நடைபாதைகள்: மற்றுமொரு பாண்டிபஜாரை சென்னையால் உருவாக்க முடியுமா?

பாதசாரிகளுக்கு ஏதுவாக வணிக பகுதிகள்

பாதசாரிகள் பிளாசா. படம்: ஐ.டி.டி.பி இந்தியா

Translated by Sandhya Raju

அகலமான நடைபாதைகள், பிராகசமான தெரு விளக்குகள், சைகிளுக்கென தனி பாதை, நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடம், ஷாப்பிங் வந்தவர்கள் சற்று ஓய்வெடுக்க பெஞ்சுகள் என பாண்டி பஜாரில் உள்ள தியாகராயா சாலை பல பேருக்கு ஷாப்பிங் அனுபவத்தையே மாற்றி அமைத்துள்ளது.

இந்த வசதிகள் அனைத்தும் சென்னையில் முதன் முறையாக அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அடுத்தவரை பாதிக்காமல் செல்வதை இங்கு காணலாம்.

ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் உள்ள இந்த ஷாப்பிங் பகுதியில் இப்படியொரு பாதசாரிகள் பிளாசா இன்றியமையாததாக இருந்தது. மாற்று திறனாளிகள் உபயோகிக்கக் கூடிய நடைபாதைகள், நெறிபடுத்தப்பட்ட பார்க்கிங் ஆகியவை பாதசாரிகளுக்கான திட்டம் கீழ் அமைக்கப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இருப்பினும், இந்த் திட்டம் செயலுக்கு வந்த ஒரு வருடம் பிறகு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. சில்லரை வர்த்தகம் புரியும் வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளது, வகையற்ற பார்க்கிங், இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு நடைபாதைகளில் கிடப்பவர்கள் மற்றும் சுகாதாரம் என பல சவால்கள் தற்போது உள்ளது. “குடித்து விட்டு இங்கு கிடப்பவர்களை கண்காணிக்க வேண்டும்” என்கிறார் இங்கு தினந்தோறும் நடை பயிலும் எம் லிங்கம்.

சில்லரை வியாபரிகளை நெறிப்படுத்துதல்

மாநகராட்சி வளாகத்தில் இடம் ஒதுக்கப்படாததால் எம் பச்சையம்மா போன்றவர்கள் நடைபாதையில் கடை போடும் நிலைக்கு தள்ளப்பட்டுளனர். இது போன்ற குறைபாடுகளால், இவரை போன்று 12 சில்லரை வியாபரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 40 வருடங்களாக, 58 வயதான பச்சையம்மா தியாகராய சாலையில் பழ வியாபரத்தில் ஈடுபட்டுள்ளார். ” என்னைப் போன்று 12 பேருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை,” என்கிறார் இவர்.

இவரை போன்றவர்களுக்கு இந்த நடைபாதை தான் அன்றாட வாழ்கைக்கான ஆதாரம். “என்னைப்போல் பத்து வியாபாரிகளுடன் நானும் வளாகத்தில் வியாபாரம் செய்தால், எனக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்?” என வினவுகிறார் பச்சையம்மா.

முறைபடுத்தப்படாத வியாபரிகளுக்கு தனியாக ஒரு இடத்தை (வெண்டிங் ஜோன்) ஒதுக்குவதே இதற்கான தீர்வாக அமையும். மலிவான விலையில் ஏதுவான இடங்களில் பொருட்களை வாங்குவதற்கு இந்த வெண்டிங் ஜோன் ஒரு வாய்பாக அமையும் என்கிறது நகர்ப்புற சமபங்கு மையம் (CUE).பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு, வாடிக்கையாளர்களுடன் முறையான துறைகளை இணைக்கிறது; தெருக்களை சுத்தமாக சுகாதாரமாகவும் வைக்க உதவுவதோடு அழகான நகர சூழலையும் உருவாக்கும்.

நெறிமுறையற்ற டிரஃபிக் மற்றொரு முக்கிய பிரச்சனை. “எங்கு இடம் உள்ளதோ அங்கு முறையற்று நிறுத்தப்படும் வாகனத்தை கட்டுப்படுத்த தவறிய நிர்வாக குறைபாடே இதற்கு காரணம். சாலை நிர்வாகத்தை மேம்படுத்தினால் பாதசாரிகள் சாலைகளை சிரமமின்றி பயன்படுத்த ஏதுவாக இருக்கும்,” என்கிறார் மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் பாலாஜி விஜயராகவன்.

இந்த சவால்களை எவ்வாறு சீர் படுத்த முடியும்? பார்க்கிங் நிர்வாகத்தை மேம்படுத்தி, போக்குவரத்து காவல் துறையும் மாநகராட்சியும் ஒன்றிணைந்து செயல்படுதலே இதற்கு ஒரே தீர்வாகும். ” HP சந்திப்பை கடந்து வாகனங்களை அனுமதிக்காமல், பனகல் பார்க் மற்றும் வெங்கட் நாராயண சாலையை கார் பார்க்கிங்காக ஒதுக்க வேண்டும். ஆனால், பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து மற்றும் இரு சக்கர வாகனங்களையும் அனுமதிக்கலாம்,” என்கிறார் பாலாஜி.

பாண்டி பஜாரில் உள்ள பாதசாரிகள் பிளாசா. படம்: ஐ டி டி பி

மகிழ்வான வாடிக்கையாளர்கள்

இது போன்ற தடைகள் இருந்தாலும், ஷாப்பிங் வரும் வாடிக்கையாளர்கள் இந்த புது அனுபவத்தில் மகிழ்கிறார்கள். “வரையுறுக்கப்பட்ட பார்க்கிங் வசதி சுலபமாக உள்ளது. வாகனம் மோதிவிடுமோ என அச்சம் இல்லை. அகல நடைபாதைகள், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உள்ள இருக்கை வசதிகள், வர்ணங்கள் ஆகியவற்றை வேறு எங்கும் காண முடியாது.” என்கிறார் என் பாலசுப்ரமணியன்.

ஆம், மற்ற இடங்களில் இது போன்ற வசதியில்லை. மேல்தட்ட வணிக இடமான காதர் நவாஸ் கான் சாலையில், வாகன நெரிசல் மற்றும் நடைபாதை வசதி இல்லை.

கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை பொது இடத்துடன் ஒருங்கிணைப்பது ஒரு முக்கிய அம்சமாக எஸ் ரம்யா கருதுகிறார். இதனால் உலக பிரசத்தி பெற்ற டைம்ஸ் ஸ்கயருக்கு நிகராக இந்த பிளாசா உள்ளது. “கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தெரு நிகழ்ச்சிகள் இந்த இடத்தையே ஒளிரச் செய்கின்றன, பொது முடக்கம் முற்றிலுமாக முடிந்த பின் இங்கு வர ஆவலாக உள்ளேன்,” என்கிறார் அவர்.

மற்ற சாலைகளின் நிலை?

சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடட் மற்றும் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனம் (ITDP) ஆகியன ஒன்றிணந்து பிற முக்கிய சாலைகளையும் இது போன்று மாற்ற திட்டம் வகுக்கிறது.

பாண்டி பஜார் பாதசாரிகள் திட்டம் ஒரு முன் மாதிரி திட்டம் என்றாலும், இது போன்ற திட்டத்தை பிற பகுதிகளிலும் செயலாக்க முடியும், அந்தந்த தெருக்களுக்கேற்ப திட்டத்தை வகுக்க வேண்டும் என்கிறார் ITDP நிறுவனத்தின் நகர்ப்புற மேம்பாட்டுக்கான மூத்த ஆராய்ச்சியாளர் ஏ.வி வேணுகோபால்.

“முதலில் எந்த தெருக்களை பாதசாரிகளுக்காக ஒதுக்குவது என அந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களையும் (கடைகள், குடியிருப்போர், மாநகராட்சி பொறியாளர்கள்) கலந்தாலோசிக்க வேண்டும். ஒரு மாதிரி ஓட்டத்தை மேற்கொண்டு, பின்னர் இடம், தெருக்களின் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு திட்டத்தை உருவாக்க வேண்டும்,” என் மேலும் கூறுகிறார்.

நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்த தெருக்கள் மேம்பாடு திட்டம் எனப்படும் மெகா ஸ்டிரீட் பிரோக்கிராம் திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில், 6 இடங்களில் 110 கி.மீ உள்ள தெருக்களை பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் “முழு” தெருக்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

திருவொற்றியூரில் உள்ள எம்சி தெரு, அண்ணா நகர் சாந்தி காலனி, நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ் கான் சாலை ஆகிய சாலைகள் தற்போது பகுப்பாய்வு செய்யப்படுகிறது என மாநகராட்சி அலுவலர் தெரிவித்தார்.

நெரிசல் மிகுந்த எம்சி சாலையில் கார் மற்றும் இரு சக்கர வண்டிகள் சுலபமாக செல்லவும், நடைபாதைகள் அமைக்கவும், தெருவோர சில்லரை வியாபரிகளை கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்படுகிறது. “இந்த திட்டத்தில் மக்களை ஏற்றிச் செல்ல பாட்டரி கார் பயன்பாடு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் நிலைய இணைப்பு மற்றும் நடை மேம்பாலம் ஆகியவை பரிசீலிக்கப்படுகிறது,” என்றார்.

“இது வணிக தெரு என்றாலும், சிறு கடைகளுக்கென பார்க்கிங் வசதியில்லை என்பதால் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. பாதசாரிகளுக்கென ஏதுவாக சாலை அமைக்க வேண்டுமெனில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும்” என்கிறார் எம்சி சாலையில் கடை நடத்தும் எஸ் துரை.

காதர் நவாஸ் கான் சாலையை ஒரு வழி சாலையாக மாற்ற தற்காலிகமாக திட்டம் உள்ளது. பார்க்கிங்கை சீர் படுத்தவும், அகலமான நடைபாதைகளை உருவாக்கவும் இது உதவும்” என்கிறார் ஜன நகர அமைப்பின் நகர வடிவமைப்பு இயக்குநர் நித்யா ரமேஷ்.

இந்த திட்டத்தில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகள், மோட்டார் பொருத்தப்படாத பிற போக்குவரத்து, அவசரகால வாகனங்களை எளிதில் அணுகுவது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் அனுமதி ஆகியவை அடங்கும். கல் பெஞ்ச், கலை ஓவியங்கள், விளக்குகள், மற்றும் பிராண்டிங் ஆகியவற்றால் சாலையை மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.

இங்கு உள்ள வணிகர்கள் பார்க்கிங் வசதியின்மையை முக்கிய குறைபாடாக கூறுகின்றனர். ஆனால், இங்கு வரும் மக்களை கணக்கில் கொண்டால் அந்த அளவிற்கு வசதியை ஏற்படுத்துவது சவாலாகவே இருக்கும் என்கிறார் நித்யா. “இந்த சவாலை எதிர்கொள்ள மோட்டார் இல்லாத வாகன பயன்பாட்டை அதிகப்படுத்தி பொது போக்குவரத்தையும் ஊக்குவிக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

இந்த திட்டம் வகுக்கப்படும் அதே வேளையில், எதிர் கால சவால்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்: தெருவோர வணிகர்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், பார்க்கிங் மேலாண்மை மற்றும் இங்குள்ள வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Read the original article in English here.

About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.