குப்பை மேலாண்மை குழறுபடியால் பல்லவபுர நகராட்சி மக்கள் தவிப்பு

SOURCE SEGREGATION OF WASTE IN CHENNAI

குப்பை தொட்டியில் இருந்து வழியும் குப்பை.

பல்லவபுர நகராட்சியின் கீழுள்ள 42 வார்டுகளில் கடந்த மூன்று வாரங்களாக பல சுகாதார சீர்கேடுகள் நடைப்பெற்று வருகிறது. நகராட்சியின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குப்பைகளை சரியாக அப்புறப்படுத்தாமலும், குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யாமலும் அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர்.

பல தெருக்களில் வீட்டுக்கு வந்து குப்பைகளை சேகரிப்பது முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் எப்போதுமிருக்கும் குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பலரும் குப்பைத்தொட்டி இருந்த இடங்களில் எப்போதும் போல குப்பையை கொட்டி வருகின்றனர் அதை சரிவரக் கையாளாததால் சாலைகளில் பறந்தும் சுற்றுப் பகுதிகளில் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டுக்கு வித்திடுகிறது.பல தெருக்களில் தொடர்ந்து குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வ௫கிறது. இதை பற்றி சுகாதார அதிகாரியான (Sanitary Officer) தி௫ செல்வராஜ் அவர்களிடம் பல முறை புகார் அளித்த போதும், செய்கிறேன், பார்கிறேன் என்ற பதில் மட்டுமே அவரிடமிருந்து வ௫கிறது ஆனால் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

ரோட்டை ஆக்கிரமித்துள்ள குப்பை.

இச்சூழலுக்கு காரணம் பல்லவபுர நகராட்சியின் புதிய குப்பை மேலாண்மை திட்டமே. உரிய கால அவகாசம் இன்றி வீட்டுக் வீடு குப்பை சேகரிக்கும் திட்டத்தை அமுல்படுத்த முற்பட்ட நகராட்சி, மக்களுக்கும் சுகாதார தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கவில்லை.

பல்லவபுர நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டையில் திடகழிவு மேலாண்மை, குத்தகைதாரர் பணி புரியும் இடத்தை சுற்றியுள்ள பல தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் காணப்படுகிறது.
ஒருசில தெருக்களில் விசாரத்தப்போது, குப்பைகளை சரியாக அள்ளாமல் துப்புறவாளர்கள் எடைக்குப்போட பயன்படும் பொருட்களை மட்டும் எடுத்து செல்வதாகவும் கூறினர். துப்புரவு தொழிலாளர்களிடம் விசாரித்ததில், கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. குப்பைகளையள்ளும் நிறுவனத்திற்கும் நகராட்சி நிர்வாகத்திற்க்கும் இடையே உள்ள பணப்பிரச்சனை காரணமாக சுகாதார தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த நிறுவன தொழிலாளர்களை கொண்டு நகராட்சியே குப்பைகளை அகற்றுவது தெரியவந்தது.

ரோட்டில் போடப்பட்டுள்ள குப்பை.

குப்பைகளை கொட்டும் இடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று வர வாய்ப்புகள் உள்ளது, குப்பைகள் குவிந்துள்ள பல இடங்களில் கால்நடைகளும், பன்றிகளும், நாய்களும் மேய்ந்து கொண்டிருக்கிறது. வருகின்ற நாட்களில் மழை பொழிந்தால் இக்குப்பைகளினால் சுற்றியிருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் நோய் வாய்படுவது உறுதி. ஒருசில இடங்களில் குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கால்வாய்களை அடைத்துக்கொள்ளவும் வாய்ப்பும் உள்ளது. இப்பொழுது பல்லவபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடைய காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. சில இடங்களில், அள்ளப்படாத குப்பை பாதி சாலையை ஆக்கிரமித்துள்ளது.

பல்லவபுர நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடான நிலையை, சரி செய்ய நகராட்சி நிர்வாகம் போர்கால அடிபடையில் பணி செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பம்.

(எஸ். டேவிட் மனோகர், குரோம்பேட்டை வாசி)

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About S David Manohar 2 Articles
David Manohar is an active volunteer of Arappor Iyakkam. He can be reached at ace4david@yahoo.co.in