ஏழுமாத அடைப்புக்குப் பின் திறக்கப்பட்ட திரையரங்குகளின் நிலை? – ஒரு கண்ணோட்டம்

திரையரங்குகளின் நிலை

புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாததால் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. படம் மால்டிங்ஸ் பெருவிக் (CC BY:SA 3.0)

வெள்ளிக்கிழமை என்றவுடன் கோயில், பூஜை என உங்கள் மனதிற்குத் தோன்றினால் நீங்கள் ஒரு பக்தர், வாரத்தின் இறுதி வேலை நாள் என்று தோன்றினால் நீங்கள் ஒரு வேளை ஒரு ஐ.டி. நிறுவன ஊழியராக இருக்கலாம். ஆனால், புதுப்பட ரிலீஸ் பற்றிய சிந்தனையில் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு சினிமா ரசிகர்தான். ஒரு தீவிர சினிமா ரசிகனுக்கு வெள்ளிக்கிழமை என்பது புதுப்படங்கள் ரிலீசாகும் நாள் என்றுதான் தெரியும், அவ்வாறு வெளியாகும் புதுப்படங்களைத் தன் நண்பர்களுடன் தியேட்டருக்குச் சென்று ஆரவாரத்துடன் கண்டுகளிப்பதில் அலாதி இன்பம்.

அதுவும் தன்னுடைய ஆதர்ச நாயகன் நடித்த படமென்றால், கேட்கவே வேண்டாம். தோரணம், பட்டாசு, கட்அவுட்டுகள் பாலாபிஷேகம் என களைகட்டும். பெரிய கதாநாயகர்களின் படங்கள் பெரும்பாலும் முக்கியமான பண்டிகைகளையொட்டியே வெளியிடப்படும் என்பதும் அது பண்டிகைக்கால உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் அம்சமாகவும் இருந்து வருகிறது.

இத்தகைய பண்டிகை நாள்களில், குடும்பங்களாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் தியேட்டர்களை நோக்கி படையெடுப்பதும், அந்நிகழ்வு பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரலில் நிரந்தர இடம்பெற்ற ஒன்றென்றால் அது சிறிதும் மிகையல்ல. 

காற்றாடும் திரையரங்குகள்

ஊரடைப்பு விதிமுறைகளின் விளைவாகக் கடந்த ஏழு மாதங்களாக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தற்போது மீண்டும் சில வரைமுறைகளை உறுதி செய்யும் நிபந்தனைகளுடன்  திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தாலும், அங்கு செல்வதற்கான ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளதை அரங்கத்தின் காலி இருக்கைகள் பறை சாற்றுகின்றன.

இதற்குக் காரணம் தாங்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரபல திரைப்படங்கள் எதுவும் திரையிடப்படாததுதான் என்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்படங்கள் இல்லாத தீபாவளி

புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்கள் வரிசையில் புதுப்படத்திற்கான டிக்கெட்டும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் அளவுக்கு அதனுடன் ஒன்றிப்போனது ஒரு தீவிர சினிமா ரசிகனின் வாழ்க்கை. மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமல் கூட தீபாவளி கடந்திருக்கலாம், ஆனால் பெரிய நடிகர்களின் பிரமாண்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் இதுவரை இருந்ததில்லை. 

தற்போது தீபாவளிக்கு நான்கு புதிய படங்கள் திரையிடப்பட்டும், இன்னும் பெரிய அளவில் பல திரையரங்குகளில் கட்டணக் குறைப்பு செய்திருந்தும் இளைஞர்களின் கூட்டம் தியேட்டர்களுக்கு வராததன் காரணம் அவர்களின் அபிமான நடிகர்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததுதான் என்பதையின்றி வேறெதனை நாம் கூற முடியும்.

ஓடிடி தளங்களின் பங்களிப்பு

இன்னொரு புறம் ஓடிடி தளங்கள் மூலம் ஓரிரண்டு பிரபல படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்பட்டு வெற்றிகரமான வசூலை அவை பெற்றுத் தந்திருந்தாலும் திரையரங்குக்குக் கூட்டமாக சகரசிகர்களுடன் சென்று பெரிய திரையில் சிறப்பான ஒலி அமைப்புகளுடன் ரசித்து கூச்சலிட்டு குதூகலிக்கும் மகிழ்ச்சியை இவை தருவதில்லை என்கிற கூற்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு உற்சாகத்தைத் தருவதுடன் தாங்கள் எதிர்கொண்டிருக்கும் ஏகப்பட்ட சவால்களுக்கு மத்தியில் திரையரங்குகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான ஒரு நம்பிக்கைக் கீற்றாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இருப்பினும் ஓடிடி தளங்களின் பங்களிப்பு ஒரு தீவிர சினிமா ரசிகனுக்கு சோளப்பொரி அளவுக்காவது ஆறுதலளித்தது என்று நிச்சயமாகக் கூறலாம். 

ஆகவே தான், சில திரையரங்குகள் ஒரே பொதுக் கட்டணமாக மிகவும் குறைந்த தொகையாக 60 ரூபாயென்று அறிவித்தும், தற்போது திரையிடப்படும் படங்களுடன் பலரும் எதிர்பார்க்கும் பெரிய நடிகர்களுடைய  படங்களின் டீசர் காண்பிக்கப்படும் என்று அறிவித்தும் கூட அது ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதுபோன்றே, சில திரையரங்குகளில் காட்சி முடிந்ததும் பார்வையாளர்களைப் பாராட்டும் முகமாக திரையரங்கின் ஊழியர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியூட்டி உள்ளனர். ஆனாலும் அரங்கம் நிரம்பிட இது போதுமானதாக இல்லை. 

அதுமட்டுமின்றி அரங்கம் நிரம்பாதற்கான இன்னும் சில காரணங்களாக; கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழமையான உற்சாக உணர்வுக்கு ஏதுவாக இல்லை எனவும் உணவு ஆர்டர் செய்வதோ சாதாரண பாப்கார்ன் வாங்குவதோ கூட பெரிய ஏற்பாடுகளுடன் இருந்ததாக சென்றவர்கள் கூறுவதும், எல்லாமே பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது ஒரு அசாதாரண உணர்வை அவர்களுக்குத் தந்ததாக கூறுவதும் கூட காரணமாகலாம். 

இதன் விளைவாக மிகக் குறைந்த பார்வையாளர்களே வருவதாலும், திரைப்பட வெளியீட்டு அமைப்புகளுக்கு இடையில் சிலவகைக் கட்டணங்களை முறைப்படுத்த முடியாது பேச்சுவார்த்தை தொடர்வதாலும் இப்போதைக்கு பெரிய படங்கள் திரையிடும் வாய்ப்பு இல்லாது போகவே, இனி திங்கள் முதல் வியாழன் வரை திரையரங்குகளை மூடி வார இறுதி நாட்கள் மட்டுமே காட்சிகள் திரையிட முடிவெடுத்துள்ளனர் தனி அரங்குகளைக் கொண்டவர்கள். மல்டிபிளக்ஸ்களின் நிலை ஒன்று அல்லது இரண்டு அரங்குகளை மட்டும் சில காட்சிகளுக்காக இயக்குவதாகத் தெரிகின்றது. 

பாதிக்கப்பட்டோரின் குரல்கள்  

இதுபோன்ற விஷயங்களை நாம் பேசும் போது இந்த சூழலால் பாதிப்படைந்தவர்களை ஒதுக்கிவிட்டு பேச முடியாது. ரசிகர்களுக்கு இப்படியொரு இனிய அனுபவத்தைத் தருவதற்கு காரணமாக இருப்பவர்களான திரைப்படத் துறையை சார்ந்த நடிகர்கள், இயக்குநர்கள்  மட்டுமல்லாது தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஒருபுறமாகவும், விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என மறுபுறமாகவும் என எல்லோருக்கும் கடுமையான பாதிப்பு தான் என்றாலும் இவர்களை சார்ந்து அன்றாட வருவாயின் மூலம் வாழ்வை நகர்த்தி பல வகையான தளங்களில் பயணித்தோர் நிலை தான் மிகவும் சோகமயமானது என்று கூறலாம்.

அத்துடன், திரையரங்குகளை ஒட்டி பெரும் தொகை முதலீடு செய்து நடத்தி வந்த சிற்றுண்டிக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளின் உரிமையாளர்கள் கூடவே அதன் ஊழியர்களின் நிலை தான் இதுவரை அனுபவித்திராத ஒரு மிகப்பெரும் நெருக்கடியாக உள்ளது.

சமீபத்தில் வடசென்னையில் 1967 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இயங்கி வந்த ஒரு திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுவதாக வந்த செய்தி நிலைமையின் கடுமையை நமக்குக் கூறுகிறது. இதுபோல் இன்னும் பல திரையரங்குகள் அறிவிப்பென்று இல்லாவிட்டாலும் மூடப்பட்டே இருக்கிறது என்பதும் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் தான். 

திரையரங்குகள் எப்போது நிரம்பும்?

நவம்பர் 10 ஆம் தேதியன்று தமிழக அரசு திரையரங்குகளை நிபந்தனைக்குட்பட்டு திறக்கலாம் என்று அறிவித்ததும் வழமை போல தீபாவளிக்கு அபிமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும் சூழல் வந்து விட்டதாகவே பலரும் நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் அரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வரைமுறை வகுத்ததும், பலகோடி முதலீட்டைக் கொண்டு அதற்குரிய லாபத்தினை அடைய இயலாத நிதர்சன நிலையே ரசிகர்களின் ஏமாற்றத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக நிலைமை சென்று கொண்டிருந்த தருணத்தில் திரையிடல் சம்பந்தமான கட்டண அமுலாக்கத்தில் முடிவை அறிவிக்க வேண்டியிருந்த யு எஃப் ஓ (UFO) மூவீஸ் எனும் அமைப்பு  கடந்த நவம்பர் 20 அன்று ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை இழுபறியாகி வந்த அதன் கட்டண அமுலாக்கம் நல்லதொரு தீர்வை தந்துள்ளதாக தெரிகிறது. 

இந்த முடிவு மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஜயின் மாஸ்டர் படம் இல் திரையிடப்படாமல் தியேட்டரில் மட்டுமே திரையிடப்படும் என்ற முடிவும் வரும் மாதங்களில் திரையரங்குகள் நிரம்ப வாய்ப்பிருக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Vadivu Mahendran 17 Articles
Vadivu Mahendran is a resident of Mogappair, Chennai. She has been largely involved in working with children and adolescents, and also translates program materials for their study. Occasionally, she enjoys writing Tamil poetry about human qualities and preservation of nature.