15 நிமிட நகரமாக சென்னை மாறமுடியுமா?

மக்களுக்கான நகரம்

Pedestrian friendly street
15 நிமிட நகரத்தில், தினந்தோறும் செல்லும் இடங்களுக்கு 15 நிமிடத்தில் நடந்தோ, மிதிவண்டியிலோ செல்ல முடியும். படம்: ஹாரிங்டன் சாலை/ பட உதவி: ITDP

Translated by Sandhya Raju

நீங்கள் அன்றாடம் செல்லும் இடங்களான கடைகள், பள்ளி கல்லூரிகள், வேலையிடம், மருத்துவமனை மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு வெறும் 15 நிமிடத்தில் நடந்தோ அல்லது வண்டியிலோ செல்வதை கற்பனை செய்து பாருங்கள். இதுவே 15 நிமிட நகரம் என அழைக்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இது செயல்படுத்தப்பட்டு, வெற்றி பெற்றதை அடுத்து, உலகில் உள்ள பல நகரங்கள் இந்த அமைப்பை பின்பற்ற பரீசலித்து வருகிறது. சென்னையும் இது போன்று 15 நிமிட நகரமாக மாற முடியுமா?

பாரிஸ் 1 பாந்தியன்-சார்போன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் கார்லோஸ் மோரீனோ என்பவரால் 2016 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, குறிப்பாக கோவிட் -19 தொற்றின் போது நிறைய ஈர்ப்பைப் பெற்றுள்ளது. நிலையான நகரங்களை உருவாக்க இது முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது, உலகமெங்கும் நிலவிய பொது முடக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. பலர் வேலை இழந்தனர். பொது போக்குவரத்து தடைபெற்ற போதும், சொந்த வாகனம் வைத்திருந்தவர்கள் அதிக சிரமமின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள முடிந்தது பொருளாதார மற்றும் அணுகல் ஏற்றத்தாழ்வுகளை காட்டியது. இத்தகைய சூழலில், பாரிஸில் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 நிமிட நகர வெற்றியை தொடர்ந்து பிற நகரங்களிலும் இதை நடைமுறைப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO மற்றும் UN- வாழ்விடம், ஊக்குவித்தது. 2016 ஆம் ஆண்டு சி40 நகரங்கள் பட்டியலில் ஆறாவதாக சென்னை இணைந்தது.

நகரவாசிகள் ஆட்டோமொபைல் வாகனங்களை சார்ந்திருப்பதை குறைத்து, காற்று மாசு கட்டுப்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதே 15 நிமிட நகரங்களின் நோக்கமாகும். பயண நேரத்தையும் மக்கள் மிச்சப்படுத்த முடியும்.

சென்னையின் கண்ணோட்டத்தில் 15 நிமிட நகர கருத்தாக்கம்

அடையாறில் வசிக்கும் ஒருவர் 15 நிமிடத்திற்குள் அனைத்து அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிவதே 15 நிமிட நகரம் என விளக்கினார் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனத்தில் நகர்ப்புற மேம்பாடு (ITDP) மூத்த ஆராய்ச்சியாளர் சந்தோஷ் லோகநாதன். அதே நேரத்தில், அடையாறிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு 15 நிமிடத்திற்குள் செல்வது இதன் நோக்கமல்ல, ஏனெனில் அது அன்றாட அவசியமும் இல்லை என மேலும் அவர் கூறினார்.

“15 நிமிடத்திற்க்குள் பள்ளி அல்லது மருத்துவமனைக்கு செல்வது மட்டும் இதன் நோக்கமல்ல,” எனக் கூறும் சந்தோஷ் அந்த தூரத்தை பாதுகாப்பாக நடந்தே அடைய முடிவது தான் முக்கியம் என கூறுகிறார். “சீரான நடைபாதைகள், போக்குவரத்து நெரிசல் அல்லாத சாலைகள் என்பது இதன் சாராம்சமாகும்.”


Read moreSteps to make Chennai footpaths safe and comfortable for pedestrians


அடிப்படை வசதிகளோடு, பிற இடங்களுக்கு செல்வதற்கான விரைவான போக்குவரத்து தடங்களும் 15 நிமிட நேரத்திற்க்குள் நடந்தோ அல்லது மிதிவண்டியில் செல்லக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும். நகர வடிவமைப்பாளர் வினோத் குமார் கூறுகையில் “நகரத்தின் பிற இடங்களுக்கு செல்ல, என் இருப்பிடத்திலிருந்து பேருந்து நிறுத்தம் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் ஆகியன 15 நிமிடத்தில் இருத்தல் வேண்டும்.”

எளிதாக அணுகக்கூடிய விரைவு போக்குவரத்து தடங்கள் அவசியம், ஏனெனில் பெரும்பாலனவர்கள் வேலை நிமித்தமாக சென்னையின் பிற இடங்களுக்கு செல்கிறார்கள். சேத்துபட்டுவில் வசிக்கும் 46 வயது வேதகிரி விஜயகுமார், 2004 – 2018 ஆண்டு வரை இரண்டு மணி நேரம் தன் காரில் பயணித்து ஷோளிங்கநல்லூரில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்று வந்தார். “என் வேலையிடம் அருகாமையில் இருந்திருந்தால், நான் நடந்தே சென்றிருப்பேன்”, என்கிறார் அவர். தற்போது தன் வீட்டிலிருந்தே தொழில் புரியும் அவர், வண்டியின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் மாசு குறைவு என்கிறார்.

மக்கள் ஏன் மோட்டார் வாகனங்களை தவிர்க்க முடிவதில்லை?

15 நிமிட நகரத்தில் அனைத்து தேவைகளையும் அருகாமையிலேயே பூர்த்தி செய்ய முடியும் என்பதால், தங்களின் வாகனத்தை உபயோகிக்க அவசியம் ஏற்படுவதில்லை. தமிழகத்தில் தனியார் வாகன எண்ணிக்கை பத்து வருடத்தில் இரட்டிப்பு அடைந்து 3 கோடி வாகனங்களாக உள்ளது. மொத்த எண்ணிக்கையில் ஐந்தின் ஒரு பங்கை கொண்ட சென்னையில் 60 லட்ச வாகனங்கள் உள்ளன. 2014 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நடை மற்றும் மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க கட்டமைப்பு வசதியை மேம்படுத்திய ஏழு வருடம் பின் இந்த நிலை உள்ளது. இதன் படி 2018 ஆம் ஆண்டில் 40% ஆக நடை மற்றும் மிதிவண்டி உபயோகம் உயர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மக்கள் ஏன் இந்த மாற்றத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என நகர வடிவமைப்பாளர்கள் பகிர்ந்தனர். சாலைகள் பாதசாரிகளுக்கு ஏதுவாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம். வேகமாக செல்லும் வாகனங்களால் பாதசாரிகளுக்கு இன்னல் ஏற்படும்,” என்கிறார் சந்தோஷ்.

பாதசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நில விகிதம் குறைவு என வினோத் சுட்டிக் காட்டுகிறார். “20 அடி சாலையில் 3 அல்லது 4 அடி பாதசாரிகளுக்கு ஒதுக்கப்படுகிறது, ஆனால் மாநகராட்சி அதில் மரம் நடுதல், மின்பெட்டி அமைத்தல் என அனுமதிக்கிறது, சாலையோர வணிகர்களும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். நடக்க எங்கே இடம் உள்ளது?”

மிதிவண்டிக்கான பாதை குறித்து பேசுகையில் “இந்த கட்டமைப்பு நீடித்ததாக இருத்தல் வேண்டும். தற்போது, சிந்தனை வடிவு சிறப்பாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தலும் நன்றாக இருக்க வேண்டும். இந்த பாதையில் பல இடர்பாடுகள் உள்ளன. வெறும் 2-3 கி.மீ தொலைவிற்க்கு மட்டும் இந்த பாதை இல்லாமல், பல இடங்க்ளையும் இணைக்கும் பாதையாக இருத்தல் வேண்டும்.” என சந்தோஷ் மேலும் விளக்கினார்.

மக்களுக்கு ஏற்ற தெருக்கள் 15 நிமிட நகரத்தை வளர்க்குமா?

2019 ஆம் ஆண்டு, தி நகர் பாண்டி பஜாரில் பாதசாரிகள் பிளாசாவை மாநகராட்சி அமைத்தது. இதில் அகலமான நடைபாதைகள், மக்கள் அமர இருக்கைகள், குழந்தகளுக்கான விளையாட்டு சாதனம் ஆகியன இடம்பெற்றன.

Pedestrian Plaza Pondy Bazaar T Nagar
பாண்டி பஜார் பாதசாரிகள் பிளாசா. படம்: ITDP

Read more“If we love cities like Paris and Singapore, why not have pedestrian plazas in Chennai?”


மேம்பட்ட இயக்கம், வாழக்கூடிய தன்மை மற்றும் பயன்பாடு என்ற மூன்று வழிகாட்டும் கோட்பாடுகளுடன் ஐடிடிபி மற்றும் மாநகராட்சி இணைந்து முதல் கட்டமாக, அண்ணாநகர், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், அடையாறு மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் அனைத்து தெருக்களையும் சீரமைக்கும் வகையில் ‘மெகா ஸ்ட்ரீட்ஸ் திட்டத்தை’ செயல்படுத்தியுள்ளன.

15 நிமிட நகரம் என்ற யோசனையின் பிரதிபலிப்பை கொண்ட இந்த திட்டத்தின் சாரம்சத்தை சந்தோஷ் நம்மிடம் விவரித்தார். “தன்னிறைவு பெற்ற வாழக்கூடிய சுற்றுப்புற இடங்களாக இது வடிவமைக்கப்படும். போக்குவரத்து வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து, அக்கம்பக்கத்தை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து கவனம் செலுத்தப்படும். இந்த தெருக்களில், நடைபயிற்சிக்கான அம்சம் மேம்படுத்தப்படும். இந்த சாலைகளை பல்வேறு இடங்களுக்கு, குறிப்பாக பள்ளிகள் மற்றும் பூங்காக்களுடன் எவ்வாறு இணைக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளப்படும்.

மிதிவண்டி பயண பாதை திட்டமும் உருவாக்கப்படுகிறது, இதில் எந்த பகுதிகளில் சைக்கிள் பாதை அமைக்கலாம் என கண்டறியப்படும். சைக்கிள் பாதை இல்லாத தெருக்களில் பிற வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”


Read moreMega Streets project: Here’s how it can change your neighbourhood 


15 நிமிட நகரத்தை நோக்கி செல்ல முக்கிய அம்சங்கள்

15 நிமிட நகரத்தை நோக்கி பயணிக்க, நகர திட்டமிடல் வாகன எண்ணிக்கையை கொண்டில்லாமல் மக்கள் நலனை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். குடியிருப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட 1-2 கி மீ தூரத்தில் உள்ளது போல் வடிவமைக்கப்பட வேண்டும்.

“இது போன்ற கலவையான இடங்கள் நிலையான நகரமாக மாற்றுகின்றன. இங்கு தொழிற்சாலைகளுக்கு மாநகராட்சி அனுமதிக்கக் கூடாது. ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இடமளிக்க தொழில் நிறுவனங்கள் ஒரு விதிமுறையைக் கொண்டிருக்க வேண்டும், அதாவது ஒரு ஒழுக்கமான வாழ்வாதாரத்திற்காக சுகாதார மற்றும் கல்வி வசதிகள் இருக்க வேண்டும். இந்த திட்டம் உயர் மட்டத்திலிருந்து மாஸ்டர் பிளான் வழியாக வந்து ஒரு சம அளவில் செயல்படுத்தப்பட வேண்டும்.” என விளக்கினார் வினோத்.

[Read the original article in English here.]

Also read

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About Padmaja Jayaraman 86 Articles
Padmaja Jayaraman was a Reporter with the Chennai Chapter of Citizen Matters. While pursuing her MA in Journalism and Mass Communication at Kristu Jayanti College, Bengaluru, she worked as a freelance journalist for publications like The Hindu MetroPlus, Deccan Herald, Citizen Matters and Madras Musings. She also holds a B.Sc in Chemistry from Madras Christian College, Chennai. During her leisure, you can find her making memes and bingeing on documentaries.