சென்னையில் மிதிவண்டி போக்குவரத்து – ஒரு மீள்பார்வை

மிதிவண்டி போக்குவரத்தின் நன்மைகள்

cyclists of chennai
மிதிவண்டி பயன்படுத்துதல் ஊக்குவிக்கப்படவேண்டும். படம்: பீலிக்ஸ் ஜான்

பண்டைய காலந்தொட்டு இன்று வரை மிதிவண்டிகள் மக்களால் அன்றாட போக்குவரத்திற்கும், உடல் பயிற்சிக்கும் பயன்படுத்தபடுகின்றது. இதனால் வரும் பல பயன்களை பின்வருமாறு பட்டியலிடலாம். மன ஆரோக்கியம் மேம்படுதல், பயணங்களில் பல புதிய மனிதர்களையும், புதிய இடங்களை சந்தித்தல், கவன குவிப்பு மேம்படுதல், நம் நுரையீரல் பலமடைதல், தேவையற்ற உடல் பருமன் அறவே நீக்கபடுதல், உடல் தசைகள் பலமடைதல், நோய் எதிர்ப்புத் திறன் கூடுதல் போன்ற பல. தலைக்கவசம், மிதிவண்டிக்கான பிரத்தயோக உடை அணிந்து பல ஆடவரும் பெண்டிரும் சாரை சாரையாக அதிகாலையில் விரைந்து செல்லும் காட்சியைக்காண சிலருக்குத்தான் நல்வாய்ப்பு கிட்டுகின்றது.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்திடராங்கை தலைமையாகக் கொண்டு உலகமெங்கும் செயல்படும் பிவைசிஸ் எனப்படும் தன்னார்வல அமைப்பு “மிதிவண்டி மேயர்கள்” என்று சிலரை நியமனம் செய்திருக்கின்றது. 2030க்குள் உலகிலுள்ள மனிதர்களில் 50 சதவிகதமாவது அன்றாட போக்குவரத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்த வைப்பது அவர்களின் குறிக்கோள். தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களில் உள்ள மேயர்கள் மக்களிடயே மிகுந்த விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.

ஒன்றிய மற்றும் மாநில அரசின் பொறுப்புகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் ஒன்றிய அமைச்சகம் கீழ் வரும் “ஸ்மார்ட் சிட்டி மிஷன்” என்னும் திட்டம் “இந்தியா சைக்கிள் ஃபார் சேலஞ்சு” என்று பதிவு செய்தலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது.  இதன் தலையாய பணி நம் நாட்டில் மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உயர்ந்த தர போக்குவரத்து அமைப்பை உருவாக்குதல் ஆகும். நமது மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் (திமுக), நமது தமிழக காவல்துறை தலைவர் திரு. சைலேந்திர பாபு ஆகியோர்கள் அண்மையில் மிதிவண்டி பயிற்சி செய்யும் கானொளிகள் நமக்கு உற்சாகமூட்டுவதாய் உள்ளது.

குற்றம் நடப்பதை தவிர்க்க அக்காலங்களில் காவல் துறையினர் பீட் என்னும் ரோந்து பணியில் மிதிவண்டியில் சென்றதலால் பெரும்பாலும் குற்றங்கள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு களையப்பட்டன. யாருக்குத் தெரியும் நம்மில் சில பேர் சே குவாரா எழுதிய “மோட்டார் சைக்கிள் டைரிஸ்” போன்று தங்கள் “மிதிவண்டி நாட்குறிப்புகள்” என்று வருங்காலங்களில் எழுதலாம்.

பல மாநகரங்களில் பயணிக்கும் மெட்ரோ இப்பொழுது அதன் நிலையங்களில் மிதிவண்டிகளை நிறுத்தி பொதுமக்கள் அதனை பயன்படுத்த வாய்ப்பு கொடுத்துள்ளது. சில நகரங்களில் நாம் மெட்ரோவின் உள்ளே எடுத்துச் செல்லவும் அனுமதி உள்ளது.


Read more: Charts that show the revival of cycling in Chennai during the pandemic


மிதிவண்டி போக்குவரத்து வகைகள்

மிதிவண்டி போக்குவரத்து வகைகள் இரண்டு உண்டு. ஒன்று உடற் பயிற்ச்சிக்காக மேற்கொள்ள வளர்ந்து வரும் சிறு பகுதியினர். மற்றொன்று அன்றாடம் தொழில் நிமித்தமாகவும் படிப்பு நிமித்தமாகவும் மேற்கொண்டு வரும் பெரும்பான்மையான பொது மக்கள், வியாபரிகள், விவசாயிகள் மற்றும் மாணவ மாணவியர்கள். இதற்கான கொள்கை வகுப்பும் பொழுது அரசாங்கம் இரு வகையினரும் பயனடையுமாறு திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.

சவால்கள் என்ன

நன்மைகள் பல இருந்தும் ஏன் இன்னும் மிதிவண்டி பயன்பாடு நம் நாட்டில் அதிகரிக்கவில்லை என்று ஆராய்ந்தால் அதற்கு பல காரணிகள் பின் வருமாறு அமைந்துள்ளன. நம் நாட்டின் மிதிவண்டிக்கு நிலவும் சாதகமில்லா தட்ப வெப்ப சூழ்நிலை மற்றும் பல மலை பிரதேசங்கள், அதிக பயண மூட்டை சுமக்க இயலாமை, குறைந்த வேக சாத்தியக்கூறு, சாலையில் ஓட்டும் போது பாதுகாப்பின்மை, சாலைகளின் தரக்குறைவு, மிதிவண்டிகளை எளிதாக திருடும் வாய்ப்பு போன்றப் பலவற்றை பட்டியலிடலாம்.
பைக், கார் போன்ற வாகனங்கள் தொலைந்தால் காப்பீடு வசதி உண்டு. மிதிவண்டி காப்பீடு வசதி இல்லாதது ஆச்சரியமான உண்மை. மற்ற வாகனங்களால் மிதிவண்டி ஓட்டுனர்கள் மீது ஏற்படும் விபத்துகளை நாம் பொதுமக்கள் விபத்துகளாய் பதிவு செய்யாத காரணத்தினால் நம்மிடம் மிதிவண்டி விபத்துகள் பற்றி எந்த தகவல்களும் இல்லை.

chennai cyclist
எனது மிதிவண்டியுடன். படம்: லக்ஷ்மணன்

இந்த தரவு இல்லாத காரணத்தினால் காப்பீடு நிறுவனங்களும் மிதிவண்டி பயன்படுத்துவர்களுக்கு காப்பீடு தரத் தயங்குகின்றனர். ஒரு சாலையில் மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கின்றதோ அதே உரிமை மிதிவண்டி யில் செல்லும் நபர்களுக்கு இருக்கின்ற எண்ணம் பலருக்கு வருவதே இல்லை. மிதிவண்டி ஓட்டிகள் சாலை பயன்பாட்டாளர்களிலே குறைந்த இடங்களை போக்குவரத்திற்கு உபயோகப் படுத்தினாலும், அவர்களே அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாகவும் பலவீனம் உடையவர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். புதியவர்களை மிதிவண்டி பயன்பாட்டுக்கு அழைத்து வருதல் அல்ல நம் சவால். ஏற்கனவே பல ஆண்டுகள் மிதிவண்டி போக்குவரத்து மேற்கொண்டு வரும் மனிதர்களை தொடர்ந்து மிதிவண்டி பயன்படுத்த வைப்பதே நம் முன் இருக்கும் சவால்.


Read more: How friendly is Chennai towards women cyclists?


முன்உதாரணமான நாடுகள்

“பைசைக்கிள் கைடர்” என்னும் வலைத்தளத்தின் தரவின்படி, உலகத்திலேயே டென்மார்க் நாட்டில் மட்டும்தான் பத்தில் ஒன்பது பேர்கள் மிதிவண்டியை பயன்படுத்துக்கின்றனர். உலகில் மிதிவண்டி பயன்படுத்துவர்களில் ஒவ்வொரு மூன்று ஆணுக்கு ஒரு பெண் என்று “பஸ்ஃபீட்” என்னும் வலைத்தளத்தின் இன்னொரு தரவு தெரிவிக்கின்றது. இந்தியாவில் அண்மையில் வெளியான தேசிய சுற்றுப்புற காற்று தரநிலை 2019 அறிக்கைப்படி, நம் நாட்டிலுள்ள 44 நகரங்களின் காற்று மாசு, நிர்ணியக்கப்பட்ட அளவுகோலை தாண்டியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசலால் பல மனித நேரங்கள் வீணடிக்கப்படுகின்றன.

ஒரு கார் 20 சதுர மீட்டர் ஆக்கிரமிக்கும் இடத்தில் மிதிவண்டி வெறும் 2 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பதால் நம்மால் வளர்ந்து வரும் நகரங்களில் இடப் பற்றாக்குறையை எளிதாக சமாளிக்க முடியும். மிதிவண்டி போக்குவரத்தால் காற்று மாசுபாடு, சத்த மாசுபாடு கட்டுபடுதல் மற்றுமன்றி சாலைகள் பராமரிப்பு எளிதாகின்றது. குறைந்த சாலையே போதுமானதால் அரசாங்கத்திற்கு பணமும் மிச்சமாகின்றது.

பரிந்துரைகள்

கொரானா போன்ற தொற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் பலவும், தனி நபர் இடவெளியை சரியாக பயன்படுத்தும் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க வந்துள்ளது நல்ல முன்னெடுப்பே. இன்னும் கொரோனா தொற்று முடிவடையாமல் இருப்பதால், அரசு பொதுமக்களிடம் மிதிவண்டி பயன்பாட்டை எடுத்துரைத்து மிதிவண்டி பழுது பார்க்கும் கடைகளை அத்தியாவச சேவைகளின் கீழ் கொண்டு வந்து வருதல் பல நன்மைகள் பயக்கும்.

அரசாங்கம் மிதிவண்டி வாங்குபவர்களுக்கு அதன் விலையிலிருந்து வருமான வரி விலக்கு அளி்த்து ஊக்குவிக்கலாம். தனியார் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு சலுகைகளை மாதா மாதம் அளிக்கலாம். ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் இடங்களும் மற்ற வாகனங்களுக்கு காற்றை நிரப்பிக்க வசதி செய்தது போல் மிதிவண்டிகளுக்கும் காற்று நிரப்ப வழி செய்தால் எல்லா நேரங்களிலும் பொதுமக்கள் மிதிவண்டியை உபயோகப்படுத்த தயக்கமின்றி முன் வருவார்கள்.


Read more: Speeding vehicles, traffic biggest barriers: Chennai cyclists


எல்லாராலும் வாங்ககூடிய, அணுகக்கூடிய சுத்தமான போக்குவரத்துக்கு அனுசரனையாக உள்ள இந்த 200 வருட பாரம்பரியம் கொண்ட மிதிவண்டியை  இனிமேலும் அலட்சியப்படுத்தாமல் அது சுற்றுசூழலுக்குச் செய்யும் அதிக நன்மைகளை கருத்தில் கொண்டு பொது சமூகம், மிதிவண்டி பயன்பாட்டை உடனடியாக அமலுக்கு கொண்டு வருதல் காலத்தின் கட்டாயம். ஒலிம்பிக்ஸ் போட்டி ஆரம்பித்து அதில் 1896ம் வருடம் மிதிவண்டி அனுமதிக்கபட்டது. நம் நாட்டில் விளையாட்டுத் துறைகள் பலவிருந்தும் மிதிவண்டிக்கென ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு நம் நாட்டிலிருந்து இவ் வருடமும் யாரும் கலந்து கொள்ள வில்லை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மிதிவண்டி மூலம் உடல் நலத்தை பேணும் ஒரு சமூகம், இன்று உலகை அச்சுறுத்தும் பல நோய்கள் முக்கியமாக சரீர உழைப்பில்லாதலால் வரும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும். இனி வரும் காலங்கள் மிதிவண்டி பயன்பாட்டின் பொற்காலமே என்பதில் சந்தேகமில்லை. 200 வருட பாரம்பரியம் கொண்ட மிதிவண்டியின் பயன்பாட்டாளர்கள் தலை நிமிர்ந்து பெருமையுடன் சொல்லலாம் நாங்கள் இந்த நாட்டின் சுற்றுசூழலை, நமது தலைமுறைக்கு மட்டுமன்றி வரும் தலைமுறைகளுக்கும் பாதுகாக்கின்றோம் என்று.

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Lakshmanan S 1 Article
Lakshmanan S works in a multinational pharma company located in Chennai. He is interested in fitness activities such as cycling.

3 Comments

  1. அருமையான கட்டுரை. மிதிவண்டியின் பயனை இன்னும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். வாகன நெருக்கடிமிக்க நகர மையப்பகுதிகளில் இது சாத்தியமில்லை. எனவே புறநகர் பகுதியில் cycling promote செய்யவேண்டும்

  2. சென்னையில் மிதிவண்டி போக்குவரத்து – ஒரு மீள்பார்வை – சைக்கிள் ஓட்டுதல் பற்றி விரிவான, அருமையான கட்டுரை. எனது ட்விட்டர் பக்கத்திலும், முகநூல் பக்கத்திலும் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் திரு Lakshmanan S

Comments are closed.