குடியிருப்போர் நலச் சங்கம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

சங்கம் அமைப்பது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

30 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் நலச் சங்கத்தை அதன் உறுப்பினர்களாகக் கொண்ட ராமபுரம் சமூக நல கூட்டமைப்பு படம்: ராமபுரம் சமூக நல கூட்டமைப்பு

Translated by Sandhya Raju

நம் குடியிருப்பு பகுதியிலுள்ள குடிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களின் பங்கு மறுக்க முடியாதது. இப்பகுதியில் குடிமை வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடிமக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய சங்கங்கள் இல்லாத சூழலில், எவ்வாறு அதை உருவாக்குவது? அதன் அதிகாரங்கள் என்ன? யார் அலுவலக பொறுப்பாளர்களாக முடியும்? துணை சட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன?

ஒரு நலச் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான பொதுவான பல கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த கட்டுரை மூலம் முயற்சித்துள்ளோம்.

குடியிருப்பு நலச் சங்கம் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

குடியிருப்பு நலச் சங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புறத்தில் அல்லது குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் கொண்ட உறுப்பினர்களின் ஒரு அமைப்பாகும். தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975 – இன் கீழ் இவை பதிவு செய்யப்படும். இந்தச் சட்டத்தின்படி, இலக்கிய, விஞ்ஞான, சமூக காரணத்திற்காகவோ அல்லது தொண்டு நோக்கங்களுக்காகவோ தொடர்புடைய ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து ஒரு சங்கத்தை உருவாக்கலாம். அரசியலமைப்பின் விதிகளால் இந்த சங்கங்கள் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவு, சமூக மேம்பாட்டிற்காக, ஒரு சங்கத்தை உருவாக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டம் மற்றும் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும்.

மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நலச்சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும். மெமோராண்டம் மற்றும் துணை சட்டங்கள், பதிவு செய்யும் நேரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மெமோராண்டமில் சங்கத்தின் பெயர், சங்கத்தின் நோக்கங்கள், குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொழில்கள் ஆகிய விவரங்கள் இருக்கும், மேலும் சங்கத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.

துணை சட்டங்கள் என்றால் என்ன?

இந்த ஆவணம் ஒரு சங்கத்தின் முக்கிய புத்தகமாகும். சங்கம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் விதிகளை விவரிக்கும் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். இது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் அல்லது அரசாங்க நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் சங்கத்தால் உருவாக்கப்பட்ட தனியார் சட்டங்களின் தொகுப்பாகும்.

துணை சட்டங்களின் உள்ளடக்கம்

  • பதிவுக் குறிப்பு (மெமோராண்டம்)
  • நோக்கம் மற்றும் குறிக்கோள்
  • சங்க பொறுப்பாளர்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் சலுகைகள்
  • உறுப்பினர்களை வெளியேற்றுவது குறித்த விதிகள்
  • பதவி வகிப்பதற்கான தகுதிகளின் பட்டியல்
  • பதவிக் காலம் மற்றும் பிற நிபந்தனைகள்
  • பராமரிப்பு அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் செலுத்த தாமதமானால் அதற்கான விதிகள்
  • பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் அதிகாரங்கள்
  • குடியிருப்பு பகுதியில் வணிக பயன்பாட்டை வரையறுத்தல்
  • வருடாந்திர பொதுக்குழு கூட்டம் பற்றிய விவரங்கள்
  • ஆண்டு அறிக்கை
  • சங்கத்தின் நீதித்துறை நபர்
  • சங்கத்தின் செயல்பாடுகள்
  • வாக்களிக்கும் அதிகாரங்கள்
  • தேர்தல் கோட்பாடுகள்
  • தீர்மானங்கள்
  • பிற விவரங்கள்

துணை சட்டங்களில் திருத்தங்களை எவ்வாறு மேற்கொள்வது?

சட்டங்களின் திருத்தம் மேற்ககொள்ள, வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் , விவாதிக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு தீர்மானத்தை நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களின் சம்மதத்தோடு நிறைவேற்ற வேண்டும். சங்கத்தின் மெமோராண்டமில் செய்யப்பட்ட மாற்றங்கள் 30 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

சங்கத்தின் அலுவலர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி, சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்கள் தேவை. அவர்கள் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் / இணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கலாம்.

ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் (அடுக்கு மாடி குடியிருப்பு எனில் உரிமையாளர்கள்) உறுப்பினராக பரிந்துரைக்கப்படலாம். மற்றும் பொதுக்குழு கூட்டத்தின் போது தேர்தல் நடத்தப்பட வேண்டும். சங்கத்தின் துணை சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேர்தல்களை நடத்த வேண்டும்.

சங்கத்தின் உறுப்பினராக பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் அல்லது குடியிருப்பாளர் தேர்தல் நாளன்று வர இயலவில்லை என்றால், முன்கூட்டியே ப்ராக்ஸியைக் கோரலாம். சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி, பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

சங்கத்திலுள்ள உள்ள காலியிடங்களை எவ்வாறு நிரப்ப முடியும்?

துணை சட்டத்தில் வடிவமைக்கப்பட்ட விதிகளைப் பொறுத்து, காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. உடனடியாக தேர்தலை நடத்தலாம் அல்லது அடுத்த பொதுக்குழு கூட்டம் வரை காத்திருக்கலாம்.

செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை

பராமரிப்புக் கட்டணத்தை உறுப்பினர் செலுத்தத் தவறினால், சொத்து விற்கப்படுவதற்கும் பறிமுதல் செய்வதற்கும் வழக்கைத் தாக்கல் செய்யலாம், விற்பனை வருமானத்தில் இருந்து பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கலாம்.

ஆனால், தண்ணீர், கழிவுநீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை சங்கத்தால் துண்டிக்க முடியாது. RO, DTH மற்றும் இன்டர்நெட் போன்ற அத்தியாவசியமற்ற சேவைகளைத் தொடர்வதற்கான முடிவுகளை துணை சட்டங்களின்படி எடுக்கலாம்; இறுதி முடிவு அலுவலக பொறுப்பாளர்களிடம் உள்ளது. தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

சங்கத்தை நிர்வகிப்பதற்கான விதிகளை உருவாக்கலாம். ஆனால், அரசியலமைப்பிற்கு எதிரான விதிகளை சங்கத்தால் உருவாக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மதத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே குடியிருப்பை / இடத்தை ஒதுக்க முடியாது.

குடியிருப்பில் உள்ள பூங்கா, பொது வழி போன்ற பொதுவான பகுதிகளின் உரிமை சங்கத்தை சாறும், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு சங்கத்திற்கு உண்டு.

ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் கட்டிடம் கட்டியவர் / அரசு நிறுவனத்திற்கு எதிராக போராட முடியும் மற்றும் சட்டப்பூர்வமாக சேவைகளைப் பெற முடியும்.

கட்டாயமாக வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும், தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை காண்பிக்க வேண்டும் மற்றும் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும்.

மாதாந்திர கூட்டங்களை நடத்த வேண்டும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக பதிவு செய்ய வேண்டும் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இதை காட்ட வேண்டும்.

பல நகரங்களில், கோவிட் தொற்றின் போது சங்கங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன, பெரும்பாலும் முதல் பதிலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளன.
மாதிரி படம், படம்: ட்விட்டர் / பி எச் அனில் குமார் (பெங்களூரு)

சங்கத்தின் நிதி எவ்வாறு சேமிக்கப்பட வேண்டும்?

சங்கத்தின் நிதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைக்கப்பட்டு பொருளாளர், தலைவர் அல்லது பொதுச் செயலாளரால் மட்டுமே இயக்கப்பட வேண்டும். கணக்குகளை தணிக்கை செய்ய சங்கம் ஒரு தணிக்கையாளரை நியமிக்கலாம்.

(சென்னை உயர் நீதி மன்றத்தின் வழக்கறிஞர் பாலாஜி பிரேம் குமார் அளித்த தகவலின் படி தொகுக்கப்பட்டுள்ளது)

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.