உறுப்பு தானம் செய்ய விருப்பமா? இதோ நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

GUIDE TO DONATING YOUR ORGANS AFTER DEATH

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.
Get in-depth and insightful stories on issues that affect you every day!
Pic: Pexels

உறுப்பு தானத்தில் முன்னோடியாக திகழ்கிறது நம் தமிழ்நாடு. இங்கு தான் அதிகமாக உறுப்பு தானம் செய்பவர்கள் உள்ளனர். மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சி மற்றும் மக்களின் விருப்பம் ஆகியவை இதற்கு காரணிகளாக இருக்கலாம். இருப்பினும் நம்மில் பலருக்கு உறுப்பு தானம் பற்றிய பல விஷயங்கள் தெரியாமல் தான் உள்ளது. இதுவே உறுப்பு தானத்திற்காக காத்திருக்க வேண்டிய அவகாசத்தை அதிகரிக்க செய்கிறது. ஒவ்வொரு வருடமும் உறுப்பு கிடைக்காததால் கிட்டதிட்ட ஐந்து லட்சம் பேர் இறந்து போவதாக என்டிடிவி-ஃபார்டிஸ் மோர் டூ கிவ் விழிப்புணர்வு பிரச்சாரம் கூறுகிறது.

Advertisement

பல்வேறு தவறான புரிதல் காரணமாக உறுப்பு தானம் செய்வதில் மக்களுக்கு தயக்கம் இருப்பதையே இந்த பிரச்சாரம் உணர்த்துகிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆர்வலர்களுடன் உரையாடியதிலிருந்து உறுப்பு தானம் குறித்த விளக்கமும், அது குறித்து பல சந்தேகங்களையும் இங்கே தெளிவு படுத்தியுள்ளோம். மேலும் ஏன் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற முக்கிய கேள்விக்கான விடையையும் இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

அடிப்படை

இரண்டு விதமான தானம் உள்ளது – உயிரோடு இருக்கும் போது மற்றும் இறந்த பிறகு. புற்று நோய், ஹெபடிடிஸ், எச்ஐவி போன்ற நோய் அல்லாதவர்கள் தான் வாழும் பொழுதே உறுப்பு தானம் செய்ய முன்வரலாம். தானம் செய்யும் முன், ஏதேனும் நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது நலம். தானம் செய்யும் முன், ஏதேனும் நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது நலம்

தானம் செய்வது மிகவும் எளிது: அரசு மருத்துவமனையை அணுகி, உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை எப்பொழுதும் உடன் இருக்குமாறு பர்ஸ்ஸில் வைத்த்துக் கொள்ள வேண்டும். உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவிப்பது அவசியம். உங்களின் ஆசையை அவர்கள் அறிந்து பூர்த்தி செய்ய இது உதவும்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுலபமாக ஆன்லைன் மூலம் பெறக் கூடிய உறுப்பு தான அட்டை வசதியை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக மோகன் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ப்ரின்ட் செய்யக்கூடிய உறுப்பு தான அட்டை ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் குஜராத்தி போன்ற மொழிகளிலும் தருகிறது. அடிப்படை தகவல்களான குடும்பத்தினரின் தொடர்பு எண்கள் மற்றும் எந்தந்த உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறீர்கள் போன்றவை இதில் இடம்பெற்றிருக்கும். அவசர உதவிக்கும் உதவுமாறு இதில் எமெர்ஜன்சி எண்களும் இடம் பெற்றிருப்பதால் எமெர்ஜென்சி கார்ட் போலவும் இது உதவுகிறது.

.உறுப்பு தான அட்டை என்பது விருப்பம் மூலம் பெறப்படுவதால் இதில் சட்ட பிணைப்பு ஏதுமில்லை. உறுப்பு தான அட்டை பெறுவது தான் தானத்திற்கான முதல் படி. சூழ்நிலை ஏற்படும் போது, குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.

ஈக்காடுதாங்கலை சேர்ந்த் அருண் ரவுலா மற்றும் ஆனந்த் சாகர், தங்களின் டோனார் கார்ட் உடன். படம்: கொண்டா சோம்னா

இறந்த பின்

இரண்டு வித சூழலில் இத்தகைய தானம் தர வாய்ப்புள்ளது – இயற்கை மரணம் மற்றும் மூளை சாவு. இயற்கை மரணம் நேர்ந்ததும், குடும்பத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையை அணுகி உறுப்புகளை தானம் செய்யலாம். தானம் செய்யும் முன் சரியான பதப்படுத்தும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு போன்ற உறுப்பு நிர்வகவிப்பு முறை உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

“இயற்கையான மரணத்தின் போது கருவிழி, தோல், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். மற்ற உயிர் காக்கும் உறுப்புகள் பெரும்பாலும் ரத்த உறைதலால் அதிவேகமாக கெடக் கூடும் என்பதால் இவற்றை தானம் செய்வதில் சவால்கள் உள்ளன. மேலும் உறுப்புகள் ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட வேண்டும். கருவிழிகளை ஈரத்துணியில் பாதுகாக்க வேண்டும்” என்கிறார் ட்ரான்ஸ்ப்ளான்ட் ஆதாரிடி ஒஃப் தமிழ்நாடு (தமிழ்நாடு உறுப்புதான ஆணையம்)  என்ற அமைப்பின் முன்னாள் மெம்பர்-செக்ரடரியான திரு. அமலோர்பவனாதன்.

அரசு மருத்தவமனையின் மருத்துவர் மரணத்தை உறுதி செய்த பின், குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றதும், உறுப்பு தானத்திற்கான செயல்முறையை துவங்குவர்.

மூளை சாவு

உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையில் இருந்தால், அது மூளை சாவு எனப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இதில் சம்பந்தப்படாத மூன்றாம் மருத்துவர் என நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு விலாவாரியான செயல்முறை மூலம் ஒருவர் மூளை சாவை அடைந்துள்ளார் என உறுதி படுத்துவர்.

“மூளையின் செயல்பாட்டை அறிந்து கொள்ள நரம்பு சம்பந்தபட்ட ஆய்வுகள், மூளைதண்டின் செயல்பாடு ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு, அனைத்து தடவையும் ஒரே மாதிரியான ரிசல்ட் என்று உறுதி செய்த பின்னர், உறுப்பு தானம் பற்றி குடும்பத்தாரிடம் ஆலோசகர்கள் பேசுவர்’ என விளக்குகிறார் மருத்துவர் பி புவனேஸ்வரி.

மூளை சாவு அடைந்தவரை வென்டிலேடரில் வைப்பதால், உறுப்புகளுக்கு சேதம் உருவாகுவதில்லை. இதயம், இரண்டு நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், தோல், கருவிழி, தசை நாண்கள், எலும்புகள் என பெரும்பாலும் எல்லா உறுப்புகளையும் தானமாக அளிக்க முடியும்.

மருத்துவ அதிகாரிகள் காவல் துறையிடமிருந்தும் தடயவியல் துறையிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும். பெரும்பாலான மூளை சாவுகள் விபத்து மூலம் ஏற்படுவதால், அனுமதி பெறுதல் மிக முக்கியம்.

Queries about organ donation can be addressed to Mohan Foundation: 1 800 103 7100

To reach the nearest government hospital for organ donation, call the medical helpline number – 104

விதிவிலக்கு – சிறுநீரக தானம்

உயிருடன் இருக்கும் பொழுதே தானமாக தரக்கூடிய ஒரே உறுப்பு சிறுநீரகம். ஒரு சிறுநீரகத்தை மாற்று சிகிச்சைக்காக தானமாக அளிக்க முடியும். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கென, எல்லா மருத்துவ முறைகளுக்கும் உட்பட்டு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கலாம். நாட்டில் செய்யப்படும் எல்லா உறுப்பு தானங்களும் மனித உறுப்பு மாற்று தானம் (திருத்தம்) சட்டம், 2011 வரைதலின்படி பின்பற்றப்படுகிறது.

தானம் செய்பவர்கள் உறவு முறை அல்லது வெளியாளாக இருக்கலாம். உறவு முறையாக இருப்பின் (கணவன் / மனைவி, பிள்ளைகள், பேரன் பேத்திகள், உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள், தாத்தா பாட்டி) மருத்துவரின் ஒப்புதல் பெற வேண்டும். வெளியாட்கள்
(குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்) அரசு அங்கீகரித்துள்ள அமைப்பிலிருந்து உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் பெற வேண்டும்.

அங்கீகரிக்கும் அமைப்பு (Authorization Committee (AC) )அரசு அமைப்பு ஆகும். பணத்திற்காக அல்லது வற்புறுத்தலின் பேரில் உறுப்பு தானம் செய்யாமல் இருப்பதை தடுக்க, ஒவ்வொரு விண்ணப்பதையும் இந்த அமைப்பு அலசி ஆராயும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்திற்காக உறுப்பு தானம் செய்யப்படுவதை சட்டம் அங்கீகரிப்பதில்லை.

சிறுநீரக தானம் பற்றியும், ஒப்புதல் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் விலாவரியான தகவல்களை மோகன் ஃபௌன்டேஷன் இங்கே அளித்துள்ளது.

வாழ்க்கையின் பரிசு

2014 ஆம் ஆண்டில் ஸ்பைன் நாட்டில் ஒவ்வொரு பத்து லட்ச பேரில் 36 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதுவே க்ரோஷியா நாட்டில் 34 பேரும், அமெரிக்காவில் 27.02 பேரும் தானம் செய்துள்ளனர். இதுவே இந்திய நாட்டில் 0.34 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது, என என்டிடிவி-ஃபார்டிஸ் மோர் டூ கிவ் பிரச்சாரம்  சொல்கிறது.

“உறுப்பு தானம் பற்றிய புரிதல் இல்லாததும், இந்த உன்னத செயல் பற்றிய அறியாமையே இந்த சூழலுக்கு காரணமாக இருக்கலாம்.  இறந்த 4 நிமிடத்தில் ஒருவரின் உடல் அழுகத் தொடங்கிவிடும். ஆய்வுகள் படி ஒரு மணி நேரத்தில் 2 மில்லிமீட்டர் வரை அழுகத் தொடங்கும். இதன் படி பார்த்தால் இறந்த ஒரு மாதத்திற்குள் முழுவதும் அழுகி விடும்.” என்கிறார் மருத்துவர் ஆர். அருண்.

உங்கள் உறுப்புகளை இவ்வாறு உருக்குலைய விடுவதிற்கு பதிலாக மற்றவருக்கு தானமாக கொடுத்தால் வாழ்க்கையையே பரிசளிப்பது போல் அல்லவா?

Translated into Tamil by Sandhya Raju.

Read the story in English here.


Laasya Shekhar
About Laasya Shekhar 183 Articles
Laasya Shekhar is Senior Reporter at Citizen Matters Chennai. She tweets at @plaasya.