குற்றச் செயல்கள்: செயின் வழிப்பறியிலிருந்து காத்துக் கொள்வது எப்படி

செயின் பரிப்பாளர்கள் இடத்தை தேர்வு செய்யும் முறை

theft on bike
குற்றவாளிகள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்களில் தான் வருகிறார்கள். மாதிரி படம்: Pixabay

Translated by Sandhya Raju

அக்டோபர் 2017 ஆம் ஆண்டு, 22 வயதான நரேன் பரத்வாஜ் கேளம்பாக்கத்தில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி அருகே இரவு 8 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பைக்கில் வந்த இருவர் அவரது போனை பறித்துச் சென்றனர். கொள்ளையடிக்கும் முன்பே அந்த இடத்தில், காவல்துறை இருந்து, அவர்களை பிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இது ஒன்றும் திரைக்கதை அமைப்பு அல்ல, உண்மையிலேயே இது சாத்தியப்படக்கூடும் என சமீபத்தில் வெளிவந்த கிரிமினாலஜி ஆய்வு தெரிவிக்கிறது. சென்னையில் நடக்கும் குற்றங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள், அடுத்த குற்றத்தின் இடத்தை கணிக்க முடிந்தால், குற்றவாளிகளை அந்த இடத்திலேயே கைது செய்ய முடியும் என கூறுகின்றனர் – அதிர்ஷ்டத்தாலோ ஜோதிட கணிப்பாலோ அல்ல, குற்ற செயல் வடிவமைப்பு வைத்து இது சாத்தியம்.

மே 2021 இல், சென்னையில் நடந்த குற்றவியல் முறைகளை ஆராய்ந்த பின்னர், ‘சென்னை நகரத்தில் குற்றவாளிகளின் இருப்பிடத் தேர்வு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை ஜர்னல் ஆஃப் குவாண்டிடேட்டிவ் கிரிமினாலஜியில் வெளியிட்டது. சென்னை D.R.B.C.C.C. இந்துக் கல்லூரியில் குற்றவியல் உதவிப் பேராசிரியரான குறளரசன், மற்றும் Vrije Universiteit Amsterdam இல் ஸ்பேஷியல் எகனாமிக்ஸ் பேராசிரியரான விம் பெர்னாஸ்கோ ஆகியோர் இந்த ஆய்வின் ஆசிரியர்கள் ஆவர்.

2020 தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, திருட்டு வழக்குகள் அதிகம் உள்ள இந்திய நகரங்களில் சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது. மாநில குற்றப் பதிவுப் பணியகத்திலிருந்து ஆகஸ்ட் 2010 முதல் ஜூலை 2017 வரை பதிவான அனைத்து கொள்ளை வழக்குகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். 6.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நகரத்தில் எட்டு ஆண்டுகளில் மொத்தம் 1,573 கொள்ளை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் வழிப்பறி குற்றங்களை கண்டறியும் விகிதம் சுமார் 35% என்றும் கண்டறிந்துள்ளனர்.

கொள்ளையடிப்பதை விசாரிக்க உதவும் சில வடிவங்களை ஆய்வின் கண்டுபிடிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் கொள்ளையடிக்கக்கூடிய அல்லது சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு குற்றத்தைத் தடுக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை:

  1. தங்கள் சொந்த குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே உள்ள இடங்களில் குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.
  2. கவ்வல் துறையிடம் பிடிபடவில்லை என்றால், மீண்டும் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட குற்றவாளிகள் முனைகின்றனர்.
  3. இருப்பிட வடிவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் சில்லறை விற்பனை கடைகள், ஜவுளிகடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அருகில் நடக்கின்றன. திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்கள் பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
  4. பெரும்பாலான குற்றவாளிகள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், மேலும் 99%க்கும் அதிகமான குற்றவாளிகள் ஆண்கள்.

Read more: Tips for women in Chennai to fight the stalking menace


குற்றவாளிகளை பிடிப்பது ஏன் கடினமாக உள்ளது

“பறிப்பு சம்பவங்கள், திருட்டு போலல்லாமல், திறந்த வெளியில் நடக்கின்றன. திருட்டு என்பது ஒரு நபர் ஒரு சொத்தை உடைத்து அத்துமீறி நுழைவதை உள்ளடக்கியது, எனவே ஆதாரங்கள் அதிகம். ஆனால், செயின் பறிப்பு அதிக ஆதாரங்களை விட்டுவிடாது, மேலும் இந்த வழக்குகளைத் தீர்ப்பது கடினமானது; இந்த குற்றங்கள் பொதுவாக இரண்டு குற்றவாளிகளை உள்ளடக்கியது. ஒருவர் பைக்கில் செல்வார், மற்றொருவர் பாதிக்கப்பட்டவரின் உடைமைகளைப் பறித்துக் கொண்டிருப்பார்” என்கிறார் குறளரசன்.

திருட்டுகளைத் தீர்க்கும் போது, ​​கைரேகை போன்ற உடல் ஆதாரங்களை துப்புகளாகப் பயன்படுத்தலாம். ஆனால், சேறும் சகதியுமான சாலைகளில் குற்றத்திற்காக பைக்குகள் பயன்படுத்தப்படும்போது அரிதான சந்தர்ப்பங்களில் டயர் அடையாளங்களைத் தவிர, வேறு எந்த தடயமும் இருக்காது. “டயர் குறிகளால் மட்டும் எங்களால் அதிகம் செய்ய முடியாது.” என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான முரளிதரன்*.

காவல்துறை பயன்படுத்தும் மற்றொரு துப்பு குற்றவாளியின் சட்டை நிறம். “ஆனால் பெரும்பாலான குற்றவாளிகள் தங்களிடம் உதிரி சட்டை வைத்திருக்கிறார்கள், குற்றத்திற்குப் பிறகு, நாங்கள் தேடலைத் தொடங்குவதற்கு முன்பே சட்டையை மாற்றி பின் தப்பிக்கிறார்கள்” என்று பகிர்ந்து கொள்கிறார் முரளிதரன்.

சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், திருடப் பயன்படுத்தப்படும் பைக்குகளின் நம்பர் பிளேட்டின் மிகத் தெளிவான படங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை. உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் குறைந்த சேமிப்புத் திறனைக் கொண்டிருக்கின்றன, ஒரு வாரத்திற்குள் காட்சிகள் தானாகவே அழிக்கப்படும். இதன் விளைவாக, குறைந்த அளவிலான சேமிப்பகத்தின் சிக்கலைத் தவிர்க்க தெருக்களில் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. “ஆனால், இந்த வகையான கேமராக்கள் மூலம், குற்றவாளியின் முகத்தையோ அல்லது நம்பர் பிளேட்டுகளையோ [தெளிவாக] காவல்துறையால் பார்க்க முடியாது” என்று குறளரசன் விளக்குகிறார்.

ஆனால், சிசிடிவி கேமராக்கள் இருப்பதால்தான், சில சமயங்களில் கொள்ளையடிப்பதைக் கண்டறிய முடிந்தது என்று முரளிதரன் கூறுகிறார்.

நம்பர் பிளேட்டுகள் தெரிந்தாலும், அதில் சவால்கள் உள்ளன. திருட்டு பைக்குகள் உபயோகித்து இது போன்ற சம்பவங்கள் நடந்ததால், குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. “வழக்குகளை தீர்க்க முயற்சிக்கும் போது நிறைய முட்டுக்கட்டைகள் உள்ளன, ஆனால் கண்டறிவது சாத்தியமற்றது அல்ல” என்று மேலும் அவர் கூறுகிறார்.


Read more: All you need to know about filing an FIR in Chennai


இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு காவலர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு லட்ச மக்களுக்கு 222 போலீசார் இருத்தல் வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 195.39 போலீசார் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு 148.54 போலீசார் மட்டுமே உள்ளனர். இதனால், போலீசாருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. அவர்களால் ஒவ்வொரு குற்றத்திலும் தனித்தனியாக கவனம் செலுத்த முடியாது. தனிப்பட்ட வழக்குகளுக்கு அவர்கள் அளிக்கும் கவனம் மிகவும் குறைவு” என்கிறார் குறளரசன்.

தனது தொலைபேசி பறிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகாரளிக்க கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் நரேன் சென்றார். “விசாரித்து பயனில்லை என்று போலீசார் என்னிடம் சொன்னார்கள். அதற்குள் போனை பிரித்து அதன் பாகங்களை விற்று இருப்பார்கள். ஆனால் நான் முறைப்படி புகாரை பதிவு செய்தேன், ”என்று நரேன் விவரிக்கிறார். அவர் தொலைபேசி இன்னும் திரும்பக் கிடைக்கவில்லை.

ஆய்வின் முக்கியத்துவம்

more frequent near provision stores and supermarkets
சமீபத்திய ஆய்வின்படி, கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு அருகில் கொள்ளைக் குற்றங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. மாதிரி படம்: ரோஸ்லின் அனிஷா

குற்றவாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே இதுபோன்ற குற்றங்களைச் செய்ய முனைவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பகுதிகளும், சுற்றி இருப்பவர்களும் தங்களுக்குப் பரிச்சயமானவர்கள் என்பதால் – சாலைகள் மற்றும் போலீஸ் ரோந்து நேரங்கள் அனைத்தையும் அவர்கள் அறிந்திருப்பார்கள், சாலைகள் எப்போது நெரிசலாக இருக்கும், காலியாக இருக்கும் என அவர்களுக்குத் தெரியும், மேலும் எந்தச் சாலைகளிலிருந்து எளிதில் தப்பிக்க முடியும் எனவும் அவர்களுக்கு தெரியும். அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகள் அவ்வளவு பரிச்சயமானதாக இருக்காது, எனவே குற்றவாளிகள் அப்பகுதிகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என குறளரசன் விவரிக்கிறார்.

ஆனால் இடத்தை தீர்மானிக்கும் ஒரே காரணி இதுவல்ல. ஒரு குற்றவாளி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பகுதியில் குற்றம் செய்திருந்தால், அவர் அல்லது அவள் மீண்டும் அதே பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

“ஒரு குறிப்பிட்ட இடத்தில் [பிடிபடாமல்] ஒரு குற்றத்தைச் செய்தவுடன், அங்குள்ள குற்றவியல் வாய்ப்புகளைப் பற்றி அவர்கள் ஓரளவு அறிந்து கொள்கிறார்கள். அதே இடத்திற்குத் மீண்டும் வருவதை வசதியாகவும் தைரியமாகவும் உணர்கிறார்கள்,” என்று குறளரசன் விளக்குகிறார், முதல் குற்றத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஒரு குற்றவாளி அதே பகுதிக்கு மீண்டும் வரக்கூடும் என்று மேலும் அவர் கூறுகிறார்.

“சில குற்றங்களில் ஆண் ஆதிக்கமும் மற்றும் சிலவற்றில் பெண் ஆதிக்கமும் இருக்கும். கொள்ளையடிப்பது ஆண் ஆதிக்கக் குற்றமாகும். இது நிறைய உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு குற்றவாளி ஒரு செயினைப் பறித்துக்கொண்டு விரைவாகத் தப்பிக்க வேண்டும். பொதுவாக ஆண்களால் வேகமாக ஓட முடியும்” என்று குறளரசன் விளக்குகிறார்.

இத்தகைய குற்றங்கள் சில நொடிகளில் செய்யப்படுகின்றன, மேலும் குற்றவாளிகள் 19 முதல் 25 வயதுக்குள் இருப்பதற்கான ஒரு காரணம், அவர்கள் வேகம் நிறைந்த பைக்குகளை சொந்தமாக வைத்திருப்பதுதான். பெரும்பாலான நேரங்களில், பாதிக்கப்பட்டவர் குற்றத்தை உணர்ந்து எதிர்வினையாற்றுவதற்கு முன்பே குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள்.

பொதுவாக, ​​“தமிழகம் மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்தியாவில் இருந்து திருட வருகிறார்கள் என முரளிதரன் கூறுகிறார். வட இந்தியாவில் உள்ளவர்களை விட இங்குள்ளவர்கள் அதிக மதிப்புமிக்க நகைகளை அணிவது வழக்கமான நடைமுறையாக இருப்பதால் அவர்கள் இங்கு வருகிறார்கள். இது சாதகமாக அவர்களுக்கு உள்ளது” தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ‘தங்கம்’ என்ற சொல்தேடலில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா முதலிடத்தில் இருப்பதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் வெளிப்படுத்துகிறது.

திருமண மண்டபங்கள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதில்லை. இங்கு தான் மக்கள் அதிக அளவில் நகைகள் அணிவார்கள், இதற்கு முரணாக, கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அல்லது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சலூன்கள், ஸ்பாக்கள் மற்றும் அழகு நிலையங்கள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு வணிகங்களுக்கு அருகில் இது அடிக்கடி நிகழ்கிறது.

“திருமணங்கள் அல்லது கோவில்களை விட, இதுபோன்ற பழக்கமான இடங்களில் இருக்கும்போது தங்கள் உடைமைகளைப் பற்றி மக்கள் அதிகம் அக்கறை கொள்வதில்லை. இந்த கவனக்குறைவான மனப்பான்மையை, குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று விளக்குகிறார் குறளரசன். அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் இதுபோன்ற பகுதிகளில் தடுப்புகள், ஸ்பீட் பிரேக்கர்ஸ், சிறந்த தெரு விளக்குகள் ஆகியவற்றை காவல்துறை நிறுவலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

“பாதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லாத தனிமையான எந்தப் பகுதியிலும் குற்றவாளிகள் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடலாம். குற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பாதிக்கப்பட்ட ஒருவர் தனியாக இருக்கும் வரை அவர்கள் காத்திருப்பார்கள்,” என்று முரளிதரன் மேலும் கூறுகிறார்.

பாதுகாத்துக்கொள்வது எப்படி?

குற்றங்களைத் தடுப்பது காவல்துறையின் கடமை மட்டுமல்ல, குடிமக்களின் கடமையும் ஆகும் என குறளரசன் உறுதியாகக் கருதுகிறார். “காவல்துறைக்கு அதிக பணிச்சுமை இருப்பதை நாம் ஏற்கனவே அறிவோம். அவர்களின் பணிச்சுமையை குறைக்க, நாம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்குகளின் எண்ணிக்கை குறையும்போது, ​​காவல் துறை மீதான அழுத்தம் குறையும்; அப்போதுதான் அவர்கள் தடுப்புக்கு அதிக கவனம் செலுத்த முடியும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த சம்பவங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள குடிமக்களுக்கான சில ஆலோசனைகளை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர்:

  • சாலையில் நடந்து செல்லும் போது யாரிடமாவது போனில் பேசிக் கொண்டிருந்தால், ப்ளூடூத் அல்லது வயர்லெஸ் இயர்போன்களை உபயோகித்து, போனை பை அல்லது பாக்கெட்டுக்குள் வைப்பது நல்லது. நடக்கும்போது நரேன் கையில் போனை வைத்திருந்தார்.
  • சாலையின் வலது பக்கத்தில் நடப்பது நல்லது. பொதுவாக, கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் பாதிக்கப்பட்டவரின் பின்னால் வந்து செயினை பறித்துச் செல்வது வழக்கம். சாலையின் வலதுபுறம் நடந்து செல்லும்போது, ​​வாகனங்கள் எதிர்திசையில் வருவதால், பின்னால் இருந்து தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. ஆனால், இது எல்லா பகுதியிலும் சாத்தியமில்லை.
  • சங்கிலி அணியும் பெண்கள் கழுத்தில் துப்பட்டாவை சுற்றிக் கொள்ள வேண்டும். குற்றவாளிகள் நொடிப்பொழுதில் குற்றத்தை செய்துவிட வேண்டும் என்பதால், துப்பட்டா இருந்தால் பறிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, துப்பட்டா ஒரு நபரை கடினமான இலக்காக மாற்றும்.
  • மிக முக்கியமாக, நாம் அடுத்த பலியாக இருக்கக்கூடும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குற்றம் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். குற்றம் நடந்த பிறகு எதிர்வினையாற்றுவது பயனல்ல.

[Read the original article in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 86 Articles
Padmaja Jayaraman was a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.