சென்னையில் அமையவிருக்கும் பேனா நினைவுச்சின்னம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும்

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கருத்துக் கூட்டம்

pen monument public hearing
பேனா நினைவுச்சின்னம் குறித்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பொது கருத்துக் கூட்டம் படம்:ஷோபனா ராதாகிருஷ்னன்.

Translated by Sandhya Raju

தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியத்தை பறைசாற்றும் விதமாக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள்  இயல் இசை நாடகம் ஆகியவற்றிற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அமையவிருக்கும் பேனா நினைவுச்சின்னம், பல்வேறு தரப்பிலிருந்து பல விதமான எதிர்வினைகளை தூண்டியுள்ளது.  

சென்னை மெரினா கடற்கரையிலிருந்து 360 மீ தொலைவில் வங்காள விரிகுடாவில் 134 அடி உயரத்தில் “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்” அமைக்கப்படவுள்ளது. 

இதனால் சுற்றுச்சூழல், கடல் சூழலியல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்துள்ளது.  


மேலும் படிக்க: Women of Ennore are living testimony to the many costs of pollution


பேனா நினைவுசின்னம் கட்டமைப்பு

சென்னையில் கட்டப்படவுள்ள பேனா நினைவுச்சின்னத்தில் இடம்பெறவுள்ல கூறுகள்

  • பேனா பீடம்
  • பாதசாரி மற்றும் கண்ணாடி நடைபாதை
  • பின்னல் வகை நடைபாதை
  • உயரமான நடைபாதை 
Screenshot of the project site layout of Pen Monument in Chennai
PWD வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள திட்ட வரைவு படம்

நினைவுச் சின்னங்கள் மற்றும் அதன் தொடர்புடைய வசதிகளை நிர்யணிக்க மார்ச் 22, 2016-ம் ஆண்டு திருத்தப்பட்ட CRZ அறிவிப்பின் 4(ii) (j) பிரிவின் படி, CRZ-IV (A) பகுதியில் கடற்கரையிலிருந்து 360மீ தொலைவில் வங்காள விரிகுடாவில்  இந்த பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளது. 

அரசுக்கு சொந்தமான கட்டுமானம் மற்றும் கட்டிங்கள் அனைத்தையும் PWD நிர்வகிக்கும் என்றாலும், பேனா நினைவுச்சின்னத்தை பொருத்த வரை இது கடலில் கட்டப்படவுள்ளதால், CRZ அனுமதி பெறுதல் அவசியமாகும். 8551.13 சதுர மீட்டர் பரப்பளவை இது கொண்டதால் (2.11 ஏக்கர்), CRZ-IVA, CRZ IA & CRZ II ஆகியவை இதற்கு பொருந்தும். 

Screen Shot from the Executive Summary of the Pen Monument project released by PWD.
 PWD வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள திட்ட தகவல்

சுமார் 81 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமைக்கப்படவுள்ளது. 

Screen Shot from the Executive Summary of the proposed project released by PWD.
PWD வெளியிட்டுள்ள திட்ட வரைவின் படி கொடுக்கப்பட்டுள்ள செலவு மதிப்பீடு.

மாசு கட்டுப்பாடு வாரியம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியுள்ள நிலையில், மாநில அரசு தனது இறுதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, இறுதி சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் மற்றும் இடர் மதிப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தாக்கல் செய்யும். இந்த அறிக்கைகளுக்கு மத்திய அரசம் அனுமதி அளிக்க வேண்டும்.  

கருத்துக் கேட்பு கூட்டத்தில் வெளிப்பட்ட உணர்வுகள்

தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜனவரி 31 அன்று கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தியது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் நாள் முழுவதும் நடைபெறுமாறு திட்டமிடப்பட்டாலும், கூட்டத்தை மதியம் 1.30 மணிக்கே அதிகாரிகள் முடித்தனர். 100 பேருக்கு மேல் கலைவாணர் அரங்கத்தில் கூடியிருந்தாலும், 30 பேருக்கு மட்டுமே தங்கள் கருத்தை பரிமாற வாய்ப்பளிக்கப்பட்டது.  

மீனவர்களுக்கு பல நல்ல திட்டங்களை கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்தாதால், அவருக்கு கடைமைப்பட்டுள்ளதாக கூறினர். பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவு அளிப்பதன் மூலம், அவருக்கு மரியாதை செலுத்துவதாக அவர்கள் கூறினர். 

 நொச்சிக்குப்பம் பகுதியிலிருந்து வந்திருந்த மீனவர் ஒருவர் கூறுகையில் “இந்த திட்டத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளும் அதே வளையில் இதற்கு கைமாறாக, 40 ஆண்டு காலமாக குடியிருப்பு அமைத்துத் தருவதாக கூறும் அரசு, அந்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்” என மேடையில் கூறினார். 

இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் முன்பாக, தங்களை அரசியல்வாதிகள் சந்தித்து பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தருவதகாவும் கூறி, பேன நினைவுச் சின்னத்திற்கு ஆதரவு கேட்டதாக கூறினர். 

“எங்கள் குறைகாளை கூற வேண்டாம் என அவர்கள் கூறவில்லை, ஆனால் இதனை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்,” எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த கூட்டத்தை பற்றி கடல் உயிரியலாளர் Dr TD பாபு கூறுகையில், “இது மக்கள் கருத்துக் கூட்டம் போல அல்லாமல், கட்சி கூட்டம் போல் இருந்தது, இந்த கூட்டத்தில் இருந்த பலர் கட்சிக்காரர்களாகவும், அல்லது தலைமையின் புகழ் பாடுபவர்களாகவும் தான் இருந்தனர். பொது கருத்துக் கேட்பு என்ற நிலை அல்லாமல், கட்சியின் நிரலாக இது இருந்தது” என தெரிவித்தார். 

உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தலா ஒருவருக்கு 1000 முதல் 1500 கொடுத்து வண்டியில் இவர்களை அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பலருக்கு இது என்ன கூட்டம் என்று கூட தெரியவில்லை. 

“திட்டத்தை எதிர்த்து பேச வந்தவர்களுக்கு போதிய நேரம் கொடுக்கப்படவில்லை. நான் மேடையில் ஏறுகையில், சர்ச்சைக்குரிய  எதையும் பேச வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.” என பகிர்ந்தார் பூவுலகு நண்பர்களின் பிராபகரன் வீரரசு.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கேட்டறிய கூட்டப்பட்ட கூட்டம் அரசியல் விசுவாசத்தை வெளிப்படுத்தும் கூட்டமாக மாறியது.  

சுற்றுச்சூழல் குறித்த கவலைகள்

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய பலரும், நினைவுச்சின்னம் கடலில் அமைக்கப்படுவதால் கடலோர வாழ்வியலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றே கூறினார்களே தவிர கலைஞருக்காக நினைவுச்சின்னம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

“கடற்கரையை மயான பூமியாக ஆக்குவதே கடலோர வாழ்வியலை சீரழிப்பதோடு, மீறலும் ஆகும். நெரிடிக் மண்டலம் (200 மீ ஆழம் வரை பரந்து விரிந்திருக்கும் ஆழமற்ற கடல் சூழல், பொதுவாக கான்டினன்டல் ஷெல்ஃப் தொடர்புடையது) அதிக உற்பத்தி திறன் கொண்ட மீன்பிடி பகுதியை கொண்டது. இந்த உற்பத்தி நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும், இங்த பகுதியில் சூரிய ஒளி, கடல் அடிப்பகுதிக்கு ஊடுருவி செல்கிறது. இந்த பகுதியில் கடலில் கான்கிரீட் கட்டிடவேலை மேற்கொண்டால், சூரிய ஒளி ஊடுருவலை தடுத்து, கடல் உயிரினங்களின் உயிரியலையும் பாதிக்கும்,” என கூறினார் பாபு.

மேலும், இந்த நினைவுச்சின்னம் இரவு நேரத்தில் வெளிச்சத்தால் பிராகசிக்கும், இது கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவு உட்கொள்ளும் முறையையும் பாதிக்கும் என்பதால் கடல் வாழ்வாதரம் முழுவதையும் பாதிக்கும்,” என அவர் தெரிவித்தார்.

“கடல் நீரில் உண்டாகக்கூடும் முக்கிய பாதிப்பு சூரிய ஒளி கடலுக்கடியில் ஊடுரவு ஆகாவிட்டால் குறையும் வெப்ப நிலை.  இது உயிர் வேதியலை பாதிக்கும், கடல் படுக்கையில் வசிக்கும் உயிரனங்களின் இடம்பெயர்தலையும் பாதிக்கும்” என  திட்ட சுருக்க அறிக்கையில் “எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு”  என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கரையோரத்திலிருந்து 360 மீ தொலைவில் எவ்வித பெரிய கடல்வாழ் உயிரினங்கள் இல்லை என்று EIA அறிக்கை கூறினாலும், கடலுக்குள் அமைக்கபடவுள்ள நினைவுச்சின்னம் கூவம் முகத்துவாரத்திலிருந்து 130 மீ தெற்கே உள்ளது என்றும் இது அதிக உற்பத்தி திறன் கொண்ட மீன்பிடித்தளமாகும் எனவும் சென்னை காலநிலை நடவடிக்கை குழு (CCAG) அளித்துள்ள பிரதிநிதித்துவத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டால், சென்னையில் உள்ள மூன்று மீன் உற்பத்தி பகுதியில் (கூவம், அடையாறு, எண்ணூர் முகத்துவாரம்) ஒன்று முற்றிலுமாக அழியும் என தென்னிந்திய மீனவர்கள் நல வாரியத்தின் தலைவர் கே பாரதி கூறினார். 

“இந்த பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் கூறினாலும் நினைவுச்சின்னம் அமையும் பகுதியில் நிச்சயம் எங்களை அனுமதிக்க மாட்டார்கள், கடந்த காலங்களின் இது போன்ற அனுபவத்தை நாங்கள் சந்தித்துள்ளோம்” என மேலும் அவர் கூறினார். 

சுற்றியுள்ள சுமார் 34 மீன்பிடி கிராமங்களை இது வெகுவாக பாதிக்கும், 

நினைவுச்சின்னம் அமையவுள்ள அடிக்கடல்பரப்பு கடவடு சேறு, தரை, பாறு கொண்டது, இது உயிரின பெருக்கத்திற்கு வெகுவாக உதவக்கூடியது. ஒவ்வொரு பருவ மழை காலத்தின் போதும் புதிய வண்டல் ஏற்படுவதால், கெலங்கா, கீச்சான், நண்டு, நாக்கு, உடுப்பா, உடுப்பாத்தி, கலா, மதி, செமக்கீரா, துல்ரா, போ-ரா, திருக்கை, பனங்கியான், வவ்வால் போன்ற பல வகை மீன்கள் உள்ள பகுதியாகும். ஆழ்கடல் மீன்களை பிடிக்க பயன்படுத்தப்படும் இறால் மற்றும் ரிப்பன் மீன் ஆகியவையும் இங்கு உள்ளது.

கடலோர சூழியல் காக்கும் பகுதி மற்றும் CRZ IA, 70 மீ ஆமைகள் உயிரின பெருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைகிறது.


மேலும் படிக்க: Why fisherfolk in Chennai are opposed to beach beautification projects


சிக்கல்கள்

CRZ-IV (A), மார்ச் 22,2016 அன்று திருத்தப்பட்ட CRZ பிரிவு 4 (ii) (j) படி, நினைவுச்சின்னம் கட்ட, சில விதிவிலக்குகள் படி மட்டுமே அனுமதி அளிக்கப்படும், என நினைவுச்சின்னத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன் தனது  கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார். 

இது போக, கடல் நீரோட்டம் குறித்து EIA தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில், நீரோட்டம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இருக்கும். இந்த நினைவுச்சின்னத்தால், மீனவர்களின் சொத்து (மீன்பிடி வலை, படகு) சின்னத்தில் இடித்து பாதிக்கப்படக்கூடும். “இது குறித்து அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை” எனவும் நித்யானந்தம் கூறுகிறார்.

“உண்மை மற்றும் நேர்மை ஆகியவை அறிவியலில் முக்கியம். EIA அறிக்கையில் இது இரண்டுமே இல்லை,” எனபவும் அவர் கூறுகிறார். 

EIA அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை குறிப்பிட்டு பிராபகரன் பேசுகையில், “அறிக்கையில் முதல் இரண்டு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமை உயிர்பெருக்கம் செய்யும் இடம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே அறிக்கையில் 175-ம் பக்கத்தில், கடல் ஆமைகளின் உயிர்பெருக்கும் இடம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் நீரோட்டத்தை பொருத்து கடல் ஆமைகள் தங்கள் வழித்தடத்தை மேற்கொள்ளும். நினைவுச்சின்னம் நிச்சயமாக கடல் ஆமைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்”  

EIA-ந் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் பிராபகரன், சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார பாதிப்பு, திட்ட நலன் ஆகியவற்றை ஆராய்வதே EIA-ன் நோக்கமாகும். “இந்த மூன்றிற்கும் சம அளவு ஒதுக்க வேண்டும். ஆனால், நலனில் மட்டுமே EIA முக்கியத்துவம் அளிப்பதால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது,” என மேலும் அவர் கூறினார். 

மூன்ரு வெவ்வேறு இடங்களை தேர்வு செய்ய வேண்டும். “இங்குள்ள பிரச்சனையே மூன்றும் கடலுள்ளேயே தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் மூன்றாம் இடங்கள், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் நிராகரிப்பட்டுள்ளது, இரண்டாவது இடமும் நிராகரிக்கப்பட்ட முதல் இடத்திலிருந்து வெறும் 130 மீ தூரத்தில் உள்ளதால், இதுவும் நிராகரிக்கப்பட வேண்டும்,” என பிராபகரன் மேலும் கூறினார்,

“கால நிலை குறித்த சர்வதேச அறிக்கைகள் அல்லது சென்னை மா நகராட்சி வெளியிட்டுள்ள சென்னை கால நிலை செயல் திட்டம் ஆகட்டும், இரண்டுமே ஒரே கருத்தை தான் கூறுகிறது. “அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரும் என்பதால், கடலோர பகுதியிலிருந்து 100 மீ கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது,” எனக் கூறும் பிராபகரன், கால நிலை மாற்றம் குறித்த இதை EIA கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்.

1970 முதல் 2000 ஆண்டு வரையிலான மழை தரவை EIA பயன்படுத்தியுள்ளது. “நவம்பர் 2022-ல் சென்னையில் 1044.33  mm மழை பெய்துள்ளது, ஆனால்  EIA அறிக்கையின் 133 பக்கத்தில் 361.6 mm என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சுற்றுச்சூழல் தாக்கத்தை,  22 வருட தரவை கொண்டு எப்படி அளவிட முடியும்? என வினவுகிறார் பாரதி.

தற்போதைய போர்க்களமாக நீதிமன்றங்கள்

மெரினா கடற்கரையில் அமைக்கபடவிருக்கும் பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது போன்ற அரசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களை பரிந்துரை செய்கையில், முந்தைய தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்படுகிறது. பேனா நினைவுச்சின்னத்தை பொருத்த வரையில், மகாராஷ்டிராவின் சத்திரபதி சிவாஜி சிலை குறிப்பாக பயன்படுத்தப்பட்டது. இது போன்ற நினைவுச் சின்னங்களுக்கு பின் உணர்வுகள் மேலோங்கி இருந்தாலும், சுற்றுச்சூழல் பொருத்த வரை ஒவ்வொன்றும்  வேறுபடும் என்பதை புரிந்து கொள்ள வேன்டும். 

நினைவுச்சின்னம் எழுப்புவது மட்டுமே தான் தலைவருக்கு செலுத்தும் மரியாதையா என இதை எதிர்க்கும் சிலர் வினவுகின்றனர். “கலைஞருக்கு நூலகம் பிடிக்கும், அண்ணா நூற்றாண்டு  நூலகம் அமைத்தவர். அவர் இருந்திருந்தால் கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரித்து இருப்பாரா?” எனவும் ஒருவர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.  

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Shobana Radhakrishnan 110 Articles
Shobana Radhakrishnan is a Senior Reporter at Citizen Matters. Before moving to Chennai in 2022, she reported for the national daily, The New Indian Express (TNIE), from Madurai. During her stint at TNIE, she did detailed ground reports on the plight of migrant workers and the sorry-state of public libraries in addition to covering the renowned Jallikattu, Tamil Nadu Assembly Elections (2021) and Rural Local Body Polls (2019-2020). Shobana has a Masters degree in Mass Communication and Journalism from the Pondicherry Central University and a Bachelors in English Literature. She keenly follows the impact of development on vulnerable groups.