சமையலறைக் கழிவுகளிலிருந்து உயிர்வாயு தயாரிப்பு: எல்பிஜி செலவை குறைக்கும் முறை

கழிவுகளிலிருந்து செல்வச்செழிப்பு: குடியிருப்பு உயிர்வாயு ஆலைகள்

Biogas burner in use
Biogas burner being used to boil milk in Maria Roseti Jansi's kitchen. Pic: Padmaja Jayaraman

Translated by Sandhya Raju

கீழ்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும்78 வயது டி சுரேஷ், 2012-ம் ஆண்டு முதல் இது வரை ஆண்டுக்கு 2 எல்பிஜி சிலிண்டர் மட்டுமே வாங்கியிருக்கிறார். தினமும் அவர் குடும்பம் வெளியே சாப்பிடுவதில்லை, எலெக்ட்ரிக் அல்லது இண்டக்ஷன் அடுப்பையும் உபயோகிப்பதில்லை. “இதில் ஒன்றும் பெரிய சூட்சமம் இல்லை,” என கூறும் சுரேஷ், கடந்த 9 ஆண்டுகளாக சமையலறை கழிவுகளிலிருந்து அவர்களுக்கான சமையல் எரிவாயுவை தயாரிக்கிறார். இது எந்தவொரு ஆய்வகத்தில் தயாரிக்கப்படுவதில்லை, தன் சொந்த வீட்டிலேயே அவர் நிறுவியுள்ள உயிர்வாயு அமைப்பு மூலம் பெறுகிறார்.

சமையல் எரிவாயுவை உருவாக்குவதைத் தவிர, உயிர்வாயு வெளியிடும் மிச்சம் தாவரங்களுக்கு கரிம உரமாக பயன்படுத்தலாம்.

பல வருடங்களாக மேற்கூரை சோலார் பேனல் வைத்திருக்கும் இவரிடம் பலர் இது குறித்து ஆலோசனை கேட்டுச் செல்கின்றனர். “சுமார் 10 வருடங்கள் முன், என்னுடைய சோலர் நிறுவலை கஆண வந்த ஒருவர், தான் உயிர்வாயு வணிகம் செய்வதாக தெரிவித்தார். எங்கள் உரையாடலின் போது, சமையல் கழிவுகாளிலிருந்து சமையல் எரிவாயு தயாரிப்பு குறித்து குறிப்பிட்டார். அது என்னை மிகவும் கவர்ந்தந்து,” என சுரேஷ் நம்மிடம் பகிர்ந்தார்.

தற்பொழுது சுரேஷின் 2000 சதுர அடி தனி வீட்டில் முன்புள்ள புல்வெளியில் உள்ள செடிகள் , சோலார் பேனலைத் தாங்கிய அவரது மொட்டை மாடி, மற்றும் அவரது கொல்லைப்புறத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கிணறு மற்றும் உயிர்வாயு ஆலைஎன பல விஷயங்களில் பலருக்கு உதாரணமாக உள்ளது –


Read more: Solar rooftop for your home in Chennai: Challenges and solutions


உயிர்வாயு ஆலையை நிறுவுதல்: குறிப்புகள்

“ஒரு உயிர்வாயு ஆலை மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது – ஒரு டைஜெஸ்டர், ஒரு எரிவாயு சேமிப்பு கொள்கலன் மற்றும் ஒரு பர்னர்,” என கூறுகிறார் பயோகேஸ் விற்பனையாளர் எம் ஜெகதேஷ்.

அவரது சமையலறை கழிவுகளை ஒரு பெரிய வாளியில் சேமிக்கிறார்

Kitchen waste to be fed to biogas set-up
சமையலறை கழிவுகளை சேகரிக்கும் சுரேஷ். படம்: பத்மஜா ஜெயராமன்.

சமையலறைக் கழிவுகளை அரைத் திடக் கூழாக மாற்றுவது அவசியம், இது திடக்கழிவுகள் அடைத்துக் கொள்ளாமல, உயிர்வாயு உற்பத்திக்கு இடையூறாக இல்லாமல் உதவும் என்று ஜெகதேஷ் அறிவுறுத்துகிறார்.

கழிவுகளை ஒரு கிரஷர் பொருத்தப்பட்ட மடு வழியாக அனுப்புகிறார், கழிவு கூழாக வெளியேறுகிறது. கழிவுகளை மிக்ஸியிலும் பதப்படுத்தலாம் என மேலும் கூறுகிறார் ஜெகதீஷ்.

Sink and crusher in biogas installation
சமையலறை கழிவுகளை கூழ் வடிவமாக மாற்றும் தொட்டியில் பொருத்தப்பட்ட கிரஷரை சுரேஷ் சுட்டிக்காட்டுகிறார். படம்: பத்மஜா ஜெயராமன்

பதப்படுத்தப்பட்ட சமையல் கழிவுகள் ஒரு பெரிய தொட்டி வடிவ டைஜஸ்டரில் போடப்படுகிறது. இங்கு தான் உயிர் வாயு தயாரிக்கப்படுகிறது. ஈரமான கழிவுகளை டைஜஸ்டரில் போடும் போது, ​​பாக்டீரியாக்கள் கழிவுகளை உடைத்து உயிர்வாயுவை உருவாக்குகிறது, இதுவே தாவரங்களுக்கு கரிம உரமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு துணைப் பொருளாகிறது. இந்த செயல்முறை காற்றில்லா செரிமானம் ( anaerobic digestion ) என்று அழைக்கப்படுகிறது.

டைஜஸ்டர் பெரும்பாலும் ஒரு உறுமாற்றப்பட்ட சின்டக்ஸ் தொட்டி, என்கிறார் ஜெகதீஷ். நிலத்தை தொடும் தொட்டி தான் சுரேஷின் உயிர்வாயு ஆலையின் டைஜஸ்டர் ஆகும். தொட்டியின் இடது புறம் உள்ள கிண்ணம் போன்ற அமைப்பில் சமையல் கழிவுகளை போடுகிறார் சுரேஷ்.

டைஜெஸ்டருக்கு சற்று மேலே, மிதக்கும் டிரம் உள்ளது, இது கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் மேல் தொட்டி போன்ற அமைப்பாகும்.

Biogas digestor system
சுரேஷ் வீட்டில் உள்ள டைஜஸ்டர் அமைப்பு படம்: பத்மஜா ஜெயராமன்

கீழ்த் தொட்டியில் உயிர்வாயு உற்பத்தி செய்யப்படுவதால், மேலே உள்ள எரிவாயு சேமிப்புக் கொள்கலனை நிரப்ப, அது மேல்நோக்கிச் செல்லும்.

பின்னர் உயிர்வாயு படிப்படியாக உபயோகப்படும் போது, ​​மிதக்கும் டிரம் கீழே தள்ளப்படுகிறது. டிரம் பாதியளவு குறைந்தவுடன், சுரேஷ் அடுத்த தொகுதி கழிவுகளை டைஜெஸ்டரில் செலுத்துகிறார்.

இதற்கு மாற்றாக, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மரியா ரோசிட்டா ஜான்சி தனது வீட்டில் செய்ததைப் போல, மிதக்கும் டிரம்முக்கு பதிலாக ஒரு பை அமைக்கலாம். டைஜெஸ்டர் உயிர்வாயுவை உற்பத்தி செய்வதால் பை உயர்த்தப்படுகிறது. பையை தவறாமல் சரிபார்த்து, அது ஒரு கட்டத்திற்கு பின் தனது அடுத்த தொகுதி கழிவுகளை டைஜெஸ்டருக்கு ஊட்டுகிறார்.

Floating bag to collect biogas produced
மிதக்கும் டிரம்மிற்கு பதிலாக, சுவர்ரை ஒட்டி மிதக்கும் பையை அமைத்துள்லார் மரியா.
படம்: பத்மஜா ஜெயராமன்.

சேமிக்கப்பட்ட எரிவாயு, எரிவாயு குழாய்கள் வழியாக சமையல் செய்யும் பர்னருடன் இணைகிறது. மிதக்கும் டிரம்மை சுரேஷின் சமையலறையில் உள்ள பர்னருடன் குழாய்கள் இணைக்கின்றன. வீட்டு முற்றத்தில் உள்ள சுவர்களில் குழாய்கள் அவரது சமையலறை ஜன்னல் வழியாகச் சென்று பர்னருடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பிற்கு சுமார் ₹40,000 செலவழித்ததாக கூறுகிறார் சுரேஷ்.

Biogas connection to the burner through pipes
சுரேஷின் சமையலறையில் உள்ள எரிவாயு குழாய் இணைப்புகள். படம்: பத்மஜா ஜெயராமன்.

டைஜஸ்டரில் உயிர்வாயு உற்பத்தி செய்யப்படுவதை போல், கீழே உள்ள படத்தில் உள்ளபடி, அது வெளியிடும் மிச்சம் ஒரு தனி வாளியில் சேகரிக்கப்படுகிறது. இதை தண்ணீரில் கரைத்து, தனது செடிகளுக்கு உரமாக சேர்க்கிறார் சுரேஷ்.

Collection of biogas slurry
படம்: பத்மஜா ஜெயராமன்

உயிர்வாயு தயாரிப்பில் உள்ள சூட்சமம்

எட்டு மாதங்கள் முன் உயிர்வாயு அமைப்பை மாரியா அமைத்த போது, 500 லிட்டர் டைஜஸ்டரில் முதலில் மாட்டு சாணத்தை தான் போட்டார். “துவக்கத்தில் டைஜஸ்டரில் ஏதேனும் கழிவுகளை போட வேண்டும், இதற்கு மாட்டுச்சாணம் தான் உகந்தது. இது பாக்டீரியவை உருவாக்கி, சமையல் கழிவுகளுடன் கலக்கும் போது, உயிர்வாயு தயாராகிறது,” என விளக்கினார் சுரேஷ்.

“உயிர் எரிவாயு என்பது மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும். மீத்தேன் எரியக்கூடிய தன்மையை சமையலுக்கு ஏற்றதாக வழங்குகிறது,” என்று SRM இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் உயிரி தொழில்நுட்ப உதவிப் பேராசிரியர் டாக்டர் பி சாமுவேல் ஜேக்கப் விளக்குகிறார்.

“மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்வதற்கு ‘மெத்தனோஜெனிக் பாக்டீரியா’ என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா தேவை, மேலும் இது கால்நடைகளின் செரிமான அமைப்பில் ஏராளமாக உள்ளது, எனவே சாணத்தில் கிடைக்கிறது. கால்நடைகளின் சாணத்திற்கு மாற்றாக சாக்கடைக் கசடு உள்ளது, இது கழிவுநீரின் அடிப்பகுதியில் இருந்து எச்சமாகும். ஆனால், கால்நடைகளின் சாணம் உயிர்வாயு டைஜஸ்டர்ற்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான தொடக்கமாகும். சமீபத்தில், கால்நடைகளின் சாணத்தை மாற்றக்கூடிய ஆயத்த நுண்ணுயிர் கரைசல்கள் சந்தையில் கிடைக்கின்றன,” என்கிறார் பேராசிரியர் சாமுவேல்.

“மாட்டுச் சாணத்திற்கு மாற்று சந்தையில் கிடைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவற்றின் செயல்திறனைச் சரிபார்க்க நடைமுறையில் அவற்றை நாங்கள் இன்னும் சோதிக்கவில்லை. பசுவின் சாணம் [நகரில்] எளிதாகக் கிடைக்கிறது மற்றும் நன்றாக வேலை செய்கிறது.” என ஜெகதீஷ் மேலும் கூறுகிறார்.

இருப்பினும், பசுவின் சாணத்தை ஒவ்வொரு முறையும் அல்லது அடிக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உயிர்வாயு உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து பசுவின் சாணத்தை டைஜெஸ்டருக்கு சுரேஷ் ஊட்டவில்லை. “எனது பகுதியில் மாட்டுச் சாணம் கிடைக்காது,” என்று அவர் கூறுகிறார். தனது பகுதியில் சாணம் கிடைப்பதால் ஜான்சி எப்போதாவது அதை தனது டைஜெஸ்டரில் உபயோகப்படுத்துவார்.

முதல் முறை பசுவின் சாணத்தை ஊட்டுவது அவசியம், ஆனால் முதல் தொகுதி உயிர்வாயு உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, சமையலறை கழிவுகள் போதுமானதாக இருக்கும் என்று பேராசிரியர் சாமுவேல் விளக்குகிறார். மெத்தனோஜெனிக் பாக்டீரியா (மாட்டு சாணத்தின் முதல் தொகுதி) சமையலறை கழிவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்து செழித்து வளரும்.

முதல் முறையாக மாட்டுச் சாணத்தை சுரேஷ் ஊட்டிய பிறகு வாயு உருவாவதற்கு 10 நாட்கள் ஆனது, ஆனால் முதல் முறை எரிவாயு உற்பத்திக்கு 15 நாட்கள் எடுத்ததாக மரியா கூறுகிறார்.

எந்த வகையான கழிவுகளை டைஜஸ்டரில் செலுத்த வேண்டும்?

சமைத்த மீதியான உணவு, சமைக்காத உணவு, கெட்டுப்போன உணவு, காய்களின் நீக்கப்பட்ட தோல் ஆகியவற்றை டைஜஸ்டரில் போடுகிறார் சுரேஷ். “எலும்பு துண்டுகள், மீதமான இறைச்சி ஆகியவற்றை போடலாம்,” என கூறும் ஜெகதீஷ், கழிவுகாள் திரவமாகவோ அல்லது அரை திடமாகவோ இருத்தல் வேண்டும் என்கிறார். ஆகையால், ஊறவைத்த அல்லது அரைக்கப்பட்ட கழிவுகளை டைஜஸ்டரில் போடுவது சிறந்தது. இது உயிர்வாயு தயாரிப்பின் போது திடக்கழிவுகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும்.

சிட்ரிக் உணவுகள் அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு தோல்கள், உலர்ந்த இலைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். “இவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் [உயிர் வாயு உற்பத்தி] செயல்முறையை எதிர்மறையாக பாதிக்கலாம்” என்று பேராசிரியர் சாமுவேல் ஜேக்கப் கூறுகிறார்.

சமையலறை கழிவுகளை தவறாமல் போட வேண்டும். போதுமான அளவு கழிவுகளை செலுத்த முடியாவிட்டால், சிறிது மாட்டு சாணத்தை கொடுக்கலாம். இது மெத்தனோஜெனிக் பாக்டீரியாவை மீண்டும் கொண்டு வந்து, உயிர்வாயு உற்பத்தி செயல்முறையை மீண்டும் தொடங்க உதவுகிறது.

எரிவாயு பர்னர் மெலிதாக எரியும் போது, மாட்டுச் சஆணத்தை சேர்க்கலாம். உயிர்வாயுவில் குறைந்த அளவு மீத்தேன் உள்ளத்தை இது உணர்த்துகிறது. பசுவின் சாணத்தைச் சேர்ப்பதால், மெத்தனோஜெனிக் பாக்டீரியாவின் மீத்தேன் சதவீதத்தை அதிகரிக்கும்.

“வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கழிவுகளை சேர்ப்பேன். 10-15 நிமிடத்தில் தொட்டியில் சேர்க்க இது தயாராகிவிடும்,” என பகிர்கிறார் சுரேஷ். 1000-லிட்டர் கொள்ளவு டைஜஸ்டர் அமைத்துள்ள சுரேஷ், ஒரு நாளைக்கு 4-5 கிலோ கழிவுகளை இதில் சேர்க்கிறார்.

“தினந்தோறும் 200-300 கிராம் கழிவுகள் மட்டுமே என் வீட்டில் இருக்கும்,” எனக் கூறும் சுரேஷ், மீதியை சுற்றுப்புற வீடுகளிலும், காய்கறிக் கடைகளில் இருந்தும் சேமிக்கிறார். ஈர கழிவுகளை சந்தோஷமாக இவர்கள் கொடுக்கிறார்கள். ஒரு எல்பிஜி சிலிண்டர் அளவு வாயுவை தன் உயிர்வாயு ஆலை மாதந்தோறும் உற்பத்தி செய்யும் என கூறுகிறார் சுரேஷ்.

மறுபுறம், மரியா சிறிய 500 லிட்டர் டைஜெஸ்டர் வைத்துள்ளார். ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் தோராயமாக 10 லிட்டர் கழிவுகளை (திரவ வடிவில்) இவர் செலுத்துகிறார். “எனது வீட்டில் நானும் என் கணவரும் மட்டும் தான் உள்ளோம், எங்களுக்கு நிறைய சமையல் எரிவாயு தேவையில்லை,” என்று அவர் கூறுகிறார். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சமைக்க போதுமான உயிர்வாயுவை தருகிறது.


Read more: Converting kitchen waste to compost: Why are our cities stumbling?


உயிர்வாயு எரிவாயு உபயோகிப்பின் பயன்கள்

சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதை தவிர, பல நற்பயன்கள் இதில் உள்ளன.

முதலாவதாக, இதிலிருந்து வெளிப்படும் மிச்சத்தை உரமாக பயன்படுத்தலாம். இந்த மிச்சத்தை தண்ணீருடன் கலந்து தனது செடிகளுக்கு ஊற்றுகிறார் மரியா. “20 பூந்தொட்டிகள் வைத்திருந்த நான் தற்போது 150 தொட்டிகள் வைத்துள்ளேன்” என்கிறார் சுரேஷ்.

Kitchen garden using biogas slurry as organic fertiliser
சுரேஷ் வீட்டுத் தோட்டம். படம்: பத்மஜா ஜெயராமன்.

இது மட்டுமில்லை. “உங்கள் வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்கியிருந்தால், கொசு உற்பத்தியாகும், இந்த மிச்சத்தை தங்கியுள்ள நீரில் கொட்டினால், கொசு முட்டைகளை பாக்டீரியாக்கள் கொன்று விடும்,” என மேலும் விளக்குகிறார் ஜெகதீஷ்.

உயிர்வாயு கொண்டு மின்சாரமும் தயாரிக்கலாம் என கூறுகிறார் பேராசிரியர் சாமுவேல்.

சவால்கள்

  • எல்.பி.ஜி போல இது சமையலுக்கு திறமையானதல்ல என்று டாக்டர் சாமுவேல் கூறுகிறார், எரிப்பதை ஆதரிக்காத கார்பன் டை ஆக்சைட்டின் சதவீதம் அதிகமாக இருக்கும்போது, ​​உயிர்வாயுவின் செயல்திறன் குறைகிறது. மெத்தனோஜெனிக் பாக்டீரியா குறைவாக இருந்தால், மீத்தேன் சதவீதம் குறைவாகவும், கார்பன் டை ஆக்சைடு அதிகமாகவும் இருக்கும் என்று பேராசிரியர் விளக்குகிறார். இந்த கட்டத்தில், இடைவெளியை ஈடுசெய்ய அதிக மாட்டு சாணத்தை சேர்க்கலாம்.
  • உயிர்வாயு ஆலை அமைக்க, இடம் தேவை. 500 லிட்டர் பயோகேஸ் டைஜெஸ்டரை அமைக்க குறைந்தது 3 அடி விட்டம் தேவை என்று ஜெகதீஷ் கூறுகிறார். ஒரு எரிவாயு பையை சுவரில் தொங்கவிடுவதன் மூலம் தேவையான இடத்தை ஓரளவு குறைக்கலாம். உதாரணமாக, மரியா தனது பயோகேஸ் பையை தனது வீட்டில் சுவரில் தொங்கவிட்டுள்ளார்.
  • கணிசமான அளவு உயிர்வாயுவை உற்பத்தி செய்ய போதுமான அளவு உணவு கழிவுகளை உருவாக்குவது கடினம். “உயிர்வாயு ஒரு கழிவு மேலாண்மை முறையாக பார்க்கப்பட வேண்டுமே தவிர எல்பிஜிக்கு மாற்றாக கருதக்கூடாது” என்று சுரேஷ் குறிப்பிடுகிறார்.
  • எல்பிஜி இணைப்பைப் பராமரிக்கத் தேவைப்படும் முயற்சிகளுடன் ஒப்பிடும்போது, ​​உயிர்வாயு ஆலையை இயங்க வைக்க அதிக முயற்சிகள் தேவை என்கிறார் டாக்டர் சாமுவேல்.
  • இரண்டு பர்னர்களை இயக்க உயிர்வாயு பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது குறைந்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது. உயிர்வாயு மூலம் சமைக்க ஒரு பர்னரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

அடுக்குமாடி குடியிருப்பில் உயிர்வாயு சாத்தியக்கூறுகள்

அடுக்குமாடி குடியிருப்புகளில் உயிர்வாயு ஆலை அமைப்பதற்கான இடம் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பெரிய உயிர்வாயு ஆலையை நிறுவுவதற்கு 400 முதல் 500 சதுர அடி பரப்பளவு தேவைப்படலாம் என சுரேஷ் கூறுகிறார்.

இருப்பினும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனி வீடுகளில் இடம் இருந்தால், உயிர்வாயு ஆலைகளை நிறுவ முன்முயற்சி எடுக்க முடியும் என அவர் நம்பிக்கை அளிக்கிறார். ஜெகதீஷின் மேற்கூறிய மதிப்பீட்டின்படி, 500 லிட்டர் உயிர்வாயுஆலையை (குறைந்தபட்ச வரம்பு)ஒரு குடும்பம் தேர்வு செய்தால், சுமார் 3 அடி விட்டம் கொண்ட இடம் போதுமானதாக இருக்கும்.

ஒரு அடுக்குமாடி வளாகத்தில் பொதுவான பெரிய உயிர்வாயு அமைப்பு இருந்தாலும், உற்பத்தி செய்யப்படும் உயிர்வாயு குறைந்த அழுத்தத்தைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட வீடுகளுக்கு எரிவாயு விநியோகிப்பது சவாலாக அமையும்.

மேலும், இதற்காக தேவைப்படும் கழிவுகளின் அளவும் எரிவாயு தயாரிக்க போதுமானதாக இருக்காது. “அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டால், உற்பத்தியாகும் எரிவாயு ஒரு குடும்பத்திற்கு ஒரு கப் டீ தயாரிக்க மட்டுமே போதுமானதாக இருக்கும்” என்கிறர் ஜெகதீஷ்.

ஆதலால், குடியிருப்புகளில் ஒரு பெரிய உயிர்வாயு ஆலை மட்டும் அமைப்பது போதுமானதாக இருக்காது.

உயிர்வாயு தயாரிப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள்

சில மாற்றங்களை செய்வதன் மூலம் உயிர்வாயு தரத்தை மேம்படுத்தலாம் என பரிந்துரைக்கிறார் டாக்டர் சாமுவேல்.

  • அழுத்தம் குறைவாக இருப்பதால், வாயு உற்பத்தி பகுதிக்கும் பயன்பாட்டு பகுதிக்கும் (பர்னர்) இடையே ஒரு கம்பிரஸ்ஸர் பயன்படுத்தப்படலாம். இது எரியும் தன்மையை அதிகரிக்கும்.
  • உயிர்வாயுவை நீர் நீரோட்டத்தின் வழியாக இயக்கலாம், அங்கு கார்பன் டை ஆக்சைடை கரைத்து, வாயுவில் உள்ள மீத்தேன் சுத்திகரிக்கப்பட்டு, சமையலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

“கழிவுகளை நாம் வகைப்படுத்தி பிரிக்கிறோம். ஆனால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என தெரிவதில்லை.” என்கிறார் சுரேஷ். கரிமப் பொருட்கள் நிலப்பரப்புகளில் மக்கும் போது, ​​அது மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்கிறது, மேலும் இது புவி வெப்பமடைதலுக்கு காரணமான மிகவும் சக்திவாய்ந்த வாயுக்களில் ஒன்றாகும். இந்த வாயுவை உபயோகமானதாக மாற்றுவது நல்ல முயற்சியாகும், என பேராசிரியர் சாமுவேல் கூறுகிறார்.

கழிவுகளின் பண மதிப்பை பற்றி வலியுறுத்தும் ஜெகதீஷ், செல்வத்தை பணத்தை கொண்டே மக்கள் பார்க்க பழகிவிட்டார்கள். “உதாரணமாக, ஒரு பிளேட் இட்லியை விட ₹40-க்கு அதிக மதிப்பு அளிப்பார்கள். “அனைத்து சமையலறைகளின் கழிவுகளையும் ஆராய்ந்து அதற்கு ஈடான பண மதிப்பை வழங்கினால், உணவு கழிவுகள் மூலம் எவ்வளவு பாணத்தை வீணடிக்கிறோம் என தெரியும்.”

நகரம் முழுவதும் உயிர்வாயு ஆலைகளை தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் அமைத்துள்ளது, ஆனால் அது போதாது என்கிறார் சுரேஷ். அதிபர் ஜான் கென்னடியின் பொன்மொழியை சுட்டிக்காட்டி ” நாடு உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள். நாட்டுக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்.” என்கிறார்.

வீட்டில் உயிர்வாயு ஆலை அமைக்க உதவுபவர்கள்

1. M Jagadesh
Tamil Nadu Biogas
தொலைபேசி: 81248 20036
விலை: 500-லிட்டர் உயிர்வாயு ஆலைக்கு Rs. 19,950 முதல் (வரி தனி)

2. Banupriya Krishnaprabhu
தலைமை அதிகாரி, Sewaf Energy Private Limited
தொலைபேசி: 86758 17158
விலை: 500-லிட்டர் உயிர்வாயு ஆலைக்கு Rs. 20,000 முதல்

[Read the original article in English here.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 86 Articles
Padmaja Jayaraman was a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.