போதிய ஆதரவின்றி மழைக்கால பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்கள்

ஊழியாளர்கள் சந்திக்கும் சவால்கள்

chennai frontline workers
மழைக்கால பணிகளை மேற்கொள்ள, சென்னையின் பல இடங்களில் களப்பணியாளர்களை, மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ளது. படம்: சென்னை மாநகராட்சி.

Translated by Sandhya Raju

சூடான டீ, இசையுடன் மழைக்காலத்தை வீட்டினுள் ரசிப்பது தான்  நம் பெரும்பாலனவர்களின் விருப்பம்.  மழையை நாம் ரசிக்கும் அதே நேரம், மழை நீர் தேங்காமலும், மின்சாரம் தடைபடாமலும், கழிவுகள் தெருக்களில் தேங்காமலும் இருக்க, பலர் மழைக் காலத்தில் நமக்காக பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த வேலைகள், குடும்பத்தின் தேவைகள் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல், பல களப்பணியாளர்கள் மழைக்கால வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

பருவ நிலை மாற்றம் காரணமாக, பல தீவிர கால நிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நிலையில், களப் பணியாளர்களின் பணி மேலும் சவாலாக மாறும் நிலை உள்ளது.

களப்பணியாளர்களின் கடினங்கள்

21 வருடம் முன், சென்னை கழிவு நீர் மேலாண்மை வாரியத்தில் தற்காலிக பணியாளராக சேர்ந்த வெங்கடேஷின் நாள் தினமும் 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஊரப்பாக்கத்தில் வசிக்கும் இவர், தினமும் 30 கி.மீ பயணித்து ராயபேட்டைக்கு பணிக்கு வருகிறார், ஊதியமாக  ₹2,800 பெற்ற அவர், 2021-ஆம் ஆண்டு ₹6,000 பெற்றார். குறைந்தபட்ச ஊதியம் நிலுவையில் வந்த பின் தற்போது,₹11,000 பெறுகிறார்.

2015 சென்னை பெருவெள்ளத்திற்கு பின், ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து இவரின் குடும்பம் வெளியேற்றப்பட்டு, ஊரப்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டனர். கால் சென்டரில் வேலை பார்த்து வந்த இவர் மனைவி, பணிக்கு நீண்ட நேர பயணம் காரணமாக, வேலையை விட நேரிட்டது. ₹20,000 மாதம் சம்பாதித்து வந்த இவர், பள்ளிக்கு பின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள போதிய குழந்தை பராமரிப்பு வசதிகள் இல்லாததால், வேலையை விட்டார்..

“என் சம்பாதியத்தை மட்டுமே என் குடும்ப நம்பியுள்ளது. தற்காலிக பணியாளர் என்ற நிலையிலிருந்து ஒப்பந்த பணியாளராக, வாரியம் எங்களை மாற்றியதிலிருந்து, வேலை பாதுகாப்பு இல்லை. ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும், வேறு ஒருவருக்க என் வேலை அளிக்கப்படும். கடந்த 21 வருடமாக இதே வேலையில் தான் உள்ளேன், இதைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. அதனால், எந்த கால நிலை என்றாலும், வேலைக்கு வந்து விடுவேன்,” என்கிறார்.

frontline worker of GCC cleaning manholes
மழைக் காலத்தின் போது எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. படம்: சென்னை மாநகராட்சி

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை வழக்கமான வேலை நேரம் என்றாலும், மழைக் காலத்தில் அநேகமாக 24 மணி நேரமும் தாங்கள் வேலை செய்வதாக கூறுகிறார் தற்காலிக பணியாளரான மகேஷ். 

“மொபைல் போனை சார்ஜ் செய்யக் கூட வசதியில்லை. மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பதால், கண்ணகி நகர் அல்லது பெரும்பாக்கத்திற்கு சென்று வர இயலாது. வீட்டிற்கு போனால் எங்கள் குடும்பம் மழையில் எவ்வாறு உள்ளனர் என பார்க்க முடியும்.” எனக் கூறும் அவர், மகழைக்கால பணிக்காக, சிறப்பு பயிற்சியோ அல்லது உபகரணமோ வழங்கப்படுவதில்லை என்கிறார். வழக்கமான வேலை போல், ஆனால் அதிக வேலைப்பளுவும், கூடுதல் வேலைக்கு, பணி நேரத்திற்கு கூடுதல் ஊதியம் வழங்கபடுவதுமில்லை. 


Read more: Temporary workers keep Chennai going at great personal cost


எவ்வளவு மழை பெய்தாலும், செம்மெஞ்சேரியிலிருந்து கோடம்பாக்கம் தெருக்களை சுத்தம் செய்ய தினமும் வருவதாக கூறுகிறார், அர்புதம். “குடி நீர் கொடுக்க தயங்குவது, குப்பையை கொடுக்கும் போது தள்ளி நின்று தருவது என தங்களை மக்கள் சரியாக நடத்துவதில்லை என்கிறார்.

மழைக்காலங்களில், குப்பைகள் குப்பைத்தொட்டியை சுற்றி தெரு முழுக்க வருவதால், சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது என கூறும் இவர், இதனால் வடிகாலிலும் அடைப்பு ஏற்படுகிறது என்கிறார். 

“மக்கள் குப்பைகளை வகைப்படுத்தி பிரித்து கொடுப்பதில்லை, இதனால் மழையில் நனைந்து, அவற்றை  பிரிக்க மிகவும் கடினமாக உள்ளது,” எனக் கூறும் இவர், இதனால் பல சமயங்களில் எங்களில் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்கிறார். 

“எங்களுக்கு ரெயின் கோட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் அன்றாடம் மழையில் நனைந்து விடுவோம். இதனால், பலருக்கு ஜுரம் அல்லது தொற்று ஏற்படுகிறது. விடுப்பும் எடுக்க முடியாது என்பதால், நாங்கள் உடம்பு முடியவில்லை என்றாலும் வேலைக்கு வருகிறோம். நாங்கள் வேலைக்கு செல்லாவிட்டால், நகரத்தில் வீட்டுக் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாது,” என்கிறார்.

Gcc workers woking in rain
சென்னையின் ஒரு தெருவில் மழை நீர் அடைப்பை சரி செய்யும் மாநகராட்சி பணியாளர். படம்: சென்னை மாநகராட்சி

மின் வாரியத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியாளராக பணியாற்றும் ராமனாதன்*, மழைக்காலத்தில் தங்கள் பணி எவ்வளவு ஆபத்து நிறைந்தது என விளக்குகிறார். 

“அறுபட்ட வயர்கள், ஷார்ட் செர்கியூட், டிரான்ஸ்ஃபார்மரில் தீ என பல வேலைகளுக்கக களத்தில் இருக்க வேண்டும். மழையில் இத்தகைய பணிகள் மிகவும் ஆபத்தானது.” எனக் கூறும் இவர், சிறிது நேரம் மழைக்காலத்தில் மின் தடை ஏற்பட்டாலும் மக்கள் புகார் அளிக்கின்றனர்.

“மின் தடை செய்யாவிட்டால், மின் கசிவால் ஆபத்து ஏற்படும்” என்கிறார்.

எந்த தடையுமின்றி சென்னை இயங்க வேண்டும் என்று உழைக்கும் எங்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. 

சென்னை பெருவெள்ளம், வர்தா புயல், கோவிட் பெருந்தொற்று போன்ற காலத்தில் எங்களின் சேவைக்காக அறிவிக்கப்பட்ட எந்த ஊக்கத் தொகையும், எங்களுக்கு இன்னும் வரவில்லை என பல முன்களப்பணியாளர்கள் கூறுகின்றனர். 

“எங்கள் உயிரை பணயம் வைத்து மக்களின் நலனுக்காக உழைக்கும் நாங்கள் கேட்பதெல்லாம், எங்களுக்கு பணி உத்திரவதாம் வழங்க வேண்டும் என்பது தான். பணியின் போது உயிரிழந்தால், எங்கள் குடும்பத்திற்கு எந்த பலனும் வழங்கப்படுவதில்லை. பேரிடர் காலங்களில் வெளி மாவடத்திலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணி புரியும் சூழலும் மோசமாக உள்ளது, இந்த நிலை மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்” என்கிறார், வாரிய பணியாளர் நல சங்கத்தின் உறுப்பினர் பாலகிருஷ்னன்.

களப்பணியாளர்களின் குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள்

சென்னையில் பலத்த மழை பெய்து வருகையில், வாசலிலும் ஒரு கண் பார்த்துக்கொண்டே, வீட்டு வேலையை கவனிக்கிறார், செம்மஞ்சேரியில் வசிக்கும் செல்வி ஆர். சென்னை மாநகராட்சியில் வேலை செய்யும் அவர் கணவர் வீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது, அவர் மொபைலும் அணைக்கப்பட்டுள்ளது. 

“மழைக்காலத்தில் தினமும் அவ்வளவு தொலைவு போக கடினமாக இருப்பதால், வேலையிடத்திலேயே தங்கி விடுகிறார். எப்போழுது திரும்புவார் என தெரியாது, பணியில் ஆபத்தும் உள்ளதால், பயமாக உள்ளது.” என கூறும் அவர், பல முறை பணியின் போது தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து நேரந்துள்ளதாகவும் கூறுகிறார். இதே நிலை பல குடும்பங்களிலும் எதிரொலிக்கிறது. 

damaged walls in a house of a frontline worker
பெரும்பாக்கத்தில் பழுதடைந்துள்ள வீடு. மழையின் போது தண்ணீர் கசிவதாக புகார் அளிக்கின்றனர். படம்: பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள்

கண்ணகி நகரில் வசிக்கும் காஞ்சனா எம், தற்காலிக பணியாளராக மாநகராட்சியில் பணி புரியும் தன் கணவர், மக்கள் நலனுக்காக மழை நீர் கால்வாய் அடைப்பை போக்கும் அதே வேளையில், தாங்கள் வசிக்கும் பகுதி வெள்ள நீரால் சூழுப்படுகிறது என்கிறார். 

“வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று எங்களை கூவம் ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசை வீட்டிலிருந்து வெளியேற்றினர். ஆனால் இங்கு அதே அளவு மோசமாக உள்ளது. கூரை இடிந்தால், உயிர் தப்பிக்கும் வாய்ப்புள்ளது, ஆனால் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தால், விளைவு மிக மோசமாக இருக்கும்” என்கிறார் அவர்.

காஞ்சனா இங்குள்ள பிற பெண்களுடன் சேர்ந்து, அவர்களின் நிலை குறித்து புகார் அளித்துள்ளார். “எங்கள் புகாருக்கு பதிலளிக்க நாங்கள் குறைந்த பட்சம் 10 அல்லது 20 முறை கால் செய்ய வேண்டும்” என் அவர் மேலும் கூறுகிறார். 

Picture of water stagnation in Perumbakkam
சிறு மழையின் பின் பெரும்பாக்கம் சாலைகளின் நிலை படம்: பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள்

இதே நிலை தான் பெரும்பாக்கம் பகுதியிளும் உள்ளது என் கிறார், ஜென்சி, இவரது அம்மா தேனாம்பேட்டையில் மாநகராட்சி தற்காலைக பணியாளராக உள்ளார். 

2021 மழையின் போது என் அம்மா தேனாம்பேட்டியில் வேலை பார்த்த போது, எங்கள் பகுதி முழுவதும் முழங்கால் அளவு மழை நீரால் சூழப்பட்டது. எட்டு நாட்கள் வெளியே வர முடியாமல் இருந்தோம். வீட்டைச் சுற்றி பாம்புகள் நிறைய இருந்தன. எங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் இருந்தாலும், எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை” என நிலைமையை விவரித்தார். 

வடகிழக்கு பருவ மழை முன் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பெரும்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை, சிறு மழை பெய்தாலும், வீட்டுச்சுவர்களில் தண்ணீர் கசிகிறது. “எப்படி பெரு மழையை சமாளிக்க போகிறோம்” என தெரியவில்லை என்கிறார் அவர். 

குடிநீர் வாரிய பணியாளர்கள், மின்வாரிய  பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் அதிகம் வசிக்கும் வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதிகளிலும் இதை நிலை தான்.


Read more: Families in Chennai’s resettlement colonies need urgent attention and a fairer policy


தீவிர கால நிலைக்கு பணியாளர்களை தயார் படுத்தல்

கால நிலை மாற்றம் காரணமாக, அதிக வெய்யில், மழையை சென்னை சந்திக்கிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் குழுவில் உள்ள வெற்றிசெல்வன், இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுசூழல் வழக்கறிஞர் ஆக உள்ளார். நெருக்கடியான சூழ்நிலையில், தற்போதுள்ள பழங்காலத்து தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு முறைகளை, தொழிலாளர் நலச் சட்டம் நெறிமுறைகளை தான் கடைபிடிக்கப்படுகிறது. மாறி வரும் கால நிலை மாற்றத்திகேற்ப புது வழிகாட்டி நெறிமுறைகள் இல்லை. தற்போதுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் கூட புதுப்பிக்கப்படுவதில்லை.  

“அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு மட்டுமே நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க  நமக்கிருக்கும் ஒரே சிறப்பு குழு. ஆனால், பல சமயங்களில், நெருக்கடி நிலையில், உளவியல் ரீதியான எந்த வித தயாரிப்பும் இன்றி பிற முன்களப்பணியாளர்களை களத்தில் பாணியாற்றுகின்றனர். இங்கு தான் கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கான தேவை ஏற்படுகிறது.

நெருக்கடி நிலைகளை கையாளும் குழுக்கள் தனித்தனியாக தங்கள் பணிகளை மேற்கொள்கின்றன, எனக் கூறும் அவர், “ உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் தீ விபத்து ஏற்பட்டால், மருத்துவக் குழுவும் செல்லும். இது போல் பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், பரஸ்பர அறிவுப் பகிர்தல் நடக்கும். இதற்கு, கட்டளை அதிகாரத்தில் தெளிவு வேண்டும்,” என மேலும் கூறுகிறார்.

பெரும்பாலான முன் களப்பணியாளர்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பதால், இவர்களும், சென்னையின் பிற பகுதிகள் போல் அவதிக்குள்ளாகிறார்கள் என்கிறார், சென்னை காலநிலை நடவடிக்கை குழுவின் இணை நிறுவனர் பிரசாந்த் ஜெ.

“அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இவர்கள் தான் களத்தில் பணியாற்றுபவர்கள். நாள் முழுவதும் வேலை, பணியின் போது உயிருக்கு ஆபத்தையும் எதிர்கொள்கிறார்கள். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.” என்கிறார் அவர்.

மழை, வெள்ளம் ஆகியவை சென்னையில் ஏற்படும் கால நிலை மாற்றத்தின் விளைவு என்றாலும், நீடித்த வெப்பமும் இவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை புரிந்து விஞ்ஞான பூர்வமாக இதை அணுக வேண்டும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளுடன் போதிய பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும், என்கிறார் வெற்றி.

கால நிலை மாற்றத்தை கையாள சிறப்பு பிரிவை ஏற்படுத்தியதன் மூலம், தமிழகம் இதில் முன்னோடியாக திகழ்கிறது. “இருப்பினும், நாம் முதற்கட்ட நிலையில் தான் உள்ளோம். இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதில் தமிழகம் நீண்ட பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.” என்றார்.

அதீத வெப்பம் அல்லது மழை, நிலைமை எதுவாயினும், தங்களின் உழைப்பின் மூலம் முன்களப்பணியாளர்கள் தான் நகரத்தை சீராக வைத்துள்ளனர். போதிய அறிவுப்பகிர்தல், பணியின் போது பாதுகாப்பு, கால நிலை மாற்றதிற்கேற்ப தேவையான கொள்கைகளை உருவாக்குதல், பணி நிரந்தரம், அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான வீடு ஆகியவை இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முக்கியமானவை. 

*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது 

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Shobana Radhakrishnan 84 Articles
Shobana Radhakrishnan is a Senior Reporter at Citizen Matters. Before moving to Chennai in 2022, she reported for the national daily, The New Indian Express (TNIE), from Madurai. During her stint at TNIE, she did detailed ground reports on the plight of migrant workers and the sorry-state of public libraries in addition to covering the renowned Jallikattu, Tamil Nadu Assembly Elections (2021) and Rural Local Body Polls (2019-2020). Shobana has a Masters degree in Mass Communication and Journalism from the Pondicherry Central University and a Bachelors in English Literature. She keenly follows the impact of development on vulnerable groups.