்தில் ஈடுபடுவோம்” என இங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

“கோவிந்தசாமி நகர் ஆக்கிரமிப்பு அகற்றலை அரசு கையாண்ட விதம் அச்சமூட்டூகிறது. பல ஆண்டுகளாக பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோம், அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி அளித்தது. எங்களின் முழு சேமிப்பையும் போட்டு வீட்டை கட்டியுள்ளோம், கோவிந்தசாமி நகர் போன்று வீடுகளை இடித்தால், எங்களுகு போக வேறு இடம் இல்லை,” என் கிறார், ராஜா அண்ணாமலைபுரம் திடீர் நகரில் வசிக்கும் அர்ஜுனன்.  

வெளிப்புற இடமான கண்ணகி நகர் அல்லது பெரும்பாக்கத்தில் மாற்று இடங்கள்  அரசு அளிக்கிறது. “தினக் கூலியான நாங்கள் எவ்வாறு எங்கள் வாழ்க்கையை நடத்த முடியும், சம்பாதிப்பது பயணத்திலேயே போய்விடும்?” என வினவுகிறார். 

*பெயர் மாற்றப்பட்டுள்ளது

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Shobana Radhakrishnan 109 Articles
Shobana Radhakrishnan is a Senior Reporter at Citizen Matters. Before moving to Chennai in 2022, she reported for the national daily, The New Indian Express (TNIE), from Madurai. During her stint at TNIE, she did detailed ground reports on the plight of migrant workers and the sorry-state of public libraries in addition to covering the renowned Jallikattu, Tamil Nadu Assembly Elections (2021) and Rural Local Body Polls (2019-2020). Shobana has a Masters degree in Mass Communication and Journalism from the Pondicherry Central University and a Bachelors in English Literature. She keenly follows the impact of development on vulnerable groups.