கோவிட் இரண்டாம் அலை: தொற்று உறுதியானால் செய்ய வேண்டியவை

இரண்டாம் அலை: தயாராக இருப்போம்

இரண்டாம் அலையை எதிர்கொண்டு போராட ஃபோகஸ் தன்னார்வலர்கள் தயார்நிலையில் ஈடுபடும் காட்சி. படம்: Dr Alby John/Twitter

Translated by Sandhya Raju

கடந்த சில வார காலமாகவே, சென்னையில் தொற்று அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி, 3842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிய வடிவை பெற்று கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில், பல நகரங்களில் படுக்கை, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களுக்கோ, அவர்கள் குடும்பத்தினருக்கோ தொற்று ஏற்பட்டால் அடுத்து என்ன செய்வது, எப்படி சமாளிப்பது போன்ற பயம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.

நேர விரயமின்றி, எவ்வாறு மருத்துவ வசதி பெறுவது, படுக்கை பெற தாமதமானால் என்ன செய்ய வேண்டும் போன்ற உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

முதலில் அறிந்து கொள்ள வேண்டியவை: தொற்று அறிகுறிகள், பரிசோதனை மையங்கள்

 • இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, தலை வலி, உடல் வலி, வாசனை மற்றும் சுவையின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக சமீபத்தில் தொற்று ஏற்பட்டவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில அறிகுறியற்ற நோயாளிகள் இவற்றில் எதையும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
 • நீங்கள் முன் களப்பணியாளராகவோ அல்லது அறிகுறியற்ற நபரோ, யாராக இருப்பினும் வீட்டில் ஆக்சிமீட்டர் வைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியமான நபர்களுக்கு 95% ஆக்சிஜன் செறிவு நிலை உகந்ததாக கருதப்படுகிறது. 90% அளவை விட குறைந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது நல்லது.
 • கோவிட்-19 தொற்று அறிகுறி தோன்றினால், ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற மையத்தில் ஸ்வாப் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். புதிய விதியின் படி, மருத்தவர் பரிந்துரை இல்லாமலேயே பரிசோதனை மேற்கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட மையங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
 • கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு படி, தனியார் பரிசோதனை மையங்கள் ₹1500 கட்டணமாக பெறலாம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்து பெறப்படும் மாதிரிகளுக்கு, கூடுதல் கட்டணமாக ₹500 வசூலிக்கலாம். முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு நபருக்கு ₹1200 எனவும் கூட்டு மாதிரிகள் பரிசோதனைக்கு ₹900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • சென்னை மாநகராட்சி அமைத்துள்ள மாதிரி சேகரிப்பு மையங்கள் மற்றும் காய்ச்சல் முகாம்கள் ஆகியவற்றிலும் பரிசோதனை மேற்கொள்ளலாம். பரிசோதனை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்க்குள் குறுஞ்செய்தி மூலம் முடிவு தெரிவிக்கப்படும். தொற்று உறுதியானால் தகவல் மண்டல அதிகாரிக்கும் தெரிவிக்கப்படும்.

தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது, அடுத்து என்ன?

தொற்று உறுதி என்ற தகவல் வந்ததும் மருத்துவ படுக்கை எங்கு உள்ளது என படபடப்புடன் தேடாதீர்கள். நோயின் தீவிரத்தை (லேசான, மிதமான மற்றும் கடுமையான) அறிந்து கொள்ள அருகிலுள்ள ஸ்கிரீனிங் மையத்திற்கு செல்லவும்.

சென்னை மாநகராட்சி அமைத்துள்ள ஸ்கிரீனிங் மையங்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

படம்: சென்னை மாநகராட்சி/டிவிட்டர்

நோயாளிகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு கோவிட் மருத்துவமனையில் பராமரிக்கப்படுகிறார்கள்.

சிகிச்சை மையம்நோயாளிகள் பிரிவுமையம்
கோவிட் பராமரிப்பு மையம் / வீட்டில் தனிமைபடுத்துதல்லேசான தொற்று: தொற்று உள்ளது என சந்தேகமுள்ள நபர்கள், மருத்துவ ரீதியாக அறிகுறியற்ற உயர் ஆபத்து உள்ளவர்கள் (50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இணை நோய் உள்ளவர்கள் இந்த வகையின் கீழ் வரமாட்டார்கள்) -அத்திப்பட்டு மின்சார வாரிய குடியிருப்பு
-அண்ணா பல்கலைகழகம்
-பிரசன்ட்சி கல்லூரி விடுதி
-வேலம்மாள் பொறியியல் கல்லூரி
– Dr.அம்பேத்கார் கலைக் கல்லூரி
-பாராதி மகளிர் கல்லூரி
– ஜவஹர் பொறியியல் கல்லூரி
-ஐஐடி சென்னை
-என்எஸ்டிஐ கிண்டி
– குருநானக் கலை அறிவியல் கல்லூரி
– சென்னை பல்கலை கழக விடுதி
-ஜெருசலம் பொறியியல் கல்லூரி
-மொஹமத் சதக் நர்சிங் கல்லூரி
கோவிட் ஹெல்த் சென்டர்மிதமான தொற்று: மருத்துவ ரீதியாக லேசான-மிதமான ஆபத்து உள்ள உறுதிபடுத்தப்பட்ட மற்றும் தொற்று இருக்கலாம் என சந்தேகமுள்ள நபர்கள்-தொற்று நோய் மருத்துவமனை
-RSRM மருத்துவமனை
-ESI அயனாவரம்
-தாம்பரம் டிபி மருத்துவமனை
-கே.கே.நகர் புற மருத்துவமனை
-தொண்டையார்பேட்டை புற மருத்துவமனைl – II (RSRM) 
-அண்ணா நகர் புற மருத்துவமனை
-பெரியார் நகர் புற மருத்துவமனை
-இன்ஸ்டிடியூட் ஆப் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் (IOG)
-கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை (KGH)
-சென்னை மருத்துவ கல்லூரி (MMC) – RIO
-ஓமந்தூர் மருத்துவ கல்லூரி (OMC) – RIO

கோவிட் சுகாதார மைய வசதியை வழங்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை இங்கே காணலாம்.
கடுமையான தொற்று உள்ளவர்களுக்கான
பிரத்யேக கோவிட் மருத்துவமனைகள்
கடுமையான & உயர் நோய் உள்ளவர்கள்: தொற்று இருக்கலாம் அல்லது உறுதிபடுத்தப்பட்ட கடும் தொற்று / இணை நோய் உள்ளவர்கள் / வயதானவர்கள்தனியார் மற்றும் அரசு டெர்சியரி பராமரிப்பு மையங்களின் பட்டியலை இங்கே காணலாம்.

லேசான தொற்று உள்ள நபர்களுக்கான தனியார் பராமரிப்பு மையங்களை விடுதியில் அல்லது தனியார் இடங்களிலோ நடத்த தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. வரும் நாட்களில் தொற்று பரவல் அதிகமாக கூடும் என சிந்தனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மாநகராட்சி பராமரிப்பு மையங்களில் 12,000 படுக்கை வசதிகள் உள்ளன.

கோவிட் பராமரிப்பு மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்லும் முன், அடிப்படை தேவைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

 • அத்தியாவசியங்கள்: உடைகள், மொபைல், மடிக்கணினி, சார்ஜர், வங்கி அட்டை, ஆக்சிமீட்டர், தெர்மோமீட்டர், சுகாதார பொருட்கள், தண்ணீர் பாட்டில், எலக்ட்ரிக் கெட்டில் மற்றும் ஹேண்ட் சானிடைசர்கள்.
 • ஆவணங்கள்: காப்பீடு விவரங்கள், மருத்துவ வரலாறு கோப்புகள், ஒவ்வாமை பட்டியல்.

சென்னை மாநகராட்சி மருத்துவர் அல்லது தனி மருத்துவரால் 14 நாட்கள் வீட்டு தனிமைபடுத்துதல் பரிந்துரைக்கப்படும் சூழல்கள்:

 • கோவிட் தொற்று உள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்தால், அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும்.
 • தொற்று அறிகுறியின்றி தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்கள்.
 • சளி, இருமல், காய்ச்சல், பேதி, தலைவலி போன்ற லேசான அறிகுறி உள்ளவர்கள்.
 • தொற்று உறுதியானவர்களுக்கு உயர் அழுத்தம், சக்கரை நோய், இதய நோய், நுரையீரல்/கல்லீரல்/சிறுநீரகம் போன்ற இணை நோய்கள் இல்லாதவர்கள்.

இத்தகைய சூழலில், உடன் இருப்பவர் நோயாளியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் மோசமாக மாறினால் (மூச்சு விடுவதில் சிரமம், ஆக்சிஜன் அளவு 90% குறைவாக இருத்தல், தொடர் வலி/மார்பில் அழுத்தம் மற்றும் உதடுகள் / முகத்தின் நிறமாற்றம்.) உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

நோயாளி குணமடைந்து வீடு திரும்பியதும் தொடர் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும், முழுமையாக குணமடைந்ததை உறுதி செய்ய அறிகுறிகள் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்க குறைந்தது இரண்டு அறைகள், இணைக்கப்பட்ட குளியலறை கொண்ட அறை, பாதுகாப்பாளர் ஆகியவை அவசியம். வசதி இல்லாதவர்கள், சென்னை மாநகராட்சியை தொடர்பபு கொண்டால், அருகிலுள்ள கோவிட் பராமரிப்பு மையம் குறித்து தகவல் அளிப்பர்.

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை சென்னை மாநகராட்சி சுகாதார பனியாளர் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ உடல் நிலை குறித்து விசாரிப்பர். அப்பொழுது எந்த தகவலையும் மறைக்காமல் அவர்களிடம் பகிர வேண்டும்.


Read more: Current COVID protocol to follow if you are travelling to Chennai


மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்வது

 • அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் படுக்கை இருப்பு நிலை குறித்து அறிந்து கொள்ளுங்கள். அரசு நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றால், உங்கள் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொள்ளவும்.  
 • மண்டல அதிகாரியிடம் அரசு மருத்துவமனையில் படுக்கை இருப்பு குறித்து கேட்டறியலாம்.
 • தனியார் மருத்துவமமனைக்கு செல்லும் முன், அவர்களை தொடர்பு கொண்டு படுக்கை இருப்பு குறித்து விசாரிக்கவும். தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்ணை இங்கே காணலாம்.
 • 7 நாட்கள் கோவிட் சிகிச்சைக்கு சராசரியாக சுமார்₹2-3 லட்சம் ஆகும் (சில மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் ஆகும்).
 • மருத்துவ காப்பீடு இருந்தால், சிகிச்சை கட்டணம் அதில் அடங்கும். உங்களின் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவியுங்கள்.  
 • மருத்துவமனைக்கு (அரசு அல்லது தனியார்) ஆம்புலன்சில் தான் செல்ல வேண்டும். இதற்கு108 என்ற என்ணை தொடர்பு கொள்ளவும். தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால், அவர்களே ஆம்புலன்ஸ் அனுப்புவர்.
 • தொற்று பரவலை தடுக்க, குடும்ப உறுப்பினரையோ அல்லது பாதுகாப்பாளரையோ பெரும்பாலான மருத்துவமனைகள் அனுமதிக்க மாட்டார்கள்.  
 • உங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை வழங்க வேண்டும். தொற்று அறிகுறி தென்பட்ட மற்றும் தனிமைப்படுத்துதலின் (அதிக பட்சம் 14 நாட்கள்) இரண்டு நாள் முன்பு வரை தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்.
நகரம் முழுவதும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்காக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
படம்: Dr Alby John/Twitter

மறுபரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியாகும் வரை உங்களின் குடும்ப மருத்துவரிடம் தொடர்பில் இருப்பது அவசியம். மெக்கில் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தின் கனடா ஆராய்ச்சித் தலைவர் & பேராசிரியர் டாக்டர் மது பாய், வீட்டில் கோவிட் நிர்வகிப்பு குறித்து சில வழிகாட்டுதல்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்:

கோவிட் ஆரம்ப நிலை 

 • பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்கிக் கொள்ளுங்கள்
 • நீங்களும், குடும்பத்தில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணியுங்கள்
 • வீட்டில் ஜன்னல்களை திறந்து வையுங்கள், இது காற்றோட்டத்தை உறுதி படுத்தும்.
 • வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், ஓய்வெடுங்கள்.
 • நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
 • தேவையான அனல்ஜீசியா (பாராசிட்டமால்) இருப்பில் வைக்கவும்.

ஆக்சிஜன் செறிவு>92%

 • காய்ச்சல் மற்றும் வலிக்கு பாராசிட்டமால்.
 • போதுமான நீரேற்றத்திற்கு தண்ணீர் & சக்கரை, உப்பு கலந்த நீர் (ORS)
 • நன்றாக சுவாசிக்க ஏற்றவாறு தூங்கவும்.
 • அறிகுறிகள் தீரும் வரை பட்சோனைடு (ஸ்டீராய்டு) இரண்டு முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் உள்ளிழுக்கவும்.

ஆக்சிஜன் செறிவு <92% (மருத்துவ ஆலோசனை பெறவும்)

 • முடிந்தால் வீட்டில் ஆக்சிஜன் வைக்கவும் (மிகக் குறைந்த அளவைப் பயன்படுத்தவும் >92%)
 • ஆக்சிஜன் செறிவு அளவை தொடந்து கண்காணிக்க வேண்டும், அளவு <85 அல்லது நிமிடத்திற்கு 4L தேவை எனும் பொழுது உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
 • நன்றாக சுவாசிக்க ஏற்றவாறு தூங்கவும். இது பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
 • நிறைய நீர் அருந்த வேண்டும் மற்றும் காய்ச்சலுக்கு பாராசெட்டமால் எடுக்க வேண்டும்.

ரெம்டெசிவிர் / டோசிலிசுமப் /பிளாஸ்மா ஆகியவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும்

அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) / பின்வரும் மருந்துகளின் ஆஃப் லேபிள் பயன்பாடு வரையறுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கருதப்படுகிறது மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே உபயோகிக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 • மிதமான மற்றும் கடுமையான நோயுள்ள நோயாளிகளுக்கு (துணை ஆக்ஸிஜன் தேவை) மற்றும் சிறுநீரக அல்லது கல்லீரல் செயலிழப்பு இல்லாத நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் (EUA) கருதப்படலாம்.ஆக்ஸிஜன் துணை இல்லாத அல்லது வீட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படாத நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படக்கூடாது..
 • பின்வரும் அளவுகோல்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்போது டோசிலிசுமாப் (ஆஃப்-லேபிள்) கருதப்படலாம்: கடுமையான நோயின் இருப்பு, கணிசமாக உயர்த்தப்பட்ட அழற்சி குறிப்பான்கள், ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்தினாலும் உடல் நிலை மேம்படாத நிலை.
 • பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும்போது மட்டுமே பிளாஸ்மா (ஆஃப் லேபிள்) கருதப்படலாம்: ஆரம்ப மிதமான நோய் மற்றும் உயர் டைட்ரே கிடைப்பது (ஒரு குறிப்பிட்ட அங்கீகரிக்கும் இரத்தத்தில் குறிப்பிட்ட ஆன்டிபாடிகளின் செறிவு) நன்கொடையாளர் பிளாஸ்மா.

விரிவான வழிகாட்டுதலுக்கு இங்கே பார்க்கவும்.

மருத்துவமனை வெளியேற்றம் கொள்கை என்ன?

அ. மிக லேசான / முன் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்கள்

 • தொற்று உறுதிபடுத்தப்பட்டு பத்து நாட்கள் இருந்தவர்கள், தொடர்ந்து கோவிட் பராமரிப்பு மையத்தில் 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
 • வெளியேறும் முன் RT-PCR பரிசோதனை தேவையில்லை.  
 • வெளியேறிய ஏழு நாட்கள் பிற்கும் வீட்டு தனிமையில் இருத்தல் வேண்டும்.

ஆ. மிதமான தொற்று உள்ளவர்கள் 

 • தொற்று உறுதிபடுத்தப்பட்டு பத்து நாட்கள் பிறகு, தொடர்ந்து மூன்று நாட்கள் அறிகுறி இல்லாமல் இருந்தால் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
 • வெளியேறும் முன் RT-PCR பரிசோதனை தேவையில்லை. 
 • வெளியேறிய ஏழு நாட்கள் பிற்கும் வீட்டு தனிமையில் இருத்தல் வேண்டும்.

இ. கடுந்தொற்று உள்ளவர்கள் 

 • மருத்துவ ரீதியாக குணமடைந்த பின்னர் நோயாளி வெளியேறலாம்.
 • அறிகுறியின்றி RT-PCR பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட வேண்டும்.

Read more: Catch the latest on vaccination, fever camps, hospital beds and night curfew in Chennai


அவசியம் தெரிவிக்க வேண்டியவை

நோயாளியின் குடும்பத்தினர் உடனடியாக மண்டல மாநகராட்சி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஸ்வாப் பரிசோதனைக்கு அதிகாரி ஏற்பாடு செய்வார்.

வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதால், குடும்பத்திற்க்கு தேவையான சமையல் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பெற உதவ, காவல் துறை அதிகாரி அல்லது FOCUS (Friend of COVID Citizen Under Surveillance) தன்னார்வலருக்கு தகவல் வழங்கப்படும்.
வீட்டை முழுவதுமாக கிருமி நீக்கம் செய்ய சுகாதார பணியாளரை, மாநகராட்சி அலுவலர் அனுப்பி வைப்பார்.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தகவல்

நெருக்கடியின் போது, கவலை, குழப்பம், அல்லது சோகம் ஏற்படுவது சகஜம் தான். உங்கள் உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்த நம்பிக்கையான நபரிடம் பேசுங்கள். சென்னை மாநகராட்சியின் ஆலோசனை மையத்தை 044 4612 2300 / 044 2538 4520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவிட் தொற்று உள்ளவர்களை குடியிருப்புகள் எவ்வாறு கையாள வேண்டும்?

 1. கோவிட் குழு ஒன்றை ஏற்படுத்துங்கள் (பெரிய குடியிருப்புயெனில் ஒரு தொகுதியிலிருந்து இரண்டு உறுப்பினர்கள்)
 2. கோவிட் நோயாளிகளின் நிலையைப் பற்றி மற்ற குடியிருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்து, அடையாளங்களை வெளிப்படுத்தாமல், பாகுபாட்டைத் தவிர்க்கவும்
 3. கிருமி நாசினி தெளிக்கவும், கிருமி நீக்கம் செய்யவும்,குடியிருப்பு சங்கம் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். மண்டல அதிகாரி இதற்கான வழிமுறையை பற்றி விவரிப்பார்.
 4. சென்னை மாநகராட்சி அளித்துள்ள வழிகாட்டுதல் படி, தொற்று உள்ள வீடுகளின் மருத்துவ கழிவுகளை (முகக்கவசம், கையுறை ஆகியவை) தனியாக மஞ்சள் பையில் சேகரித்து சுகாதார பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான மஞ்சள் பை, மாநகராட்சியால் தொற்று உள்ள வீட்டிற்க்கு தினந்தோறும் அளிக்கப்படும்.

நாங்கள் (2020) தொகுத்து வழங்கிய குடியிருப்பு சங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி இங்கே படிக்கலாம்.

(சென்னை மாநகராட்சி, தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தகவல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது)

Read the original article in English here.

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Bhavani Prabhakar 146 Articles
Bhavani Prabhakar was Staff Reporter at Citizen Matters Chennai.