தமிழக பட்ஜட்: சென்னைக்கான திட்டங்கள் என்ன?

தமிழக பட்ஜட் 2022

port expressway chennai
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல்-துறைமுகம் விரைவுச்சாலை

Translated by Sandhya Raju

மார்ச் 18 அன்று தமிழக நிதித் துறை அமைச்சர், பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆண்டுக்கான மாநில பட்ஜட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். நிலையான சுற்றுச்சூழல், போக்குவரத்து இணைப்பு அதிகரித்தல், தமிழ் கற்றலை மேம்படுத்தல், சேவை அணுகலில் கவனம் செலுத்துதல் ஆகியவை முக்கிய இடம் பெற்றன.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, நெடுஞ்சாலை விரிவாக்கம், வெள்ளத் தடுப்பு, பேரிடர் தயார்நிலை, பருவ நிலை மாற்றம், நகரத்தின் பசுமை போர்வையை அதிகரித்தல் ஆகியவை சென்னைக்கான ஒதுக்கீட்டில் இடம்பெற்றுள்ளன.

Finance minister PTR
தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் தியாகராஜன். படம்: Wikimedia Commons by Avenuesmadurai

Read more: Sustainability needs a people-centric approach; is smart city Chennai geared to that?


போக்குவரத்து

நகருக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பட்ஜெட்டில் பல முன்முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. சாலை விரிவாக்கம், உயர்த்தப்பட்ட காரிடார் மற்றும் கிரேடு பிரிப்பான்களை அமைக்கவும் பட்ஜட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை அகலப்படுத்தப்படும் என பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டது. திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் சாலைகளை அகலப்படுத்தவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீதமுள்ள சாலைகள் 6 வழி சாலையாக ₹135 கோடி முதலீட்டில் விரிவு படுத்தப்படும்.

மதுரவாயல் -சென்னை துறைமுகம் உயர்த்தப்பட்ட காரிடர் திட்டம் புதுப்பிக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது. 20.6 கி.மீ நீளம் கொண்ட இந்த இரண்டகுக்கு சாலை ₹5770 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றிற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

₹322 கோடி முதலீட்டில் காட்டுப்பாக்கம் சந்திப்பில் கிரேட் செபரேட்டர் அமைக்கப்பட உள்ளது. சென்னை-சித்தூர்-பெங்களூரு சாலை, மவுன்ட்-பூந்தமல்லி-ஆவடி சாலை மற்றும் பூந்தமல்லி-குன்றத்தூர்-பல்லாவரம் சாலை ஆகிய சாலை சந்திப்பு இங்கு இணைவதால், போக்குவரத்து நெரிசல் மிகுதியக உள்ளது. முதல் கட்டமாக விரிவான திட்ட அறிக்கை வரையப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தவிர, சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டம் ₹2,250 கோடியிலும், ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன்₹1200 கோடியில் சென்னை-கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டம், ₹628 கோடியில் தமிழ்நாடு சாலைத் துறை திட்டம்-II ஆகியவையும் பட்ஜட்டில் இடம் பெற்றுள்ளன.

2000 மின் வாகன பேருந்துகள் வாங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில், புறநகர் ரயில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பை-பாஸ் சாலைகள் போன்ற சில காரிடார்களில் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை (TOD) ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு FSI குறியீட்டை அரசு உயர்த்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள தடுப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கை திட்டம்

சிங்கார சென்னை2.0 திட்டத்தின் கீழ் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பிற்காக ₹10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தானியங்கி வானிலை நிலையங்கள், வானிலை ரேடார்கள் மற்றும் வானிலை பலூன்களின் வலையமைப்பை உருவாக்குவதற்கு இவை செலவிடப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கூடுதலாக, ₹1875 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Read more: Chennai rains: The real reasons why urban floods are a never-ending problem in city


பசுமை போர்வையை அதிகரித்தல்

பட்ஜட்டின் அறிவிப்பு படி, ‘தமிழ் நாடு பசுமை கால நிலை மாற்றல் நிதி” ஒன்றை அரசு உருவாக்கும். பருவநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் நகரத்தில் பசுமையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிக்கு இந்த நிதி உபயோகப்படுத்தப்படும். வளர்ச்சி நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதிகள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் நிதியை இந்த நிதியம் வழி நடத்தும்.

லண்டன் கியூ கார்டன் உடன் இணைந்து, சென்னைக்கு அருகே தாவரவியல் பூங்காவை அமைக்க ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பூங்காவும் பட்ஜட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் படி, கிண்டி குழந்தைகள் பூங்காவில் விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் ஆகியவை சேர்க்கப்படும். சிறு வயது முதலே, விலங்குகள், வனங்கள் குறித்து ஆர்வத்தை உண்டாக்கி கற்பிக்கவும் உதவும்.

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு மொத்தம் ₹849.21 கோடி இந்த பட்ஜட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி மற்றும் பிற திட்டங்கள்

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் கழகம் (IMH) மறுவடிவமைக்கப்பட்டு, ₹40 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் அமைக்கப்படும்.

கல்விக்கும் குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் இள நிலை கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி மற்றும் எய்ம்ஸ் போன்ற அதிக போட்டி மற்றும் அணுக முடியாத கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த விளையாட்டு வசதிகள் மற்றும் பயிற்சிக்கான அணுகலை அதிகரிக்க, ஆர்.கே.நகரில் இலவச வசதிகளுடன் கூடிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் உயர்கல்வியில் புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ₹1000 கோடி செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிட்கோவில் ₹75 கோடி செலவில் மாநில தொடக்க மையம் உருவாக்கப்படும்.

மேலும், அரசுப் பள்ளிகளில் (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘பேராசிரியார் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை’ மாநில அரசு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[Read the original article in English here.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Savitha Ganesh 23 Articles
Savitha Ganesh was a Researcher at Citizen Matters Chennai. She holds an undergraduate degree in Sociology from FLAME University Pune.