ஆக்சிஜன் நெருக்கடி: உண்மை நிலை என்ன

சென்னை ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நோயாளி படம்: லாஸ்யா சேகர்

Translated by Sandhya Raju

தன் தந்தையின் ஆக்சிஜன் செறிவு அளவு 78 ஆக குறைந்தபோது, ஈசிஆர்-ல் வசிக்கும் இந்துலேகாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டம் தொற்றிக்கொண்டது. தன் 72 வயது தந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் நிலை அவருக்கு இல்லை. “வென்டிலேடர் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் செலவாகும் என்றார்கள். எங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் இதை எப்படி சமாளிக்க முடியும்” என வினவும் இந்துலேகாவிற்கு அரசு மருத்துவமனை தான் ஒரே தீர்வு.

மே மாதம் 4-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை வாசலில் மணிக்கணக்காக காத்துக் கிடந்தனர். “104 உதவி மையத்திற்கு தொடர் அழைப்பு பலன் அளிக்கவில்லை. உதவி மைய ஊழியர்கள் பதில் அளித்தாலும், அவர்களால் இந்துலேகாவின் தந்தைக்கு ஆக்சிஜன் படுக்கையை வழங்க முடியவில்லை.” என்கிறார் இந்துலேகாவிற்கு உதவி செய்த கோவிட் தன்னார்வ படையை சேர்ந்த தன்னார்வலர் பாரதி ரமணன்.

ஒரு நாள் கடும் போராட்டத்திற்கு பின், மே 5-ஆம் தேதி, அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

மே 10 நிலவரப்படி, சென்னையில் உள்ள எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் அபாய கட்டத்திலுள்ள கோவிட் நோயளிகளுக்கு படுக்கை காலி இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையின் கோவிட் சிகிச்சை பிரிவில், படுக்கையின்றி நோயாளிகள் தரையில் கிடக்கும் அவலம் உள்ளது, என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர்.

கோவிட் தொற்றுக்கு தன் குடும்ப உறுப்பினரை இழந்து வாடும் ஒரு பெண். படம்: சம்பத்

ஆக்சிஜன் தட்டுப்பாடு

புது தில்லியிலும், பெங்களூருவிலும் நடந்த நிகழ்வு தற்போது சென்னைக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தனியார் மருத்துவமனைகள் புதிய நோயோளிகளை அனுமதிக்க மறுக்கின்றன. “புதிய நோயாளிகளை அனுமதிக்கும் நிலைமையில் இல்லை, ஏனென்றால் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே போதிய ஆக்சிஜன் இருப்பு உள்ளது” என்கிறார் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனுப்பிய கோரிக்கையை அடுத்து, நாளொன்றுக்கு 220 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் விநியோகத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ், தமிழ்நாடு ஆக்சிஜன் பிரைவேட் லிமிடட் போன்ற பல ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் நகரத்தில் உள்ளன. இருப்பினும், சென்னையில் ஏன் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

ஆக்சிஜன் விநியோக தளவாடங்கள் தான் பெரும் சவாலாக உள்ளது. “மருத்துவமனைகளுக்கு, அதுவும் அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளித்து ஆக்சிஜன் விநியோகிக்குமாறு சென்னை மாநகர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவு படி வழங்குவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.” என்கிறார் அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு ஆக்சிஜன் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் ஜி யுவராஜ். 24 மணி நேரமும் செயல்படும் இந்நிறுவனம் தினந்தோறும் 10 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது.

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குப் பின்னால் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இணை காரணிகள் உள்ளன. “போக்குவரத்திற்கும் சேமிப்பிற்கும் கிரியோஜெனிக் டாங்கர்கள் இல்லை. இதனை உருவாக்க ஒரு மாதத்திற்க்கு மேல் ஆகும்” என்கிறார் யுவராஜ்.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் ஆக்சிஜன் சிலின்டர். படம்: லாஸ்யா சேகர்

அரசு மருத்துவமனைகளில் உள்ள கிரியோஜெனிக் டாங்கர்களில் பத்து நாட்களுக்கான ஆக்சிஜனை சேமித்து வைக்க முடியும், ஆனால் தனியார் மருத்துவமனைகளில் இவை குறைந்த அளவிலேயே உள்ளதால் சவாலாக உள்ளது. “ஆர்டர் செய்த ஐந்து நாட்கள் பிறகே ஆக்சிஜன் பெற முடிகிறது. இந்த அளவுக்கு தேவை அதிகரிக்கும் என கணிக்காததால், குறைந்த அளவே சிலின்டர் உள்ளது. தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும் சிலிண்டர்களை தற்போது வாங்கி வருகிறோம். ” என தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.


Read More: Why are patients struggling to find hospital beds in Chennai?


தவறு எங்கே நடந்துள்ளது?

தொற்று எண்ணிக்கை உயர, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. “அதிகரித்துள்ள தேவையால் ஆக்சிஜன் சிலிண்டர் விலையை விநியோகஸ்தர்கள் உயர்த்தி உள்ளனர். மருத்துவமனைகள் இவர்களுடன் பல்லாண்டு காலமாக ஒப்பந்த அடிப்படையில் பெற்று வந்தாலும், விலை அதிகரிப்பால், மாற்று விநியோகத்தை நாடவேண்டிய சூழல் எழுந்துள்ளது.” என்றும் அரசு மருத்துவமனையிலும் தட்ட்ப்பாடு எழுந்துள்ளதாக ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கூறினார். “இங்கே சுமார் 30 உயர் ஓட்ட நாசி கானுலா படுக்கைகள் உள்ளன ( மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அதிக அளவு ஆக்ஸிஜன் இதில் வழங்கப்படுகிறது). ஆனால் அவை ஏராளமான ஆக்ஸிஜனை உட்கொள்வதால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை, மேலும் இருப்புகளை முழுவதும் உபயோகிக்கமுடியாது. இதனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சாதாரண வார்டுகளில் பல நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் நிலைமையை கணிக்க தவறியதும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், “அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் ஏன் சேர்க்கப்படவில்லை? தனியார் மருத்துவமனைகள் ஏன் ஆக்சிஜன் போக்குவரத்தை கருத்தில் கொள்ளவில்லை? இரண்டாவது அலை தாக்கக்கூடும் என்ற நிலையில் போதுமான முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்யவில்லை,” என்கிறார் சமூக சமத்துவத்திற்கான சென்னை மருத்துவ சங்கத்தின் செயலாளர் Dr. சாந்தி ரவிந்திரநாத்.

“தொற்று இங்கு அதிகரித்து வரும் நிலையிலும், தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்திற்கான தேவையை மத்திய அரசு தவறாக கணக்கிட்டுள்ளது,” என மேலும் அவர் தெரிவித்தார்.

காய்ச்சல் போன்ற லேசான அறிகுறி உள்ளவர்கள் கூட மருத்துவ உதவி பெறும் வகையில், நகரத்தில் பல கோவிட் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இரண்டாவது அலையில் தொற்று அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், நிமோனியா மற்றும் குறையும் SpO2 அளவால், ஆக்சிஜன் படுக்கையின் தேவை அதிகரித்து உள்ளது.

போதிய ஆக்சிஜன் இருப்பு ஆனால் படுக்கை இல்லை

“ஆக்சிஜன் அளவு 90% குறைவாக உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவை. ஆக்சிஜன் அளவு குறைவதை கண்டறிந்தவுடன், பாதிக்கப்பட்டவரோ அல்லது அவர் உறவினரோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.” என்கிறார் எம்.ஜி.எம் ஹெல்த்கேரின் உள் மருத்துவ பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஸ்ரீவித்ய வெங்கட்ராமன். தொடக்கத்தில், இந்த நோயளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தன, ஆனால் தற்போது தொற்று அதிகரித்துள்ள நிலையில், போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு இருந்தாலும், அரசு மருத்துவமனைகள் எமெர்ஜன்சி நிலையில் வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. காரணம்: போதிய படுக்கைகள் இல்லை.

ஒமந்தூர் அரசு மருத்தவமனை வாசலில் படுக்கைக்காக காத்திருப்பவர்கள். படம்: ஜான் விக்டர்

அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகளில் படுக்கை இல்லாத சூழலில், தினந்தோறும் மரண எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எப்படியாவது படுக்கை கிடைக்க வேண்டும் என போராடி வருகின்றனர். சென்னை அரசு மருத்துவமனைகளின் வாசலில் காத்துக்கிடக்கும் நீண்ட மக்கள் வரிசை, நிலைமையின் தீவிர்த்தை உணர்த்துகிறது.

தனது 55 வயது உறவினருக்கு படுக்கைக்காக கிட்டத்திட்ட 50 தனியார் மற்றும் அரசு மருத்துவமனையை நாடியதாக, கூறுகிறார் பி.ஜி. வெங்கடேஷ். “மூச்சு விடுவதில் சிரமமாக இருந்ததால், உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டது. ஆனால், ஒரு நாள் தேடலின் பின்னரே அவருக்கு மருத்துவமனை அனுமதி பெற முடிந்தது. சில மருத்துவமனைகள் தொலைபேசி அழைப்புகளை கூட எடுக்கவில்லை,” எனக் கூறும் வெங்கடேஷ், தன் உறவினரை சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பத்து நாள் கடந்த பின்னரும் அவரின் உடல் நிலை அபாய கட்டத்தில் தான் உள்ளது.

“படுக்கை இல்லாததால் குறைந்தது 20 பேராவது வீடு திரும்பும் நிலை உள்ளது. மருத்துவமனையில் உள்ள மொத்தம் 150 ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளும், 760 வார்ட் படுக்கைகளும் நிரம்பியுள்ளன,” என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுள்ள பிஜி மருத்துவர்.


Read More: COVID second wave in Chennai: What to do if you test positive


நிதர்சன நிலை

மோசமடைந்துள்ள தற்போதைய நிலையில், மருத்துவ நிர்வாகம் நோயாளிகளை தேர்ந்தெடுத்து அனுமதிக்கும் நிலை உள்ளது. சென்னை சிடிசன் மேட்டர்ஸ் மேற்கொண்ட உண்மை நிலை சோதனையில், நோயாளியின் வயது, சிடி ஸ்கான் மற்றும் SpO2 நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டே அனுமதிக்கப்படுகின்றனர் என காண முடிந்தது. குறைந்த SpO2 அளவுடன் இருந்த 74 வயதான கோவிட் நோயாளிக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனை அனுமதி மறுத்துள்ளது.

களத்தில் உள்ள தன்னார்வலர்கள் நிலைமையை நம்மிடம் பகிர்ந்தனர். ” ஒரு 50 வயது நோயாளியின் அதே SpO2 அளவு உடைய 35 வயது நோயாளிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உள்கட்டமைப்பில் குறைபாடு உள்ள உண்மை நிலையில், நிர்வாகம் தேர்ந்தேடுத்தே அனுமதி வழங்குகிறது.” என்கிறார் கடும் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவமனை அனுமதி பெறுவதில் உதவி புரியும் பாரதி ரமணன்.

இந்த சூழலிலும், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது சுகாதாரத்துறை. “தேவைப்பட்டால் 5000 கூடுதல் படுக்கையை அமைக்க தயாராக உள்ளோம். கேரளாவிலிருந்தும் நம் மாநிலத்தின் உள்ள விநியோகிப்பை கொண்டும் தற்போதைய தேவையை பூர்த்தி செய்கிறோம். ” என்கிறார் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் Dr. டி.எஸ்.செல்விநாயகம். சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க போதுமான ஆக்சிஜனை அரசு சேமித்து வைத்திருக்கிறதா என்று கேட்டபோது, ​​மாநிலத்தின் முக்கிய அரசு மருத்துவமனைகளில் 1200 மெட் டன் ஆக்சிஜன் சேமிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

போதிய கட்டமைப்பு இல்லாத இடங்களில் இந்த சேமிப்பு எவ்வாறு அளிக்கப்படும் என்பது கேள்விக்குறியே. “நான் சாகப்போகிறேன். எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்கும் என நம்பிக்கையில்லை. வீட்டுக்கு போகலாம்” இதுவே இந்துலேகா தந்தையின் கடைசி வார்த்தைகள். இரண்டாம் அலை தொடங்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கட்டமைப்பை மேலும் உறுதி படுத்தியிருந்தால், இந்துலேகாவின் தந்தை போன்று பலர் இன்று உயிரோடு இருந்திருக்கக்கூடும்.

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Laasya Shekhar 287 Articles
Laasya Shekhar is an independent journalist based in Chennai with previous stints in Newslaundry, Citizen Matters and Deccan Chronicle. Laasya holds a Masters degree in Journalism from Bharathiar University and has written extensively on environmental issues, women and child rights, and other critical social and civic issues. She tweets at @plaasya.