இந்தியாவின் முதல் பதுமுறைகாணல் அதிகாரியை பெற்றது சென்னை

சென்னைக்கான தொலைநோக்கு பார்வை

அழகு பாண்டிய ராஜா இந்திய ஸ்மார்ட் சிட்டி ஃபெலோவாக பணி செய்துள்ளார். படம்: அழகு பாண்டிய ராஜா

Translated by Sandhya Raju

முப்பத்தியோரு வயது பொறியாளர் எம் பி அழகு பாண்டிய ராஜா, ஜனவரி 25-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் நகர பதுமுறைகாணல் அதிகாரியாக (City Innovation Officer) நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் மென்பொருள் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்த அழகு பாண்டிய ராஜா, தாய் நாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்ற உந்துதலால், சென்னை திரும்பினார். இந்தியன் ஸ்மார்ட் சிட்டி ஃபெலோ (Indian Smart City Fellow) பணியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆகியவற்றிற்கு புது தீர்வுகளை கொண்டு வந்தார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் மற்றும் வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஆகியோரின் முயற்சியே புதுமுறைகாணலுக்கான ஒரு பிரிவினை உருவாக்க காரணம் என்கிறார்.

இந்த புதிய பதவியில் அவரது பங்கு குறித்தும், பதுமுறைகாணல் அதிகாரியாக பொது மக்களுடனான ஈடுபாடு குறித்தும் அவரிடம் சிட்டிசன் மேட்டர்ஸ் உரையாடியது.

சென்னையின் பதுமுறைகாணல் அதிகாரி என்ற பொறுப்பு எப்படி உருவானது? 

பொது மக்களின் கருத்தை பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்க சென்னை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. இதை முன்னேடுத்து செல்ல பொருத்தமான தளத்தை இறுதி செய்யும் பணியில் அவர்கள் இருந்தனர்.

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிய போது, அதிக செலவு இல்லாமல் கழிவு மேலாண்மை மற்றும் கோவிட் பாதுகப்பு யோசனைகளை உருவாக்கி ஸ்பான்சர்கள் உதவியுடன் செயல்படுத்த முடிந்தது. இதே போல் நகரத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கான தீர்வு பல பேரிடம் உள்ளது. இந்த யோசனைகளை ஒன்றிணைக்க ஒரு தளத்தை நாங்கள் உருவாக்குவோம்.

பதுமுறைகாணல் அதிகாரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது, அதற்கு நான் விண்ணப்பித்தேன். மாநகராட்சியுடன் முன்னர் இணைந்து பணியாற்றிய அனுபவம், எனக்கு ஏதுவாக அமைந்தது.

இதற்கு முன்னர் மாநகராட்சியுடன் இணைந்து செய்த பணிகள்? 

இந்த நியமனத்திற்கு முன்பு, நான் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சரவையில் ஃபெலோவாக இருந்தேன். நாடு முழுவதும் சுமார் 40 பேர் தேர்ந்தெடுக்கபட்டனர். இதில் தமிழகத்தில் நான் உள்பட இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டோம். நகர்ப்புறங்களில் உள்ள சிக்கல்களை சமாளிக்க தீர்வை உருவாக்கும் சவால் அளிக்கப்பட்டது.

கழிவு மேலாண்மையை நான் தேர்ந்தெடுத்தேன். கழிவுகளை எளிதில் மறுசுழற்சி செய்வதற்கான டிஜிட்டல் தீர்வாக கழிவு பரிமாற்றத்தை (Waste Exchange) உருவாக்கினேன். எந்தவொரு ஸ்மார்ட் சிட்டியிலும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்பதால், தமிழகத்தில் சென்னையை இதற்காக தேர்ந்தெடுத்தேன். இங்கு மேற்கொண்ட மாதிரி ஒட்டத்தை அடுத்து, இந்தியா கழிவு பரிமாற்றம் என்ற பெயரில் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.


Read more: Here’s how Chennai’s novel Madras Waste Exchange is incentivising recycling


இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தகையில், கோவிட் தொற்று பரவலால் சென்னையில் என்னுடைய பணி காலம் நீண்டது. இந்த சமயத்தில் கோவிட் மேலாண்மை குறித்த பல நிகழ்வுகளில் பணியாற்ற முடிந்தது. நகரத்தில் கோவிட் பரவலை கண்காணிக்க, ஜி.சி.சி கொரோனா கண்காணிப்பு (GCC Corona Monitoring) என்ற திட்டத்தையும் அதனுடன் ஒரு செயலி பயன்பாட்டையும் வடிவமைத்தேன். இந்த செயலி ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தரவிறக்கம் பெற்றது. இந்த முயற்சி சென்னையில் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே போல் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை மேலாண்மை ஆகியவற்றிற்கும் செயலி உருவாக்கப்பட்டது.

அழகு பாண்டிய ராஜாவின் முயற்சியில் உருவான செயலி.
படம்: சென்னை மாநகராட்சி.

இறுதியாக, கோவிட் காரணமாக, நகராட்சியின் வரி வசூல் மிகவும் குறைவாக இருந்தது, எனவே சொத்து வரி வருவாயை மேம்படுத்துவதற்காக செயல்முறையை வடிவமைத்தோம்.   

நகர்ப்புற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆர்வம் எவ்வாறு எழுந்தது?

 HCL நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக ஐந்து வருடம் வேலை பார்த்தேன். ஆனால் நான் சிவில் சர்வீசில் நுழைய விரும்பினேன், அதனால் நான் யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தேன். சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றேன், இந்த நேரத்தில் நெட் (NET) தேர்வுகளையும் முடித்தேன்.

சிவில் சர்வீஸ் முயற்சியில் எட்டுபட்டிருந்த போது, MoHUA ஃபெலோஷிப் குறித்து அறிந்து அதற்கு விண்ணப்பித்தேன். இதில் தேர்வாகி இரண்டு வருடங்கள், நகர்ப்புற பிரச்சனைக்கான தீர்வில் ஈடுபட்டேன். அரசு செயல்பாடுகள் குறித்தும், நகரத்தில் உள்ள சவால்கள் குறித்தும் அறிய இது பெரும் உதவியாக இருந்தது. அனைத்து இடங்களிலும் எனது தொழில்நுட்ப பின்னணியை உபயோகிக்க முடிந்தது.

பல்வேறு பகுதிகளில் இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவு ஒரு பயனுள்ள நோக்கத்திற்கு உதவும். சமுதாயத்திற்கு எதையாவது திருப்பித் தர விரும்பினேன், இந்த வேலை மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது.

சென்னையின் பதுமுறைகாணல் அதிகாரியாக உங்கள் இலக்கு?

இதற்கான முழு வேலையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, நகரத்தின் அனைத்து சவால்களையும் பொது மக்கள் அறியும் படி வைத்து, அதற்கான தீர்வுகளை எட்ட, ஒரு ஹேக்கத்தான் (hackathon) முயற்சியை மேற்கொள்ள உள்ளோம்.

சவால்களுக்கு தீர்வு உள்ள எவர் வேண்டுமானாலும், இந்த அலுவலகத்தில் தங்களுடைய எண்ணத்தை தெரிவிக்க வரலாம். அரசிற்கு உதவும் வகையில் தொடக்க நிறுவனமாக இருந்தால், குறைந்த பட்ச மூலதனத்திற்கு உதவ முயற்சி செய்வோம், அல்லது மூலதன உதவிக்கு ஏற்றவர்களிடம் கொண்டு செல்வோம். எண்ண பரிமாற்றத்தின் இடமாக படைப்புகளின் வேராக ஒரு தளத்தை உருவாக்குவதே நோக்கமாகும்.

மாநிலம் முழுவதிற்குமான ஒரு சிந்தனை தளமாக இந்த அலுவலகத்தை உருவாக்குவதே தொலைநோக்கு திட்டமாகும். இதற்காக பல்வேறு துறை வல்லுனர்களை இணைக்க உள்ளோம். இதற்காக கல்வி நிறுவனங்கள், தனியார் துறை, ஆராய்ச்சி மாணவர்கள், சிந்தனையாளர்காள், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.

அரசு முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாணவர்களுக்கென ஒரு களமும் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கான களம் மற்றும் அவர்கள் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது குறித்து விளக்க முடியுமா?

நீங்கள் முதுகலை மாணவராக இருந்தால், சமூக தரவைக் கொண்டு பணியாற்ற இது அற்புதமான வாய்ப்பாகும். அரசிடமிருந்து தரவு பெறுவது கடினம், துறைகள் இடையே ஒருங்கிணைப்பு கூட கடினமானது.

இந்த தளத்தின் மூலம், மாணவர்கள் பணிபுரிய விரும்பும் துறையை பொறுத்து பல்வேறு துறைகளில் அவர்களை ஈடுபடுத்த முடியும் என்று நம்புகிறோம். அரசிற்கு ஒரு நல்ல அறிவு வளம் கிடைக்கும், மேலும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல்களையும் பெறுவார்கள் என்பதால் இது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.

நகர்ப்புற பிரச்சினைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாக இதை பார்க்கிறோம். 

பொது ஆர்வலர்களுடன் இணைந்து பணியாற்ற திட்டம் உள்ளதா?

அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் எடுத்து ஒரு தீர்வை உருவாக்கலாம். சிக்கல்களை எவ்வாறு சரிசெய்வது என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட முடியுமா என்று பார்க்கலாம். ஆயினும், அதிகாரிகள் மற்றும் குடிமை அமைப்பு ஊழியர்களின் பணிகளை எங்களால் செய்ய இயலாது.

என்ன செய்ய முடியும் என்பதற்கான எந்த எல்லைகளையும் நாங்கள் இன்னும் நிர்ணயிக்கவில்லை, எனவே சாத்தியங்களுக்கு எல்லையில்லை. அனைத்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு பகுப்பாய்வு செய்வோம். அதில் அரசால் எவையெல்லாம் முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை பார்ப்போம். சென்னையில்

இந்த முயற்சி தொடங்கும் முன், இந்தியாவில் எங்கும் இது போல் ஒரு பதுமுறைகாணல் அலுவலகம் இல்லை. பொதுவாக, தனியார் நிறுவனம் அல்லது சிந்தனையாளர்காளுக்கு ஆராய்ச்சி தொடர்பான வேலைகள் வழங்கப்படுகிறது, ஆனால் இங்கு நாம் புதிய யோசனைக்கான திறன் களத்தை அரசாங்கத்திற்குள்ளேயே வளர்க்க முயற்சிக்கிறோம்.

பெங்களூருவில் உள்ளது போல், அதிகமான தரவுகளை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல உங்கள் அலுவலகம் ஈடுபடுமா?

நகர தரவு அதிகாரியை (City Data Officer) நியமித்துள்ளோம். தரவை வரையறுத்து, பல்வேறு தரவு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதே அவரின் பணியாகும். ஆனால், தரவுகளை பொது மக்கள் பார்வைக்கு முழுவதுமாக கொண்டு செல்வது மாநகராட்சி அல்லது அரசின் முடிவாகும்.

தரவை வகைப்படுத்தி பகுப்பாய்வு செய்ய இந்த அலுவலகம் உதவும், அதற்கு மேல் முடிவெடுப்பது எங்கள் கையில் இல்லை. MoHUA தொடர்ந்து பொது தரவுக் கொள்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, நிச்சயமாக இது குறித்து சில முன்னேற்றங்களை சென்னை மாநகராட்சி எடுக்கும்.

பல்வேறு தரப்பு குடிமக்களிடம் தொழில்நுட்ப தீர்வுகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நல்ல யோசனைகள் இருக்கலாம், அவர்களை அணுகுவதற்கான திட்டம் என்ன?

இந்த அலுவலகம் தொடங்கி ஒரு வாரம் தான் ஆகிறது. தற்போது கொள்கைகளை உருவாக்கும் பணியில் உள்ளோம், அதன் பின்னர் தான் அணுகும் முறைகளை முன்னெடுத்து செல்ல முடியும். ஒரு தளம் இல்லாமல், வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் மக்களிடம் செல்ல முடியாது. பராம்பரிய மற்றும் சமூக வலை தளங்கள் மூலம் எங்களின் செயல்களை கொண்டு செல்வோம். நாங்கள் நடத்தவுள்ள ஹாக்கதான் (hackathon) நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்.

உங்கள் அலுவலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளீர்கள்?

தற்போதைக்கு, நாங்கள் ரிப்பன் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் செயல்படுகிறோம் என்பது மட்டும் உறுதி. பணியாளர்கள் விவரங்களை உருவாக்கி வருகிறோம். வரும் வாரங்கள், மாதங்களில் பல பயில் நிலை கட்டத்தில் சேர்க்க மாணவர்கள் உள்ளோம். பொது மக்களின் வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது, எங்கள் முயற்சியின் உறுதியான பலனை மக்கள் அறிய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.

இருக்கும் வளங்களை பயன்படுத்தி, மக்களின் உற்சாகத்தை முன்னெடுத்து, தனியார் மற்றும் பொது நிதியை ஒன்றிணைத்து, இங்கு எழும் புதிய யோசனைகளை வலுவாக்க வேண்டும்.

நகரத்தில் உள்ள சவால்களை தீர்க்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இந்தியாவின் 50 சதவிகிதம் பேர் இளைஞர்கள். அரசு சரியாக செயல்படவில்லை, ஒன்றும் செய்ய முடியாது, அரசு ஊழலில் திளைக்கிறது என பல எண்ணங்கள் இவர்கள் மனதில் வலுவாக உள்ளது. இதற்கு அச்சாணியாக நாம் ஊடகங்களில் பார்க்கும், படிக்கும் செய்திகள் அமைகிறது.

அரசு இயந்திரத்தில் புது சிந்தனைகளுக்கும், வளர்ச்சிக்கும் வாய்ப்பில்லை என பலர் நினைக்கிறார்கள்.ஆனால், இந்தியாவின் முதல் பதுமுறைகாணல் அதிகாரி என்ற என் நியமனம் மூலம் இது பொய்யாகிறது. அரசு அமைப்பின் வெளியே நான் இருந்தாலும், என் யோசனைகள் வரவேற்கப்பட்டன.

பெரிய அளவில் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், சாத்தியங்கள் மீது நம்பிக்கை கொண்டு, நம் முன் உள்ள பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட அதிகமானவர்கள் நமக்கு தேவை.

[Read the original interview in English here.]

Also read:

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Aruna Natarajan 182 Articles
Aruna is an Associate Editor at Citizen Matters. She has a BA in Economics and a PG Diploma in Journalism. She has also worked in a think-tank on waste management policy and with a non-profit in sport for development. She writes on civic issues, governance, waste, commute and urban policy. She tweets at @aruna_n29.