‘வெப்ப செயல் திட்டத்தை’ ஏன் சென்னை உடனே அமல் படுத்த வேண்டும்

சென்னை வெப்ப செயல் திட்டம்

நிபுணர்களின் கூற்றுப்படி வெப்ப அலை திட்டத்தை வகுப்பதில் கரையோர ஈரப்பதம் ஒரு காரணியாக இருக்க வேண்டும். படம்:WPFlare (CC BY:SA 2.0)

Translated by Sandhya Raju

இம்மாத துவக்கத்திலிருந்து, இயல்புக்கு அதிகமாகவே தொடர்ந்து ஐந்து நாட்களாக ஆரம்ப வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்ப நிலையாக 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் சென்னையில் பதிவாகியுள்ளது.

கடுமையான வெப்பம் சென்னைக்கு ஒன்றும் புதிதல்ல. மக்கள் இதற்கு பழகி இருந்தாலும், மிக கடுமையான அல்லது நீடித்த வெப்ப நிலையை எதிர்கொள்ள ஆயுத்தமாக வேண்டியுள்ளது.

பருவ நிலை மாற்றத்தை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை சமாளிக்க தற்செயல் திட்டங்களை உருவாக்க இணை முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக, வெப்ப நடவடிக்கை திட்டங்களை இந்தியாவிலுள்ள பல நகரங்கள் உருவாக்கி, வெப்ப அலை நிலைகளையும், அதிக வெப்பமான கோடை வெப்பநிலையையும் நிர்வகிக்க நெறிமுறைகளையும் வகுத்துள்ளன.


Read more: Why some parts of Chennai felt hotter than others this summer


வெப்ப நடவடிக்கை திட்டம் என்பது ஆரம்பகால எச்சரிக்கை அமைப்பு ஆகும். பல்வேறு அரசு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் சரியான நேரத்தில் மற்றும் செயல்படக்கூடிய சமூக நலன்கள் ஆகியவை இதில் அடங்கும். வெப்ப அலைகளால் ஏற்படும் அச்சுறுத்தலிலிருந்து மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தங்களை காத்துக் கொள்ள இத்திட்டம் உதவும்.

எவை வெப்ப அலை எனப்படும்

இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) வரையுறுத்தல் படி, ஒரு பிராந்தியத்தின் வெப்பநிலை வரம்புகளின் அடிப்படையில் அங்கு நிலவும் சாதாரண வெப்பநிலையிலிருந்து கூடுதலாக வெப்ப நிலை இருந்தால், வெப்ப அலை எனப்படும். சென்னை போன்ற கடலோர பகுதிகளில், அதிக பட்ச வெப்ப நிலை இரண்டு நாட்கள் தொடர்ந்து 37°C என்ற நிலையில், வழக்கத்தை விட 4.5°C கூடுதலாக இருந்தால், வெப்ப நிலை உள்ளதாக கருதப்படும்.

பல நகரங்களில் இது அளவு கோளாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அந்தந்த பகுதிகளில் நிலவும் வானிலை பொறுத்து, இது மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

“கடலோர நகரங்களைப் பொறுத்தவரை, மனித உடலில் வெப்பத்தின் தாக்கத்தைப் பார்க்கும் போது, வெப்பநிலையை மட்டும் கணக்கிடாமல், ஈரப்பதத்தையும் கணக்கிட வேண்டும். வெப்ப நிலை 35 டிகிரி இருந்தாலும், ஈரப்பதம் 100% இருந்தால், இது 45 டிகிரி வெப்பம் மற்றும் 50% ஈரப்பதத்திற்கு இணையாகும்.” என்கிறார் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிபுணர் டாக்டர் ஹேம் தோலாக்கியா.

அகமதாபாத் வெப்ப செயல் திட்ட சுவரொட்டி

மனித உடல் மீதான தாக்கம் குறித்து அறிய, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறித்த பரந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் ஹேம் தெரிவிக்கிறார். இந்த ஆய்வின் அடிப்படையில், வெப்ப செயல் திட்டத்திற்கான பல்வேறு குறியீடுகளை வகுக்கலாம். “பத்து ஆண்டுகளாக அகமதாபாத் நகரில் தினந்தோறும் வெப்ப நிலை, ஈரப்பதம் மற்றும் மாசு குறித்து தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன, இதுவே செயல் திட்டத்திற்கான அடிப்படையாக அமைந்தது. இந்த முறையே உலகத்திலுள்ள பல்வேறு நாடடுகாளில் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நகரத்திலும், இது போன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.”

சென்னையின் நிலை

சமீப காலமாக, சென்னையில் நகர்ப்புற வெப்ப தீவுகள் அதிகரித்து வருகின்றன. சுற்றியுள்ள கிரமப்புற பகுதிகளை விட, மனித செயல்பாடுகளால், நகர்ப்புறத்தில் அதிக வெப்ப நிலை நிலவினால், நகர்ப்புற வெப்ப தீவு எனப்படும். அதிக கட்டுமானம், வாகன மற்றும் கிரீன்ஹவுஸ் புகை, மேம்பாட்டு பணிகளுக்காக மரங்களை வெட்டுதல் ஆகியவற்றின் விளைவாக கூட இது இருக்கக் கூடும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மையம் நடத்திய ஆய்வில், இந்த வெப்ப தீவுகளில் 1-2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் சென்னையில் கோடை மாதங்களில் வெப்ப ஆறுதல் அளவு குறைந்து வருவதாக மற்றொரு ஆய்வு காட்டுகிறது. “வெப்ப சூழலில் திருப்தியை வெளிப்படுத்தும் மனநிலை” வெப்ப ஆறுதல் எனப்படுகிறது. இதன் அடிப்படையில் வெளிப்புற சூழலின் எதிர்கால போக்குக்கேற்ப சிறந்த குளிரூட்டும் தேவைகள் மற்றும் நகர திட்டமிடல் ஆகியவற்றை இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது

வெப்ப செயல் திட்டம்

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளம் 2017-இன் பின்னணியில் ஒரு விரிவான வெப்ப செயல் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து மாநில பிரதிநிதிகளுக்கும் ஒரு பட்டறை நடத்தியது. மாநிலங்களுக்கு அளிகப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில், வெப்ப செயல் திட்டத்தை மாநிலங்கள் வகுத்துக்கொள்ளலாம். இந்த செயல் திட்டத்தை கண்காணிக்கவும், புதுப்பிக்கவும் நோடல் நிறுவனங்கள் உள்ளன.


Read more: A garden on every roof: Help the Patchai Madi project turn Chennai into India’s urban farming capital


தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநிலத்தின் வெப்ப செயல் திட்டத்திற்கான நோடல் நிறுவனம் ஆகும். என்.டி.எம்.ஏவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான வெப்ப செயல் திட்டத்தை அரசு பகிர்ந்தது.

வெப்ப செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

உயர் ஆபத்து குழுக்களின் வகைப்பாடு

  • சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள்
  • தொழிலாளர்கள்,கட்டட தொழிலாளர்கள்/வெளியில் பணிபுரியும் வேலையாட்கள்/விவசாயிகள்/MNREGS வேலையாட்கள்/காவல்துறை பணியாளர்கள்/காவலாளிகள்
  • உயர் வெப்பத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்
  • சாலையோர வியாபாரிகள் / விற்பனையாளர்கள்  
  • ரிக்ஷா ஓட்டுனர்கள்/ஆட்டோ ஓட்டுனர்கள்/பேருந்து ஓட்டுனர்கள்/பயணிப்பவர்கள்  
  • கூலி தொழிலாளிகள்/குடிசைவாசிகள்/பிச்சைகாரர்கள்/வீடற்றவர்கள்
  • நோய்வாய்ப்பட்டவர்கள்
  • மருந்து உட்கொள்பவர்கள் 
  • போதைக்கு அடிமையானவர்கள் (மது, போதை மருந்து போன்றவை)

ஆரம்ப எச்சரிக்கை நடவடிக்கைகள்

2019 ஆம் ஆண்டிற்கான வெப்ப செயல் திட்டம், மாவட்ட அளவில் பகுதிகளாக பிரிக்கப்பட்டது:

  • மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் (டி.இ.ஓ.சி) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (டி.டி.எம்.ஏ) செயல்படுத்தப்பட உள்ளது. வெப்ப அலை பற்றிய தகவலுடன் அந்தந்த அதிகாரிகளின் கட்டணமில்லா எண்ணையும் வெளியிட வேண்டும். சென்னையில், மாநகராட்சி ஆணையர் இதற்கு தலைமை வகிக்கிறார். சென்னைக்கான கட்டணமில்லா எண் 1913 ஆகும்.
  • வெப்ப அலை பற்றி அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
  • பத்தரிக்கை மற்றும் காட்சி ஊடகத்தில் வெப்ப அலை குறித்து செய்தியை தெரிவிக்க வேண்டும்.

தயார்படுத்திக் கொள்ளுதல்

  • அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல்
  • மருத்துவமனை, சுகாதார மையங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குதல்
  • பேருந்து மனைகள்/நிறுத்தங்கள், சந்தைகள், ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள், தொழிற்துறை பகுதிகள் போன்ற பொது இடங்களில் குடிதண்ணீர் மற்றும் நிழற்குடைகள் அமைத்தல் 
  • IV திரவங்கள், கூலிங் பேக்குகள், ORS நீர் போன்ற தேவையான சுகாதார பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்
  • வெப்ப பக்கவாதம் நோயாளிகளின் மேலாண்மை
  • தொழிலாளர் சட்டத்தின் படி கொட்டகைகள், பாதுகாப்பான குடிநீர், குளியல் வசதிகள் போன்ற தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை நிலைமைகளை அமல்படுத்துதல்
  • அவசரநிலைகளை சந்திக்க தீயணைப்புத் துறையின் தயார்நிலையை உறுதி செய்தல்
  • MNREGS தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளை செய்தல்.

நீண்ட கால தணிப்பு

  • நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மரம் நடுதல்
  • குடியிருப்பு பகுதிகளில் மாடித்தோட்டம் மற்றும் சாலையோர மரங்கள் நடுதல்
  • மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முக்கிய பணியாக செய்தல்
  • சமையலறை கழிவுகள்/நீரை செடிகள் மற்றும் பிற தேவைகளுக்கு மறுசுழற்சி செய்தல்
  • கூல் கூரைகள்: கட்டிடம் மேலுள்ள வெப்பத்தை வளிமண்டலத்திற்கு பிரதிபலித்து அனுப்புவதே கூல் கூரைகள்.குளிர்ந்த கூரைக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதன் மூலம் (சுண்ணாம்பு அடிப்படையிலான வெள்ளை கழுவல், வெள்ளை பீங்கான் ஓடுகள் மறைத்தல்), உட்புறங்களில் வெப்பநிலையை 3-7 டிகிரி வரை குறைக்கலாம்
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறந்தவெளி இட ஒதுக்கீடு (ஓ.எஸ்.ஆர்) நிலங்களை பூங்காக்களாக மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

“உருவாக்கப்பட்டுள்ள திட்டம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வது பற்றியது என்றாலும், நகர்ப்புற வெப்ப தீவு விளைவைக் குறைக்க தொலைநோக்கு பார்வையும் இருக்க வேண்டும். இதற்காக நாம் நகர்ப்புற பசுமையாக்குதலில் முதலீடு செய்ய வேண்டும், ஓஎஸ்ஆர் (OSR) நிலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும், உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவை குறிப்பிட்ட காலத்திற்குள் வெப்பநிலையைக் சீராக்க உதவும்” என்று டி.என்.எஸ்.டி.எம்.ஏ முன்னாள் அதிகாரி கூறினார்.

நிதர்சன நிலை

இந்த திட்டம் வரையுறுக்கப்பட்டாலும், அதை செயல்படுத்தியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலை அறிவிப்பு இருந்தபோதிலும், வெப்ப அலை செயல் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவது குறித்து டி.என்.எஸ்.டி.எம்.ஏவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைக் கையாள ஒரு தனி பேரிடர் மேலாண்மைத் துறையை அமைப்பதற்கு மாநகராட்சி முயல்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஒரு பக்கம் அதிகாரிகள் திட்டத்தை வகுக்கும் போது, நகரத்தில் அதிக பாதிப்புகுள்ளாகும் மக்கள் அவர்களாகவே சமளிக்கும் வழிமுறைகளை வகுத்துக்கொள்கின்றனர். வீடு இல்லதவர்களுக்காக செயல்படும் ரியல் டிரஸ்ட்கன்வீனர், லாரன்ஸ் வி கூறுகையில் “இந்த காலகட்டத்தில், குறிப்பாக பகலில், தங்குமிடம் தேடும் வீடற்ற மக்களின் எண்ணிக்கை அதிகம். குளிர்காலத்தில், இரவில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் அதிகம். ஆனால், கோடை காலத்தில், வெப்பம் அதிகமாவதால் வீடு இல்லாதவர்கள் நிழலிடம் தேடி செல்கின்றனர்.”

தங்குமிடங்களை இயக்கும் தொண்டு நிறுவனங்கள் பகலில் அதிக நபர்களை தங்க வைக்கின்றன அல்லது வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள மாநகராட்சி அமைத்துள்ள தங்குமிடங்களுக்கு வழிகாட்டப்படுகிறார்கள்.

லாங்கின் கார்டன் சாலையில் வசிக்கும் தினசரி கூலித் தொழிலாளியான கரிகாலன் ஆர் போன்றவர்களுக்கு, நகரத்தில் ஒரு வெப்ப செயல் திட்டத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்ல முடியவில்லை. “அரசால் எதுவும் செய்ய முடியும் என தோன்றவில்லை. கோடை வெப்பத்தை தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது எங்களின் விதி. என்னுடைய வீட்டில் தகர கூரை என்பதால், வெப்பம் இன்னும் கடுமையாக இருக்கும். மே மாதத்தில், எங்களுக்கு கிடைக்கும் ஒரு ஆறுதல் சில தன்னார்வ நிறுவனங்கள் வினியோகிக்கும் நீர் மோர்”

ஆரோக்கியத்தில் பாதிப்பு

உடல்நிலை மேல் வெப்ப தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் செயல்பாடுள்ள வெப்ப செயல் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. “வெளிபுறத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள், கட்டிட தொழிலாளிகள் ஆகியோருக்கு வெப்பம் மற்றும் ஈரப்பதம் இணைந்து உடல் நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்கிறார் கீழ்பக்கம் மருத்துவக் கல்லூரியின் காது தொண்டை நிபுணர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர். முத்து சித்ரா.

வெளியில் வெகு நேரம் பணி புரிவோர் கடும் வெப்பத்திலிருந்து பாதுக்காக்க, நிழற்குடை, குடிநீர் மற்றும் பணி நேரத்தை குறைப்பது போன்றவற்றை கடைப்பிடிக்கலாம் என பரிந்துரைக்கிறார் டாக்டர் சித்ரா. கடும் வெப்ப நிலையை சமாளிக்க அதிக நீர் உட்கொள்ள வேண்டும்.

அவரவர்கள் உடல் நிலையை பொருத்து எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நல்ல உடல்நிலை உள்ளவர்கள் அதிக பட்சம் இரண்டு மணி நேரம் வெய்யிலில் இருக்கலாம் என்றும், அதுவே வெப்ப அலை அதிகரிக்கும் போது நீரிழப்பு மற்றும் மோசமான சந்தர்ப்பங்களில், வெப்ப பக்கவாதம் மற்றும் இறப்பு கூட நேரிடலாம் என்கிறார் டாக்டர் சித்ரா.

Also read:

[Read the original article in English here.]

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Aruna Natarajan 181 Articles
Aruna is an Associate Editor at Citizen Matters. She has a BA in Economics and a PG Diploma in Journalism. She has also worked in a think-tank on waste management policy and with a non-profit in sport for development. She writes on civic issues, governance, waste, commute and urban policy. She tweets at @aruna_n29.