சென்னையில் போக்ஸோ வழக்குகள்: தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிறது

Justice in CSA Cases

Madras High Court. Pic: Yoga Balaji/Wikimedia Commons (CC BY-SA 3.0)

Translated by Vadivu Mahendran

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்பு  சட்ட (திருத்தம்) 2019 இன் படி அதில் மிக முக்கிய அம்சங்களானக சேர்க்கப்பட்ட குழந்தைகள் ஆபாசக் காணொளி தடுப்பு மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை போன்றவை பலராலும் வரவேற்கப்பட்டது. முக்கியமாக வழக்குகளை விரைந்து முடிப்பதன் மீதான உத்தரவே பெரிதும் ஆமோதிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த சட்ட அமைச்சகம், நாடு முழுவதும் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான 1.66 லட்ச குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 1023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை நிறுவுவதைப் பரிந்துரைத்தது. உண்மையில் போக்ஸோ சட்டமானது சம்பவம் நிகழ்ந்த ஒரு வருடத்திற்குள் சட்டரீதியான நடைமுறைகள் எல்லாம் முடிந்திருக்க வேண்டியதை அவசியமாகக் கொண்டுள்ளது.

எப்படியாயினும், பெரும்பாலும் இந்த விவகாரங்கள் எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளது. சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான போக்ஸோ வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் குறைபாட்டால் அதிகளவில் தேங்கியுள்ளது. உதாரணமாக, சென்னையில் ஹாசினி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தால் ஒரு வருடத்தில் குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், இதன் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளது.

முடிவுக்கு வராத வழக்குகள்

போக்ஸோ வழக்கில் நீதி தாமதமாவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அத்தகைய ஒரு சோகமான உதாரணம் திருமுல்லைவாயிலில் ஜுன் 2019 இல் 60 வயது கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 4 வயது பெண் குழந்தையினதாகும். குற்றம் சாட்டப்பட்ட மீனாட்சி சுந்தரம் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, கொலை செய்து, உடலை சாக்கு மூட்டைக்குள் திணித்திருந்தார்.

ஊடகங்களின் கவனத்தைப் பெருமளவில் பெற்றதனால், காவல்துறை உந்தப்பட்டு விசாரணைக்கு எடுத்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தும், வழக்கு வழமையான வேகத்திலேயே நகர்கிறது. “இதுவரை மூன்று அமர்வுகளே திருவள்ளூர் நீதிமன்றத்தில் நிகழ்ந்துள்ளது”, என்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பணியாற்றும் ஒரு நிறுவனமான எய்ம்ஸின் இணை நிறுவனர் கன்யா பாபு கூறினார். அவர் மேலும் “சட்டம் குற்றவாளிகளுக்கு ஏற்றவாறு இருக்கிறது, அவர் இப்போது ஜாமீனில் வெளியில் வந்து அந்த குடும்பத்தையும் மிரட்டியுள்ளார்” என்றார்.

ஆனால் செயல்முறையின் தாமதம் பெண்ணின் தந்தையைத் தனது போராட்டத்தைத் தொடர வேண்டும் என்ற மனஉறுதியை பலவீனப்படுத்தவில்லை. “எங்கள் மகளை இழந்த நாளில் எனது குடும்பம் எல்லா மகிழ்ச்சியையும் இழந்தது. எதிர்தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார். ஆனால் சட்ட ரீதியான போரை அதன் இறுதிவரை எதிர்த்துப் போராட எனக்கு பொறுமை இருக்கிறது“, என்றார் அவர். வழக்கு தீர்ப்பளிக்கும் கட்டத்தை எட்டுவதற்கு முன்பு மொத்தம் 32 சாட்சிகள் இன்னும் குறுக்கு விசாரணை செய்யப்பட  வேண்டியுள்ளன.

இன்னொரு பயங்கரமான சம்பவத்தில், ஒரு 13 வயது சிறுமி டிசம்பர் 2018 இல் மெரினா கடற்கரையில் ஒரு குதிரை சவாரிக்காரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும், இரண்டு சாட்சிகள் மட்டுமே இன்று வரை குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். குறுக்கு விசாரணைக்கு மேலும் 18 சாட்சிகள் உள்ளனர். இந்த வழக்கும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலில் இடம்பெறும் என்று தோன்றுகிறது, ” என்றார் கன்யா.

காவல்துறையினரின் தரவுகளும்,சமூக சேவையாளர்களின் அனுபவமும் சில வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதைக் காட்டுகின்றன.

சென்னையில் கற்பழிப்பு வழக்குகள்

ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை உண்மையான வழக்குகள்*
2014 38 7 5 19
2015 98 10 36 34
2016 93 3 37 31
2017 84 0 39 22
2018 145 2 37 82

ஆதாரம்: பெருநகர காவல்துறை

*ஒரு பையனும் பெண்ணும் வீட்டை விட்டு ஓடும்போது, ​​பெண்ணின் குடும்பத்தினர் பெரும்பாலும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கிறார்கள். எனவே முழுமையான சரிபார்ப்பிற்குப் பிறகு போலீசார் அந்த எண்ணிக்கையைத் தனியாகப் பிரித்து வைத்துள்ளனர்.

மீளவே முடியாத அதிர்ச்சி

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம், பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நம்பிக்கையற்ற மற்றும் விரக்தியின் நிலைக்குத் தள்ளுகிறது. ஒருபுறம் அவர்கள் நீதியை விரும்புகிறார்கள், மறுபுறம், நம்பிக்கையிழந்து எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு முன்னோக்கி செல்ல அவர்கள் ஏங்குகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதிலும் எய்ம்ஸ் மற்றும் கற்பழிப்பு  நெருக்கடி மையமான நக்ஷத்திரா போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், பல சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் அயர்ச்சி தரும்  சட்டப் போரை கைவிடுகிறார்கள்.

செப்டம்பர் 2017 இல், 11 வயது சிறுமி மூன்று ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். மேலும் அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவதாகவும் அச்சுறுத்தப்பட்டாள்.  அவர்கள், அவளை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு, கலக்கமடைந்த அச்சிறுமி தனது தாயிடம் தஞ்சம் அடைந்தாள். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பள்ளிக்குச் செல்வதற்கும், தினமும் அழாமல் இருப்பதற்கும், இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கும் பல மாதங்கள் ஆனது. எவ்வாறாயினும் அவளுடைய மகிழ்ச்சி குறுகிய காலத்திற்கு தான் நீடித்தது. நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவளுடைய வழக்கிற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.  மிக விரைவில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க சிறுமி வரவழைக்கப்படுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“வழக்கில் குறுக்கு விசாரணை இருக்கும், வழக்கை வெல்ல ஒவ்வொரு நிமிட விவரத்தையும் அவள் நினைவுகூற வேண்டும்”, என்று சிறுமியின் தாய் கூறினார். ” எனது மகளை, அவளுக்கு அது எவ்வளவு வேதனை அளிக்கிறது என்பதை அறிந்திருந்தாலும் இந்த சம்பவத்தை நினைவு படுத்திக்கொள்ளுமாறும், மறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். “நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட சட்ட செயல்முறை 11 வயது சிறுமியின் தந்தையை அமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. என் கணவர் இந்த வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை ஏனென்றால் அது எங்கள் மகளை பாதிக்கிறது. ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன், ” என்று அந்த தாய் மேலும் கூறினார்.

சில நேர்மறையான சம்பவங்களும் உள்ளன. நக்ஷத்திராவின்  இணை-நிறுவனர் ஷெரின் போஸ்கோ கூறுகையில், “2014 ஆம் ஆண்டில் ஒரு பள்ளிப்படிப்பைத் துறந்த ஒரு பெண் தனது பக்கத்து வீட்டுக்காரரால் கர்ப்பமாக்கப்பட்டாள்.  வழக்கு இன்னும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் உள்ளது“, என்றும் “அப்பெண் தனது படிப்பை மீண்டும் தொடங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் ஒரு பலமிக்க நபராகிவிட்டார், மேலும் நீதிக்காக பொறுமையாகக்  காத்திருக்கிறார்“, என்றும் கூறினார்.

தாமதத்திற்கான பல காரணங்கள்

இதற்கிடையில், மகளிர் நீதிமன்றங்கள் வீடுகளில் நடக்கும் துஷ்பிரயோக வழக்குகளால் நிரம்பி வழிவதால் போக்ஸோ வழக்குகள் கூடுதல் சுமையாக இருக்கின்றன.  போக்ஸோ வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டம் நம்பிக்கையின் கீற்றாக அமைந்தது. இந்த நீதிமன்றங்கள் ஆண்டுக்கு 125 வழக்குகளை தீர்த்து வைக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இருப்பினும், இது குறித்து சிறிதளவும் முன்னேற்றம் காணப்படவில்லை. 100 க்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமும் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் சிறப்பு விரைவு நீதிமன்றத்தை அமைக்க அறிவுறுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மட்டுமே அவ்வாறு செய்துள்ளது, ”என்றார் கன்யா.

வழக்குகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து வழக்கறிஞர்கள் வேறுபட்ட கண்ணோட்டத்தைச் சேர்க்கிறார்கள். “நீதித்துறைக்குள் ஊழல் பரவலாக உள்ளது,”என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் என். லலிதா கூறினார். வழக்குகள் விரைவில்  வழக்குப்பட்டியலில் இடம்பெறுவதற்கும், வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதற்காக அதை மறைப்பதற்கும் வக்கீல்கள், பிரிவு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள். பிரிவு அலுவலர்கள்தான் அடுத்த நாள் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை திட்டமிடுகின்றனர்.

நீதித்துறை மட்டுமல்ல, காவல்துறையினரின் குறைபாடுகளும் பல வழக்குகளில் காணப்படுகின்றன, அனைத்து மகளிர் காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு போக்ஸோ பிரிவுகள் தெரியாது. கற்பழிப்பு நெருக்கடி மையத்தின் ஒரு தன்னார்வலராக, காவல்துறை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்டவரை மூன்று நாட்களுக்குப் பிறகு  மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற ஒரு சம்வத்தை நான் முதலில் கண்டேன் (இது 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும்). முதல் தகவல் அறிக்கை [எஃப்.ஐ.ஆர்] பதிவு செய்யும் போது அந்த அதிகாரி சரியான பிரிவுகளைப் பயன்படுத்தவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ‘கவனமாக’ இருக்கவில்லை என்றும், குற்றவாளியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய ‘விட்டுவிட்டனர்‘என்றும் குற்றம் சாட்டினார்.

ஆனால், திருச்சி முன்னாள் காவல்துறை துணைத்தலைவர், வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘ “இதுபோன்ற வழக்குகளை கையாளும் காவல்துறை அதிகாரிகள் (பெண்கள் காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அதிகாரிக்கு உதவுகின்ற மற்ற அதிகாரிகள்) இந்த விதிமுறைகளை நன்கு அறிந்தவர்கள். ஆனால் தீர்ப்பை வழங்கும் நீதிபதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து மட்டங்களிலும் நிறைய பயிற்சி மற்றும் உணர்திறன் தேவைப்படுகிறது”, என்றார்.

ஒவ்வொரு துறையும் தாமதத்திற்கு மற்றொன்றைக் குறை கூறுகின்றன. ஆனால் சரியான நேரத்தில் மற்றும் முறையான தடயவியல் பகுப்பாய்வும் தரவும் இல்லாதது நிச்சயமாக இங்கே ஒரு பிரச்சினையாகும்.

”போக்ஸோ வழக்குகளைச் சமாளிக்க ஒரு சிறப்பு தடயவியல் ஆய்வகத்தைத் திறக்க நாங்கள் இன்னும் தயாராகி வருகிறோம்,”என்று தடயவியல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.  இங்கு சென்னை அலுவலகத்தில் எல்லா வசதிகளும் இருப்பதால் மற்ற மாவட்டங்களில் இருந்து அனைத்து வழக்குகளும் சென்னை அலுவலகத்திற்கு வருகின்றன. வழக்குகள் குவிந்து கிடப்பதற்கான பின்னணியும் அதுதான் ”, என்றார்.

Read the original article in English here.

About Laasya Shekhar 285 Articles
Laasya was a Senior Reporter at Citizen Matters. Prior to this, she worked as a reporter with Deccan Chronicle. Laasya has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. A Masters in Journalism from Bharathiar University, she had been experimenting at Citizen Matters with diverse formats varying from photos, videos and infographics for an interactive content presentation. Laasya is most proud of her work on beach encroachment and lake pollution, which the NGT took suo moto cognizance of. Currently, Laasya is a principal correspondent at Newslaundry. She tweets at @plaasya.