உங்கள் வீட்டுக் குப்பை எங்கே செல்கிறது?

குப்பையின் பயணம்

மேடவாக்கத்தில் கழிவுகள் பதப்படுத்தும் நிலையம். படம்: ஐ பிரியதர்ஷினி

Translated by Sandhya Raju

நீங்கள் தூக்கி எறியும் வெங்காய தோலோ அல்லது பிளாஸ்டிக் துண்டோ எங்கே செல்கிறது என சிந்தித்ததுண்டா? நாம் தூக்கி எறியும் ஒவ்வொரு குப்பைக்கும் நாம் கண்டிராத நீண்ட பயணம் உண்டு. இந்த பயணத்தை அறிந்து கொண்டால், நாம் ஒவ்வொருவரும் கழிவு மேலாண்மைக்கு மேலும் சீரிய பங்காற்ற முடியும்.

தினந்தோறும் 5600 டன் குப்பையை சென்னை காண்கிறது. இந்த குப்பையின் கதையை அறிய, சென்னை மாநகராட்சி செயல்படுத்தும் திடக்கழிவு மேலாண்மையை பற்றி பார்ப்போம்.

கழிவுப்பொருட்களை மக்கும், மக்காத, அபாயகரமான கழிவுகள் மற்றும் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்க திடக்கழிவு துணை சட்டம் கூறுகிறது.

படம்: CAG

குப்பைகளை (மக்கும் அல்லது ஈர குப்பைகளுக்கு பச்சை தொட்டி, மக்காத குப்பைக்கு நீல தொட்டி, மருத்துவ கழிவுகளுக்கு சிவப்பு தொட்டி) வகை பிரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பான குடிமகன்/ள் நீங்கள் என்றால், அதன் பயணத்தில் சற்று குறைவான கடினத்தை குப்பைகள் சந்திக்கும். இந்த செயல் மூலம் நீங்கள் தூய்மை பணியாளர்களுக்கும் உதவுகிறீர்கள். இல்லையெனில் பொருட்கள் மீட்டெடுக்கும் நிலையம் எனப்படும் MRF நிலையத்தில் நாற்றம் மிகுந்த கழிவுகளை இவர்கள் பிரித்தெடுக்க வேண்டும். இவை பல்வேறு கழிவுகளாக (காகிதம், பிளாஸ்டிக், பாக்கேஜிங் பேப்பர், பாட்டில்) என பிரிக்கப்படுகின்றன.

சென்னையின் வெவ்வேறு பகுதிகளை பொறுத்து குப்பையின் பயணம் வேறுபடுகிறது. சில பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் உங்கள் வீட்டு வாசலிலேயே வந்து குப்பையை பெற்றுக்கொள்கின்றனர். சில பகுதிகளில் பிரிக்கப்படாத குப்பைகள் அருகிலுள்ள குப்பைதொட்டியில் கொட்டப்படுகிறது. குப்பையின் அளவை பொறுத்து ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை தூய்மை பணியாளர்கள் இவற்றை அப்புறப்படுத்துகின்றனர்.

கழிவுகளிலிருந்து உரம்

சென்னையில், பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்பு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்து பெறப்படும் ஈர கழிவுகள் அந்தந்த பகுதியிலுள்ள மைக்ரோ உரம் மையங்களூக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு தினமும் டன் கணக்கில் ஈர கழிவுகள் செயல்முறைக்கு உள்ளாகப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் தரவு படி 141 மைக்ரோ மையங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவு பெறும் தளம், கன்வேயர் பெல்ட்டைக் கொண்ட ஷரெட்டர்ஸ் எனப்படும் துண்டாக்கும் கருவி, உரம் தொட்டிகள், உறுதிப்படுத்தல் பகுதி மற்றும் சல்லடை பகுதி ஆகியவற்றை ஒவ்வொரு மைக்ரோ மையத்திலும் காணலாம். இங்கு கொண்டு வரப்படும் மக்கும் கழிவுகள் சிறு துகள்களாக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது.

பிற பகுதிகள் பின்வருமாறு:

 • சாதாரண உரம்
 • வெல்-வளையம்
 • மண்புழு உரம்
 • பயோகேஸ் ஆலை
 • பயோமெத்தனேஷன் ஆலை
 • ஸ்லாட்டர் ஹவுஸ்
 • சின்டக்ஸ்
 • தழைக்குளம் குழி
 • மண் குழி
 • வின்ட்ரோ
 • வெல்-வளையம் (கட்டம்-II)
மக்கும் கழிவுகளின் பயணம்

இங்கு தயாரிக்கப்படும் உரங்களை, குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்களான அரசு தோட்டக்கலை துறை ஆகிய துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சென்னை மாநகராட்சி விற்பனை செய்கிறது. ஆகவே, மீதமான உணவு, வெள்ளரி தோல் போன்றவை உரங்களாக மாறி, குடியிருப்பு வாசிகளுக்கும் இயற்கை பண்ணைகளுக்கும் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தேங்காய் மூடியிலிருந்து எரிபொருள் வரை?

பிளாஸ்டிக் கவர், தேங்காய் மூடி, இரும்பு கம்பி போன்ற மக்காத குப்பைகள் மேலும் பிரிக்கப்பட்டு, மறுபயன்பாட்டிற்கான மூலப்பொருட்களாக மாற்றப்படுகிறது.

உலர் கழிவுகள் சிமன்ட் தயாரிக்க உதவுமா? நிச்சயமாக! அட்டை பெட்டிகள், பல அடுக்கு கொண்ட பிளாஸ்டிக் ஆகியன டால்மியா சிமன்ட் ஆலைக்கு செல்கிறது.

 இதைத் தவிர, 10 டன் எடையுள்ள உலர் கழிவுகள் மணலியில் உள்ள எரியூட்டலில் எரிக்கப்படுகின்றன.

மக்காத குப்பைகளின் பயணம்

இரும்பு கம்பி, தெர்மாகோல், லெதர் பொருட்கள், டயர், காலணிகள், தேங்காய் மூடி, கண்ணாடி மற்றும் பிற மலிவான பொருட்களின் நிலை என்ன? வள மீட்பு மையங்கள் எனப்படும் RRC-இல் இவைகள் சேமிக்கப்பட்டு, மறுசுழற்சிக்காக மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற தனியார் கழிவு மேலாண்மை நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. உதாரணத்திற்கு, வேஸ்ட் வின் ஃபவுன்டேஷன் எனும் நிறுவனம் தெர்மோகோல் மற்றும் தேங்காய் மூடிகளை பெற்றுக் கொள்கிறது.

“பட்டன் மற்றும் புடவைக்கான அலங்கார முத்துகளை தயாரிக்க தெர்மோகோல் பயன்படுத்தப்படுகிறது, மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய தேங்காய் மூடி பயன்படுத்தப்படுகிறது.” என்கிறார் வேஸ்ட் வின் ஃபவுன்டேஷன் நிறுவனர் ஐ பிரியதர்ஷினி.

மண்டலம் 1-லிருந்து சானிடரி நாப்கின்கள், சிரிஞ்ச்கள் மற்றும் மருந்துகள் போன்ற அபாயகரமான கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அபாயகரமான கழிவு சேகரிப்பு மையங்களின் கட்டுமானப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் மற்ற மண்டலங்களிலிருந்து பெறப்படும் அபாயகரமான கழிவுகள் மொத்த குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சென்னையில் தினந்தோறும் சுமார் 500 டன் அளவுக்கு கட்டிட இடிபாட்டு கழிவுகள் உருவாகிறது. தற்போது, இவை குப்பை கிடங்கில் போடப்படுகிறது.

பிரிக்கப்படாத கழிவுகள்

பிரிக்கப்படாத கழிவுகள் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கப்பட்டாலோ அல்லது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டாலோ, இவை மொத்த குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு எடை பார்க்கப்பட்டு, பின்னர் கொடுங்கையூர் அல்லது பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பிரிக்கப்படாத குப்பையின் பயணம்

குப்பைக் கிடங்கில் இடம் இல்லையென்றால் என்ன ஆகும்?

நகரத்தின் புறநகரில் உள்ள திறந்த நிலத்திலோ அல்லது கால்வாய்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளிலோ கழிவுகளை கொட்டுவதற்கு இது வழிவகுக்கிறது என்று சிட்டிசன் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் (சிஏஜி) நகர நிர்வாக ஆய்வாளர் அஃப்ரோஸ் கான் கூறுகிறார்.

புதிய கழிவுகளுக்கு இடமளிக்க கழிவுகளை கிடங்கிலோ அல்லது திறந்தவெளிகளில் எரிப்பது நம் நாட்டில் கடைப்பிடிக்கும் மற்றொரு நடைமுறை. இதிலும் பின்விளைவுகள் உள்ளது.

இது சுலபமான வழியாக இருந்தாலும், கண்ணுக்கு தெரியாத பக்க விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. “மக்கும் கழிவுகளை எரிக்கும் போது மீத்தேன் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேறுகிறது. பிளாஸ்டிக் போன்ற மக்காத கழிவுகள் நீர் மற்றும் மண்ணில் ரசாயனங்களை வெளியேற்றுகிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் போன்றவை வெப்பமான வானிலையில் மீத்தேன் மற்றும் ஈதலைன் வாயுக்களை வெளியேற்றுவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது” என்கிறார் சிஏஜி மூத்த ஆய்வாளர் வம்சி சங்கர் கபிலவி.

நகரத்தை பொறுத்த வரையில் பல புதிய மேலாண்மை திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், வீட்டு கழிவுகளை குறைப்பதே இதற்கான ஒரே தீர்வாக அமையும். மேலும் கழிவுகளை வகைப்படுத்தி பிரித்து, வீட்டிலேயே உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றை இயன்ற வரை மேற்கொள்ள வேண்டும்.

[Read the original article in English here.]

About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.