சென்னையின் பொதுப் போக்குவரத்தை தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றுதல்

பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துதல்

people waiting for mtc bus without a bus shelter
கே.கே.நகரில் பஸ் நிழற்குடை இல்லாததால், ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள். படம்: பத்மஜா ஜெயராமன்

Translated by Aruna Natarajan

“வெப்பமான நாட்களில் MTC பேருந்துக்காக காத்திருக்கவேண்டிய அவகாசம் என்னை ஆட்டோவைப் பயன்படுத்தத் தூண்டுகிறது” என்கிறார் எம் பிரியங்கா. “கே.கே.நகரில் இருந்து மயிலாப்பூரில் உள்ள எனது அலுவலகத்திற்கு செல்ல 12ஜி பேருந்தில் செல்கிறேன். நான் பஸ் ஏறும் இடத்தில் கே.கே.நகர் முனுசாமி சாலையில் பஸ் நிழற்குடை இல்லை. நிறுத்தத்தைச் சுற்றியுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அவை மீண்டும் நடப்படவில்லை. பேருந்துகளுக்கான காத்திருப்பு வெயிலால் மிகவும் கடினமாக உள்ளதால் நான் ஆட்டோக்களை பயன்படுத்துகிறேன்.”

மாநில அரசு பெண்களுக்கு பேருந்து போக்குவரத்து இலவசமாக்கப்பட்டதனால் MTC பேருந்தில் பயணிக்க பிரியங்கா பணம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. இருப்பினும், அவள் இப்போது போக்குவரத்துக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவு செய்யும் நிலை உள்ளது.

“எனது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பயணத்திற்காக செலவிடப்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.

சென்னையின் பொதுப் போக்குவரத்து மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு ஆகியவை வெப்பநிலை கடுமையாக இருக்கும்போது அல்லது மழை அதிகமாக பயணிகள் பயன்படுத்த ஏற்றதாக இல்லை. 

சென்னையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாதது, மேற்கூரை இல்லாத ஃபுட் ஓவர் பிரிட்ஜ் (FOB) அல்லது பேருந்துகளின் பேருந்துகள் தாமதமாக வருதல் மற்றும் போதிய பேருந்துளைகள் இல்லாமை இவை அனைத்தும் கடுமையான கோடை மற்றும் கனமழையின் போது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

C40 இன் படி, ஒழுங்காகச் செயல்படும் பொதுப் போக்குவரத்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மக்கள் அணுக உதவியாக இருக்கவேண்டும. ஆனால் பொதுப் போக்குவரத்து தட்பவெப்ப நிலையைத் தாக்குப்பிடிக்காதபோது, ​​அதன் செயல்பாடு குறைகிறது.

சென்னையில் பொதுப் போக்குவரத்தை தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?


Read more: GPS speakers, panic buttons, pink buses and more: What the MTC rider in Chennai can look forward to


சென்னையின் பேருந்துகள் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடியவை அல்ல

சென்னையில் கோடை மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பேருந்துகளின் தாமதமாக வருதல் மற்றும் போதிய பேருந்துளைகள் இல்லாமை. 

வெயில் காலங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் வேதனையைப் பற்றி பேசுகிறார் வீட்டு வேலை செய்யும் தனம். “பிற்பகல் 2 மணிக்கு, கத்திரி வெயிலில் [ஆண்டின் வெப்பமான நேரம்], நான் வேலைக்குச் செல்ல பேருந்தில் செல்கிறேன். நான் ஏற வேண்டிய 21G பேருந்து மிகவும் அரிதாகவே உள்ளது. சில சமயம், செல்லம்மாள் கல்லூரிக்கு அருகில் 40-45 நிமிடங்கள் கூட காத்திருந்திருக்கிறேன். நிழற்குடைக்கு கீழ் நின்றாலும் வெப்பம் தாங்க முடியாதது. நான் வேலைக்குச் செல்லும் நேரத்தில் எனக்கு ஒரு பெரிய தலைவலி உள்ளது,”என்று அவர் கூறுகிறார்.

தனத்தால் பிரியங்கா போல் ஆட்டோக்களுக்கும் பணம் கொடுக்க முடியாது.

நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 21ஜி பேருந்து வரும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். 

பேருந்துப் போக்குவரத்தை காலநிலைக்கு ஏற்றவாறு மாற்ற பேருந்துகளுக்கான காத்திருப்பு நேரங்கள் உகந்ததாக இருக்க வேண்டும். அதிகமான பயணிகள் கடுமையான வெயில் மற்றும் மழையுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அவர்கள் ஆண்டின் பெரும்பகுதிக்கு பொது போக்குவரத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

இது பேருந்துகள் மட்டுமல்ல, பேருந்து தங்குமிடங்கள் போன்ற அதனுடன் இணைந்த உள்கட்டமைப்புகளும் கூட தீவிர வானிலைக்கு ஏற்றதாக இல்லை.

“மழைக்காலத்தில் பேருந்து நிழற்குடைகளும் முழுமையாக நீர் தேங்காதவையாக இல்லை. நிற்க உயரமான நடைமேடை இல்லையென்றால், நாங்கள் தண்ணீரில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அல்லது பேருந்து நிறுத்தங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறோம், ”என்கிறார் தி நகரைச் சேர்ந்த பேருந்து பயனாளர் கிருஷ்ணமூர்த்தி.

சென்னையிலும் உலோகத்தால் ஆன பேருந்து நிழற்குடைகள் உள்ளன. முன்னதாக, பேருந்து நிழற்குடைகள் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டன. “உலோகங்களைப் பராமரிப்பது எளிதானது மற்றும் வாங்குவதற்கு மலிவானது” என்கிறார் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனத்தின் (ITDP) துணை மேலாளர் சந்தோஷ் லோகநாதன்.

ஆனால் உலோகம் வெப்பத்தைத் தடுக்காது. மதியம் 3 மணியளவில் மெட்ரோ நிலையம் அருகே நந்தனம் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிழற்குடையின் கீழ் உலோக இருக்கையில் சுமார் ஏழு பேர் அமர்ந்திருந்தனர். இருக்கை சூடாக எரிந்தது.

“நான் நின்று வெயிலில் சோர்வடைவதை விட சூடான இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொள்வேன்” என்று ஒரு பயணி கூறுகிறார்.

சென்னை தெருக்களில் இயங்கும் பழைய பேருந்துகள் மோசமான வானிலைக்கு பயணிகளை வெளிப்படுத்துகின்றன. 

“குறிப்பாக டீலக்ஸ் MTC பேருந்துகளில் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் போது அது அடுப்பு போல் மாறும்” என்று பிரியங்கா கூறுகிறார். “பேருந்துகளின் சிறந்த பராமரிப்பு வெயில் மற்றும் மழை காலத்திலும் பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும்.”

மழைக்காலத்தில் பேருந்துகளின் மேற்கூரையில் தண்ணீர் கசிவு ஏற்படுவதாக பல பயணிகள் கூறுகின்றனர். 

போக்குவரத்து அதிகாரி கூறுகையில், “மக்கள் புகார் தெரிவிக்கும் போது தான் பஸ்களின் பராமரிப்பு நடக்கிறது. இன்ஜின் பழுது மட்டுமே வழக்கமாக நடக்கும்.”


Read more: How safe is public transport in Chennai?


புறநகர் மற்றும் எம்ஆர்டிஎஸ் ரயில்கள் பேருந்துகளை விட காலநிலையை தாங்கக்கூடியவை

திருமயிலை எம்ஆர்டிஎஸ்ஸில் எப்போதாவது செல்லும் சித்தார்த் சுப்ரமணியன், ரயில்கள் உறுதியானதாக இருப்பதையும், மழையால் அதன் செயல்பாட்டை பாதிக்காமல் இருப்பதையும் கவனிக்கிறார். “ஆனால், ரயில் நிலையத்தில் பெரும்பாலும் வேலை செய்யும் மின்விசிறிகள் இல்லாததால் கோடை காலத்தில் ரயிலுக்காக காத்திருப்பது மிகவும் கடினம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சில புறநகர் நிலையங்களில் பிளாட்பாரங்களில் கூரைகள் இல்லை. உதாரணமாக, மாம்பலம் ரயில் நிலையத்தில் மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் சாலையை நோக்கி, கடற்கரை நிலையத்தை நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக மக்கள் திறந்த வானத்தின் கீழ் நிற்கிறார்கள்.

கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற ரயிலில் கோடைக்காலத்தில் மின்விசிறிகள் வேலை செய்யாமல் போனது குறித்தும் பயணிகள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

fan not working inside train
செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயிலுக்குள் மின்விசிறிகள் இயங்கவில்லை. 
படம்: பத்மஜா ஜெயராமன்

ரயில் நிலையங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளும் மழையின் போது வெள்ளத்தில் மூழ்கும். உதாரணமாக, பார்க் டவுன் MRTS ல் இருந்து சுரங்கப்பாதை அடிக்கடி வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கிறது மற்றும் மழை பெய்யும் போது பயன்படுத்த முடியாதது, இதனால் பயணிகள் ரயில்களுக்கு செல்ல தண்ணீரில் இறங்கி நடக்கும் நிலை உள்ளது.

மெட்ரோ ரயில்களில் உள்ள ஏர் கண்டிஷனிங் பயன்முறையைப் பயன்படுத்த பயணிகளை ஈர்க்கிறது. பேருந்து, புறநகர் ரயில், எம்ஆர்டிஎஸ் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலைத் தேர்வு செய்ய விருப்பம் இருந்தால், பலர் மெட்ரோவைத் தேர்ந்தெடுப்பார்கள்.

“முன்பு மெட்ரோ இல்லாதபோது, ​​செயின்ட் தாமஸ் மவுண்டிலிருந்து எழும்பூர் வரையிலான புறநகர் ரயில்களை வேலைக்குச் சென்றேன். இப்பொழு மெட்ரோவில் செல்வதால் எனக்கு அதிகம் வியர்க்கவில்லை,” என்கிறார் ஒரு மெட்ரோ பயனாளர்.

சில மெட்ரோ நிலையங்களின் வடிவமைப்பு வெயில் மற்றும் மழை நாட்களில் பயணிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

கிருஷ்ணமூர்த்தி கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் பற்றி பேசுகிறார். “ஸ்டேஷன் வரை செல்லும் படிக்கட்டுக்கும், எஸ்கலேட்டருக்கும் மேற்கூரை இல்லை. கோடை காலத்தில் வெப்பமாக இருக்கும். மழையின் போது, ​​எஸ்கலேட்டர் வேலை செய்வதை நிறுத்துகிறது. வழுக்கும் படிக்கட்டில் ஏற வேண்டும்” என்றார்.

சென்ட்ரல் மற்றும் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மேற்கூரை இல்லாத நுழைவாயில்கள் உள்ளன.

no roof in central metro station staircase
சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷன் (ரிப்பன் பில்டிங் நுழைவு) கீழே செல்ல கூரை இல்லை. 
படம்: கீதா கணேஷ் கார்த்திக்

சரியான கடைசி மைல் இணைப்பு இல்லாதது பலருக்கு மெட்ரோவை பயன்படுத்துவது ஒரு தடையாக உள்ளது. 

பொதுப் போக்குவரத்தை சீதோஷ்ணநிலைக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகள்

பேருந்துகளை அதிக மீள்தன்மையடையச் செய்ய, பேருந்துகளின் மேற்கூரைகளை வெள்ளை நிறத்தில் சாயம் பூசுவது வெப்பத் தாக்கத்தைக் குறைக்கும் என்று C40 பரிந்துரைக்கிறது.

“வெள்ளை கூரைகளை மீண்டும் வண்ணம் தீட்டுவதும் பராமரிப்பதும் அதிக முயற்சியாக இருப்பதால் இது ஒரு மேலோட்டமான தீர்வாக மாறும்” என்கிறார் சந்தோஷ்.

“அதிக ஏசி பேருந்துகளை வாங்குவது முன்னோக்கிச் செல்ல வேண்டும். இது சாதாரண பஸ்களை விட சற்று விலை அதிகம். ஆனால் இது பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும்,” என்கிறார் சந்தோஷ். 

“ஏசி பேருந்துகள் சீல் வைக்கப்பட்டு, வெளியில் இருக்கும் வானிலையைப் பொருட்படுத்தாமல், பேருந்துகளுக்குள் நிலையான மற்றும் வசதியான வெப்பநிலையை பராமரிக்கும். சீல் செய்யப்பட்ட தன்மையால் பயணிகள் நச்சுப் புகையை சுவாசிப்பதையும் இது தடுக்கும். சாதாரண பேருந்துகளில் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.

வெப்பத் தாக்கத்தைக் குறைக்க பேருந்து நிழற்குடைகளை பசுமையாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். “தற்போது பேருந்து நிழற்குடைகள் விளம்பரங்களின் கண்ணோட்டத்துடன் வைக்கப்படுகின்றன, அவற்றின் நோக்கத்தை உணரவில்லை. அது மாற வேண்டும்” என்கிறார் சந்தோஷ்.

பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது காத்திருப்பு நேரத்தை குறைக்கும், இதனால் காலநிலை தாக்கம் குறையும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

“நகரம் முழுவதும் பொதுப் போக்குவரத்தின் காலநிலையை தாங்கும் தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஒரு துணைக் குழுவை உருவாக்கி, பொதுப் போக்குவரத்தில் கொள்கை முடிவுகளை எடுக்கிறது” என்று CUMTA சிறப்பு அதிகாரி I ஜெயக்குமார் கூறினார்.

பேரிடர் மேலாண்மையின் பல்வேறு நிலைகளில் – பேரிடர் அல்லாத, பேரிடருக்கு முந்தைய, பேரிடரின் போது மற்றும் பேரழிவுக்குப் பிந்தைய நிலைகளில் தாங்கும் தன்மையை எதிர்கொள்ள துணைக்குழு கவனம் செலுத்தும்.

“CUMTA ஆனது துறைசார் ஒருங்கிணைப்பை எளிதாக்குவதன் மூலம் போக்குவரத்து உத்திகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கட்டமைப்பை ஒழுங்குபடுத்துகிறது” என்று CUMTA சிறப்பு அதிகாரி கூறுகிறார்.

ஒரு பேருந்து வழித்தடச் சாலை வெள்ளப்பெருக்கு இடமாக இருந்தால், பேருந்துகள் செல்ல மாற்று வழிகள் உருவாக்கப்படும் என்பது ஒரு நெகிழ்ச்சியான போக்குவரத்து நெட்வொர்க் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அதுமட்டுமின்றி, CUMTA அதிகாரிகள் புதிய FOBகள் (ஆலந்தூரில் உள்ளதைப் போல) எவ்வாறு மூடப்பட்டிருக்கும் மற்றும் அதிக காலநிலையை எதிர்க்கும் தன்மையைப் பற்றியும் பேசுகின்றனர். முன்பு நிறுவப்பட்ட FOB கள் கூரையுடன் மாற்றியமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீவிர காலநிலையில் பொது போக்குவரத்தை அணுகுவதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஜெயக்குமார் கூறுகையில், “பொதுமக்கள் வழங்கும் ஆலோசனைகளை பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களுக்கு எங்கள் பரிந்துரைகளாக அனுப்புவோம்” என்றார். 

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 86 Articles
Padmaja Jayaraman was a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.

1 Comment

  1. Very true. The government just focus on the infrastructure provision, but doesn’t think about the “End to End” minimum comfort (in all aspects) of the commuters /public using the facilities at different seasons

Comments are closed.