
புத்தாண்டு என்றாலே நடந்தவற்றை மனதில் அசைபோட்டு புது வருடத்தில் விருப்பங்களை நிறைவேற்ற புத்துணர்ச்சியோடு தொடங்க நாம் அனைவரும் முனைப்போடு இருப்போம். இதே போல் நம்ம சென்னையில் 2019-ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை அசை போட்டு, அதன் அடிப்படையில் வரும் புத்தாண்டில் நம் நகரம் எப்படி இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கும் பட்டியல் இதோ:
பேனரில்லா தெருக்கள்
இந்த ஆண்டு நடந்த இரு முக்கிய விபத்துகள், பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என நம் அனைவரின் ஒட்டு மொத்த குரலாக ஓங்கி ஒலித்தது. பதாகைகள் வைப்பதற்கு 2017-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறபித்த போதிலும், எந்த கட்சியோ நட்சத்திர ரசிகர் மன்றமோ இந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை. கோவையிலும் பின்னர் சென்னை தொரைபாக்கத்திலும் பானர் சரிந்து இரண்டு இளை வயதினர் உயிரழந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தினால், தற்போது இந்த பானர் கலாச்சாரம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சியும், காவல்துறையினரும் இணைந்து சென்னையில் பல இடங்களில் வைக்கப்பட்ட பானர்களை போர்க்கால அடிப்படையில் அகற்றியது.
நாம் விரும்புவதெல்லாம் இந்த விழிப்புணர்வு 2020 ஆம் ஆண்டிலும் தொடர வேண்டும். கட்சிகளும் ரசிகர் மன்றங்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே.
தண்ணீர் தட்டுப்பாடில்லா கோடைக்காலம்
கடந்த ஆண்டு (2018) போதிய மழை இல்லாத காரணத்தால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அனைத்து ஏரிகளும் வறண்டு போயின. சொல்லப்போனால் இந்தியாவிலேயே சென்னையில் தான் முதலில் தண்ணீர் பஞ்சம் தலைகாட்டியது. ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ இதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர, சென்னையின் தண்ணீர் பஞ்சம் உலக கவனத்தையும் எட்டியது. தென் ஆஃப்ரிகா போன்று சென்னையிலும் “ஜீரோ டே” விரைவில் வரும் என விவாதங்கள் எழுந்தன. பிரச்ச்னைக்கு தீர்வு காண சென்னை குடிநீர் வாரியம் சுரங்க நீர், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் விநியோகம் என நிலைமையை சமாளிக்க பல முயற்சிகாளை மேற்கொண்டது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து ஏரிகளை தூர்வார, நிலைமையை உணர்ந்து அரசும் நீர்நிலைகள் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனிடையே பருவ மழையும் பொழிய, ஏரிகளும் நிரம்பத் தொடங்கின. மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து வீடுகளிலும் அரசு நிறுவனங்களிலும் மழை நீர் சேகரிப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனோடு சேர்த்து அரசும் நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கழிவு நீர் சுத்தகரிப்பு என பல திட்டங்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இவை அனைத்தும் பலன் அளிக்கத்தொடங்கியுள்ளன. தேவையான பருவமழை இல்லாத போதிலும் 2020-ல் கோடைக்காலத்தை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தண்ணீர் பஞ்சத்தை நாம் ஏற்கனவே சந்தித்துள்ளதால், வரும் மாதங்களிலும் தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளை தொடரந்து மேற்கொண்டு, மறுசுழற்சி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
குப்பையில்லா தெருக்கள், மேம்பட்ட கழிவு அகற்றல்
மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கும் மாநகராட்சி கழிவு மேலாண்மையை மேலும் சீரமைக்க மமேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திடக்கழிவை பதனிடுதல், குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல இரு தனியார் நிறுவனங்களை அரசு நியமித்துள்ளது.
சாலையோரங்களில் குப்பைகள் வழிந்து சுகாதாரமற்ற நிலை இனி இருக்காது என்று நம்புவோம். சென்னை மாநகராட்சி வரும் ஆண்டில் பழைய குபை தொட்டிக்கு மாற்றாக மூடி கொண்ட புதிய குப்பைத் தொட்டியை அறிமுகப்படுத்துள்ளது. மேலும் இந்த தொட்டிகள் கான்க்ரீட் தளத்தில் நகராதபடி பொருத்தப்படும்.
இந்த முயற்சிகள் புத்தாண்டில் பலன் தரும் என்று எதிர்நோக்கும் அதே வேளையில் நாமும் நம் பங்கிற்கு குப்பையை பிரித்து, குப்பை தொட்டி உள்ளே போடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
புனரமைக்கப்பட்ட பொது இடங்கள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தி நகர் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. இதே போல் சென்னையில் உள்ள பல முக்கிய பகுதிகளில் ஸ்மார்ட் பார்ர்கிங் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதே போல் பருத்திப்பட்டு, கொரட்டுர் என பல ஏரிகள் புனரமைக்கப்பட்டு பொது மக்கள் கண்டு களிக்கும் பொழுதுபோக்கு தலமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் மெரினா கடற்கரையிலுள்ள கடைகள் மாற்றியமைக்கப்பட்டு, மக்கள் அதிகம் வந்து செல்லும் பொது இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி தற்போது குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட வீணான இரும்பு பொருட்களை கொண்டு கலாசாரத்தை பரப்பும் வகையில் இவற்றை கலை வடிவமாக மாற்றி பொது இடத்தில் காட்சிப்படுத்த உள்ளது.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் சென்னையை நீவனப்படுத்தவும் அழகுபடுத்தவும் உதவும் என்றாலும், இந்த முயற்சியில் மக்களின் பங்கும் அதிகம் உள்ளது. நம் சுற்றுப்புறத்தை பேணிக்காப்பதில் நம்க்கு பெரும் பொறுப்பு உள்ளதை நாம் உணர வேண்டும்.
இது ஒரு புறமிருக்க அனைத்து சாலைகளிலும் விளக்குகள், குழியில்லா சாலைகள், ஆக்கிரமிப்பில்லா சாலைகள் ஆகியன 2020-ல் உருவாக வேண்டும் என்பது நம் விருப்பப் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டவை இந்த ஆண்டில் நடந்த முக்கிய முயற்சிகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இதைத் தவிர நம் சிங்கார சென்னையில் நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் நிறையவே உள்ளன என்றாலும் இந்த புத்தாண்டு இதற்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதை நாங்கள் நங்கு அறிவோம்.
அனைவரும் ஒன்றியணைந்து சென்னையை மேலும் மேம்படுத்துவோம்!