நேர்காணல்: சென்னைக்கு கோவிட் தடுப்பூசி எப்போது?

கோவிட்-19 தடுப்பூசி தயார்நிலை

சென்னையில் உள்ள சுகாதார நிலையத்தில் முகக்கவசம் அணிவது எப்படி என செயல் விளக்கம் அளிக்கும் மருத்துவ ஊழியர். படம்: வி நரேஷ் குமார்.

Translated by Sandhya Raju

கடந்த ஆண்டு முழுவதும் கோவிட் நோயை எதிர்த்து போராடிய சென்னை வாசிகள், உலகின் மற்ற நாடுகளும் இந்தியாவும் பெரிதும் எதிர்பார்க்கும் கோவிட்-19 தடுப்பூசியை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.

முதல் கட்ட தடுப்பூசிக்கு முன்னுரிமை குழுக்களை பதிவு செய்வது, மருத்துவமனைகளில் சோதனை ஒட்ட பயிற்சிகள் என, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகள் மற்றும் சென்னையில் பல அரசு குழுக்கள் இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிற விவரங்கள் இன்னும் முழுவதுமாக வெளிவராவிட்டாலும், சென்னையில் தடுப்பூசி வழங்கும் பணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், மத்திய அரசு அறிவித்தவுடன் தொடங்கப்படும் எனவும் சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயல் முறை குறித்தும், எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும் அறிந்து கொள்ள, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் ஆகியவரிடம் உரையாடினோம்.

சுகாதாரத் துறை செயலர் ஜெ ராதாகிருஷ்ணன்

சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால், இதற்கான நோக்கம் எட்டப்படுமா?தற்போது திட்டமிடப்பட்டுள்ள கால அவகாசம் என்ன?

ராதாகிருஷ்ணன்: தமிழகம் முழுவதும் சுமார் 47,000 அமர்வு தளங்களை (அரசு மற்றும் தனியார் சுகாதார வசதிகள்) கண்டறிந்துள்ளோம். இந்த நோய் பரவலை தடுக்க ஒரு தனித்துவமான தடுப்பூசி தேவை, தடுப்பூசிகள் கிடைப்பதன் அடிப்படையில் முன்னுரிமைகள் அமைக்கப்பட வேண்டும்.

நாம் ஏற்கனவே விரிவான உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டங்களை நடத்தியுள்ளதால், தடுப்பூசியை சேமிக்க ஏற்கனவே 15 குளிரூட்டிகள் நம் மாநிலத்தில் உள்ளன. சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், சுமார் 2.5 கோடி கோவிட் தடுப்பூசியை சேமிக்க பிரத்யேகமாக 51 குளிரூட்டிகள், தமிழ்நாடு மருத்துவக் கழகத்தால் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தின் துணை மாவட்ட மற்றும் மண்டல மட்டங்களில் 2800 இரண்டாம் நிலை குளிர் சேமிப்பு மையங்களையும் அடையாளம் கண்டுள்ளோம். பிற தடுப்பூசி சேமிப்பு நிலையங்களை இதற்கென பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசின் விநியோக அட்டவணை பொறுத்து கால அவகாசம் அமையும்.

சென்னை மா நகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ்

பிரகாஷ்:  நகரத்தின் உள்ள அனைவருக்கும் இதை கொண்டு சேர்க்க, சென்னை மாநகராட்சி தடுப்பூசி சேமிப்பை பல கட்டங்களாக திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி சேமிப்பு அறை மற்றும் குளிர் பதப்படுத்தல் மேலாண்மை முதல் கட்டமாகும், இதில் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும்.

கோவிட்-19 தடுப்பூசி (கோவிஷீல்ட்) இரண்டு கட்டங்களாக 28 நாள் இடைவெளியில் வழங்கப்படும். சென்னையில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக வழங்க 30 முதல் 40 நாட்கள் ஆகும்.

தடுப்பூசி கிடைப்பதை பொறுத்து, நான்கு கட்டங்களாக முழுவதுமாக அனைவருக்கும் வழங்க ஒரு ஆண்டு ஆகும். சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போடப்படும். ஆனால், நோய் பரவலை தடுக்க அட்டவணையை பின்பற்றுவது அவசியமாகும்.

பல கட்டங்களாக தடுப்பூசி வழங்கப்படும்:

முதல் கட்டம்அரசு மற்றும் தனியார் வசதிகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் – மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், முன்னணி வரிசை சுகாதார மற்றும் அங்கன்வாடி மையத் தொழிலாளர்கள், உதவிப் பணியாளர்கள், மாணவர்கள் (மருத்துவம், பல், நர்சிங் மற்றும் பலர்), விஞ்ஞானிகள், நிர்வாக மற்றும் பிற சுகாதார ஊழியர்கள்

இரண்டாம் கட்டம்: முன்னணி ஊழியர்கள்: மாநகராட்சி ஊழியர்கள், கோவிட்-19 கொள்கைகளில் ஈடுபடும் வருவாய் அதிகாரிகள், கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள்.

மூன்றாம் கட்டம்: 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் இணை நோயுற்றவர்கள்.

நான்காவது கட்டம்: பொது மக்கள்

சென்னையில் எத்தனை தடுப்பூசி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன?

பிரகாஷ்: முதல் கட்டத்தில், பதிவு செய்துள்ள பயனாளிகள் மாநகராட்சி சுகாதார வசதிகளில் (140 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சமூக சுகாதார மையங்கள், 3 அவசர மகப்பேறியல் மையங்கள்) நிலைஅமர்வு தளங்களுடன் இணைக்கப்படுவார்கள். 100 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளும் இதில் பங்கு பெறுவர். ஒரு மையத்தில் ஒரு நாளுக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

தடுப்பூசி வழங்க எத்தனை களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது? பயிற்சி எவ்வாறு இருந்தது?

ராதாகிருஷ்ணன்: தமிழகத்தில் களப்பணிக்காக, 21,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

பிரகாஷ்: சென்னையில், 1753 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மண்டல மட்டத்தில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகள் (மருத்துவ அதிகாரி, எம்.சி.எச்.ஓ, பணியாளர் செவிலியர், நகர்ப்புற சுகாதார செவிலியர் மற்றும் மருந்தாளுநர்) செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், பதிவு செயலாக்கத்திற்கான பயனாளிகளின் தரவை மொத்தமாக பதிவேற்றம் செய்தல், தடுப்பூசி அட்டவணையின் போர்டல் நுழைவு மற்றும் கோவிட்- 19 தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (CO-WIN) ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தடுப்பூசி விநியோக செயல்முறை எவ்வாறு நடைபெறும்? 

ராதாகிருஷ்ணன்: ஒரு அமர்வு தளம் என்பது ஒரு காத்திருப்பு அறை, தடுப்பூசி அறை மற்றும் கண்காணிப்பு அறை ஆகியவற்றைக் கொண்டது. சிறு ஒவ்வாமை போன்ற பாதகமான மருத்துவ சூழ்நிலைகள் ஏற்பட்டால் அவற்றைக் கையாள போதுமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு 33 மில்லியன் சிரிஞ்ச்கள் மற்றும் ஊசிகளை மாநிலத்திற்கு ஒதுக்கியுள்ளது, அவை மத்திய மருந்து விநியோக கிடங்கில் உள்ளன. எங்களிடம் சுமார் 17 லட்சம் ஊசிகள் மற்றும் சிரிஞ்ச்கள் உள்ளன.

மத்திய அரசு இதற்காக உருவாக்கியுள்ள கோ-வின் செயலியின் மூலமாக அனைத்து மக்களும் பதிவு செய்ய உகந்த நேரத்தில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். தற்போது, சுகாதார பணியாளர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும், மாநிலம் முழுவதும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இது வரை விண்ணப்பித்துள்ளனர்.

பிரகாஷ்: முதல் கட்டமாக, கோவிட்-19 தடுப்பூசிகள் மாநில தலைமையகத்தில் உள்ள மத்திய மையத்தால் வழங்கப்படும், அங்கிருந்து தடுப்பூசிகள் அமர்வு தளங்களுக்கு வழங்கப்படும். பயிற்சி பெற்ற பணியாளர்கள் அமர்வு தளத்தில் இருப்பர், மேலும் 15 மண்டலங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அந்தந்த சுகாதார வசதிகளுடன் இணைக்கப்படுவார்கள்.

ஒமந்தூர் பன்மனை மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தின் காத்திருப்பு அறை. படம: வி நரேஷ் குமார்
பெரியமேட்டில் உள்ள குளிர் பதன நிலையம். படம்: வி. னரேஷ் குமார்

முதல் கட்டத்திலேயே தடுப்பூசியை பெற போலி சான்றிதழ்கள் மூலம் மக்கள் பதிவு செய்யக்கூடும் என்ற கவலை உள்ளது. தடுப்பூசி மோசடியை அரசு எவ்வாறு தடுக்கும்?

ராதாகிருஷ்ணன்: பதிவு மற்றும் சரிபார்ப்பு முறையாக செய்யப்படுகிறது. குடிமக்கள் தங்கள் அடையாள ஆதாரங்களை விண்ணப்பத்தில் வழங்க வேண்டும். தடுப்பூசி பணியாளர் பட்டியலில் உள்ள பெயரை சரிபார்ப்பார். மோசடி செய்பவர்களைத் தடுக்க மூன்று நிலைகளில் சரிபார்ப்பு செய்யப்படும்.

தேர்தல் செயல்பாட்டைப் போலவே, குடிமக்களுக்கும் தடுப்பூசி போடும் தேதி மற்றும் இடம் குறித்து தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே இறுதி குறிக்கோள், ஆனால் இப்போதைக்கு முன்னுரிமை குழுக்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.

பல கட்டங்களாக போடப்படுவதால் சமூக எதிர்ப்பு சக்தியை அடைய முடியுமா?

ராதாகிருஷ்ணன்: தடுப்பூசிக்குப் பிறகு அதிகமான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இது நோய் பரவுவதைக் குறைக்கும். தடுப்பூசி என்பது ஒரு குறிப்பிட்ட விஞ்ஞான படியாகும், சமூக இடைவெளி உறுதிப்படுத்துதல் மற்றும் எல்லா நேரங்களிலும் முகமூடி அணிவது போன்ற நடத்தை முறைகளையும் தொடர்வது அவசியம்.

தடுப்பூசி நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள குழுக்கள் பற்றி கூறுங்கள்.

ராதாகிருஷ்ணன்: போலியோ தடுப்பு போன்று, கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையும் ஒரு மாபெரும் முயற்சியாகும். முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான குழு, என் தலைமையிலான மாநில பணிக்குழு, கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர் தலைமையிலான நகர அளவிலான குழு, என பல குழுக்களை முதலமைச்சர் அமைத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார துறை தவிர இதில் ஈடுபட்டுள்ள பிற துறைகள்:  

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / ஐ.சி.டி.எஸ்
  • கல்வித் துறை
  • நகராட்சி நிர்வாகத் துறை
  • மாநில காவல் துறை
  • பொதுப்பணித்துறை
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை
  • சமூக நலத்துறை
  • தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை
  • மின் துறை

கோவிட்-19 தடுப்பூசிக்கு குடிமக்கள் எவ்வாறு பதிவு செய்யலாம்? தேவையான ஆவணங்கள் எவை?

பிரகாஷ்: முதல் கட்டத்தில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அரசு மற்றும் தனியார் சுகாதார வசதிகள் (4 மருத்துவக் கல்லூரிகள், 1 துணை மாவட்டம் மற்றும் 169 ஆரம்ப மற்றும் இடைநிலை சுகாதாரத் துறைகள்) ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளன. கோவிட்-19 தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (CO-WIN) போர்ட்டலில் பயனாளிகளின் தரவை மொத்தமாக பதிவேற்றுவதன் மூலம் பதிவு செயல்முறை நடைபெறும்.

பிறந்த தேதி, அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள எண், பணியாளர் அடையாள எண் மற்றும் முகவரி பற்றிய தகவல்களைக் கொண்ட கோவின் வலை போர்ட்டலில் பதிவேற்ற ஒரு நிலையான எக்செல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை – வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமங்கள், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் இஎஸ்ஐ கார்டுகள் ஆகிய ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தடுப்பூசிக்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

முன்னணி பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு சுய பதிவு செயல்முறை தொடங்கப்படும்.

இது குறித்து விழிப்புணர்வையும், முழுமையான தகவல்களையும் பரப்புவதற்கு அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது?

பிரகாஷ்: தகவல் தொடர்பு மற்றும் சமூக அணிதிரட்டல் உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம், நான்கு முக்கிய முனைகளில் விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது: புதிய கோவிட்-19 தடுப்பூசி பற்றிய தகவல்கள், தடுப்பூசி தயக்கம், தடுப்பூசி ஆர்வம் மற்றும் கோவிட் பொருத்தமான நடத்தை முறைகள்.

சமூக ஊடகங்கள் (பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப்), சமூக ஊடகங்கள், வெகுஜன ஊடகங்கள் (கேபிள் டிவி, தொலைக்காட்சி, வானொலி, மொபைல் மற்றும் அச்சு), வெளிப்புற ஊடகங்கள் (சுவர் ஓவியங்கள், எல்.ஈ.டி சுருள், சுவரொட்டி, பேனர்) மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் பிரபலங்கள் மூலம் விழிப்ப்ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தடுப்பூசி மூலம் ஏற்படும் டன் கணக்கான கழிவுகளை மாநகராட்சி எவ்வாறு அப்புறப்படுத்தவுள்ளது?

பிரகாஷ்: இது உயிரியல் மருத்துவ கழிவு மேலாண்மை நிறுவனத்தால் சேகரிக்கப்படும். இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொறுப்பு ஏற்கும்.

[Read the original article in English here.]

About Laasya Shekhar 278 Articles
Laasya Shekhar is Senior Reporter at Citizen Matters Chennai. She tweets at @plaasya.